இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1033



உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

(அதிகாரம்:உழவு குறள் எண்:1033)

பொழிப்பு (மு வரதராசன்): உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

மணக்குடவர் உரை: உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர்.
இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.

பரிமேலழகர் உரை: உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர்.
['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: எல்லாரும் உண்ணுதற்காக உழவுத்தொழில் செய்து தாமும் உண்டு உரிமையுடன் வாழ்பவரே வாழ்பவர் ஆவார். உழவர் நீங்கிய மற்றைய எல்லாரும் பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர் ஆவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.

பதவுரை: உழுது-(நிலத்தை) உழுது; உண்டு-உண்டு; வாழ்வாரே-வாழ்க்கை நடத்துபவரே; வாழ்வார்-வாழ்பவர்; மற்று-பிறர்; எல்லாம்-அனைத்தும்; தொழுது-வழிபட்டு; உண்டு-உண்டு; பின்செல்பவர்--பின்போகுபவர்.


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே;
பரிப்பெருமாள் ('மற்றெல்லார்' பாடம்): உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே;
பரிதி: உழுது உண்டு ஏற்றவர்க்கு இட்டு வாழ்வதே வாழ்வு;
காலிங்கர் ('மற்றல்லாதார்' பாடம்): அரசரும் அன்னரோ எனில் அவரும் இவரிடு பொருளை நத்திடும் இயல்பு அல்லது, தாம் அவர்க்கிடுவது இல்லை; ஆதலால், உழுதுண்டு வாழ்கின்றாரே வாழ்கின்றார் என்று சொல்லப்படுவார்; [இடுபொருளை- இடுகின்ற பொருளை; நத்திடும் இயல்பு- விரும்பும் இயல்பு]
பரிமேலழகர்: யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; [அதனால் - உழுதலால்]

'உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'உழுது உண்டு ஏற்றவர்க்கு இட்டு வாழ்வதே வாழ்வு' என்றார் பரிதி. 'அரசரும் அன்னரோ எனில் அவரும் இவரிடு பொருளை நத்திடும் இயல்பு அல்லது, தாம் அவர்க்கிடுவது இல்லை, ஆதலால் உழுதுண்டு வாழ்கின்றாரே வாழ்கின்றார் என்று சொல்லப்படுவார்' என உரை வரைந்தார் காலிங்கர். 'யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்' என்பது பரிமேலழகர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'உழுது உண்டு வாழ்பவரே உரிமையாளர்', 'உழவுத் தொழில் செய்து (தாமே உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை) உண்டு சீவிக்கின்றவர்களே சொந்த வாழ்க்கை நடத்துகிறவர்கள்', 'உழவினால் உணவுபெற்று வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர்', 'யாவரும் உண்ணும்வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உழுது பயிர்செய்து உணவுபெற்று வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது. பரிப்பெருமாள் ('மற்றெல்லார்' பாடம்: மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர்.
பரிப்பெருமாள்: இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
பரிதி: மற்றது தொழுது, வணக்கம் செய்து, வயிறு வளர்ப்பது என்றவாறு.
காலிங்கர் ('மற்றல்லாதார்' பாடம்): மற்றையார் அனைவரும் பிறர் ஏவல்செய்து தொழுதுண்டு பின் செல்கின்றவர் என்றவாறு.
பரிமேலழகர்: மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். [அதனால் தாம் உண்டு - பிறரைத் தொழுதலால் தாம் உண்டு]
பரிமேலழகர்: 'மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து. [ஓம்பி - பாதுகாத்து]

'மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர்' என்ற பொருளில் மனக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'மற்றது தொழுது, வணக்கம் செய்து, வயிறு வளர்ப்பது' என்பது பரிதி உரை. 'மற்றையார் அனைவரும் பிறர் ஏவல்செய்து தொழுதுண்டு பின் செல்கின்றவர்' என்றார் காலிங்கர். பரிமேலழகர் 'மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர்' எனப் பொருள் கூறினார்

