இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1058இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று

(அதிகாரம்:இரவு குறள் எண்:1058)

பொழிப்பு (மு வரதராசன்): இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்..மணக்குடவர் உரை: குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும்.
இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

பரிமேலழகர் உரை: இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும்.
(ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

குன்றக்குடி அடிகளார் உரை: இரப்பவர் இந்த உலகில் இல்லாமற் போயின், இந்தப் பெரிய உலகம், உயிர்ப்பற்ற மரப்பாவைக் கூத்துப் போன்றதாகும். மரப்பாவைக் கூத்து உயிர்ப்பு இல்லாதது. அது போல உதவுதல்-ஒத்துழைத்தல் ஆகிய மானுடத்திற்குரிய உயிர்ப்புக் குணங்கள் இல்லாத மனிதர்கள் கூட்டம் மரப்பாவை போலத்தான் என்பதுணர்த்தியது. வாழ்க்கைக்கு உயிர்ப்பு உதவுதலும் ஒத்துழைப்புமேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரப்பார் இல்லாயின், ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று.

பதவுரை: இரப்பாரை-ஏற்பவர் ('ஐகாரம்' அசைநிலை); இல்லாயின்-இல்லாமல் இருந்தால், இல்லாவிடில்; ஈர்ங்கண்-குளிர்ந்த இடம்; மா-பெரிய; ஞாலம்-உலகம்; மரப்பாவை-மரத்தால் செய்யப்பெற்ற பதுமை; சென்றுவந்துஅற்று-செல்வதும் வருவதும் போலும், போய்வந்தாற் போல்வது.


இரப்பாரை இல்லாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரக்குமவர்களை உடைத்தல்லவாயின்;
பரிப்பெருமாள்: இரக்குமவர்களை உடைத்தல்லவாயின்;
பரிதி: தேகி என்பார் இல்லாத நாட்டில்;
காலிங்கர்: இரப்போரை இலதாயின்;
பரிமேலழகர்: வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: ஐகாரம், அசைநிலை.

'வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உதவி கேட்பார் இல்லாவிடின்', 'வறுமையால் இரப்பவர் இல்லையானால்', 'பிச்சை கேட்பவரையும் உடையதாக இல்லாவிட்டால்', 'வறுமையினால் இரப்பவர்கள் இல்லையானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறுமையால் உதவிகேட்பவர் இல்லையானால் என்பது இப்பகுதியின் பொருள்.

ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.
பரிப்பெருமாள்: குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம், இதனினுள்ள மக்களது இயக்கம் மரப்பாவை இயங்கினாற்போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய இரத்தல் இழிந்ததொன்று அன்றே. இதனைச் செய்க என்று விதித்தது என்னை என்றார்க்கு இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.
பரிதி: தாதாக்கள் மரப்பாவை விளையாடுவதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: இனிது இடம் உடைத்தாகிய பெரிய உலகமானது இனிது அறமியற்றும் இயல்புடையோர் யாரையும் இலது இவ்வுலகு என்பதாம். அதனால் மற்று ஈண்டு வாழும் மக்கள் உருபு அனைத்தும் மரத்தினால் மக்கள் உருபாக இயற்றிய மரப்பாவையானது போயும் வந்தும் திரிகின்ற அத்தன்மைத்து.
காலிங்கர் குறிப்புரை: எனவே இருமைப் பெறுதியும் அறியா உருபினவாம் என்பது பொருளாயிற்று என்றவாறு. ஈன்கண் மாஞாலம் என்பது இடம் மிகவும் பெரிய உலகம் என்றது.
பரிமேலழகர்: குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள் உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும்.
பரிமேலழகர் குறிப்புரை; ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

'குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பேருலகம் மரப்பாவைபோல உணர்ச்சியற்று நடக்கும்', 'குளிர்ந்த இடமுடைய பெரிய உலகத்திலுள்ள மக்களின் நடமாட்டம் கயிற்றால் இயக்கப்பெறும் மரப்பாவையின் நடமாட்டம் போன்றது', 'ஈரமுள்ள இடமாகிய இவ்வுலகம் (அதிலுள்ள மனிதர்களின் செயல்கள் உயிரோ உணர்ச்சியோ இல்லாமல் சூத்திரக் கயிற்றால் ஆட்டப்படும்) மரப் பொம்மைகள் வருவதையும் போவதையும் போன்றவையே.', 'குளிர்ந்த இடத்தையுடைய உலகத்தில் உள்ளார் போதலும் வருதலும் உயிர் இல்லாத மரப்பாவைகள் சென்று வந்தாற் போலும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் மரப்பாவை சென்று வந்தாற் போல் உணர்ச்சியற்றதாய் இருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
வறுமையால் உதவிகேட்பவர் இல்லையானால் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்று வந்தாற் போல் உணர்ச்சியற்றதாய் இருக்கும் என்பது பாடலின் பொருள்.
'ஈர்ங்கண்மா ஞாலம்' குறிப்பது என்ன? .

இரப்பார்-ஈவார் இல்லாத நிலவுலகம் மரப்பொம்மைகள் போன்ற மாந்தர் உலவும் குடியிருப்புபோல் தோன்றும்.

குளிர்ந்த இடத்தையுடைய இப்பெரிய உலகில் வறுமையால் இரந்து கேட்பவர் இல்லாமற்போயின், இங்குள்ள மக்கள் மரப்பாவை சென்று வந்து இயங்கிக் கொண்டிருந்தால் எவ்விதம் இருக்குமோ அவ்விதம் சிறிதும் உணர்ச்சியற்றவராகக் காணப்படுவர்.
இந்த உலகில் இரப்பவர்களே இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்ற உரத்த சிந்தனையின் முடிவில் வள்ளுவர் 'அப்படிப்பட்ட உலகில் மக்களின் நடமாட்டம், உயிரற்ற மரப்பாவைகளின் அசைவுகளைப் போல்தான் இருக்கும்' என்கிறார். மரப்பாவை என்ன செய்யும்? உயிரற்ற மரப்பாவைகளை உயிருள்ள கதைமாந்தரைப் போல் இயக்கி மனிதரால் நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து ஆகும். இது பொம்மலாட்டம் என்றும் அறியப்படும். ஆங்கிலத்தில் puppet show என்பர். இக்கூத்தில் மரப்பாவையைப் பயன்படுத்துவர். மரத்தாற் பாவை செய்து, கை கால் மூட்டுக்கள் அமைத்து, அணிசெய்து, சூத்திரக்கயிற்றினால் கட்டி, அதன்மூலம் நடக்கச் செய்து, ஆடச் செய்து, ஓடச் செய்து, உயிருள்ள மனிதர்கள் போல தோன்ற வைத்து பாவைக்கூத்து நடைபெறும். அரங்கிலாடும் பாவைகள் ஆட்டுவிக்கப்படுவதால் ஆடுமே தவிர, அவற்றுக்கு உயிர்ப்புமில்லை; உணர்வுமில்லை. கூத்தில் கயிற்றைக்கொண்டு ஆட்ட அது உயிர்பெற்றதுபோல் தோற்றம் தரும்.
இக்குறளில் ஈவார் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. ஆயினும் இரப்பார் இல்லையாயின் என்றதற்கு அனைவரும் இரப்பவர்களுடன் ஈவார்களையும் சேர்த்தே பொருள் காண்கின்றனர்.
இரவலர்கள் இல்லா உலகம் மரப்பாவைகள் நடமாடும் இடம்போல் காட்சியளிக்கும் என்கிறது பாடல். இரப்பார் இல்லையெனில் ஈவாருமிருக்க வழியில்லையாதலால் அவ்விடத்தில் இரக்க உணர்வு இல்லை; அன்பு இருக்காது. அன்பின் வழியது உயிர்நிலை....; எனவே அங்கு உயிரும் இல்லை; அவ்வுலகிலுள்ள மாந்தரின் அசைவுகள் எல்லாம் உயிர்ப்பும் உணர்வுமில்லா வெறும் பொம்மலாட்டங்கள் போல்வனவாகும்.

