இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

(அதிகாரம்:உழவு குறள் எண்:1036)

பொழிப்பு (மு வரதராசன்): உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

மணக்குடவர் உரை: உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை.
எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு.

பரிமேலழகர் உரை: உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.
(உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையான் தாம் உண்டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: உழவுத்தொழில் செய்வோர் உழுதொழில் செய்யாது கைகட்டி வாளா இருப்பின் துறந்தாருக்கும் நிலைப்பாடு இல்லை. துறந்தாரும் உணவைத் துறவாமையின் காரணமாக உழுதொழிலைச் சார்ந்தே துறவிகளும் வாழ்கின்றனர் என்றவாறு. துறவிகளை, 'விழைவதூஉம் விட்டேம் என்பார்' என்று கூறியவாறு விரும்பி உண்பதில்லை; தேவைக்கு உண்பவர் என்று உணர்த்த.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உழவினார் கைம்மடங்கின் விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை இல்லை.

பதவுரை: உழவினார்-உழுபவர்; கை-கை; மடங்கின்-வாளா விருப்பின்; இல்லை-இல்லை; விழைவதூஉம்-விரும்புவதும்; விட்டேம்-துறந்தோம்; என்பார்க்கும்-என்று சொல்லுபவர்க்கும்; நிலை-சலியாது நிற்றல், நிலைத்து இருத்தல்.


உழவினார் கைம்மடங்கின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின்;
பரிப்பெருமாள்: உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின்;
பரிதி: உழவினால் உழவுத்தொழில் விட்டாராகில்;
காலிங்கர்: உழவுத்தொழிலினார் தமது ஒழுக்கமாகிய குடிமை செய்வார் ஈண்டுரைத்த பெரியோரைப் போலத் தாமும் இவ்வொழுக்கம் தணிவராயின்; [தணிவர்-நீக்குவர்]
காலிங்கர் குறிப்புரை: கை என்பது ஒழுக்கம்.
பரிமேலழகர்: உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்;

'உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழவர்கள் வேலைநிறுத்தம் செய்வாராயின்', 'உழவுத் தொழிலுடையார் வேலை நிறுத்தம் செய்தால்', 'உழவுத் தொழில் நின்றுவிட்டால்', 'உழவர் தமது முயற்சி செய்யாது வாளாவிருப்பாராயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உழுதொழிலைச் செய்வார் கைகளை மடக்கிக்கொண்டு இருப்பரேல் என்பது இப்பகுதியின் பொருள்.

இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு.
பரிப்பெருமாள்: யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழுவார் கண்ண தென்றவாறு. விழைவது, ஆசை.
பரிதி: ஆசையை விட்டோம் என்பார்க்கு நிலை இல்லை என்றவாறு.
காலிங்கர்: இப்பெரியோர்க்கும் அந்நிலைமை இல்லையாம்; என்பதனால் அவர்க்கும் அவ்வுடல் முடியுமளவும் உண்ணாமை நிலைபெறுதல் அரிது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் என்றது விரும்பத்தகுவது விட்டொழிந்தோம் என்போர்களுக்கும் என்றது..
பரிமேலழகர்: யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா. [அவ்வறத்தின்கண் - துறவறத்தில்]
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையான் தாம் உண்டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது. [அவர் - உழவினார்; அதனை- உழுதலை]

'யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். ஆசையை விட்டோம் என்பார்க்கு நிலை இல்லை என்பது பரிதி உரை. காலிங்கர் 'விரும்பத்தகுவது விட்டொழிந்தோம் என்போர்களுக்கும் உண்ணாமை நிலைபெறுதல் அரிது' எனப் பொருள் தந்தார். 'யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா' என்றார் பரிமேலழகர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிகட்கும் பற்றுக்கோடு இல்லை', 'யாவரும் விரும்பும் உணவையும் துறந்தோம் என்று கூறுவார்க்கும் துறவறத்தில் நிற்றல் இயலாது', ''ஆசைப்படுவதையும் விட்டுவிட்டோம்' என்று சொல்லுகிற துறவிகளுக்கும் வாழ வழியில்லை', 'யாவரும் விரும்பும் உணவும் இல்லை; துறவிகளுக்கும் தமது நிலைக்கண்ணே நிற்றலு முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விரும்பத்தகுவது விட்டொழிந்தோம் என்று கூறுவார்க்கும் அந்நிலைக்கண்ணே நிற்றல் இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உழுதொழிலைச் செய்வார் கைம்மடங்கின் விரும்பத்தகுவது விட்டொழிந்தோம் என்று கூறுவார்க்கும் அந்நிலைக்கண்ணே நிற்றல் இயலாது என்பது பாடலின் பொருள்.
'கைம்மடங்கின்' குறிப்பது என்ன?

எதை விட்டொழித்தாலும் மாந்தர்க்கு உணவைத் துறக்கமுடியுமா?

