இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1040



இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்

(அதிகாரம்:உழவு குறள் எண்:1040)

பொழிப்பு (மு வரதராசன்): எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

மணக்குடவர் உரை: பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும்.
இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.

பரிமேலழகர் உரை: இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.
(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நாங்கள் வறியோம் என்று சோம்பலாய் இருப்பவர்களை நிலம் என்னும் நல்ல மாது கண்டால், அவர்கள் சோம்பலை இகழ்ந்து சிரிப்பாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும்.

பதவுரை: இலம்-(பொருள்) இலோம், வறியோம்; என்று-என்பதாக; அசைஇ-சோம்பி, மடிந்து; இருப்பாரை-இருப்பவரை; காணின்-கண்டால்; நிலம்-நிலம், பூமி; என்னும்-என்கின்ற; நல்லாள்-நல்ல மங்கை; நகும்-எள்ளி நகைக்கும், இகழ்ந்து சிரிக்கும்.


இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இரப்பாரை' பாடம்): பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால்;.
பரிப்பெருமாள் ('யிருப்பாரை' பாடம்): பொருளிலேமென்று தளர்ந்திருப்பாரைக் கண்டால்;
காலிங்கர் ('இரப்பாரை' பாடம்): வறுமையால் கால் தளர்ந்து ஒருவர்பால் சென்று பெரிதும் இல்லா ஆளரேம் என்று இங்ஙனம் தம் நாவினால் இளிவந்த சொல்லி இரப்பாரைக் காணுமளவில்; [இல்லா ஆளரேம் - அடிமையான்யிலேம்]
பரிமேலழகர்: யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்;

'பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் காலிங்கரும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாளும் பரிமேலழகரும் யாம் வறியேம் என்று தளர்ந்திருப்பாரை/மடிந்திருப்பாரைக் கண்டால் எனப் பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழை என்று சோம்பியிருப்பாரைக் கண்டால்', 'பொருளில்லேம் என்று சோம்பி அமர்ந்திருக்கும் ஏழைகளைக் கண்டால்', 'நிலத்தை வைத்துக் கொண்டு, பணமில்லையே என்னும் சோம்பேறிகளைக் காணும்போது', ''யாம் வறியேம்' என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மிடம் ஒன்றுமில்லை எனத் தொழில் ஏதும் செய்யாமல் சோம்பியிருப்பாரைக் கண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிலம்என்னும் நல்லாள் நகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.
பரிப்பெருமாள்: நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை; இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.
காலிங்கர்; நிலமடந்தை என்னும் இத்தூயவள் நகுவள்; எனவே தாம் வேண்டுவ விளைத்துக் கொண்டு இனிது இவர் அலைவுறுவதே என்று இவர்க்கு இரங்கிச் சிரிக்கும் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது. [அது- உழுதல் முதலிய தொழில்கள்; வருகின்ற அதிகாரம்- நல்குரவு]

'நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும்/இவர்க்கு இரங்கிச் சிரிக்கும்/தன்னுள்ளே நகா நிற்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலமகள் சிரிப்பாள்', 'நிலமென்னும் நல்லாள் மனத்துக்குள்ளே இகழ்ந்து சிரிப்பாள்', 'நிலமகளாகிய நல்லவள் சிரித்து ஏளனம் செய்வாள்', 'நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நங்கை சிரிப்பாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிலம் என்னும் நல்லாள் சிரிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இலம்என்று அசைஇ இருப்பாரைக் கண்டால் நிலம் என்னும் நல்லாள் சிரிக்கும் என்பது பாடலின் பொருள்.
'இலம்என்று அசைஇ இருப்பார்' யார்?

நிலம் இருக்கும்போது பிழைக்க வழியில்லை என்று சடவா இருக்கலாமா?