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரெல்லாம் உழவரைத்தொழும் அடிமைகள்', 'மற்றவர்களெல்லாம் பிறரை வணங்கி அவர் தயவால் உண்டு அடிமை வாழ்க்கை நடத்துகிறவர்களே', 'மற்றோரெல்லாம் பிறரை வணங்கி உணவுகொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர்', 'மற்றையரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவர் பின் செல்கின்றவர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மற்றைய எல்லாரும் பிறரை வணங்கிக்கொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உழுது பயிர்செய்து உண்டு வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர்; மற்றைய எல்லாரும் பிறரை தொழுதுண்டு பின்செல்பவர் என்பது பாடலின் பொருள்.
'தொழுதுண்டு பின்செல்பவர்' குறிப்பது என்ன?

உழவர் தற்சார்பான தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவர் ஆவர்.

உழவுத் தொழிலைச் செய்து உண்டு வாழ்கின்றவர்களே உரிமையோடு வாழ்கின்றவர் ஆவர்; மற்றவர் எல்லாரும் பிறர் ஏவியதைச் செய்து உண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்பவரே ஆவர்.
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்று சென்ற குறளில் (1032) உழவர்கள், உலகில் வாழும் எத்தொழில் புரிவோர்க்கும், மையமாக இருக்கிறார்கள் எனச் சொல்லப்பட்டனர். இங்கு உழவர்களின் வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இக்குறளுக்கு நேரடியான பொருள்: உழவுத்தொழிலைச் செய்து அதனால் கிடைப்பதை உண்டு வாழ்வோரே வாழ்பவராவர். இதற்கு 'யாவரும் உண்ணுவதற்கு உணவை வழங்கித் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையான வாழ்வு வாழ்பவராவார். மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு அவர் இடும் தொழிலைச் செய்யப் பின் சென்று காத்துக் கிடப்பவராவர்' என்றும் உரை கூறுவர்.
உழவர்கள் பிறரை நம்பி அல்லது சார்ந்து வாழ்வோரல்லர்; மாறாக உழவுத்தொழில செய்யாத மற்றவர்கள் பிறரை வணங்கி அதனால் வயிறு வளர்த்து உரிமை ஏதும் இல்லாமல் அவர்களை நம்பி வாழ்கிறார்கள் என்று இக்குறட்பா கூறவருகிறது.
வாழ்வார் என்று உயர்திணையில் குறித்தது, உழும் தொழிலைச் செய்து உணவுண்டு வாழ்பவர்களின் பெருமையைச் சுட்டுதற்காக. மற்றெல்லாம் என்றது உழவுத் தொழில் தவிர மற்ற தொழில்களைக் குறிப்பன. பிற தொழில்கள் உழுதலினும் பிற்பட்டன என்பதைப் புலப்படுத்துமாறு அமைந்தது பாடல். உழவர் பெருமக்கள் தற்சார்புடனும் உணவுப் பாதுகாப்புடனும் தாங்களும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கின்றனர் என்பது கருத்து.

நிலத்தில் உழுது, மாந்தர் உண்டு மகிழக்கூடிய உணவுப் பொருள்களை விளைவித்து அளிக்கும் உடல்உழைப்பாளிகள் உழவர்கள். அவர்கள் உழுதுண்பார் எனவும் ஏரின் வாழ்நர் எனவும் அழைக்கப்பட்டனர். ஞாயிற்றின் ஒளி கொண்டு தன் முயற்சியால் மண்ணிலிருந்து உணவுப்பொருள்களை விளைவிக்கும் திறம் கொண்ட உழவர்கள் உலகோர் உண்ணும் வகையில், உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு தமக்குரியவராய் வாழ்கின்றவர் ஆவர்.
கூலியாட்களையமர்த்தி உழுவித்துண்போரும் உண்டு. இன்னும் நிலத்தில் பிறரை வேலை செய்யவிட்டு விளைபொருளில் ஒரு பகுதியைப் பெற்று விலகி யுறைந்த நிலக் கிழார்களும் உண்டு. இப்பாடலில் தனக்கு உரிமையான நிலத்தில் உழுதுண்பாரே உழுதுண்டு வாழ்வார் ஆவார் எனச்சொல்லப்படுகிறார் எனத்தோன்றுகிறது. 'உழுதுண்டு வாழ்வார்' தவிர்த்து ....உழந்தும் உழவே தலை (1031), ... கைசெய்தூண் மாலையவர் (1035) என்ற தொடர்களும் இதைக் காட்டும். தம் நிலத்தைத் தாமே முயன்று உழுது தம் கையினால் வேலை செய்து பயன்கொள்ளும் முறையே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். 'தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து' என்கிறது பரிமேலழகர் சிறப்புரை.

......சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' (பெருமை 972) அதாவது அவரவர் செய்யும் தொழில் வேற்றுமை காரணமாகச் சிறப்புநிலைகள் வேறுபடும் என்று முன்பு வேறோரிடத்தில் சொன்னது குறள். தொழிலில் உயர்வு தாழ்வு இல்லாதிருக்கலாம். ஆனால் சமுதாயத்தில், ஒரு தொழிலின் பயன் கருதி, அதற்கிருக்கும் பெருமை அல்லது மதிப்பு மாறுபடும்.
வள்ளுவர் உலகில் பலவகையான தொழில்புரிவோர் வாழ்க்கைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். உழவர்கள் உலகிற்கு உணவு படைக்கின்றனர். உழுதுண்பதால் அவர்கள் வாழ்க்கை உரிமைகொண்டது, அதாவது சுதந்திரமானது, அவர்கள் வாழ்வு யாருக்கும் கட்டுப்பட்டது அல்ல. ஆனால், மற்ற வாழ்க்கைத் துறைகளோ அப்படியல்ல. தொழுதலும் பின்செல்லலும் அவற்றோடு இணைப்புடையன. இக்காரணங்களால் உழவர் வாழ்வே உண்மையான வாழ்வு என்று துணிகிறார் அவர்.
உழுதுண்டு வாழ்வாரை - தனது நிலத்தைத் தானே உழுது பயிரிடுபவர், நிலத்தை வாரம்-குத்தகைக்குப் பிடித்து உழுபவர், நெற்கூலிக்கோ பணக்கூலிக்கோ உழுபவர் அல்லது உழுவித்து உண்பவர் எனப் பிரிக்காமல் - உழுதொழில் செய்பவர் எனக் கொள்வதே இக்குறட்பொருளைப் புரிந்துகொள்ள உதவும்.

சிலர் 'உழுது உண்டு வாழ்பவரே உயர்ந்தவர்; அவர்களைத் தொழுது உண்டு மற்றவர், அடிமைகள்போல், உழவர் பின் சென்றிடுவர்' என உழவர் தொழத்தக்கவர் என்றும் அவர் பின் மற்றவர்கள் செல்வர் என்றும் பொருள் கூறினர். இவ்வுரை இக்குறளுக்குப் பொருந்தி வரவில்லை.

பின்செல்பவர் என்ற உயர்திணைக்கு மற்று என்றது பொருந்தாது எனக்கருதி காலிங்கர் 'மற்றல்லாதார்' எனப் பாடங்கொள்கிறார். இப்பாடம் பற்றி இரா சாரங்கபாணி ''...மற்றல்லாதார் தொழுதூண்டு பின்செல்பவர்’ எனக் காலிங்கர் கொள்வது பொருந்தாது. மற்றல்லாதார் தொழுதுண்டு என்பது வெண்தளை பிழைத்தல் காண்க. ‘வாழ்வார் மற்று எல்லாம்’ எனப் பரிமேலழகர் கொண்டதே ஆசான் பாடம் எனத் துணிதல் வேண்டும்' எனக் கருத்துரைப்பார்.

'தொழுதுண்டு பின்செல்பவர்' குறிப்பது என்ன?

