இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1038ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

(அதிகாரம்:உழவு குறள் எண்:1038)

பொழிப்பு (மு வரதராசன்): ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.

மணக்குடவர் உரை: உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல்.
இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று.
(ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..)

வ சுப மாணிக்கம் உரை: உழுதல் உரமிடல் களைபறித்தல் நீர்பாய்ச்சல் காத்தல் ஒன்றைவிட ஒன்று நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று.

பதவுரை: ஏரினும்-உழுதலைக்காட்டிலும்; நன்று-நன்மை; ஆல்-(அசைநிலை) எரு-உரம்; இடுதல்-பெய்தல்; கட்டபின்-களையெடுத்தபின்; நீரினும்-நீரைவிட, நீர்கால் யாத்தலை விட; நன்று-நல்லது; அதன் காப்பு-காவல்.


ஏரினும் நன்றால் எருஇடுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்;
பரிப்பெருமாள்: உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்;
பரிதி: உழவினும் எருக்கட்டு நன்று;
காலிங்கர்: கூறிய புழுதியுழவாயினும் சேற்றுழவாயினும் உழுசால் எப்பற்றும் ஒழியாமல் செல்லும் ஏர் மிகுதியினும் மிக நன்று; மற்று அதனினும் நன்று அந்த நிலத்திற்கு ஏற்ற எருக்கொணர்ந்து இடுதல்; [உழுசால் - கலப்பை செல்லும் வழி]
பரிமேலழகர்: அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று;
பரிமேலழகர் குறிப்புரை: ஏர் - ஆகுபெயர், [ஏர் என்னும் கருவியின் பெயர் அதன் காரியமாகிய உழுதலை உணர்த்துதலால் கருவியாகு பெயர்]

'உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயிருக்கு உழுதலினும் எருப்போடுதல் நல்லது', '(நிலத்திலுள்ள மண் நன்றாக ஆறும்படி புழுதிபட) உழுதலைக் கவனிக்க வேண்டும்; அதைவிட எருவிடுவதை கவனிக்க வேண்டும்', 'சும்மா உழுதலைப் பார்க்கிலும் எருவிட்டு உரம் வைத்தல் சிறந்தது', 'பயிர்க்கு உழுதலினும் எரு விடுதல் நல்லது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உழுதலினும் எரு இடுதல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல்.
மணக்குடவர் குறிப்புரை: இது பலகால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிப்பெருமாள்: களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அழியாமற் காத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பலகால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிதி: அதனினும் தண்ணீர் கட்டுதல் நன்று; அதனினும் வேலி இடுதல் நன்று என்றவாறு.
காலிங்கர்: இனி, அதனினும் நன்று ஆண்டு எழுபைங்கூழ் அருகு எழு களை கட்டல்; அங்ஙனம் களைதவிர் நன்மையே அன்றிப் பின்னும் சால் நன்று, நீர் முறை பிழையாமை நீர் பெய்தல்; மற்று அதனினும் சால நன்று அங்ஙனம் சிறந்த பயிர்பயன் பழுதுபடாமல் முன்னுறக்கொண்டே கடிந்து காப்பதோர் காப்பு என்றவாறு. [அருகு - பக்கத்தில்]
பரிமேலழகர்: இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. [இவ்விரண்டும் - உழுதலும் எருவிடுதலும்; அதனைக் காத்தல் - அப்பயிரைக் காத்தல்; அதற்கு- அப்பயிர்க்கு; நீர்கால் யாத்தல் - நீரைக் கால்வாயினின்றும் பாயச் செய்தல் (நீர் பாய்ச்சுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம். [பட்டி - ஆடு, மாடு; முதலியவற்றான் - பறவை, பூச்சி முதலியனவற்றால்]

'களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்விரண்டும் செய்து களைபிடுங்கியபின், பயிரைக் காத்தல் நீர் பாய்ச்சுதலினும் நல்லது', '(பயிர் முளைத்து ஓரளவு வளர்ந்த பின்) களையெடுப்பதைக் கவனிக்க வேண்டும்; களையெடுத்த பின் (காலா காலத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்); (காலாகாலத்தில்) நீர் பாய்ச்சுவதை விட (பயிருக்கு அழிவோ நோயோ வந்துவிடாதபடி) பாதுகாக்க வேண்டும்', 'களையெடுத்தபின் நீர் பாய்ச்சுவதைப் பார்க்கிலும், பயிரை அழிவு எய்தாமல் காப்பது சிறந்தது', 'களையெடுத்த பின்னர் அதனைக் காத்தல் நீர் விடுதலினும் நல்லது. (உழுதல் எருப்போடுதல், களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், காத்தல் என ஐந்தும் உழுதொழிற்கு இன்றியமையாதன.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

களையெடுத்த பின்னர் நீர் விடுதலினும் அதனைக் காத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உழுதலினும் எரு இடுதல் நல்லது; களையெடுத்த பின்னர் நீர் விடுதலினும் அதனைக் காத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'காப்பு' குறிப்பதென்ன?