'எம்மிடம் ஒன்றுமில்லை' என்று எந்த வேலையும் செய்யாமல் முடங்கி இருப்போரைக் கண்டால் நிலம் என்னும் நல்லாள் நகைக்கும்.
மாந்தர் ஏதாவதொரு தொழில் செய்து வாழ்வியலை மேற்கொண்டு வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் தன் குடி உயர்வுக்காகப்பாடுபட்டுக் கொண்டுமிருக்கின்றனர். இந்நிலையில் 'எனக்கு வேலை ஒன்றுமில்லை; என்னிடம் பொருளும் இல்லை' எனச் சொல்லிக்கொண்டு அசையாது முடங்கி இருப்பாரைப் பார்த்து நிலப்பெண் ஏளனம் செய்வாள் என்கிறது முயற்சியை ஊக்குவிக்கும் இக்குறள். நிலம் உடல் உழைப்புக்கேற்றவாறு பயன் தர வல்லது. வறுமையுற்று வருந்துகிறோம் என்று எண்ணித் தொழில் செய்யாமல் இருப்பவரை நிலம் அழைப்பதாக அமைகிறது இப்பாடல். முயற்சி மட்டும் இருந்தால் நிலம் வேண்டிய பலனைத் தரும்; உடல் உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாய் இருக்கும் எவரும் உழவுத் தொழிலை மேற்கொண்டு பயன் பெறலாம். நிலம் தன்னொடு தொழில் புரிந்தாருக்கு இல்லை என்று சொல்வதில்லை; அள்ளிக் கொடுக்கும். நிலம் இருந்தும் செயற்படாத சோம்பரைக் கண்டு நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள இயலாதவனாக இருக்கிறானே என்று அது நகுமாம்.

நிலமானது உணவுப் பொருளை விளைவித்துத் தருவதால் நல்லாள் என்ற சொல் உணவூட்டும் நல்ல பெண் என்ற பொருள் தரும். நாணத்தை நாணென்னும் நல்லாள்..... (924) என்று பிறிதோரிடத்தில் குறள் சொல்லியது.
நகும் என்ற சொல்லை வைத்து அது மகிழ்வுடன் கூடிய சிரிப்பு எனக் கொள்வதற்கில்லை; இங்கு அது ஏளனச் சிரிப்பைக் குறிப்பதாக உள்ளது. 'நிலமென்னும் நல்லாள் நகும்' என்ற தொடர் நல்ல பெண்ணான நிலம் எள்ளி நகையாடும் எனப் பொருள்படுகிறது. நல்லாள் என்ற சொல் இழிவுபடுத்தார் என்பதற்காக; சோர்வுற்றிருப்பனை ஊக்குவிப்பதற்காக 'நகும்' என்ற சொல்லாட்சியாம். நகும் என்று சொன்னதால் உடல்வலி இருந்தும் உழைக்க முன்வராத சோம்பேறிகளை நோக்கிப் பாடப்பட்டது என அறியலாம்.

'இலம்என்று அசைஇ இருப்பார்' யார்?

