இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
(அதிகாரம்:உழவு
குறள் எண்:1035)
பொழிப்பு (மு வரதராசன்): கையால் தொழில்செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர் பிறரிடம்சென்று இரக்கமாட்டார்; தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
|
மணக்குடவர் உரை:
பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் கரத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
பரிமேலழகர் உரை:
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர்.
('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.)
தமிழண்ணல் உரை:
தம் கையால் உழவைச்செய்து, தன்முயற்சியால் உண்டு வாழ்தலை இயல்பாகவுடைய உழவர்கள், பிறரிடம் ஒருநாளும் இரந்து நிற்கமாட்டார்; தம்மிடம் இரப்பவர்க்கு அவர் வேண்டியது ஒன்றினை, இல்லையென மறைக்காமல் கொடுத்துதவுவர். தாமும் இரக்கமாட்டார்; இரப்பவர்க்கு ஈயாமல் மறுக்கவும் மாட்டார்
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கைசெய்தூண் மாலை யவர் இரவார் இரப்பார்க்கொன்று கரவாது ஈவர்.
பதவுரை: இரவார்-ஏற்கமாட்டார்; இரப்பார்க்கு- ஏற்பவர்க்கு; ஒன்று-ஒரு பொருள் (இங்கு உணவுப்பொருள்); ஈவர்-கொடுப்பர்; கரவாது-மறைக்காமல்; கை-கை, கையால்; செய்து-செய்து, உழைத்து, இயற்றி; ஊண்-உண்டல்; மாலையவர்-இயல்பாகவுடையவர்.
|
இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை இரப்பார்க்குக் கரத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்;
பரிப்பெருமாள்: தம்மை இரப்பார்க்குக் கரத்தல் இன்றி யாதொன்றாயினும் ஈவர்;
பரிதி: இரப்பவர்க்கும் கரவாது கொடுப்பார்;
காலிங்கர்: தம்மாட்டு இரப்போர்க்கு உள்ளதொன்று ஈவதும் செய்வர்; தம்மாட்டு இரப்போர்க்கு ஒன்று ஈயுமிடத்தும் கரவார்;
பரிமேலழகர்: தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். [கரவாது -மறைக்காமல்]
'தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிச்சைக்காரர்களுக்கு ஒளிக்காது கொடுப்பர்', 'தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய உணவினைக் கொடுப்பார்கள்', 'ஆனால் கேட்பவர்களுக்கு இல்லையென்னாமல் சிறிதேனும் கொடுப்பார்கள்', 'இரப்பார்க்கு ஒளியாமல் எதனையும் கொடுப்பார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இரப்பார்க்கு ஒளியாமல் பொருள் கொடுப்பார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
கைசெய்தூண் மாலை யவர் இரவார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரை இரவார் கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
பரிப்பெருமாள்: பிறரை இரவார் கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உழவினால் பயன் கூறுவார், முற்பட இல்லறம் செய்வது இவர் கண்ணது என்று கூறினார்.
பரிதி: தாங்கள் ஓரிடத்திலும் இரவார்; ஆதலால் உழவே நன்று என்றவாறு.
காலிங்கர்: பிறர்மாட்டுத் தாம் ஒன்று இரப்பதும் செய்யார்; யாவர், மற்று அவர் தமது கைக்கொண்டு இனிய தொழில் செய்யுமிடத்தும் கரவார்; மற்று இவ்வாழ்வினைத் தமக்கு இயல்பாக உடையவர் என்றவாறு.
பரிமேலழகர்: தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது. [செய்து என்னும் வினைக்கு ஏற்ப உழுதலை என்னும் செயப்படுபொருளை வருவித்துரைக்க; ஒருஞான்றும் - ஒருபோதும்]
'கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார் பிறரை இரவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உழுதுண்ணும் உழவர் பிச்சை எடுக்கார்', 'தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்ணுதலை இயல்பாகக் கொண்ட உழவர்கள் பிறரிடம் இரக்க மாட்டார்கள்', 'சொந்த உழைப்பினால் சோறுண்ணும் இயல்புடைய உழவாளிகள் பிறரிடத்தில் பிச்சை கேட்க மாட்டார்கள்', 'தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார், பிறரிடம் சென்று இரவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்டலை இயல்பாகவுடையார், பிறரிடம் சென்று இரவார் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்டலை இயல்பாகவுடையார் பிறரிடம் சென்று இரவார்; இரப்பவர்க்கு ஒளியாமல் பொருள் கொடுப்பார்கள் என்பது பாடலின் பொருள்.
'கைசெய்தூண் மாலையவர்' யார்?
|
ஈரநெஞ்சம் கொண்டவர்கள் உழவர்கள்.
கையால் உழவுத் தொழில் செய்து உண்பதை இயல்பாக உடைய உழவர் பிறரிடம் சென்று இரக்க மாட்டார்; தம்மிடம் வந்து இரப்பவர்கட்கு இல்லை என்று சொல்லாமல் பொருள் தருவர்.
உழவுத்தொழில் செய்பவர்கள் கடும் உழைப்பாளிகள். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபடும் உழைப்பாளிகளுக்கே பிறர் துன்பம் கண்டு வருந்தி உதவத் தோன்றும்.
தன் முயற்சியற்றவனே இரப்பானதலின் உழுவார்கள் இரவார்; ஆயின் இரப்பார்க்கொன்றீவர்.
