இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1034பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்

(அதிகாரம்:உழவு குறள் எண்:1034)

பொழிப்பு (மு வரதராசன்): நெல்வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடைநிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

மணக்குடவர் உரை: பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர்.
குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்)

பரிமேலழகர் உரை: அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர்.
(அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி. ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர். 'ஊன்று சால்மருங்கின் ஈன்றதன் பயனே' (புறநா.35) என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தானியச் செல்வத்தை ஆட்சி புரிகின்ற உழவாளிகள் மற்றுள்ள பலவித செல்வங்களையும் ஆட்சி புரிகின்றவர்களை, தம்முடைய ஆட்சி நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அலகுடை நீழலவர் பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்.

பதவுரை: பல-பலவாகிய; குடை-கவிகை; நீழலும்-ஆள்தலிலுள்ள நிழலும், நிழலதாய மண்; தம்-தமது; குடை-குடைநிழல், தண்ணளி; கீழ்-உள்ளாக; காண்பர்-பார்ப்பார்; அலகுடை-நெல்லுடைய; நீழலவர்-நிழலில் உள்ளவர்.


பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர்;
பரிப்பெருமாள்: பல அரசர் குடைநிழலையும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர்;
பரிதி: அரசர் பலகுடை நீழலும் தம் குடை நீழலிலே காண்பர்;
காலிங்கர் ('தம்கொடைக்கீழ்க்' பாடம்): கொற்றக் குடைமுதல் ஆகிய அளவிறந்த நிழற்கீழ் வாழ்வாரையும் அவரவர்க்குத் தாம் கொடுக்கும் கொடை வழி வருதலை நாளும்நாளும் கொண்டொழுகுபவர்; [கொற்றக் குடைமுதல்- வெற்றியையுடைய வெண் கொற்றக் குடை முதல்]
பரிமேலழகர்: பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி. ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். [தங்குடை-அரசர்க்கும் உழுவார்க்கும் உள்ள ஒற்றுமை பற்றி அரசரது குடையை உழுவாரின் மேலேற்றித் 'தம்குடை' என்று கூறினார்]

'பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர்' என்று மணக்குடவர் பரிப்பெருமாள் பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'அரசர் பலகுடை நீழலும் தம் குடை நீழலிலே காண்பர்' என்றார். 'கொற்றக் குடைமுதல் ஆகிய அளவிறந்த நிழற்கீழ் வாழ்வாரையும் அவரவர்க்குத் தாம் கொடுக்கும் கொடை வழி வருதலை நாளும்நாளும் கொண்டொழுகுபவர்' என்பது காலிங்கரது உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரையும் தம் அரசனுக்குக் கீழ்ப்படுத்துவர்', 'அரசர் பலரையும் பணிய வைத்து அவர்தம் வெண்கொற்றக் குடைகளைத் தம் அரசர் குடைக்கீழ்க் காண்பார்கள்', 'மற்றுள்ள பலவித செல்வங்களையும் ஆட்சி புரிகின்றவர்களை, தம்முடைய ஆட்சி நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள்', 'பல அரசர்களின் குடை நிழலையும் தம் குடைக் கீழ்க் காண்பார்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பல்வேறு துறையிலும் ஆட்சி செய்கின்றவர்களைத் தம்முடைய குடை நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

அலகுடை நீழ லவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடையில்லா நிழலை யுடையவர்.
மணக்குடவர் குறிப்புரை: குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்)
பரிப்பெருமாள்: குடையில்லா நிழலை யுடையவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: குடையல்லாத நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது.
பரிதி: அலகுடை நீழலாய உழவினால் என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகியல்பு உடையார் யார் எனின் தமக்கு உழவைத்தரும் கலப்பைத் தண் நிழலினை உடையவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அலகு என்பது கலப்பை.
பரிமேலழகர்: உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்.
பரிமேலழகர்: அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர். 'ஊன்று சால்மருங்கின் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும். [அலகு-அலகு என்னும் முதற்பெயர் அதன் சினையாகிய நெல்லினை உணர்த்துதலால் முதலாகு பெயர்; உடை-உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் இறுதி குறைந்து உடை என நின்றது; நீழல் - உழுவாரிடத்துள்ள தண்ணளி இரப்பவர்க்கு நீழல் (நிழல்) போன்று இருத்தலால் நீழல் என்று கூறப்பட்டது. நீழல் போன்ற தண்ணளியை நீழல் என்றது உவமையாகுபெயராம்]