இரப்பவர்கள் இல்லாத நாடு வளமானது என்றுதானே நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். வளமான நாட்டில் இன்பத்துக்கு என்ன குறைவு? பின் ஏன் இக்குறள் உலகம் இயங்க, ஏற்பவர்கள் தேவை என்பதுபோல் அமைந்துள்ளது?
வளமானதோ அல்லது வளமற்றதோ, நாம் வாழும் உலகம் ஏற்றத் தாழ்வுகளால் ஆனது. அத்தகைய உலகில் ஈவாரும் இரப்பாரும் இருந்தே தீருவர். இது இயற்கையின் முறைமை. இதில் மனித வாழ்வானது கொண்டும் கொடுத்தும் மகிழ்ந்து வாழ்தலால் வருவது. மணக்குடவர் இதைத்தான் 'இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான்' என்றுரைக்கின்றார்.
இரப்பார் இவ்வுலகத்துக்கு இன்றியமையாதவர்கள் என்பது ஆசிரியர் எண்ணமன்று; உதவிகேட்பாரும் கொடுப்பாரும் இன்றி இயங்கும் உலகு உயிர்ப்பில்லாததாக இருக்கும்; அங்கு வாழும் மக்கள் வாழ்க்கை சுவையற்றதாக இருக்கும் என்பது வள்ளுவர் கருத்தாம். இந்த உலக வாழ்க்கை உணர்ச்சியும் சுவையும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.
இரத்தல் இல்லாமல் இருத்தல் என்பது இலக்கியலான கோட்பாடு. ஆனால் நடைமுறை என்பது வேறு. ஏழை பணக்காரன் என்பதும் உள்ளவன் - இல்லாதவன் என்பதும் என்றும் மறையப் போவதில்லை. புறவாழ்வின் அனைத்து பரப்புக்களிலும் ஏற்றத் தாழ்வு ஒழிந்துவிட்ட, யாரும் யாரிடமும் ஏற்க வேண்டிய தேவை இல்லாத ஒர் உயர்ந்த சமுதாயத்தில் எதனையும் இரப்பாரும் இல்லாது, கொடுப்பாரும் இல்லாத ஒரு முழுமையான சீர்மை நிலை வரும் என்று வைத்துக் கொள்வோம்; அந்த நிலையில் அன்புக்கோ மனித நேயத்துக்கோ இடம் இல்லை; இப்பெரிய உலகம் அருளற்று ஈரம் இல்லாமல் போகும்; மாந்தர் வாழ்வு சுவையற்றதாக இருக்கும். அப்போது இவ்வுலகின் இயக்கம் செயற்கையானதாகவும், முடுக்கிவிடப்பட்டதாகவும் இருக்கும்; ரோபோக்கள் (Robots) அதாவது எந்திரன்கள் நடமாடும் உலகமாக ஆகிவிடும். இரப்பவர்கள் இருந்தால்தான் அன்பு, மனித உணர்வு போன்ற உயர் பண்புகள் சிறந்து விளங்கும். உலகோர் இயக்கம் சுவையானதாகவும் இருக்கும்.

இக்குறட்கருத்தை ஒட்டிய பிற புலவர்களின்/அறிஞர்களின் சிந்தனை ஓட்டங்களையும் காணலாம்:.
ஈகை இல்லாத நாடு சிறந்த நாடு அன்று என்று எண்ணியவர்கள் விண்ணுலகத்தையும் விரும்புவதில்லை என்று ஆவூர் மூலங்கிழார் கூறினார். இச்சங்கப் புலவருக்கு ஈவோரும் ஏற்போரும் இல்லாத நாடு ஈர்ப்பாக இல்லை. அவர் பாடல் வரிகள்:
...................இன்னிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அண்மையின் கையறவு உடைத்துஎன
ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டுங் கூடலின்
(புறநானூறு 38 பொருள்: இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும் தாம் செய்த நல்வினைக்கு ஈடாக அங்கே வாழ்கிறார்கள். நல்வினை தீர்ந்தால் மேலுலக இன்பமும் போய்விடும். அது ஒரு பெருமையா? அங்கே எதையாவது யாருக்காவது கொடுத்து உவக்க முடியுமா? ஈவோரும் ஏற்போரும் இல்லாத நாடு அல்லவா? செல்வமுடையோர் ஈந்து உவக்கும் இன்பமும், இல்லாதவர் செல்வமுடையோர்பால் இரந்து பொருள் பெரும் இன்பமும் இல்லாத அந்த நாட்டில் பரிசிலர் போய் என்ன செய்ய முடியும்?
இதுபோன்ற பாடல்கள் ஏற்பாரும் உடையோரும் இல்லாத உலகத்தைச் சுட்டி ஈகையின் சிறப்பைக் குறிப்பாகச் சொல்கின்றன.

