இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1032



உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

(அதிகாரம்:உழவு குறள் எண்:1032)

பொழிப்பு (மு வரதராசன்): உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.

மணக்குடவர் உரை: உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே: அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார்.
இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்.
('காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு' என்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் 'ஆணி' என்றார். 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: உலகத்தாராகிய தேருக்கு உழவர் அச்சாணி போல்வர். ஏனெனில், உழவுத்தொழில் செய்யாது பிற தொழில்கள் செய்யச் செல்வாரை எல்லாம் உணவு நல்கித் தாங்குதலாலேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.

பதவுரை: உழுவார்-உழவர், உழுதொழில் வல்லார்; உலகத்தார்க்கு-உலகோர்க்கு; ஆணி-அச்சாணி, கடையாணி; அஃது-அது; ஆற்றாது-செய்யமாட்டாமல்; எழுவாரை-மேற்செல்பவரை; எல்லாம்அனைத்தும்; பொறுத்து-தாங்குதலால்.


உழுவார் உலகத்தார்க்கு ஆணி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே:
பரிப்பெருமாள்: உலகமாகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவரே:
பரிதி: உழவுத்தொழில் அன்றோ உலகம் அசையாமல் தாங்குகிற ஆணி;
காலிங்கர்: உழுது விளைத்துக் குடிமை செய்வார் யாவர்; மற்று அவரே உலகின் கட்டளை குலையாமைக்கு ஓர் அச்சு ஆணி ஆவர்; [உலகின் கட்டளை-உலகின் இயங்கு முறை]
பரிமேலழகர்: அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர். [அது-உழுதலில்]
பரிமேலழகர் குறிப்புரை: 'காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு' (பத்துப்பாட்டு, பட்டினப்பாலை, 283, 284) என்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் 'ஆணி' என்றார்.

'உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழவரே எல்லார்க்கும் அச்சாணி ஆவர்', 'உழவுத் தொழில் செய்கிறவர்களே உலகத்திலுள்ள மக்களுக்கு (தேருக்குக் கடையாணி போன்ற) ஆதாரம்', 'உலகத்தாராகிய தேருக்கு உழுவார் அச்சாணி போல்வர்', 'உழுகின்றவர் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உழவர் உலகமக்களுக்கு அச்சாணி போன்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('தொழுவாரே' பாடம்): அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.
பரிப்பெருமாள் ('தொழுவாரே' பாடம்): அதனைச் செய்யாதவர் பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.
பரிதி: உழவு இல்லாதார் தொழுது வயிறு வளர்ப்பவர் என்றவாறு.
காலிங்கர் ('தொழுவாரே' பாடம்): அதனால் மற்று அதின் முயலாதார் யாவரும் பிறரை வழிபட்டுத் தாழ்ந்து ஒழுகுவாரே, உணவு காரணமாக அவர் செய்வன எல்லாம் பொறுத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரி பவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர். [உழுவாரை (அச்சு) ஆணியாக உருவகம் செய்தவர் அதற்கேற்ப உலகத்தாரைத் தேராக உருவகம் செய்யாமையின் இக்குறள் ஏகதேச உருவக அணியாயிற்று]

'அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உழவு இல்லாதார் தொழுது வயிறு வளர்ப்பவர்' என்றார். காலிங்கர் 'மற்று அதின் முயலாதார் யாவரும் உணவு காரணமாக அவர் செய்வன எல்லாம் பொறுத்து பிறரை வழிபட்டுத் தாழ்ந்து ஒழுகுவாரே' எனப் பொருளுரைத்தார். 'அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்' என்பது பரிமேலழகர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'உழ அஞ்சி ஓடுவாரைத் தாங்குதலால்', 'ஏனென்றால் அந்த உழவுத் தொழிலைச் செய்யாமல் சமுதாயத்தின் மேல் பாகத்திலிருக்கிற மற்றெல்லா மக்களையும் உழவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதனால்', 'உழவுத் தொழிலைச் செய்யாது பிற முயற்சி செய்வாரை எல்லாம் தாங்குதலால்', 'உழுதலைச் செய்ய முடியாமல் பிற தொழில் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உழவுத் தொழிலைச் செய்யாது பிறதொழில் மேல்செல்வாரை எல்லாம் தாங்குதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உழவுத் தொழிலைச் செய்யாது பிற தொழில்மேல் செல்வாரையும் தாங்குதலால், உழவர் உலகத்தார்க்கு ஆணி போன்றவர் என்பது பாடலின் பொருள்.
'உலகத்தார்க்கு ஆணி' குறிப்பது என்ன?

உண்டிகொடுத்து உலகைத் தாங்குபவர் பயிர்த்தொழில் செய்வோரே.

உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்கின்றவர்களுக்கும் உணவுப் பொருள்களைத் தந்து உழவர் தாங்குதலால், அவர் உலகத்தாராகிய தேருக்கு அச்சாணி போன்றவர் ஆவர்.
முந்தைய குறள் (1031) உழுதொழிலின் பின்னாலேதான் உலகோர் செல்லவேண்டும் என்றது. அக்கூற்றை மேலும் வலியுறுத்தும் வகையில் உழவர்பணி எத்துணை இன்றியமையாதது என்பது ஒரு உவமை மூலம் இங்கு விளக்கப்படுகிறது. உழுதொழிலில் இல்லாத பிற மக்கள் அனைவர்க்கும் -அரசியலார். அறிவியலார், வணிகர் எவர்க்கும் -பயிர்த்தொழிலே உணவு அளித்து அவர்களின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றது எனச் சொல்லப்படுகிறது. இதைத் தெளிவுறுத்த வண்டிக்கு அச்சாணிபோல், சமுதாயமாகிய தேருக்கு அச்சாணி போல்வர் உழவுத்தொழில் செய்வோர் என்ற உவமை பயன்பட்டது. அதாவது உழவர் இன்றேல் உலகோர்க்கு இயக்கம் இல்லை என்பது.
நிலத்தை உழுது பயிர் செய்வோரே உழுவார். உழவுத்தொழிலைச் செய்வதற்கு உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். உடலாற்றல் இல்லாதவர்களால் உழவுத்தொழிலை செய்ய முடியாது. அவ்விதம் ஆற்றாது பிறதொழில்கள் மேல் செல்வாரை எழுவார் என்று வள்ளுவர் அழைக்கிறார். உழமுடியாது எழுந்து செல்வாராதலால் அவர்கள் எழுவார் ஆயினர் எனவும் விளக்குவர்
உழவு செய்வது உடல் வருத்தும் தொழில் என்று அதைச் செய்யமுடியாமலோ, அத்தொழில் தெரியாததாலோ, பிற தொழில்கள்வழி நல்ல வருவாய் கிடைப்பதாலோ அல்லது வேறு பல காரணங்களுக்காகவோ உழவல்லாத பல தொழில்களில் மக்கள் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். ஆயினும், அவர்களது வாழ்க்கை இனிதாகச் செல்லுமாறு தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை வேளாண் மக்களிடமிருந்தே பெறவேண்டும். இதைப் பல்வேறு தொழிலுடையாரையும் தாங்கிக் காப்பாற்றுகின்றவர்கள் உழவர்களே என்று இக்குறள் உணர்த்துகிறது. அதனால் அவர்களே உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள். உழுவாரை மையமாக வைத்தே உலகம் இயங்குகிறது என்பது கருத்து.

பரிமேலழகர் உரையில் ''காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு' என்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும்' என்ற குறிப்பு ஒன்று உள்ளது. இவர் மேற்கோள் காட்டுவது பத்துப்பாட்டு, பட்டினப்பாலையில் உள்ள 283, 284-ஆவது பாடல்களாம். இதன்பொருள்: காடாகிய இடங்களை வெட்டி அகற்றி முன்பு போலக் குடியிருந்து விளையச் செய்து (தூர்ந்து போன) குளங்களைத் தோண்டி என்பது. கொன்று, ஆக்கி, தொட்டு என்னும் தன்வினை கொன்றுவித்து, ஆக்குவித்து, தொடுவித்து எனப் பிறவினையும் ஆனாற் போல, உழுவார் என்னும் தன்வினை உழுவிப்பார் எனப் பிறவினையுமாயிற்று என்பதாம். அதாவது உழுவார் என்ற சொல் உழுவோர் மற்றும் உழுவிப்பார் என்ற இரு சாராரையும் குறிப்பதாகும் என்கிறார் பரிமேலழகர். உழுவோர் என்றது சிறுநிலம் உடையராய்த் தாமே உழுதுண்பாரையும், உழுவிப்பார் என்றது பெருநிலம் உடைமையாளராய்ப் பிறரைக் கொண்டு உழுவித்துண்பாரையும் குறிக்கும். ஆனால் உழவுத்தொழிலாளர். உழுவிக்கும் நிலஉடைமையாளர் எனப் பிரித்து வள்ளுவர் பாடினார் என்று தோன்றவில்லை. உழுவார் என்னும் சொல்லை உழவுத் தொழில் செய்வார் என்ற பொருளிலேயே அவர் ஆண்டிருக்க வேண்டும்.
மேலும், பரிமேலழகர் தனது உரையில் ''அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்' எனவும் குறித்துச் செல்கிறார். எழுவார் என்னுமிடத்தில் தொழுவார் எனப் பொருள் வேறுபடும் பாடவேறுபாடு கொண்ட உரையாகும் இது. பரிமேலழகர் காட்டும் இவ்வுரையை நாமக்கல் கவிஞர் இவ்விதம் மறுக்கிறார்: 'இந்தக் குறளின் பிற்பகுதியை 'அஃதாற்றார் தொழுவாரேயெல்லாம் பொறுத்து' என்று பாடபேதம் உள்ளதாகக் கொண்டு பிறர் தமக்குச் செய்யும் அவமதிப்புக்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவரைத் தொழுவாரேயாவார்கள் என்று பொருள் செய்வாருமுண்டு. அப்படிச் செய்வது சிறிதும் பொருந்தாது. ஏனெனில் பெரும்பான்மையான மூலத்தின் பிரதிகளில் 'எழுவாரை யெல்லாம் பொறுத்து' என்பதுதான் பாடம். மேலும் அப்படிக் கொண்டால் அச்சாணி என்ற உபமானம் முற்றுப் பெறாமல் போகிறது. அத்துடன் அடுத்த குறளில் இதே கருத்தை வெகு தெளிவாக 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று சொல்கிறார். திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் ஒரே கருத்தை இரண்டு முறை, அதுவும் அடுத்தடுத்த குறள்களில் சொல்லமாட்டார்'. 'தொழுவாரே' எனப் பாடங்கொண்டவர்கள் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர். பரிதி உரையில் 'தொழுது வயிறு வளர்ப்பவர்' என்றிருப்பதால் அவர் கொண்ட பாடமும் தொழுவாரே எனலாம்.