'குடையில்லா நிழலை யுடையவர்' என மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அலகுடை நீழலாய உழவினால்' என்பது பரிதி உரை. காலிங்கர் 'தமக்கு உழவைத்தரும் கலப்பைத் தண் நிழலினை உடையவர்' எனப் பொருளுரைத்தார். பரிமேலழகர் 'உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள்', 'நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள்', 'தானியச் செல்வத்தை ஆட்சி புரிகின்ற உழவாளிகள்', 'நெற்கதிர்களையுடைய நிழலினையுடையவர் (அரசர்களும் உழவர்களால் வாழ்கின்றனர் என்பதாம்,)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பல்வேறு துறையிலும் ஆட்சி செய்கின்றவர்களைத் தம்முடைய குடை நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள் என்பது பாடலின் பொருள்.
'பலகுடை நீழலும்' குறிப்பது என்ன?

உழவை ஆள்பவர்கள் பிற துறையாள்பவர்களும் உணவுக்காகத் தம்மை நாடிவரும் நிலையில் உள்ளனர்.

நெற்கதிர்களின் நிழலையே தமக்குடையதாகக் கொண்டு உழைக்கும் உழவர், பல துறைப்பட்டவர்களையும் தம் தண்ணளிக்குக் கீழ் கொண்டுவருவர்.
அலகுடை என்பதிலுள்ள அலகு என்ற சொல்லுக்குக் கதிர், கலப்பை எனக் கூறப்பட்ட பொருள்களுள் கதிர் என்ற பொருள் பொருத்தம். அலகுடைய என்பது அலகுடை எனக் குறைந்து வந்தது என்பர். அலகுடை நீழல் என்பது நெற்கதிர் நிழலின் கீழ் உழைக்கும் உழவர்களின் கருணை என்று பொருள்படும். களிறு மாய்க்கும் கதிர்க் கழனி (பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி 247 பொருள்: யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிரையுடைய கழனி) என்ற சங்கப்பாடல் யானையை மறைக்கும் அளவு வளர்ந்து நிற்கும் நெற்கதிர் என்கிறது. இந்த நெற்கதிரின் நிழல்தான் இங்கு பேசப்படுகிறது. அலகுடை நீழல் என்ற தொடர்க்கு நெற்கதிர் மிகப் பெருக்கி, அதன் நிழல் வேவிய நிலமுடையார் எனவும் பொருள் கூறினர்.
பலகுடை நீழலும் என்ற தொடர் பலவேறுபட்ட துறையினரது ஆளுகையும் என்ற பொருள் தருவது.
தம்குடைக்கீழ் என்ற தொடர்க்குத் தம்முடைய குடைநிழலின் கீழ் அதாவது உழவருடைய தண்ணளி என்பது பொருள்.
நெல்வளம் மிக்க தண்ணளியுடைய உழவர்கள் பிறபல தொழில்களையுடையாரது ஆளுகைகளையும் உழவெனும் தம் குடைக் கீழ்க் காண்பர்; மற்றையர் அனைவரையும் தம் உழவுத் தொழில் எனும் குடையை எதிர்நோக்கியிருக்கச் செய்வர் என்று இக்குறள் கூறுகிறது.