'இலம்என்று அசைஇஇருப்பார்' என்றதற்கு பொருளிலோமென்று சோம்பி இரப்பார், பொருளிலேமென்று தளர்ந்திருப்பார், வறுமையால் கால் தளர்ந்து ஒருவர்பால் சென்று பெரிதும் இல்லா ஆளரேம் என்று இங்ஙனம் தம் நாவினால் இளிவந்த சொல்லி இரப்பார், யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பார், 'நாம் தரித்திரர்' என்று விசாரப்பட்டு இருக்கிறவர், யாம் வறியமென்று மடிந்திருப்பார், எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவர், யாம் வறியவரானேம்; ஒரு வேலையும் இல்லாதவரானேம் என்று கூறிச்சோம்பி இருப்பவர், யாதொன்றும் இல்லை என்று சோம்பிக் கிடப்பார், ஏழை என்று சோம்பியிருப்பார், பொருளில்லேம் என்று சோம்பி அமர்ந்திருக்கும் ஏழைகள், நிலத்தை வைத்துக் கொண்டு பணமில்லையே என்னும் சோம்பேறிகள், 'யாம் எதுவும் இல்லேம்' என்று சோர்ந்து போய் இருக்கும் நிலவுரிமையாளர், நாங்கள் வறியோம் என்று சோம்பலாய் இருப்பவர்கள், 'யாம் வறியேம்' என்று சொல்லி மடிந்திருப்பார், 'எம்மிடம் சிறிதும் பொருள் இல்லை' என்று வயலைக் கவனிக்காமல் சோம்பலாக இருப்பவர், ஏழையாம் யாம் என்று ஏங்கிச் சோம்பிருப்பார், தங்களுக்கு வாழ்க்கையில்லை என்று சோம்பலை நாடி இருப்பவர்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'இலம்என்று' என்பது 'இலேம்என்று' என்ற பொருள் தரும். என்ன இல்லை? பொருள் இல்லை, வேலை இல்லை, வாழ்க்கை இல்லை என்பனவற்றுள் பொருள் இலேம் பொருத்தமானது.
அசைஇ என்ற சொல்லுக்கு சோம்பி எனப் பொருள் கூறுவர்.
இருப்பார் என்றவிடத்து, மணக்குடவர் காலிங்கர் ஆகியோர் 'இரப்பார்' அதாவது பிச்சை எடுப்பார் எனப்பொருள்படும்படி பாடம் கொண்டனர். ‘இலமென்று’ என்னும் சொல்லை நோக்கின், ‘இரப்பாரை’ என்ற பாடம் பொருந்தும் எனினும் இருப்பார் என்னும் பாடத்தை பரிமேலழகர் முதலானோர் குறித்தனர். இது இவ்வதிகாரத்திற்கியைவதால் 'இருப்பாரை' என்ற பாடமே சிறக்கும். இருப்பார் என்ற சொல் இருப்பவர் எனப்பொருள்படும்.
'இலம்என்று அசைஇ இருப்பார்' என்ற தொடர் தம்மிடம் ஏதுமில்லை என்று சோம்பி இருப்பவர் என்ற பொருள் தரும்.

உழவுத் தொழில் எல்லா இடத்தும் பரந்திருந்தும் அதனைச் செய்யாது சோம்பித் திரியும் மக்களின் இழிநிலையை இக்குறள் விளக்குகிறது. மக்கள் வாழ்வதற்கு வேண்டியவற்றை உழவுத் தொழிலால் பெறலாம் என்பதையும் எந்த ஒரு தொழில் கைகொடுக்காது போனாலும் உழவுத் தொழில் செய்து வளமாக வாழலாம் என்பதையும் நிலத்தின் சிரிப்போடு வள்ளுவர் நயம்பட இங்கு மொழிகிறார்.
வள்ளுவர் உழைப்பை மதிப்பவர்; குறளில் ஆள்வினையுடைமை (முயற்சி), ஊக்கம் இவை பற்றிப் பல இடங்களில் போற்றிப் பேசப்படுகின்றன. முயற்சியின்மையினால்தான் மாந்தர் இல்லாதவர்களாக ஆகுகின்றனர். நிலத்தில் எத்துணை உழைப்பை நல்குகின்றோமோ, அத்துணைப் பயனும் அதனின்று கிட்டும். எனவே எத்தொழிலும் நாட்டமின்றி சோம்பி, தமக்கு ஒன்றுமில்லையே எனச் சொல்லிக்கொண்டு சுற்றித் திரியும் மாந்தரை நோக்கி வேளாண்தொழிலில் உழைத்து வாழலாமே எனச் சொல்கிறார் வள்ளுவர். பாடுபடாமல் வளமான வாழ்க்கையை எட்ட முடியாது. உடல் நோகாமல் வாழவிரும்புபவர் எள்ளப்படுகிறார். இருந்தா இருந்த இடம் என்று அசையாமல், முயற்சி ஏதும் செய்யாமல் வெறுமனே என்னிடம் ஒன்றுமே இல்லை எனச் சொல்லித் திரிபவர்களைப் பார்த்து நாம் சினம் கொள்கிறோம். உழவு என்பது கடுமையான உடல் உழைப்பை எதிர்பார்ப்பது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்க வேண்டும். ஆயினும் வேளாண் முயற்சி சிறந்த பயன் அளிக்கும்.
நிலத்தை உழுது பயிரிடத் தேவையான வித்துக்களும் உழும் ஏரும் கையில் இருக்கும்பொழுது சோர்வடைந்து ஏழ்மையில் வாடுவதும் பதரே என்பதை
“வித்தும் ஏரும் உளவா யிருப்ப
எய்த்து அங்கிருக்கும் ஏழையும் பதரே”
- (நறுந்தொகை (வெற்றிவேற்கை): 68) என்ற பழம்பாடல் ஒன்றும் கூறுகிறது.
நிலம் தன்னிடத்து முயன்று பாடுபடுவார்க்கு பெரும் பொருள்களை அள்ளியள்ளித் தரும் இயல்பினது. அப்படியிருந்தும் உழவுசெய்து நன்மையடையாமலிருந்தால் வறுமைநிலை தானே வந்துறும்? எனவே சோர்வுற்றிருப்போரைப் பார்த்து 'ஏன் சோம்பி வருந்துகிறாய்? கலப்பை பிடித்து உழுது பயிர் செய்; உணவும் பொருளும் கிடைக்கும்' என்கிறாள் மண்மகள். குடியை உயர்த்தவும் வறுமையின்றி வாழவும் உழுதொழில் துணைசெய்யும்.