பிச்சை எடுப்பாரும் இடுவோரும் உள்ள உலகத்தை இயல்பானதாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிற எண்ண ஓட்டமும் இருந்தது:
என்று முளவாகு நாளும் இருசுடரும்
என்றும் பிணியுந் தொழிலொக்கும் - என்றும்
கொடுப்பாருங் கொள்வாரும் அன்னர் பிறப்பாருஞ்
சாவாரும் என்றும் உளர்.
(நான்மணிக்கடிகை 60 பொருள்: விண்மீன்களும் திங்களும் கதிரவனும் என்றும் உள்ளன; நோயும் முயற்சியும் என்றும் உள்ளன; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உளர்; பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உளர்) என்னும் இச்செய்யுள் உலகத்தில் இடையறாமல் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும்போது ஈவாரும் ஏற்பாரும் என்றும் உளர் என்று குறிக்கிறது.

தெ பொ மீனாட்சிசுந்தரம் 'கொடுப்பவற்றை வாங்குவதற்கு ஆள் இல்லாவிட்டால் வள்ளண்மை எங்கே இருக்கும்? மணிமேகலை எனும் பௌத்த காப்பியத்தில் வரும், "ஆபுத்திரன் தனது அமுதசுரபியிலிருந்து எடுத்து வாடியோர்க்குச் சோறு கொடுத்து வந்தான்; அவனைத் தண்டிக்க விரும்பிய இந்திரன் சோறு கேட்க ஒருவரும் அவனிடம் வராதபடிச் செய்துவிட்டான்" என்ற கதை இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. பிறரிடம் உதவி பெறுபவர்கள் இல்லாதபோது எங்கே ஒற்றுமையும் மனித மதிப்புகளை வெளிப்படுத்தவும் இடம்? இப்படி இருப்பவர்கள் இல்லையானால் நம்மிடம் அன்பு என்பது எப்படி வெளிப்பட்டு விளங்கும்? அன்பிற்கு இடமில்லாதபோது சமுதாயம் மரப்பொம்மைகளின் நடமாட்டமாகவே முடியும்' எனக் கூறி 'ஒருவரையொருவர் நாடிவாழ்வது பிச்சையாகாது. கூட்டுறவு வாழ்க்கையின் விளக்கம் அது.........கூட்டுறவு வாழ்வின் எதிர்மறை வழியாகக் கூட்டுறவுத் தத்துவத்தை வள்ளுவர் விளக்குவது மிகச் சுவை உடையது' என்று இக்குறளுக்கு விளக்கம் தருவார்.

உலகில் மேடு பள்ளங்கள் இயற்கையானவை. என்னதான் முயன்று சமன்மையான உலகை உண்டாக்க நினைத்தாலும் இயற்கையில் மலை-மடுவு உள்ளது போல் செல்வரும், வறியவரும் இருக்கத்தான் செய்வர். அந்நிலையில் ஒருவர் பிறரிடம் உதவி கேட்க, பொருள் இருப்பவர் கொடுக்கும் மனம் கொண்டு வழங்க, இப்பேருலகம் இயங்கிக்கொண்டிருக்கும்; அந்நிலையில் அது உயிர்ப்புள்ளதாக இருக்கும்.
இக்குறள் இரத்தல் இழிவென்று கொள்ளப்படாது எனச் சொல்வதாகவும் இரப்போரிடம் இரக்கம் காட்டுக என ஈயும் நிலையிலிருப்பார்க்கு அறிவுரை கூறுவதாகவும் கொள்ளவேண்டும்

'ஈர்ங்கண்மா ஞாலம்' குறிப்பது என்ன?

