ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் (வான் சிறப்பு 14) எனப் பாயிரத்திலேயே உழுதொழில் ஏரினால் நடைபெறுவது என்பதும் அத்தொழில் செய்பவர் 'உழவர்' என்பதும் எடுத்துக் காட்டப்பட்டன.
நாட்டிற்கு இன்றியமையாது வேண்டும் மாந்தர் யாவர் என்பதை வரையறுக்கும் பாடலான தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (நாடு 731) என்பதில் குறைவுபடாத நிறைந்த விளைச்சலை ஆக்கும் உழவர்க்கு முதன்மை நிலை தந்துள்ளமை ஏர்த்தொழில்புரிவார்தம் சிறப்பினை உணர்த்தும்.
நெடுங்காலமாக உழவு ஒன்றே மிகப்பெரும்பாலோரின் தொழிலாக இருந்து வந்திருக்கிறது, இன்றும் பெரும்பாலோரின் தொழில் அதுவே.
நிலத்திலிருந்து விளையும் கூலமே உலகத்தினருக்கு முதன்மையான உணவாக உள்ளது. ஆகவே அதை உண்டாக்கும் உழவுத்தொழில் சிறந்த தொழிலாகப் போற்றப்படுகிறது.
வையத்தில் ஏழ்மையே இல்லாது அகல வேண்டுமெனில் நிலத்தை உழுது பயிரிட்டு வேளாண்மை செய்வதாலேயே முடியும்.
நிலத்தைத் தன் காதலிபோல எண்ணிப் பேணவேண்டும் என்று உழவர்களுக்கு அறிவுரை தருகின்றார் வள்ளுவர்.
பொருளியல் வாழ்வுக்கு அடிப்படை உணவு விளைவித்தலே என்பது இவ்வதிகாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.
என்றும் எத்தொழிலுக்கும் உழவே அடிப்படையாக அமைந்திருப்பதால், அதனைக் குறள் முதன்மைப்படுத்தப்படுகிறது.
'இந்த நவீன காலத்திலும் கூட ஏனைய தொழில்களைவிட இது தனித்த மதிப்புள்ளதாக இருக்கிறது. உழவுதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.
உழவின் இன்றியமையாமையையும் பயன்களையும் கருதி வள்ளுவர் உழவரையும் உழவுத் தொழிலையும் பெருமைக்குரியனவாய் உரைக்கிறார்.
தமக்குரிய நிலத்தைத் தாமே உழுது பயிரிட்டு உண்டு வாழ்பவர் உழுதுண்பார் எனப்படுவர்.
இவர்களையும் பிறர் நிலத்தைக் குத்தகைக்கோ, வாரத்துக்கோ, கூலிக்கோ பிடித்து உழுபவர்களையும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று பொதுப்படக்கூறி ஒரே வகையில் அடக்குவர்.
உழவுத் தொழிலைச் செய்விப்போர் 'உழுவித்து உண்போர் எனப்பட்டனர். உழுவித்துண்போர் நிலத்தலைவர்கள்.
உழவர்களைச் சிறப்பித்துக் கூறியபோது .வள்ளுவர் பெரும்பாலும் முதல் பிரிவினராகிய உழுதுண்பாரையே உளத்திற் கொண்டார் எனத் தோன்றும்.
உழவுக்கென ஒரு பாடல்தொகுதியை உண்டாக்கி எதற்கும் இல்லாததொரு தனிப்பெருஞ் சிறப்பினை இதற்குத் தந்துள்ளார் வள்ளுவர்.
உழவுத் தொழில் அளவுக்கு வேறு எந்த ஒரு தொழிலையும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றவில்லை அவர்.
உழவுத்தொழிலுக்கு வள்ளுவர் ஏன் இத்துணைச் சிறப்புத் தருகிறார்?
.........சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை 972) என்பதில் 'உயிர்களின் செயல் வேற்றுமையால் சிறப்புநிலைகள் வேறுபடும்' எனக் குறள் கூறும். உழவுத்தொழில் சிறப்பில் உயர்ந்தது என்று வள்ளுவர் கருதுகிறார்.
உழைப்பைப் பொதுவாக அறிவுழைப்பு, உடலுழைப்பு என இருவகையாகப் பகுக்கலாம். இவற்றில் இரண்டாவதான உடலுழைப்பு குறைத்தே மதிப்பிடப்படுகிறது.