முதல் உரையாசிரியரான மணக்குடவர் பலகுடை நீழல் என்றதற்குப் பல அரசர் குடைநிழலும் என்றும் அலகுடை என்றதற்குக் குடையில்லா நிழலை யுடையவர் என்றும் தம்குடைக்கீழ் என்பதற்குத் தம் அரசர் குடைநிழற்கீழே என்றும் பொருள் கண்டு உரை செய்தார். பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர் குடையில்லா நிழலை யுடையவர் என்கிறது இவர் உரை. இவர் குடை அல நிழல் எனக் கொண்டு கூட்டிக் குடையலா நிழல் என உரைத்துள்ளார். குடையல்லாத நிழலாவது பைங்கூழ் நிழல்; கதிர்களையுடைய நெற்பயிரின் நிழல் என விரிவுரையும் தந்தார். 'இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது' என விளக்க உரையும் கூறினார். பரிப்பெருமாள் கருதுவதும் இதுவே. குடையல்லாத நிழல் என்பதற்கு நிழலற்ற சூழலில் உண்டான உழைப்பு எனப் பொருள் கொள்ளலாம்.
பரிதி 'அரசர் பலகுடை நீழலும் தம் குடை நீழலிலே காண்பர், அலகுடை நீழலாய உழவினால்' என்று மணக்குடவர் உரையை ஓரளவு தழுவியவாறு உரைத்தார். காலிங்கர் குடை என்பதற்குக் கொடை எனப்பாடங் கொண்டு 'கொற்றக் குடைமுதல் அதாவது வெற்றியையுடைய வெண் கொற்றக் குடை முதல் ஆகிய அளவிறந்த நிழற்கீழ் வாழ்வாரையும் அவரவர்க்குத் தாம் கொடுக்கும் கொடை வழி வருதலை நாளும்நாளும் கொண்டொழுகுபவர்; இவ்வுலகியல்பு உடையார் யார் எனின் தமக்கு உழவைத்தரும் கலப்பைத் தண் நிழலினை உடையவர் என்றார். இவர் அலகு என்பதற்குக் கலப்பை என்று பதவுரை கூறினார்.
பரிமேலழகர் 'உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர் பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர்' என உரை நல்கினார். மேலும் இவர் ஊன்று சால்மருங்கின் ஈன்றதன் பயனே (புறநானூறு 35 பொருள்: உழுகின்ற கலப்பை நிலத்தினிடத்தே ஊன்றிய சாலினிடத்து விளைந்த நெல்லினது பயனே) என்ற செய்யுளையும் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் (சிலப்பதிகாரம் நாடுகாண்காதை 149-150 பொருள்: இரப்பவருடைய சுற்றாத்தாரையும் தம்மைக் காக்கும் அரசருடைய வெற்றியையும் தமது உழவினிடத்தே உண்டாக்குவோர்) என்னும் சிலப்பதிகாரப் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டுகிறார். உழவர்களே தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம் என்று விளக்கமும் கூறுவார். பல அரசர்களின் நிழல்களைத் தம் வேந்தர் குடைநிழலின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்பது இவர் உரை.

'உழுதொழில் செய்வோரே அரசினை நிலைநிறுத்துபவரும் ஆவர்', 'உழவுத் தொழிலின் பெருக்கமேநாட்டில் நலவளத்தையேற்படுத்தி மக்களை உடல் வலிமையும் ஊக்கமும் பெறச் செய்து போரில் வெற்றியையும் தரும்', 'நெற்கதிர்களையும் தண்ணருளையும் உடைய உழவர்கள் பிற அரசரின் குடையின் கீழ் உள்ள நாடுகளையும் தம் அரசனின் குடையின் கீழ் வரக்காணும் ஆற்றலுடையவர் ஆவர்', 'உழவர் வேந்தரினும் மேலானவர்', 'அரசாட்சிகளும் இவர்களது துணையால் நடப்பனவேயாம்', 'மன்னன் வாழ்வையும் செல்வத்தையும் உழவனின் வாழ்வின்கீழ்க் கொண்டுவந்து நிறுதப்பட்டது', 'பலகுடை மன்னரும் தமது பசுவளக் குடைக்கீழ் வரக் காண்பர்', 'எந்த நாடு மிகுதியாகத் தானியங்களையும் உணவுப் பொருள்களையும் உண்டாக்குகிறதோ அந்த நாட்டைப் பல மன்னரும் நாடி வருவர் எதிர்பார்ப்பர்' எனப்பலவாறாக உழவரையும் உழவுத்தொழிலையும் உயர்ந்தேத்தி இக்குறளை விளக்கினர்.
உழவர்களின் விளைச்சலை வேறு பல நாடுகளும் எதிர் நோக்கியிருந்தன; அது ஆட்சியாளருக்கு நல்ல வருமானத்தையும் தந்தது என்பன எளிதில் உய்த்துணரப்படும். இதைத்தான் இக்குறள் உழவர் மன்னர் பலரையும் தம் உழவுத் தொழில் எனும் குடையை எதிர்நோக்கியிருக்கச் செய்வர் என்று சொல்வதாகலாம்.

'பலகுடை நீழலும்' குறிப்பது என்ன?

