இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0879



இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

(அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:879)

பொழிப்பு (மு வரதராசன்): முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.

மணக்குடவர் உரை: முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால்.
இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்.
(களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: முள்ளுடைய மரத்தை முளையிலே அழிக்க; முதிர்ந்துவிடின் வெட்டுவார் கை புண்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இளைதாக கொல்க; காழ்த்த இடத்து முள்மரம் களையுநர் கைகொல்லும்.

பதவுரை: இளைதாக-இளமையானதாயிருக்க; முள்-முள்; மரம்-மரம்; கொல்க-களைக, பிடுங்கி எறிக; களையுநர்-நீக்குகின்றவர், வெட்டுகின்றவர்; கை-கை; கொல்லும்-வருத்தும்; காழ்த்தஇடத்து-முதிர்ந்த நிலையில், வைரம் பாய்ந்தால்.


இளைதாக முள்மரம் கொல்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முள்மரத்தை இளைதாகவே களைக: [களைக- பிடுங்கி எறிக]
பரிப்பெருமாள்: முள்மரத்தை இளைதாகவே களைக:
பரிதி: முள் மரத்தை முளையான உடனே களைக;
காலிங்கர்: களையவேண்டின் எத்துணையும் சால இளைதாகவே முள்ளுடை மரத்தினை களைக;
பரிமேலழகர்: களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக;

'முள்மரத்தை இளைதாகவே களைக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முள்ளுடைய மரத்தை வளரவிடாமல் இளையதாக உள்ள போதே வெட்டி எறிக', 'முள் மரத்தை அது சிறு செடியாக இருக்கும்போதே பிடுங்கி அழித்துவிட வேண்டும்', 'முள்ளையுடைய மரத்தைச் சிறியதாயிருக்கும் போதே பிடுங்கி எறிக', 'நீக்க வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமையில் நீக்கிவிடுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முள்ளுடைய செடியைச் சிறியதாயிருக்கும் போதே பிடுங்கி எறிக என்பது இப்பகுதியின் பொருள்.

களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: முள்மரத்தை இளைதாகவே களைக:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவர் வலியராகும் முன்னே களைதல் வேண்டுமென்றது.
பரிதி: அல்லது மரம் வளர்த்தல் கையை வருத்தும் என்றவாறு.
காலிங்கர்: என் எனின் களையுநரது கையினை வாதிக்கும், மற்று அது முற்றிய இடத்து. [வாதிக்கும்- வருத்தும்]
காலிங்கர் குறிப்புரை: எனவே பற்றார் திறமும் அப்படி என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். [முதிர்ந்த- வயிரம் பற்றிய]
பரிமேலழகர் குறிப்புரை: களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது. [களைப்படுவதாய- நீக்கப்படுவனவாய]

'முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது வளர்ந்து முதிர்ந்தபோது வெட்டுபவர் கையை வருத்தும்', 'முதிர்ந்து மரமாகிவிட்டால் அதை வெட்டப் போகிறவர்களுடைய கையையே கிழித்துவிடும்', 'அது, முதிர்ந்தபோது அதனைக் களைவாருடைய கையை வருத்தும்', 'இல்லையேல் அது முற்றிய பொழுது நீக்கலுறுவார் (வெட்டுவார்) கையினை வருத்தும். ('அழிக்க வேண்டிய பகைவர்களை அவர்கள் வலியற்றிருக்கும்போதே அழிக்க வேண்டும்' என்பதாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வளர்ந்து மரமாகிவிட்டால் அதனைக் களைவாருடைய கையை வருத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முள்ளுடைய செடியைச் சிறியதாயிருக்கும் போதே பிடுங்கி எறிக. அது வளர்ந்து மரமாகிவிட்டால் அதனைக் களைவாருடைய கையை வருத்தும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பகையை முளையிலேயே கிள்ளி எறிக.

முள்ளையுடைய செடியை அது சிறியதாக இருக்கும்போதே களைந்து விடுக; அது முதிர்ந்த பின் தன்னை வெட்டுகிறவர்களின் கையை வருத்தும்.
களைய வேண்டிய முட்செடியை அது இளைதான பொழுதே பிடுங்கி எறிந்து விடுக; முதிர்ந்து விட்டபின் களைதலைச் செய்தால், அது வெட்டுபவர் கைகளைக் குத்திப் புண்ணுண்டாக்கும். இதை உவமப் பொருளாகக் கொண்டு, பகை தோன்றுங் காலத்திலேயே, அதை முற்றவிடாது முற்றிலும் அகற்றி விடவேண்டும்; இல்லையேல் பகை பெரிதாகி தன்னையே அழித்துவிடும் என்ற கருத்து சொல்லப்பட்டது. பகைவர் மெலிதாக இருக்கும்போதே பகையை நீக்கவேண்டும் எனவும் பொருள் கூறுவர்.
இது அரசுக்கு மட்டும் சொல்லப்பட்டது என்றில்லாமல் தனிமனித வாழ்விலும் பகையை வெல்லும் திறமாகவும் கொள்ளலாம்.
கொல்க என்றது வேரொடும் தூரொடும் கல்லி எறிக என்னும் பொருள் தருவது.