உழுதொழிலின் ஐந்து முக்கிய நிலைகள்.

ஏருழுதலைவிட எரு இடுதல் நல்லது; இவை செய்து களையெடுத்த பின்னர் நீர் பாய்ச்சுவதைப் பார்க்கிலும் பயிர் அழியாதவாறு அதனைக் காப்பது நல்லது,
நிலம் பண்படுத்தப்படுவதையும் அதன் பின்னர் செய்யவேண்டும் பிற பணிகளைக் குறித்தும் வள்ளுவர் இங்கு விளக்குகின்றார். தொன்று தொட்டு நடை பெற்றுவரும் மரபுவழிப்பட்ட உழவுத் தொழிலின் நடைமுறைகளை உழுதல், சமன்செய்தல், விதைத்தல், நடுதல், நீர்பாய்ச்சுதல், எருவிடுதல், களையெடுத்தல், பயிர்ப்பாதுகாப்பு, அறுவடை, தூய்மை செய்தல் என்னும் பத்து செயல்முறைகளாகக் கூறுவர். இப்பத்தையும் வள்ளுவர் ஐந்தாகச் சுருக்கி இக்குறளில் உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், காவற்செய்தல் என்ற ஐந்து நிலைகளில் அடக்கிக் கூறுகிறார்.
பயிர் விளையும் நிலங்களில் நன்செய், புன்செய் என இருவகை உண்டு. நெல், கரும்பு போன்றவற்றை நன்செய் நிலத்திலும், பருத்தி, சோளம் போன்றவற்றை புன்செய் நிலத்திலும் பயிர் செய்வர். களர் நிலம் எனப்படும் உவர் நிலத்தில் ஒரு பயிரும் விளையாது.
பயிர்ச்ச்செழிப்பிற்கு உழவு மிகவும் வேண்டப்படுவதெனினும், அதனினும் தலையாயது எருவிடுதல்; எருவிட்டபின் களையெடுக்க வேண்டும்; களையெடுத்த பின் நீர் பாய்ச்ச வேண்டும்; இவை முடிந்த பின்னர் பயிர் வளரத் தொடங்கும். அந்நிலையில் அதனைக் காத்தல் வேண்டும்.

ஏருழுதல்:
உழவானது சேற்றுஉழவு புழுதிஉழவு என இரு வகைப்படும். நன்செய் நிலங்களில் சேற்று உழவும் புன்செய் நிலங்களில் புழுதி உழவும் செய்வர். சேற்று உழவு செய்வதற்கு மரத்தினால் ஆன கொழு கலப்பைகளையும், புழுதி உழவு செய்வதற்குக் கூரிய இரும்புத் தண்டினால் ஆன கொழுவுடன் கூடிய கலப்பைகளையும் பயன்படுத்துவர். கலப்பை என்பது ஏர் எனவும் அழைக்கப்படுவது. மண் பயிர் வளர்வதற்கு ஏற்றவண்ணம் நன்கு பக்குவப்படுத்துவதற்காக நிலத்தில் ஏருழுவர். அகலஉழுவதை விட ஆழ உழுவதே மேல் என்பது பழமொழி. உழுது உழுது மண்ணைக் காயவைத்துச் சீராக்குவர். மண் புரட்டிப் புரட்டி போடப்பட்டு நொய்மையாக்கப்பட வேண்டும். எத்துணையளவு நிலம் உழுது புழுதியக்கப்படுகிறதோ அத்துணையளவு நல்லது. இவ்விதம் பதப்படுத்தப்பட்ட மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; விதையும் வேர் பிடிக்கும்; நீரும் உள்பாயும்; களையும் மடியும்; ஒரு பங்கு நிறையுள்ள மண் காய்ந்து புழுதியாய்க் காற்பங்கு நிறையளவினதாக உழுது பண்படுத்திய நிலத்திற்கு ஒருபிடி எருக்கூட இட வேண்டியதில்லை; அதுவே எருவாகப் பயன்படும் என்று முந்தைய குறள் (1037) கூறியது.
காலிங்கர் 'ஏரைப் பகுதியாகக் கொண்டு உழுவதினும் புழுதி யுழவாக இருந்தாலும், சேற்றுழவாக இருந்தாலும் கொழு எல்லாப் பக்கமும் செல்ல உழுவது நல்லது' என்ற குறிப்பு தருகிறார்.

