இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1051இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

(அதிகாரம்:இரவு குறள் எண்:1051)

பொழிப்பு (மு வரதராசன்): இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.

மணக்குடவர் உரை: தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது.
இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான்.
('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.)

வ சுப மாணிக்கம் உரை: கேட்கத் தக்கவரிடம் உதவி கேட்க; ஒளித்தால் அவர்க்குப் பழி, உனக்கு இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரத்தக்கார்க் காணின் இரக்க கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.

பதவுரை: இரக்க-கேட்க, கெஞ்சிப் பெறுக; இரத்தக்கார்-இரக்கத்தக்கவர், கேட்கத் தகுந்தவர்; காணின்-கண்டால்; கரப்பின்-கொடுக்காமல் ஒளித்தால், மறைத்தால்; அவர்-அவர், கரப்பவர்; பழி-பாவம்; தம்-தமக்கு; பழி-பழி, குற்றம்; அன்று-இல்லை.


இரக்க இரத்தக்கார்க் காணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க:
பரிப்பெருமாள்: தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க:
பரிதி: தாதாவானவனைத் தேகி என்று கேட்க; [தாதா-கொடையாளி; தேகி- கொடு]
காலிங்கர்: இங்ஙனம் வறியோர்மாட்டு இரக்கம் உடையாரைக் கண்ட இடத்துத் தாம் ஒன்று இரக்கவேண்டின் இரந்து கொள்க;
பரிமேலழகர்: நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; [ஏற்புடையார் - தகுதியுடையார்]
பரிமேலழகர் குறிப்புரை: 'இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. [இரத்தற்குத் தக்கார் என்பது இரத்தக்கார் என்றாயது நான்கனுருபு இறுதிக் கண் தொக்கதாம்]

'நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லாதவர் இரத்தற்கேற்ற தகுதியுடையாரைக் கண்டால் வேண்டிய தொன்றை இரந்து கேட்க', 'பிச்சை கேட்கிறவர்கள், பிச்சை கேட்கத் தகுந்த (கொடுக்கத் தகுந்த) செல்வமுள்ளவர்களைக் கண்டு கேட்கட்டும்', 'வறியவர்கள் பிச்சை கேட்பதற்குத் தக்கவர்களைக் கண்டால் அவர்களிடத்தில் இரக்கலாம்', 'வறியர் இரப்பதற்கு ஏற்புடையாரைக் கண்டால் அவரிடம் இரக்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உதவி கேட்பதற்கு ஏற்புடையாரைக் கண்டால் அவரிடம் இரந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

கரப்பின் அவர்பழி தம்பழி அன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது.
மணக்குடவர் குறிப்புரை: இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.
பரிப்பெருமாள்: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டுக் கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செய்யலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டு இரக்கல் ஆம் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: நாஸ்தி என்றால் அவர் பேரில் குற்றம்; தம்மிடத்தில் குற்றமில்லை என்றவாறு. [நாஸ்தி- இல்லை]
காலிங்கர்: மற்று அவர் கரக்க நினைப்பின் அஃது அவர் பழியாம்; இத்துணை அல்லது வேறு தம்பழி என்பது ஒன்றன்று என்றவாறு. [கரக்க- மறைத்து வைக்க]
பரிமேலழகர்: இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். [கரந்தார் ஆயின் - ஒளித்தாரானால்]
பரிமேலழகர் குறிப்புரை: இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார். [காட்டுவராயின் - ஈதலிற் குறை காட்டுவாரானால்; தூவெள் அறுவைக் கண் மாசுபோல- தூய வெள்ளாடையிற் பட்ட அழுக்குப் போல. அறுவை-ஆடை; கடிது சேறல்- விரைந்து செல்லுதல். சேறல் - செல்+தல்; ஏற்பிலார் மாட்டு இரவு -தகுதியில்லாதவரிடத்து இரத்தல்]

'அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டபோது அவர் ஈயாது மறைப்பாராயின், அவர்க்கே அது பழியாகும். இல்லாதார்க்குரிய பழியாகாது', 'அச்செல்வமுள்ளார் வைத்துக்கொண்டு இல்லையென்றால் அது அவர்களுக்குப் பாவமேயன்றி பிச்சை கேட்டவர்களுடைய குற்றமல்ல', 'அவர் கொடாது மறுத்தாராயின், அவர்க்குப் பழியாகுமே அல்லாமல் கேட்டார்க்குப் பழியாகாது', 'அவர் உள்ளதை ஒளிப்பாராயின் அவர்க்குப் பழியாகுமே யன்றித் தமக்குப் பழியன்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர் ஈயாது மறைப்பாராயின் அவர்க்குத்தான் பாவமாகுமே யன்றி அப்பழி உன்னைச் சேர்ந்ததாகாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரத்தக்கார்க் கண்டால் அவரிடம் இரந்து கொள்க; அவர் ஈயாது மறைப்பாராயின் அவர்க்குத்தான் பாவமாகுமே யன்றி அப்பழி உன்னைச் சேர்ந்ததாகாது என்பது பாடலின் பொருள்.
'இரத்தக்கார்' யார்?

கொடுக்கக் கூடியவர் ஒளித்தால் உலகம் அவரைத்தான் இழிவாகப் பேசும்.

இரத்தற்குத் தகுந்தவரைக் கண்டால் அவரிடம் இரந்து கேட்கலாம்; அவர் கொடாமல் ஒளிப்பாரானால், அது அவருக்குப் பாவத்தை உண்டாக்குமே அல்லாமல் கேட்டவர்க்குண்டான பழி ஆகாது.
வறுமைப்பட்டஒருவர் எல்லா வழிகளிலும் பொருள்தேட முயன்று தோற்கின்றார். நுகர்வதற்கு ஒன்றுமேயில்லை. அந்நிலையில் யாரிடமாவது சென்று பொருளுதவி கேட்கலாம் என முடிவுக்கு வருகிறார். வள்ளுவர் 'இரக்க இரத்தக்கார்க் காணின்' என அவர்க்கு வழி காட்டுகிறார். இரத்தல் இழிவானதே என்ற கருத்துடையவர் வள்ளுவர். ஆனால் பசி காரணமாக இரக்க நாணி வறுமையுற்றவர் உயிர் துறப்பதையும் விரும்பமாட்டார். எனவே இரக்கத்தக்கவரைக் கண்டால் இரக்க என இகழ்வில்லா ஓர் நடையில் விதிக்கிறார். அவர் யார் மாட்டும் இரக்கலாம் எனச் சொல்லவில்லை; இரப்பார் மானமும் காக்கப்படவேண்டும் என்பதால் இரக்கத்தக்காரை நாடி இரந்துகொள்க என்கிறார். வயிற்றுப் பசி தீர்ப்பதற்கான ஓர் வழியாகவே இரக்க என்றார்; செல்வம் சேர்ப்பதற்காக அல்ல.

கரவாது ஈயும் இயல்புடையோர் அருமை என்பதால், 'காணின்' எனச் சொல்லப்பட்டது. வறுமையால் இரப்போர் எல்லோரிடமும் சென்று கையேந்தி நிற்கவேண்டாம். இரக்க குணம் உள்ளவர்களிடம் இரந்து பொருள் பெறலாம் என்று வள்ளுவர் கூறுகின்றார். இரப்பவர் இரக்கத் தக்கவர் எனக் கண்டறிந்து ஒருவரிடம் செல்கிறார். ஆனால் அவர் ஏதோ ஒரு காரணத்தால்-காலச்சூழலாலோ பொருள்நிலையாலோ- தம்மிடம் உள்ளதையும் இல்லையென்று மறைத்து பொருள் கொடுக்க மறுத்தால் அது அவருடைய பழியாகும். அதற்காக இரந்தவர் எந்தவிதக் குற்றவுணர்வும் கொள்ளத் தேவையில்லை என ஆறுதல் மொழியும் பகர்கிறார் வள்ளுவர்.
இரப்பவர் கேட்டுவிட்டார் அதனால் கேளாக் குறையும் அவரிடம் இல்லை; அதனால் அவர் பழி இல்லை. இரந்தார் பழி இல்லை யென்றால் இரக்கப்பட்டாருக்கு வருவது பாவம்; அது அவர் பழி. உயர்ந்த பண்பாளரிடத்துள்ள சிறுகுறையும் பெரிதாகத் தோன்றும். வெண்மையான ஆடையில்தானே மாசும் தெளிவாகத் தெரியும் என உவமைமூலம் அவர் பழி என்பதை விளக்குவார் பரிமேலழகர்.

'இரத்தக்கார்' யார்?