முள்மரம் என்று தனியாக ஒருவகை மரம் கிடையாது. இது பொதுப்பெயர். முள்மரங்கள் பலவுள. கருவேல மரம், உடை மரம் போன்றன. நிலையியலுயிர்களில் இயல்பாக உள்ள பகுதிகள் சில குறிப்பிட்ட வகைகளில், மாற்றமடைந்து முள்ளாக முதிர்ச்சி பெறும். முள்செடிகள் விளைநிலங்களில் பரவி நிலத்தடி நீரை மிக அதிக அளவில் உறிஞ்சி வேளாண்மைக்கும் கேடு விளைவிப்பன. முள்மரம் விளைநிலத்தன்றி எந்நிலத்திலும் வளரவிடாது ஒழிக்க வேண்டிய ஒன்றாகும்.
முள்ளுடையதை இளஞ்செடியாக இருக்கும்போதே வெட்டி வீழ்த்திவிட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்து விட்ட பின் அதாவது மரமாக வளர்ந்து விட்டபின் வெட்ட முற்பட்டால், வெட்டுகின்றவரின் கையையே அதன் முட்கள் கையைக் கிழித்துத் துன்பம் தரும். முள்செடியாயிருந்தால், அதனை உடனே பிடுங்கி எறிவது மிகஎளிது, அது முற்றிப்போனால் பிடுங்கவும் முடியாது; தீமையையும் உண்டாக்கும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இப்பாடல் பிறிது மொழிதலாகக் கூறப்பட்டது. பிறிது மொழிதல் என்பது ஒரு பொருளை விளங்கச் செய்வதற்கு அப்பொருளோடு ஒத்த பிறிதொரு பொருளைக் கூறுதலாம். இங்கு முட்செடி இளைதாகக் களையப்பட வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இதில் முள்மரங் கொல்க என்றல் பிறிதுமொழிதலாம். 'பகை நிலைபெறாத பொழுதே களைக' என்னும் குறிப்புப் பொருள் பெறப்பட்டதாக நயம் தோன்ற விளக்குவர். இன்னல் தரப்போகின்ற எதையும் தொடக்க நிலையிலேயே அழித்து விடுதல் நல்லது என்ற கருத்தை நேரடியாகக் கூறாது பிறிதுமொழிதலாகச் சொல்லப்பட்டது.

நம் முன்னால் வளர்கிறது ஒரு முள்செடி. பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறியது தானே என்று அதைப் பிடுங்கி எறியாமல் வளர்ந்தபின் நீக்குவோம் என்று வாளாயிருந்தால், பின்னர் நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும். அதுபோழ்து அது நன்றாக வளர்ந்து வயிரம் பாய்ந்த மரமாகி விடுகிறது. இப்பொழுது முள்மரத்தை ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையால் அரிவாள் கொண்டு வெட்டுகிறோம். முள் கையைக் குத்திக் காயப்படுத்துகிறது. சிறியதாக இருந்த பொழுதே வெட்டியிருக்க வேண்டும் என எண்ணுகிறோம். வளர்ந்துவிட்டால் பின்னே மிகப் பாடுபட்டு அழிக்க நேரிடுகின்றது.
பகை தோன்றாமலே நீக்கிவிடுவது நல்லது. அதையும் மீறி பகை ஏற்பட்டுவிட்டால், அதை முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும். இதை உணர்த்தவே முள்செடியை இளையதாக இருக்கும்போதே களைந்துவிட வேண்டும்; இல்லையானால், அது வயிரம் கொண்டு கடினமான முதிர்ந்த பிறகு வெட்ட முனைந்தால் அது வெட்டுவோரின் கைக்குத் துன்பம் தருவதில் போய் முடியும் என்ற உவமை ஆளப்பட்டது.
இதனான் பகை நீக்கும் பருவம் தொடக்க நிலையெனக் கூறப்பட்டது; பகை முதிர்ந்து படைவலி மிகுந்தால், அவனை வெல்வது கடினம்; பகையை நட்பாக்கிக் கொள்வதானாலும் அல்லது அதை வெல்வதானாலும் பகைமை முற்றுவதற்கு முன் செய்ய வேண்டும். அது வலுத்தபின் அதைப் பலர் கூடித்தாக்கினும் அது தாக்குவாரைத் தாக்கும்; அழிக்கவேண்டிய பகையை, அப்பகைவர் வலியராவதன் முன்னே, முற்றிலுமாய் ஒழித்துவிடுதல் வேண்டும். இன்றேல் அப்பகையால் நாம் அழிக்கப்படுவோம்; மெலிதாய காலத்தே தம்பகையைக் களையாது வலிதாய காலத்துக் களையலுறின் தம்மை அது களையும். இவை இக்குறள் தரும் செய்திகள்.

முள்ளுடைய செடியைச் சிறியதாயிருக்கும் போதே பிடுங்கி எறிக. அது வளர்ந்து மரமாகிவிட்டால் அதனைக் களைவாருடைய கையை வருத்தும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பகைத்திறம்தெரிதல் பகையை நீக்குதற்கான பருவத்தைச் சொல்லும்.

பொழிப்பு

முள்ளுடைய செடியை முளையிலே வெட்டி எறிக. அது முதிர்ந்துவிடின் வெட்டுபவர் கை புண்படும்.