'ஈர்ங்கண்மா ஞாலம்' என்றதற்குக் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம், இனிது இடம் உடைத்தாகிய பெரிய உலகம், இடம் மிகவும் பெரிய உலகம், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார், குளிர்ந்த இடத்தையுடைய உலகத்துள்ளே சனங்கள், குளிர்ந்த நிலத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார், இப் பெரிய உலகு, குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்திலுள்ளவர்கள், இந்தப் பெரிய உலகம், இப்பேருலகம், குளிர்ந்த இடமுடைய பெரிய உலகம், ஈரமுள்ள இடமாகிய இவ்வுலகம், குளிர்ந்த பெரிய உலகத்துள்ள மாந்தர், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகத்தார், குளிர்ந்த இடத்தையுடைய உலகம், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம், ஈரம் நிறைந்த இப்பேருலகம், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய மாநிலத்துள்ளார், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் என்ற பொருளில் உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஈர்ங்கண் என்பது 'குளிர்ந்த' எனவும் 'மா ஞாலம்' என்ற தொடர் பெரிய உலகம் எனவும் பொருள்படும். 'ஈர்ங்கண்மா ஞாலம்' என்றது குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் என்ற பொருள் தரும். இவ்வடைச்சொல் ஈரமுள்ள நெஞ்சத்தையும் குறிப்பால் உணர்த்தி ஞாலத்தின் சிறப்பைக் காட்டுவதாக உள்ளது. ஞாலம் என்ற சொல்லுக்கு உலகத்திலுள்ள மக்கள் என்றும் பொருள் கொள்வர்.
காலிங்கர் 'ஈன்கண்மாஞாலம்' எனப்பாடங் கொண்டு 'இனிது இடம் உடைத்தாகிய பெரிய உலகம்' எனப் பொழிப்பிலும், 'ஈன்கண் மாஞாலம் என்பது இடம் மிகவும் பெரிய உலகம்' எனச் சிறப்புரையிலும் கூறுவார். 'ஈன்கண்மாஞாலம்' என்பதற்கு 'இவ்விடத்தாகிய பெரிய பூமி' அல்லது 'இந்நிலவுலகம்' என்பது பொருள்.

குளிர்ந்த இடத்தையுடைய பெரிய பரந்து விரிந்த உலகமாக இருந்தாலும் அங்கு ஈர நெஞ்சினை உடைய ஈவார் இருந்தும், இரப்பாரே இல்லையென்றால், ஈகைக்கு வழியில்லை. மாந்த பண்பு எப்படி வெளிப்படும்? முன்பு, அன்பற்ற உலகவாழ்வு சிறக்க முடியாது என்று அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (அன்புடைமை 78 பொருள்: உள்ளத்தில் அன்பில்லாது உயிர் வாழ்தல் என்பது வன்மையுடைய நிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தல் போலும்) என்ற குறளில் கூறப்பட்டது. இங்கு இரக்க குணத்திற்கு வாய்ப்பில்லா இடத்தில் மாந்தர் வாழ்க்கை சிறக்காது எனச் சொல்லப்படுகிறது.

'ஈர்ங்கண்மா ஞாலம்' என்ற தொடர் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் எனப் பொருள்படும்.

வறுமையால் உதவிகேட்பவர் இல்லையானால் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் மரப்பாவை சென்று வந்தாற் போல் உணர்ச்சியற்றதாய் இருக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இரவு இருப்பதால் உலகில் ஈரம் நிலைக்கிறது.

பொழிப்பு

வறுமையால் இரப்பவர் இல்லையானால் குளிர்ந்த இப்பெரிய உலகத்திலுள்ள மக்களின் இயக்கம் மரப்பாவையின் நடமாட்டம் போன்றதாகும்.