இரவாமல் இருப்பதும் இரப்பார்க்கொன்று ஈவதும் வேளாண்தொழில் புரிபவரின் சிறப்புகளாம்.
தன்கையை நம்பி இருக்கும் ஒருவர்க்குப் பிறரிடம் சென்று இரக்க வேண்டும் என்று தோன்றவே தோன்றாது. உழவர் யாரிடமும் பொருள் கேட்க வேண்டாதநிலையினராகவே இருப்பார். பிறர்க்கு உதவும் பண்பும் இயல்பாகவே உழவர்களிடம் உண்டு. இன்றும் அறுவடைநேரத்தில் அவர்கள் தம்மிடம் இருப்பனவற்றை, மறைக்காமல், இரப்போர்க்கு உணவுப் பொருள்களைக் கைநிறைய எடுத்து வழங்குவதை நேரில் காணலாம்.
எப்பொழுதும் மக்கள் அனைவரும் பசியின்றி இருக்க வேண்டும் என்ற எண்ணம் உழவர்க்கு உள்ளத்தில் எப்பொழுதும் குடிகொண்டிருக்கும்.
வஞ்சனையின்றி உழைத்துப் பெற்ற பொருளால் பிறர் தேவையை நிரப்புவதே சமுதாயத்தை நன்னிலையில் வைத்துக்காக்கும் வழியாகும் என்பதை அவர் உணர்ந்தவர்.
இரவாமை மட்டுமேயன்றிக் கரவாது ஈயவும் செய்வர் என்று உழவரின் சிறப்பு விளக்கப்பட்டது.
உழவர் பற்றிய பாடலாதலால் 'ஒன்று ஈவர்' என்பது உணவுப் பொருளைக் கொடுப்பர் எனப்பொருள்படும்.
முயற்சியில்லாதவன் பிறர்க்கு உதவுதல் இயலாது. 'இரப்பதையே தொழிலாகக் கொள்ளாமல், உழைப்பால் ஊதியம் ஈட்டிப் பிழைத்திடுக' என்பதுவும் குறிப்பால் இங்கு அறிவுறுத்தப்படுகிறது.
|
'கைசெய்தூண் மாலையவர்' யார்?
'கைசெய்தூண் மாலையவர்' என்றதற்குக் கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார், தமது கைக்கொண்டு இனிய தொழில் செய்யுமிடத்து, தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார், தன் கையால உழுது பயிரிட்டு உண்கிறவர், தம் கையால் உழுதுண்டலை இயல்பாக உடையார், கையால் தொழில்செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், தம் கையால் உழவைச்செய்து, தன்முயற்சியால் உண்டு வாழ்தலை இயல்பாகவுடைய உழவர்கள், தம் கையால் உழுதொழில் செய்து உண்பதை இயல்பாகக் கொண்டவர்கள், உழுதுண்ணும் உழவர், தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்ணுதலை இயல்பாகக் கொண்ட உழவர்கள், சொந்த உழைப்பினால் சோறுண்ணும் இயல்புடைய உழவாளிகள், உழைத்து உண்பதை மரபாகக் கொண்ட உழவர், தமது கையினால் உழவுத் தொழில் செய்து உண்ணும் இயல்புடையவர், தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார், கையால் உழுது உண்பதை இயல்பாக உடைய உழவர், தம் கரத்தால் உழைத்துண்ணும் இயல்புடைய உழவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
உழவு அதிகாரத்தில் உள்ள குறள் இது என்பதால் 'கைசெய் தூண் மாலையவர்' என்றது உழவரைக் குறிக்கும் என அறியலாம்.
காலிங்கர் 'அவர் தமது கைக்கொண்டு இனிய தொழில் செய்யுமிடத்தும் கரவார்' எனக் 'கரவாது ஊண்மாலையவர்' எனக் கூட்டி உரை செய்தார்.
மு கோவிந்தசாமியும் 'கரவாது கை செய்து' எனக்கூட்டி 'தொழிலாளர் வஞ்சனையின்றி, மடியும், ஏமாற்றமும், குறைய உழைத்தலும் இன்றி உழைத்து' எனப் பொருள் காண்கின்றார்.
இத்தொடர்க்குக் கையால் ஏர்பிடித்து உழுதொழில் செய்து உண்டு வாழும் இயல்பினையுடையவர் என்பது நேர்பொருள்.
உழுது உண்ணும் கடுமையான உடல் உழைப்பாளிகள் என்பது பெறப்படும்.
'கைசெய்தூண் மாலையவர்' என்ற தொடர் தம் கையால் உழவைச்செய்து, தன்முயற்சியால் உண்டு வாழ்தலை இயல்பாகவுடைய உழவர்கள் எனப்பொருள்படும்.
|
தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்டலை இயல்பாகவுடையார் பிறரிடம் சென்று இரவார்; இரப்பவர்க்கு ஒளியாமல் பொருள் கொடுப்பார்கள் என்பது இக்குறட்கருத்து.
உழவுத் தொழில் செய்பவர் உடல் உழைப்பையே தம் வாழ்வியலாகக் கொண்டவர்கள்.
உழுதுண்ணும் உழவர் பிறரிடம் இரக்க மாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டும் உணவுப்பொருளைக் கொடுப்பார்கள்.
|