எருவிடுதல்:
பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது என்கிறது இக்குறள். நிலத்திற்கு ஏற்ற எருக்கொணர்ந்து இடுதல் வேண்டும். எருவிடுதல் என்பது நிலம் வளமுறச் சாணம், தழையுரம் முதலிய எருக்களை உழுது புழுதியாக்கிய மண்ணுடன் கலக்கும்படி செய்வதாகும். 'ஏரினும் நன்றாம் எருவிடுதல்' என்பதனால் ஏற்ற எருவை நிலத்தில் சேர்ப்பதும் இன்றியமையாதது என்பது வலியுறுத்தப்படுகிறது. காமத்துப்பாலில் காமநோய் பயிராக உருவகம் செய்யப்படுகிறது. தலைவியின் களவுக் காதல் குறித்து ஊரார் தூற்றும் பழிச்சொல்லை எருவாகவும் தாயின் சினச் சொற்களை நீராகவும் கொண்டு தனது காதல் பயிர் வளர்கின்றது என்று ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (அலர் அறிவுறுத்தல் 1147 பொருள்: ஊர்ப்பேச்சை உரமாகக் கொண்டும் தாயின் கடுஞ்சொல்லை நீராக ஏற்றும் வளரும் இந்தக் காதல் நோய்) என்கிறாள் அவள். இக்குறள் பயிர் வளர எருவும் நீரும் துணை செய்கின்றன என்பதைச் சொல்கின்றது. குப்பைக் கூளங்கள் கால்நடைகளின் சாணம் இலைதழைகள் போன்றிவை இயற்கை உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைப் பழம் பாடல்கள் தெரிவிக்கின்றன. 'குப்பையில் கோடி பொன்' என்பது ஓர் பழமொழி, பசுந்தழை உரச் செடிகளை வயல் வரப்புகளிலும், தோட்டக்கால் வேலிகளிலும் பயிரிடுவர்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின்.... (1037) என்பதில் சொல்லப்பட்ட 'உணக்குதலும்' ஆட்டுகிடை (பட்டி) போடுவதும் புன்செய்ப்பயிர்க்கான எரு எனவும் இக்குறள் நெல் வேளாண்மைக்கான எரு எனவும் சொல்வர்.

களையெடுத்தல்:
களையெடுத்தல் என்பது களை கட்டல் எனவும் அறியப்படும். இத்தொடர் களை நீக்குவது எனப்பொருள் தருவது. பயிர்கள் வளரும் பொழுது அவற்றினிடையே முளைத்து வளரும் வேண்டாத பயிர்வகைகளைக் 'களை' என்பர். களையெடுக்கத் தவறினால் பயிருக்கிட்ட எருவின் சத்தை களை உண்டு செழிக்கும்; பயிர் வளர்ச்சியையும் கெடுக்கும். களையப்படவேண்டியவையாதலால் இவை களை என்னும் பெயர் பெற்றன. கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (செங்கோன்மை 550 பொருள்: கொலையினும் கொடியராயினாரை அரசு தண்டித்தல், பசும்பயிர் வளர்தற்குக் களைகளைப் பிடுங்கி நீக்குவதற்கு ஒப்பாகும்) என்பதில் களைகட்டல் குறிப்பிடப்படுகிறது.
களையை வேரோடு பறிக்க வேண்டும். 'களையெடாதவன் விளைவெடான்' என்னும் பழமொழி சொல்வதுபோல களையெடுத்தல் மிகவும் இன்றியமையாமையாதது. களைகளை நீக்காவிட்டால் விளைச்சல் குறையும்.

