இவ்வதிகாரத்திற்கான பரிமேலழகரது உரைவிளக்கம் 'மாணாதபகையை (நன்மை பயவாத பகை) ஆக்குதற் குற்றமும், முன் ஆகிநின்ற பகைக்குள் நட்பாகக் கொள்ளுதற்குரியதும், நட்புமின்றி பகையுமின்றி நடுவுநிலையிற் வைக்கப்பட வேண்டியதும் (நொதுமல்), நடந்து கொள்ளவேண்டிய முறையும், நீக்க வேண்டிய பகையின்கண் செய்ய வேண்டியனவும், அழிக்கும் காலமும், நீக்காவிட்டால் வரும் குற்றமும் என்று கூறப்படும் இத்தகைய திறங்களை ஆராய்ந்தறிதலாகும். 'இரட்டுற மொழிதல்' என்பதனாற் பகையது திறமும், பகையிடத்து ஆக்கும் திறமும் என விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப் பகைய ஆகலின், இது பகை மாட்சியின் பின் வைக்கப்பட்டது' நல்ல தொகுப்புரையாக உள்ளது. இரட்டுற மொழிதல் என்பது ஒரு தொடரை இருபொருள்படச் சொல்லுதல்.
பகையென்று சொல்லப்படும் தீமை பயப்பதனை ஒருவன் விளையாட்டாகவும் விரும்பக்கூடாது;
வில் வீரருடன் பகை கொண்டாலும், சொல் அறிஞருடன் பகை கொள்ளல் தகாது;
சுற்றம், நட்பு, படை ஆகியவற்றுள் ஏதுமற்றவன் தனியாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பைத்தியக்காரன்;
பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு, அமைதியாக ஆட்சி நடத்தும் பண்புடையவ பெருமையின் கீழ் இவ்வுலகம் அடங்கி நிற்கும்;
தனக்கு உதவும் துணைவர் யாரும் இல்லை; தன்னை அழிக்கக்கூடிய பகைவர் இருவர் உடையவனாகவும், தான் தனியாகவும் இருப்பவன், அப்பகைவர் இருவருள் தனக்குப் பொருந்திய ஒருவரை, நல்ல துணைவராகப் பெற்றுக் கொள்ள வேண்டும்;
பகைவன் ஒருவனை முன்பு ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாதிருந்தாலும் தனக்குத் தாழ்வு வந்தபோது, அவனோடு நட்பாகிச் சேராமலும் பகைத்து நீக்காமலும் இடைநிலையில் விட்டுவைக்க வேண்டும்;
தமக்காக நொந்ததை மதியார்க்குத் தன் துன்பத்தைச் சொல்லக்கூடாது, தன் வலிவின்மையை எதிர்பார்த்திருக்கும் பகைவர்க்குத் தன் மெலிவை வெளிப்படுத்தக்கூடாது;
வெல்லும் வழிவகை அறிந்து, அதற்கேற்பத் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்புடன் இருந்தால், பகைவரிடத்துள்ள இறுமாப்பு தானே அழிந்து விடும்;
செடியாயிருக்கும் போதே முள் மரத்தைச் வெட்ட வேண்டும், களையப்பட வேண்டிய பகைவரை அன்னார் வலிவற்றிருக்கும் போதே களைய வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் அவர் ஆற்றல் பெற்றுத் தம்மைக் களைவர்;
தன்னோடு பகைப்பாரது செருக்கை அடக்க இயலாதவர் மூச்சுவிடுகிறார், வாழ்கிறவர் அல்லர் என்பது திண்ணம்.
இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.