அதனால் உடலுழைப்பு மிகத் தேவைப்படும் உழவுத்தொழில் எக்காலத்திலும் எல்லா நாட்டினராலும் புறக்கணிக்கப்பட்டதாகவே உள்ளது.
மனுதர்மம், அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்கள் உழவை ஒரு தாழ்ந்த தொழிலாகவே கருதுகின்றன. அவ்வாறே, வேளாண்மையானது இரும்புத் தரத்திரனருக்கு உரியது என்று பிளேட்டோ, அடிமைகள் தாம் இத்தொழில் செய்தற்கு உரியவர்கள் என்று அரிஸ்டாட்டில், அறிவுத் திறன் குறைந்தவருக்கு உரியது உழவு எனக் கேம்ப்ப நெல்லா போன்ற மேற்குநாட்டு நூலார்களும் கூறினர். பொதுவாகக் கடினமான உழைப்பு போன்றவற்றைக் கீழ் மக்களின் பண்பாகவே காட்டுவர். திறமையில் குறைந்தவர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கிறார்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. இன்றும் உடலுழைப்புக்கு உலகம் உரிய இடம் தருவதில்லை. ஆனால் வள்ளுவரோ அந்தக் காலத்திலேயே உடல் உழைப்பை உயர்த்திப் பிடித்து உழவை மேன்மையாகப் பேசுகிறார். உழுது உண்ணும் உடல் உழைப்பாளிகளைத்தான் மிகுதியாகப் பேசினார் என்பதை, 'உழந்தும்', 'கைசெய்து ஊண் மாலையவர்' (கையால் உழுதொழில் செய்து, உண்பதை இயல்பாகக் கொண்டவர்), 'உழவினார் கைமடங்கின்' (உழவரின் கைகள், உழுதொழில் செய்யாவிட்டால்) போன்ற சொல்லாட்சிகள் தெளிவுபடுத்துகின்றன.
குளிரூட்டப்பட்ட அறைகொண்ட எந்திரக் கலைப்பை (AC Cabin Tractor) போன்ற வசதிகள் வந்தபின்னும் உழவுத்தொழில் கடினமானதுதான்.
'உண்டி முதற்றே உலகு'. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு. உணவுப் பொருள் விளைச்சல் பெருகவில்லையானால், நாட்டிலே பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். உணவுப்பொருளைப் பெருக்கவேண்டுமென்றால் உழவுத் தொழில் சிறக்க வேண்டும்.
மெய்வருந்தி உழைக்கும் தொழிலென்பதால் அதனைச் செய்யமாட்டாது மாந்தர் பிறதொழில்கள் மேற்செல்கின்றனர். அவர்களை அங்கு செல்லவிடாமல் தடுத்து
உழவுத்தொழிலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இன்னபிற காரணங்களுக்காக உழவை மிக உயர்வாகப் பேசுகிறார் வள்ளுவர்.
எந்தத் தொழிலைச் செய்து உழன்றாலும் ஏரின்வழியிலே உலகம் உள்ளது. ஆதலால் வருந்தினாலும் ஏர்த்தொழிலே தொழில்;
வேறு தொழில்கள் செய்வார்கள் யாவரையும் தாங்குதலால் உழுபவர்கள் உலகத்திற்கு ஆணிபோல்வார்;
உழுது உண்டு வாழ்பவர்களே உரிமை வாழ்வுடையார்கள். மற்றவர்கள் ஏவல் செய்பவர்கள்;
நெற்கதிர் உடையராய உழவர்கள் பிற துறையினர் தம்மை நாடிவரச்செய்வர்;
உழுது உண்டு வாழ்பவர்கள் இரக்க மாட்டார்கள். தம்மிடம் இரப்பவர்களுக்கு உணவளிப்பர்;
உழவர்கள் தமது தொழிலைச் செய்யாவிட்டால், யாவரும் விரும்பும் உணவும் இல்லை.
ஏருழுதல், எருவிடுதல், களைகட்டல், நீர் பாய்ச்சுதல், காத்தல் என்னும் ஐந்து உழவுத் தொழில் முறைகளாக தொகுத்து உரைக்கப்பட்டுள்ளது;
உழவன் நிலத்தைத் தினஞ்சென்று பாராமலிருந்துவிடின் காதலிபோல நிலமும் ஊடிவிடும்;
தம்மிடம் ஒன்றுமில்லை என்று சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலப்பெண் ஏளனம் செய்வாள்.
இவை இவ்வதிகாரப் பாடல்கள் தரும் செய்திகள்.