நீர்பாய்ச்சுதல்:
வித்திடுதல் குறித்து வெளிப்படையாக உழவு அதிகாரத்தில் கூறப்படாவிடினும் பிற இடங்களில் அது பற்றிய குறிப்பு உள்ளது. நல்ல நிலத்தில் இட்ட வித்து நல்லமுறையில் முளைவிட்டுச் செழித்து வளரும். விதைப்பு முறைகளிலும் புழுதி விதை, சேற்று விதை என்று இருவகை உள. விதைக்கப்பெற்ற விதையானது நாற்றங்காலில் நாற்றாய் வளர்ந்த பின் அந்நாற்றானது பறிக்கப்பட்டு வயலில் நடப்படும். இச்செயல் ‘நடுதல்’ என அறியப்படும். நண்டு ஊர நெல்லு, நரி ஓடக் கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓடத் தென்னை என்று வேளாண் குறிப்புக் கொடுத்தார்கள். அதாவது இரண்டு நெற்பயிர்களுக்கிடையில் நண்டு ஊர்ந்து செல்லத்தக்க இடைவெளியும் இரண்டு கரும்பு நாற்றுகளுக்கு இடையில் நரி ஓடும் இடைவெளியும் வாழைக் கன்றுகளுக்கிடையில் வண்டி ஓடும் இடைவெளியும் தென்னைக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக இடைவெளியும் இருக்கவேண்டுமென்று விதி வகுத்தனர்.
நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும்போது முற்றுங் களையெடுத்தபின்; பயிர் வாடாமல் நன்கு விளைந்து பயன்தர பருவம் அறிந்து நீர்பாய்ச்சுவர். ஆறு குளம் ஏரி கண்மாய் முதலிய நீர் நிலைகளில் இருந்து வயலுக்கு நீர்பாய்ச்சினர், அணைகளை ஏற்படுத்தி வாய்க்கால் வழி நீர் பாய்ச்சுவர். நீரைக் கால்வாயினின்று பாயச் செய்தலை நீர்கால் யாத்தல் என்பர். இவ்வாறு நெல்லுக்கு நீர் பாய்ச்சப்பெற்ற செய்தியினை நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி. புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றார் ஔவையாரும்.

பயிர் நன்கு வளர்ந்தவுடன் அறுவடை தொடங்கும். நெல்லறுத்துப் போரடுக்குவர். பிணையல்அடித்துப் பொலி தூற்றுவர். நெல்லைக் குவிப்பர்.

ஏருழுதல் பயிர் வேரூன்றிக் கிளைக்க மட்டும் ஏதுவாம். எருவிடுதல் தழைக்க ஏதுவாம். களைபிடுங்குதல் பயிருக்குள்ள உணவைத் திருடியுண்டு வளரும் பயன் தராத கோரை முதலிய பகைகளை ஒழித்தற்காம். நீர் பாய்ச்சுதல் பயிர் வாடாமல் வளர்வதற்காம். பாய்ச்சிய நீரைக் காத்தல் இந்த வயலிலுள்ள நீர் அடுத்த வயல்களிலோ அல்லது வாய்க்காலிலோ மோட்டை போகுமானால் எரு முதலிய இடுசாரத்தையும் பூசாரத்தையும் கொண்டுபோய் விடுமாதலின் அங்ஙனம் போகாமற் காத்தற்காம் (தண்டபாணி தேசிகர்).
ஒருசேரப் பல கடமைகளை எடுத்துக் கூறுவதைவிட ஒன்றன்பின் ஒன்றாக சொன்னால் கடமையில் உளம் சென்று பற்றிக்கொள்ளும். முன் ஒன்றினைப் பெரிதுபடுத்தி, பின்னே அதனினும் இது நன்றென்று கூறுதல் மேன்மேலும் உள்ளத்தினை உந்திச் செலுத்தும். அந்த வகையில் உழவுத்தொழிலின் நுட்பத்தினை, இங்கு எடுத்தோதுகிறார். உழுதலினும் சிறப்பு எருவிடுதல்; அதனினும் சிறப்பு களையெடுத்தல்; அதனினும் சிறப்பு நீர் பாய்ச்சுதல், அதனினும் சிறப்பு விலங்குகளாலும் பூச்சிகளாலும் அழிவுவராமல் பாதுகாப்பது என்று எடுத்தோதும் நுட்பத்திறன் எண்ணி மகிழத்தக்கது (குன்றக்குடி அடிகளார்).
உழவு உழுதலே உரம் போடுதல் போன்றதுதான் என்னும்போது உரம் போட வேண்டா என்று கூறவில்லை. ஏரினும் நன்றாம் எருவிடுதல் என்றுதான் சொல்லப்பட்டது; ஏருழவுச் சிறப்பொடு எருவிடுதல் நலம் சேர்க்கும்; அதன்பின் களை வெட்டுதலும், நீர் விடுதலும், காவல் புரிதலும் ஒன்றின் ஒன்று நலம் சேர்க்கும் என்கிறார். களைவெட்டல் நீர் விடல் முறைமை! நீர்விட்டுக் களை வெட்டல் தக்கதன்றாம். காவல் எப்பொழுது வேண்டும் என்றால் எப்பொழுதும் வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறுகிறார் (இளங்குமரன்).

'காப்பு' குறிப்பதென்ன?