நிலம் ஏதும் இல்லாதவர்களை உழுது பயிரிடாத சோம்பேறிகள் என்று எப்படிச் சொல்லுவது? எனவே இக்குறள் நிலத்துக்குரியவனை நோக்கியே கூறப்பட்டது என்பர் சிலர். 'குறள் அளவில் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்ற பாகுபாடு இல்லை. எந்த பண்ணையிடமும் அடிமையாகாது நினைத்தால் தானே சென்று கரம்பு திருத்தி உழக்கூடிய நிலங்கள் போதிய அளவு தரிசாகக் கிடந்தன என்று கருத வேண்டியுள்ளது. இல்லையே என்று இயலாது இருப்பவனைப் பார்த்து நிலமகள் சிரிப்பாளாம். நிலமாகிய தன்னைப் பயிரிட்டால் பயன்தரக் காத்திருந்தும் முயலாதிருக்கிறானே என்று எண்ணியே அப்பெண் சிரிக்கின்றாள் என்று வள்ளுவர் கூறுவதிலிருந்து வேண்டிய அளவு பயிரிடவேண்டிய நிலங்கள் இருந்தன என்றே கருத வேண்டியுள்ளது' என்கிறார் க திருமாறன். 'வள்ளுவர் காலத்திலே ஒருவர் ஆதிக்கத்திலும் இல்லாத உழுநிலஙகளிலே யார் வேண்டுமானாலும் பயிர் செய்து பலன் பெறலாம் என்ற நிலைமை இருந்திருக்கலாம்' என்றும் பிறர் கூறினர். அரசிடமிருந்து வாரம் அல்லது குத்தகை போன்று நிலத்தைப்பெற்று உழைத்திருக்கலாம். நிலமுடையவன் நிலமில்லாதவன் ஆகிய இருவருக்குமே சொல்லப்பட்ட பாடலாகும் இது. நிலமற்ற வறியோரும் உழவுத் தொழிலில் ஈடுபடலாமே. உழவு எவரும் செய்தல் கூடும் எனக் கருதப்பட்டதனாலேயே நிலமகள் சிரிப்பாள் எனக் கூறப்படுகிறது. உழவுத்தொழில் செய்ய யாரும் தயக்கம் காட்டக்கூடாது என்பதும் சொல்லப்படுகிறது.

'இலம்என்று அசைஇஇருப்பார்' என்ற தொடர் எமக்கு ஒன்றுமில்லை என்று சோம்பியிருப்பவர்களைக் குறித்தது.

தம்மிடம் ஒன்றுமில்லை எனத் தொழில் ஏதும் செய்யாமல் சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலம் என்னும் நல்லாள் சிரிக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உழவுமுயற்சி திருவினையாக்கும்.

பொழிப்பு

தம்மிடம் ஒன்றும் இல்லை என்று சோம்பியிருப்பவரைக் கண்டால் நிலமென்னும் நல்லாள் சிரிப்பாள்.