'பலகுடை நீழலும்' என்றதற்குப் பல அரசர் குடைநிழலும், பல அரசர் குடைநிழலையும், அரசர் பலகுடை நீழலும், கொற்றக் குடைமுதல் ஆகிய அளவிறந்த நிழற்கீழ் வாழ்வாரையும், பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும், பலவேந்தர் குடை நிழலதாய பூமியெல்லாம், பல வேந்தர் குடை நிழலும், பல அரசரின் குடைநிழல்களையும், அரசர்களின் வெண்கொற்றக்குடைகளின் நிழலில் தங்கிய உலகம் முழுவதையும், பல அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும், பலரையும், பலரையும் பணிய வைத்து அவர்தம் வெண்கொற்றக் குடைகளை, பலவித செல்வங்களையும் ஆட்சி புரிகின்றவர்களை, ஆட்சியாளரின் பலகுடைகளும், பல அரசர் குடைக்கீழுள்ள நில முழுவதையும், பல அரசர்களின் குடை நிழலையும், பல அரசர்களின் குடைக்கீழுள்ள நிலம் முழுவதையும், வெண்கொற்றக் குடை நிழலில் ஆளும் பல ஆட்சிகளையும், பல வேற்றரசரின் குடை நிழலின்கீழுள்ள நாடுகளையும், பல நாட்டை ஆளும் மன்னர்களையும் என்றபடி பொருள் கூறினர்.

பலகுடை நீழலும்' என்ற தொடரிலுள்ள குடை என்ற சொல் நோக்கி, இக்குறளுக்குப் பலரும் அரசரின் வெண்கொற்றக்குடையே குறிப்பிடப்படுவதாக உரைக்கின்றனர். உழவர்கள் அரசர்களின் வெண் கொற்றக்குடைகளின் நிழலில் தங்கிய உலகம் முழுவதையும் தமது குடையின்கீழ் வாழக் காண்பவர்கள்; அரசாட்சிகளும் இவர்களது துணையால் நடப்பனவேயாம் என்றபடி இவர்கள் பொருள் உரைத்தனர். குடை என்றதற்கு வெண்கொற்றக்குடை எனவும் நீழல் என்பதற்கு அரசர்கள் ஆட்சி புரியும் நிலத்தைக் குறிக்க வந்த சொல் எனவும் பொருள்கண்டு பலகுடை நீழல் என்பதை-பல அரசர்களுடைய குடைகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம் எனப் பெரும்பான்மையர் விளக்கினர்.
'அரசர் பலரின் குடை உழவர் குடை நிழலில் இருக்கும்', 'உழவர்கள் பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும் தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் ஆற்றலுடையவர் ஆவர்', 'நெற்கதிர் உடையராய உழவர்கள் பல மன்னர்களைத் தம் மன்னர் அடிக்கீழ்ப்படுத்துவர்' போன்றன மிகைக்கூற்றுக்களாகவே உள்ளன.

நாமக்கல் இராமலிங்கம் 'தானியக் கதிரின் நிழலில் இருப்பவர் (மற்றப்) பலவிதமான குடை நிழலில் இருப்பவர்களையும் தம்முடைய குடையின் நிழலைத் தேடிவரச் செய்யக் கூடியவர்கள் அதாவது. மற்ற எந்தத் தொழில் செய்கிறவர்களும் உழவுத் தொழில் செய்கிறவனிடத்துக்குத்தான் உணவுக்கு வந்தாக வேண்டும்' என்று இக்குறளுக்கு உரை வரைந்தார். ஆனால், ‘பலகுடை’ என்பதற்குப் பல தொழில்களைச் செய்வார் என்று அவர் உரைப்பது மரபின்மையின் பொருந்தாது என்பார் இரா சாரங்கபாணி. எனினும் மற்றையோர் உரைகளினும் 'உழவுத் தொழில் செய்கின்றவர்கள் மற்றுள்ள பல தொழில்களைச் செய்கின்ற எல்லாரையும் தம்முடைய ஆதரவைத் தேடிவரச் செய்கிறவர்கள்' என்னும் இவர் உரை பொருத்தமாகப்படுகிறது.

'பலகுடை நீழலும்' என்ற தொடர்க்கு பல்வேறு துறையினரது ஆளுகையையும் எனப்பொருள் கொள்ளலாம்.

நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பல்வேறு துறையிலும் ஆட்சி செய்கின்றவர்களைத் தம்முடைய குடை நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உழவுத் தொழில் நாட்டின் பொருளியலுக்கு வலிமை தரக்கூடியது.

பொழிப்பு

நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பல்வேறு துறைகளில் ஆட்சி செய்கின்றவர்களையும் தம்முடைய குடை நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள்.