'இரத்தக்கார்' என்றதற்கு இரக்கத்தக்கார், தாதாவானவன், வறியோர்மாட்டு இரக்கம் உடையார், இரத்தற்கு ஏற்புடையார், தமக்கிரத்தற் கேற்றவர், இரக்கத் தக்கவர், இரந்து கேட்கத் தக்கவர், இரந்து கேட்பதற்குத் தக்க ஈகையாளர், இரந்து கேட்கத் தகுதியுடையார், கேட்கத் தக்கவர், இரத்தற்கேற்ற தகுதியுடையார், பிச்சை கேட்கத் தகுந்த (கொடுக்கத் தகுந்த) செல்வமுள்ளவர்கள், ஒன்றைக் கேட்டுப் பெறத்தக்கார், பிச்சை கேட்பதற்குத் தக்கவர்கள், இரப்பதற்கு ஏற்புடையார், இரத்தற்குத் தகுந்தவர், ஈயும் தன்மையுடைய கொடையாளர், இரக்கத்தக்க ஈகையாளர், மனம் இரங்கிக் கொடுப்பவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'இரத்தற்குத் தக்கார்' என்பது இரத்தக்கார் என்றானது. உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து (செய்ந்நன்றியறிதல் 105 பொருள்: செய்யப்பட்ட உதவிப்பொருளின் அளவு பொறுத்ததல்ல உதவி, அது உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது) என்று முன்பு சொன்னது குறள். அதுபோல இங்கு இரத்தல் இழிவாவதும் இழிவாகாததும் இரக்கப்பட்டார் தகுதியைப் பொறுத்தது எனச் சொல்லப்படுகிறது.
வள்ளுவரே இவ்வதிகாரத்துப் பிற பாடல்களில் இரத்தக்கார் யாவர் எனக் குறிப்பு தந்துள்ளார். அவர்கள்: துன்பம் உறா வகையில் தருவார், கரப்பில்லா நெஞ்சிற் கடனறிவார், கரப்பிடும்பை இல்லார், இகழ்ந்து எள்ளாது ஈவார் ஆகியோர். இத்தகையோர் உலகில் மிக அருகியே காணப்படுவர். மாறாக, தமது பொருளை மறைத்து வாழும் இயல்பினோரே உலகில் மிகையாக இருக்கின்றனர்.

ஒருவரிடம் கேட்டு வாங்கித்தான் வாழவேண்டும் என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டால், 'தன்னிடம் உள்ளதை ஒளிக்காத பண்பாளரை அடையாளம் கண்டு, அவரிடம்தான் கேட்க வேண்டும்' என்பது இல்லாமையால் வாடுவோர்க்கு வள்ளுவர் வழங்கும் அறிவுரை. வறியவராக இருந்தாலும், அவரது தன்மானத்திற்கு இழுக்கு நேரக்கூடாது என்பதற்காகவும், மனித மதிப்பு காக்கப்பட வேண்டுமென்ற நோக்கிலேயும் கொடுக்கும் மனம் உள்ளவரைக் கண்டறிந்து, அவரிடம் இரக்க என்கிறார். அவ்விதம் அறிந்து செல்லும்போது இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள (ஈகை 223 பொருள்: இல்லாதவன் என்ற துயரத்தை உரைக்கும் முன்பே கொடுத்தல் நற்குடிப் பண்பு உடையவனிடத்தே உள்ளன) என்ற குறளில் சொல்லப்பட்டதுபோல 'என்னிடம் பொருள் இல்லை' என்று இரப்பவர் சொல்லுமுன்னே கொடையாளி அளித்துதவுவார். இவர் போன்றோரே இரத்தக்கார்.

'இரத்தக்கார்' என்ற தொடர் இரத்தற்கு ஏற்புடையார் எனப் பொருள்படும்.

உதவி கேட்பதற்கு ஏற்புடையாரைக் கண்டால் அவரிடம் இரந்து கொள்க; அவர் ஈயாது மறைப்பாராயின் அவர்க்குத்தான் பாவமாகுமே யன்றி அப்பழி உன்னைச் சேர்ந்ததாகாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பழியில்லா இரவும் உண்டு.

பொழிப்பு

இரக்கத் தக்கவரிடம் உதவி கேட்க; அவர் மறைத்தால் அது அவர்க்குத்தான் பாவம், கேட்டவர்க்குப் பழியாகாது.