கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து
(அதிகாரம்:இரவு
குறள் எண்:1053)
பொழிப்பு (மு வரதராசன்): ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
|
மணக்குடவர் உரை:
கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து.
இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.
பரிமேலழகர் உரை:
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.
('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
ஈவதை ஒளியாத உள்ளமுடையராய் இன்னின்னார்க்கு இன்னின்னவாறு கொடுத்தல் தமது கடமையென்று அறிந்தவர்பால் இரப்பதும் ஓர் அழகுடையதே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து.
பதவுரை: கரப்பிலா-ஒளிப்பு, மறைத்தல் இல்லாத; நெஞ்சின்-நெஞ்சினையுடைய; கடன்-கடமை, மானம்; அறிவார்-தெரிபவர்; முன்-எதிரில்; நின்று-நின்று; இரப்பும்-இரத்தலும், ஏற்றலும்; ஓர்-ஒரு; ஏஎர்-அழகு, எழுச்சி; உடைத்து-உடையது.
|
கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும்;
பரிப்பெருமாள்: கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும்;
பரிதி: நாஸ்தி என்னும் சொல் அறியாதார் உலகம் செய்யும் முறைமை அறிவாரிடத்திலே தேகி என்பதும்;
காலிங்கர்: இரவலர்க்கு என்றும் இலரென்பர் இலருமாய் நெஞ்சினால் ஈதல் கடப்பாட்டின் பயனும் அறிவார் யாவர்; மற்று அவர் முன் நின்று பிறர் ஒன்று இரக்கும் இரப்புத்தானும்;
பரிமேலழகர்: கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். [அவர்க்கு -கரப்பில்லா நெஞ்சத்தார்க்கு; அது -மானமறிதல்; அதன் இயல்பினை - மானத்தின் தன்மையை.]
'கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார்/உலகம் செய்யும் முறைமை அறிவாரிடத்திலே/ ஈதல் கடப்பாட்டின் பயனும் அறிவார்/மானம் அறிவார் முன்பே நின்று இரத்தலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிக்காத மனமும் கடமையுணர்ச்சியும் உடையவர் முன்நின்று இரத்தலும்', 'பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்னாத மனத்தோடு கொடையைக் கடமையாகக் கொண்டு ஒழுகுவார் முன்னே நின்று இரத்தலும்', 'கபடமற்ற மனமுடையவராக (ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டியது) தம் கடமை என்பதை அறிந்தவர்களுக்கு முன் நின்று பிச்சை கேட்பது', 'ஒளித்தல் இல்லாத நெஞ்சினையுடைய கடமையை அறிவார் முன்னால் நின்று இரத்தலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒளிக்காத உள்ளமுடைய ஒப்புரவறிவார் முன்னால்நின்று இரத்தலும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஓர் ஏர் உடைத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஓரழகுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.
பரிப்பெருமாள்: ஓரழகுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஏர்=யாமும் இவ்வாறு செய்யவேண்டும் என்று கருதுதல். இஃது ஒப்புரவறிவார்மாட்டு இரக்கலாம் என்றது.
பரிதி: பெருமை உடைத்து என்றவாறு.
காலிங்கர்: இங்கு ஓர் அழகு உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது. [அவ்வறிவுடையார்க்கு - மானத்தின் இயல்பினை அறிதலுடையார்க்கு; இரப்பும் என்ற உம்மை அவ்விரத்தலின் இழிவை விளக்கி நின்றது]
'ஓர் அழகு உடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஓர் அழகு', 'வறியவர்க்கு ஓர் அழகு தரும்', 'ஒரு அழகான காட்சிதான்', 'ஓர் அழகினை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஓர் எழுச்சி தருவதுவே என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஒளிக்காத உள்ளமுடைய ஒப்புரவறிவார் முன்னால்நின்று இரத்தலும் ஓர் எழுச்சி தருவதுவே என்பது பாடலின் பொருள்.
'கடனறிவார்' யார்?
|
கடனறிவாரிடம் நிலைதாழாமல் இரத்தல் இயலும்.
கள்ளமற்ற உள்ளமும், கடமை அறிந்து உதவும் குணமும் உடையோர் முன்னே நின்று அவரிடம் பொருளை இரப்பதுகூட ஊக்கம் தருவதாக அமையுமே.
கரப்பிலா நெஞ்சின் என்ற தொடர்க்கு ஒளிக்காத மனம் உடையவர் என்பது பொருள். கடனறிவார் என்றது ஒப்பறிவார் குறித்தது.
ஏஎர் என்ற சொல்லுக்கு அழகு எனப் பொரும்பான்மையர் பொருள் கூறினர். பெருமை, தோற்றப் பொலிவு எனப் பிறர் உரைத்தனர். இதற்கு 'யாமும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கருதுதல்' எனப் பொருள் கூறினார் பரிப்பெருமாள். 'இப்பொருள் ஏர்-எழுச்சி. இங்ஙனம் செய்யவேண்டும் என்ற உள்ளத்தினூக்கம் என வந்ததாம்' (தண்டபாணி தேசிகர்). இப்பொருளும் சிறப்பாக உள்ளது.