உழவருடைய கை தனது தொழிலைச் செய்யாது மடங்கியிருக்குமானால் யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கும் அவர்கள் மேற்கொண்ட நிலையும் இல்லாதொழியும்.
விழைவதூஉம் விட்டேம் என்றது விரும்பியதை எல்லாம் துய்க்காமல் விட்டுவிட்டேன் எனப் பொருள்படும். அதிகாரம் உழவு என்பதால் என்பதால் விழைவது உணவுப்பொருள் குறித்தது எனக் கொள்ள வேண்டும். எனவே விழைவதூஉம் விட்டேம் என்ற தொடர் உணவு உட்பட விரும்பியது அனைத்தும் என்ற பொருள் தரும்.
'விழைவதூஉம் விட்டேம் என்பார்' என்ற தொடர் துறவறத்திண்கண் நிற்பாரைச் சுட்டியது என்றனர் பலரும். அருளறம் பூண்ட துறவிகளையும் காப்பாற்றும் சிறப்புகொண்டது உழவுத் தொழிலேயாம். உழவர் அவர்தம் உழவுத் தொழிலைச் செய்யாதுபோனால் மக்கள் சோறின்றி அல்லற்பட நேரிடும்; உலகம் நிலைதடுமாறும்; உலகப்பற்றைத் துறந்தோம் எனச் சொல்லி, எந்தவித இன்பமும் இன்றி உலவுவோர்க்கும் உயிர் வாழ உணவு வேண்டும். உழவுத் தொழில் இல்லையேல், இவர்கள் யாவர்க்கும் உணவு எப்படிக் கிடைக்கும்? வேளாண்மை செய்வார் தம் தொழிலை நிறுத்திவிட்டால், விழைவதை எல்லாம் உதறினோம் என்பாரும் தம் நிலையில் தொடர இயலாது. மக்கள் அனைவருக்கும் உணவு இன்றியமையாதாதலால் பற்றுடையோர், பற்று நீங்கியவர் அனைவருக்கும் உணவு தந்து உதவுவது உழவினார் உழைப்புதான் என்பது இக்குறள் கூறும் செய்தி.

தேவநேயப்பாவாணர் 'உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு உணவின்மையால் யாதொரு கேடுமிராது ஆதலின் அவ்வுரை தன்முரணாம்' என்று பரிமேலழகர் உரையை மறுப்பார். 'எதனையும் விரும்புதலையும் விட்டேம்' என்ற மணக்குடவர் உரையயையும் அங்ஙனமே மறுப்பார். இதைத் தண்டபாணி தேசிகர் ''விழைவதும் விட்டேம் என்பார்க்கு' என்ற தொடரில் 'என்பார்க்கு' என்பதில் பொருட்சிறப்பு இருப்பதால் 'உணவையும் துறந்தேம்' என்றது 'உண்ணா நோன்பிகளைக் குறிப்பதன்று. 'உணவையும் விரும்பேம்' என்று சொல்கிறவர்கள். உழவினர் கைம்மடங்கின் அந்நிலையில் நிற்கமுடியாது' எனப் பற்றறுதியின் எல்லை குறித்ததேயாம்; நோன்பிகளையன்று என்க' எனத் தெளிவுபடுத்துவார்.

வேறொரு இடத்திலும் உழவினார் தொழில் செய்யாமல் கைகட்டிக் கொண்டு இருத்தலை ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் (வான் சிறப்பு 14 பொருள்: மழை என்கின்ற வருவாய் வளம் குறைந்தால் உழவர் ஏரினால் உழமாட்டார்கள்) என்ற குறள் காட்டியது. அங்கு இயற்கை பொய்த்ததால் உழாத நிலைமை உண்டாயிற்று.

'கைம்மடங்கின்' குறிப்பது என்ன?

'கைம்மடங்கின்' என்றதற்கு உழவுத்தொழிலைச் செய்யாது கைமடங்குவராயின், உழவுத்தொழில் விட்டாராகில், தமது ஒழுக்கமாகிய குடிமை செய்யாமல் தணிவராயின், கை உழுதலைச் செய்யாது மடங்குமாயின், கை மடங்கி அந்தத் தொழிலைச் செய்யாவிட்டால், உழுது வாழாமற் கை மடங்குமாயின், கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், கைகளை மடக்கிக்கொண்டு தம் தொழிலைச்செய்யாது விடுவார்களாயின், உழுதொழில் செய்யாது கைகட்டி வாளா இருப்பின், வேலைநிறுத்தம் செய்வாராயின், வேலை நிறுத்தம் செய்தால், உழவுத் தொழில் நின்றுவிட்டால், செயலொடுங்கிப் போனால், தமது முயற்சி செய்யாது வாளாவிருப்பாராயின், செயலற்று இருப்பரேல், கை உழவுத் தொழிலைச் செய்யாது மடங்கியிருக்குமானால், பணிநிறுத்தம் செய்துவிட்டால், கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின், தொழிலைச் செய்யாதுவிட்டால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உலகத்து உழைக்கும் உழவர்கள் கைகளை மடக்கிக்கொண்டு தம் தொழிலைச் செய்யாது விடுவார்களாயின் என்ன ஆகும்? மக்கள் உயிர்வாழத் தேவையான உணவுகிடைக்காது. உணவு இன்றேல் ஆசை முழுவதையும் கைவிட்டோம் என்னும் பெரியோர்களும் உணவின்றி நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாத நிலை வரும்; இறுதியாக அவர்களும் உணவைத் தேடுவர் என்பது சொல்லப்படுகிறது. உழவர் தம் கைம்மடங்கின் துறவர்க்கும் வாழ்வில்லை என்கிறார் வள்ளுவர்.

'கைம்மடங்கின்' என்ற தொடர் கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால் என்னும் பொருள் தருவது.

உழுதொழிலைச் செய்வார் கைகளை மடக்கிக்கொண்டு இருப்பரேல் விரும்பத்தகுவது விட்டொழிந்தோம் என்று கூறுவார்க்கும் அந்நிலைக்கண்ணே நிற்றல் இயலாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எல்லாவற்றையும் உதறியவர்க்கும் உழவு தரும் உணவு இன்றியமையாதது.

பொழிப்பு

உழவர்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வாளாயிருந்தால் பற்றற்றாரும் நிலை நிற்றல் இயலாது