'தொழுதுண்டு பின்செல்பவர்' என்ற தொடர்க்குப் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர், தொழுது வணக்கம் செய்து வயிறு வளர்ப்பது, பிறர் ஏவல்செய்து தொழுதுண்டு பின் செல்கின்றவர், பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர், பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே, பிறர் ஏவிய வேலைகளைப் பார்த்து, அவரை வணங்கி வாழ்பவர்கள், பிறரெல்லாம் உழவரைத்தொழும் அடிமைகள், பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர் ஆவார், பிறரை வணங்கி அவர் தயவால் உண்டு அடிமை வாழ்க்கை நடத்துகிறவர்களே, பிறரை வணங்கி உணவுகொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர், பிறரைத் தொழுது, அதனால் உண்டு அவர் ஏவியதைச் செய்து அவரைப் பின் தொடர்ந்து செல்பவரே ஆவர், இன்னொருவருக்குக் கட்டுப்பட்டுத் தொழுது பின் சென்று வாழ்பவர் ஆவர், பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே, உழுபவரை எதிர்பார்த்து அவர் சொற்படி பின் நடப்பவராவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உழுதுண்டு வாழ்வோர் உரிமையுடன் வாழ்கின்றனர் என்று சொன்னபின்னர் அதற்கு மறுதலையாக ஒரு தலைவனுக்குக் கீழ்ப்பட்டு அவன் தரும் ஊதியத்தைப் பெற்று வாழவேண்டியவர்களை தொழுதுண்டு பின்சென்று வாழ்பவர் என்கிறது இக்குறள். உடல் உழைப்புக்கு அஞ்சியவர்களை வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறரைத் தொழுது உணவு வாங்கி உயிர் பிழைப்போர் என்பது போலச் சொல்லப்படுகிறது. ஒருவர்பின் சென்றொருவன் வாழ்தல் என்பது உரிமையிழந்த வாழ்வு; அத்தகைய வாழ்வு சிறப்பானதல்ல.

குறளிலே தொழுவெனும் பகுதியை உள்ளடக்கிய சொற்கள் பல உள; நற்றாள் தொழாஅர் எனின் (2), தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் (55), கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260), மன்னுயிர் எல்லாம் தொழும் (268), தொழுதேத்தும் உலகு (970), தொழுத கையுள்ளும் (828) என்பன அவை. தொழு என்ற சொல் பொதுவாக வணங்கு என்ற பொருள் தருவது.
தொழத்தக்கதான தொழில் என்று எத்தொழிலையும் வள்ளுவர் கூறமாட்டார். குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்பவர் என்பதற்காகவே ஒருவரைத் தொழவும் சொல்ல மாட்டார் அவர். பயிர் செய்து வாழ்பவர்களே தன்னுடைய சுய முயற்சியால் வாழ்பவர்கள் என்று கருதப்படுகிறார்கள்; இவர்களே உழுதுண்டு வாழ்பவர்கள். பிற தொழிலைச் செய்பவர்கள் ஏனையவர்களின் ஆணைக்குட்படுபவர்களாய், பிறர் இடுகின்ற ஏவலின்படி செயல்படுபவர்களாவார்கள், இவர்களைத் தொழுதுண்டு வாழ்பவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
உணவு தந்து உலகை ஊட்டும் உழவின் அடிப்படை நலனையும் அத்தொழிலில் எழும் மிகுந்த உரிமை வாய்ப்பையும் கூறுவது இக்குறளின் நோக்கம்.

உழுது பயிர்செய்து உண்டு வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர்; மற்றைய எல்லாரும் பிறரை வணங்கி உணவுகொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உழவுத்தொழில் செய்வோர் பொருளியல் சுதந்திரம் பெற்று வாழ்பவராவர்.

பொழிப்பு

உழுது உண்டு வாழ்பவரே சிறப்பாக வாழ்வார் ஆவர்; மற்றைய எல்லாரும் பிறரை வணங்கி அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர் ஆவார்.