'உலகத்தார்க்கு ஆணி' குறிப்பது என்ன?

உலகத்தார்க்கு ஆணி என்ற தொடர் உலகமாந்தர்க்கு அச்சாணி என்ற பொருள் தருவது.
உலகத்தார் என்பது இங்கு உழவுத் தொழில் ஒழிந்த மற்றத் தொழில்களில் ஈட்டுபட்டோரைக் குறிக்கும்.
அச்சு என்பது ஒரு வண்டியின் இரு உருளைகளையும் கோக்கும் மரம்; இது வண்டியின் முழுப்பாரத்தையும் தாங்கி கொண்டு செலுத்துவதால் வலுமிக்கதாக உறுதியாக இருக்க வேண்டும்; ஆணி என்பது உருளை கழலாதவாறு அச்சு மரத்தின் இரு கோடிகளிலும் செறிக்கப்படும் ஆணியாகும். இதைக் கடையாணி எனவும் கூறுவர். அச்சும் ஆணியும் சேர்ந்தது அச்சாணி. வண்டி ஓடும் வேகத்துக்கு அமைய நிலத்தோடு ஏற்படும் அதிர்வலைகளையும் உருளைகளின் சுழற்சியின் போது ஏற்படும் உராய்வுகளையும் தாங்கி அச்சாணி இயங்குகிறது. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி. அச்சாணி இங்கு ஆணி எனப்படுகிறது.
உழவுத் தொழிலைச் செய்யமாட்டாதாருக்கும் உணவு வழங்கி அவர்களைக் கலங்கவிடாமல் தாங்குவதால் உழவர் உலகில் வாழ்வோர் யாவருக்கும் அச்சாணி போன்றவராவர். ஆணிபோல் உலகில் வாழ்வோரின் இயக்கத்துக்கு அச்சாணியாக இருப்போர் உழவர் என்பது உவமப் பொருள்.
தேர் என்ற உலகத்திற்கு இன்றியமையாத அச்சாணி உழுவன் என்றவாறு. ஒரு வண்டியின் அச்சாணி எப்படி வண்டியைத் தாங்குகின்றதோ அப்படி உலகில் வாழும் எத்தொழில் புரிவோரையும் உழவர்கள் தாங்குகிறார்கள். எனவே உலகத்தாருக்கு உறுதிதரும் ஓர் அச்சாணிபோல இருப்பது உழவுத் தொழில் என்று உழவைப் போற்றுகிறார் வள்ளுவர்.

உலகோர்க்கு உணவைக் கொடுத்துத் தாங்கிக்காப்பதால் உழவர்கள் ஆணி.

உழவுத் தொழிலைச் செய்யாது பிற தொழில்மேல் செல்வாரையும் தாங்குதலால், உழவர் உலகத்தார்க்கு ஆணி போன்றவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உழவுத் தொழிலின்றி உலகம் நடவாது.

பொழிப்பு

உலகத்தார்க்கு உழவர் அச்சாணி ஆவர், உழவுத்தொழில் செய்யாது பிற தொழில்கள் செய்யச் செல்வாரையும் தாங்குதலால்.