காப்பு என்ற சொல் காத்தல் என்ற பொருள் தரும். இக்குறளில் எதைக் காக்க வேண்டும் என்பது சொல்லப்படவில்லை. ஆனால் உழவு செயல்முறைகள் பற்றிய பாடலாதலால் நீர் பாய்ச்சியதற்குப் பின் பயிர்தானே காக்கப்படவேண்டியது என எண்ணி அனைவரும் பயிர் காப்புப் பற்றியே பேசுகின்றனர். எனவே நீரினும் அதன் காப்பு நன்று என்ற பகுதிக்கு உரியநாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை விளைவு பழுதுபடாமல் காப்பது மிக நல்லதாம் என விளக்கம் தந்தனர்.
காத்தல் என்பதற்குத் தண்டபாணி தேசிகர் 'எருசத்தும் நிலவூட்டமுங்கலந்த அந்நீரை மோட்டை போகாமற் காத்தல் நன்று என்றும், அப்பயிரைக் காத்தல் நன்று என்றும் இருபாற் பொருளும் இயையக் கூறினார் எனல் தகும். 'நீரினுநன்று அதன் காப்பு' எனின் அது என்னும் சுட்டுப் பெயர் இக்குறளிற் கூறப்பெறாத பயிரைக் காப்பது நன்று என்ற பொருளைத்தருவது யாங்ஙனம்? இட்ட எரு பயிருக்கே பயன்படுதல் வேண்டிக் களைகட்டுக என்றவர், அதன்பின் இட்ட எருகரைந்து பயிருக்கே பயன்பட நீரினைப் பாய்ச்சுக, அதனைக் காக்க எனின், எருக்கரைந்த நீர் இடுமோட்டை நண்டுவளை மோட்டை இவைகளின் வழியாகப் புறம் பொசியாது காக்க என்ற பொருளே சிறக்கும் எனலாம். இயைவன ஏற்க' என விளக்கம் செய்கிறார். மோட்டை என்பது நீர் கசிந்து வெளியேறும்படி வயல்வரப்பில் துளையிட்டிருத்தலைக் குறிக்கும். 'மோட்டை போனால் கோட்டைபோகும்' என்பது பழமொழி.

காத்தல்:
நீரினும் நன்றதன் காப்பு என்றதால் நீர் விடவேண்டாம் என்பதல்ல இதன் பொருள். காவல் காத்தல் தலையாயது என்பது சற்று அழுத்திச் சொல்லப்படுகிறது. 'மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பாக்காமல் கெட்டது’ என்கிறது ஓர் பழமொழி. பயிர் வளரும்பொழுது அதைப் பசு, எருது முதலியவை மேய்ந்து அழித்துவிடாமலும் எலி, பூச்சி முதலியன சேதப்படுத்திவிடாமலும் வேலியிட்டுப் பயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். பயிரைக் காப்பதற்கு வேலியிடுவதனை நாண்வேலி கொள்ளாது ....... (நாணுடைமை 1016 பொருள்: நாணமாகிய வேலியை அமைத்துக் கொள்ளாமல்....) எனக் குறள் பிறிதோரிடத்தில் வழங்கும் தொடர் எடுத்துக் காட்டும். வேலி அமைப்பதில் கம்பி வேலி, முள்கம்பி வேலி, மின்கம்பி வேலி மற்றும் சுவர் வேலி எனப் பலவகை உண்டு.
உழுதல், எருவிடல், களைகட்டல், நீர்பாய்ச்சுதல், பயிர் எல்லாவற்றிலும் நன்றாகப் பாதுகாக்க வேண்டும்.
புயல்காற்று போன்ற ஆபத்தான காலங்களில் காற்றின் வேகத்தை தடுத்து சேதத்தைக் குறைத்தல், மழைக் காலங்களில் சத்துமிக்க மேல்மண் அரித்துச் செல்லாமல் தடுத்தல் ஆகியனவும் காப்புகளே.
வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களிருந்து நிதியிழப்பு உண்டாகதவாறு காத்தல் போன்ற காப்பு முறைகளெல்லாம் பயிர் காப்புறுதித் திட்டத்தின் (crop insurance) கீழ் இக்காலத்தில் நடைமுறையில் உள்ளன

உழுதலினும் எரு இடுதல் நல்லது; களையெடுத்த பின்னர் நீர் விடுதலினும் அதனைக் காத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உழவுத் தொழில் முறைகளின் தொகுப்பு.

பொழிப்பு

உழுதலினும் உரமிடல் நல்லது; களைபிடுங்கியபின், நீர் பாய்ச்சுதலினும் அதனைக் காத்தல் நன்று.