சுருங்கிய கண்ணும் மழுங்கிய முகமும் ஒடுங்கிய வுடலும் வளைந்த முதுகும் தளர்ந்த நிலையும் இளிவந்த சொல்லுமின்றி, மிளிர்ந்த கண்ணும், மலர்ந்த முகமுங் கொண்டு ஏக்கழுத்தமாய் எக்களித்து நிற்கும் நிலையை ‘ஏர்’ என்றார் எனத் தேவநேயர் விளக்குவார்.
ஒப்பறிவார் முன் சென்று எவ்விதத் தயக்கமுமின்றிப் பொருள் கேட்கலாம் என்பது இக்குறளின் செய்தி.
'இன்பம் ஒருவற்கு இரத்தல்' என்று சென்ற குறளில் (1052) சொல்லப்பட்டது. இங்கே இரப்பதிலும் ஒரு எழுச்சி உண்டு எனக் கூறப்படுகிறது.
கரவாத உள்ளம் கொண்டோர் முன் நின்ற அளவிலேயே, வாய் திறந்து இரந்து கேட்கும் இழிவு வாரா முன்னமே, அவர் குறிப்புணர்ந்து கொடுப்பார். அது இரப்பார்க்கு ஓர் எழுச்சி தருவதாக அமையும்.
நெஞ்சிற் கரவின்றி, இன்னின்னார்க்கு இன்னின்னவாறு கொடுத்துதவுதல் தமது கடமையென்று அறிந்தவர் முன்நின்று, இன்மைநிலையில் உள்ளவன் கேட்கும்பொழுது அவனது தன்மானத்திற்கு இழுக்கு நேராது; மாறாக, அது உள்ளத்தில் அவனுக்கு கிளர்ச்சி உண்டாக்கும் என்பதைச் சொல்வதாக உள்ளது பாடல்.
உள்ளத்தில் ஒளிவு மறைவு இல்லாமல், தம் கடமை உதவுவது என அறிந்த நல்லவரிடம் சென்று, வறுமையின் காரணமாக இரப்பது இழிவு அன்று; அது
எழுச்சி தருவதாம்.
|
'கடனறிவார்' யார்?
கடனறிவார் என்பதற்கு ஒப்புரவறிவார், உலகம் செய்யும் முறைமை அறிவார், ஈதல் கடப்பாட்டின் பயனும் அறிவார், மானம் அறிவார், இரக்கிறவன் மனது அறிந்து கொடுக்கிறவர், கொடுக்கும் முறைமையறிந்து கொடுப்பார், கடமையுணர்ச்சி உள்ளவர், பொருள் ஈட்டுதல் பிறர்க்கு ஈந்து வாழ்வதற்கே எனும் கடப்பாட்டினையும் அறிந்தவர், கொடையைக் கடமையாகக் கொண்டு ஒழுகுவார், (ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டியது) தம் கடமை என்பதை அறிந்தவர், பொருளுடையவர்க்குரிய கடமையை அறிந்தவர், இன்னின்னார்க்கு இன்னின்னவாறு கொடுத்தல் தமது கடமையென்று அறிந்தவர், கடமையை அறிவார், கடமை அறிந்து உதவும் குணம் உடையோர், கடமையை உணர்ந்து நடக்கும் தன்மையும் உடையவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
கடன் அறிவார் என்றால் தேவைப்படுவோர்க்கு உதவுவது அவர்கள் கடமை என்று உணர்ந்தவர்கள் ஆவர். யார் அவர்கள்?
ஒருவர்க்கு மிகுந்த செல்வம் சேர்ந்துவிடுகிறது. எவ்வளவுதான் தனக்காகச் செலவு செய்யமுடியும்? வருங்காலத்துக்கான சேமிப்பைக் கணக்கிட்டு மீதமுள்ளவற்றைப் பொதுநலத்துக்குச் செலவிட நினைக்கிறார். இவர் உலக ஒழுக்கத்தை அறிந்தவர்; உதவி செய்து ஒத்துப்பழகுவதைத் தெரிந்தவர். தானே அறிந்து உதவும் தன்மையராய் இருப்பவர். இவ்விதம் தான் வாழும் சமுதாயத்தோடு தன்னை அடையாளம் கண்டு பொதுக்கொடை வழங்க முன்வருபவர் கடனறிவார் எனப்படுவார். இவரே ஒப்பறிவார் எனப்படுபவருமாம்.
கடனறிவார் என்பது பொருள் மிகுதியுடைய பொதுக்கடமை உணர்ச்சி கொண்ட ஒப்புரவாளரைக் குறிக்கும்.
|
ஒளிக்காத உள்ளமுடைய ஒப்புரவறிவார் முன்னால்நின்று இரத்தலும் ஓர் எழுச்சி தருவதுவே என்பது இக்குறட்கருத்து.
இரவு நாணுதற்குரியதல்லாத தறுவாயும் உண்டு.
பொருளை வைத்துக் கொண்டு மறைக்காத உள்ளத்தோடு ஈகையைக் கடமையாகக் கொண்டு ஒழுகுவார் முன்னேநின்று இரத்தலும் எழுச்சி தரும்.
|