இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0876தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

(அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:876)

பொழிப்பு (மு வரதராசன்): இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத் தெரியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும்.

மணக்குடவர் உரை: பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக.
இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.

பரிமேலழகர் உரை: தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க.
(முன் 'தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: ஒருவனைக் குறித்து தாம் முன்பு ஆராய்ந்து தெளிந்தாராயினும், தெளிந்திலர் ஆயினும் தாழ்வு வந்தவிடத்து அவனை ஆராய்ந்து நீக்காமலும் சேர்த்துக் கொள்ளாமலும் ஓர் அயலாமைப் போல அவனை விட்டு வைக்க வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.

பதவுரை: தேறினும்-தெளிந்தாலும்; தேறா விடினும்-தெளியாவிட்டாலும்; அழிவின்கண்-இடர் நேர்ந்தபோது, அழிவுவந்த இடத்து, கேடு சூழ்ந்த நேரத்தில், தாழ்வுற்றபொழுது; தேறான்-கூடாதவன், சேர்க்கப்படான்; பகாஅன்-நீக்கப்படான்; விடல்-விடுக.


தேறினும் தேறா விடினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்;
பரிப்பெருமாள்: பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்;
பரிதி: அறிந்தும் அறியான்;
காலிங்கர்: பகை என்று தேறினும், தேறாவிடினும்;
பரிமேலழகர்: பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்;

'பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளியலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்' என்றனர் மணக்குடவரும் பரிப்பெருமாளும்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெளியினும் தெளியாவிடினும்', 'பகைவனை முன்னரே நம்பினாலும் நம்பாவிட்டாலும்', 'பகைவனை நட்பாக்கிக் கொள்வதை நிச்சயிப்பதா அல்லவா என்பதை (போர் மூளுவதற்கு முன்னால் ஆலோசிக்க வேண்டும்', 'பகைவரை முன்பு தெளிந்தாலும், தெளியாவிட்டாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவனை முன்னரே நம்பித் தெளிந்தாலும் நம்பாமலிருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழிவுவந்த விடத்துத் தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக.
மணக்குடவர் குறிப்புரை: இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
பரிப்பெருமாள்: அழிவுவந்த விடத்துத் தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவராயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
பரிதி: அழிந்தபேரைக் கண்டும் அறியான்; புத்தியும் கேளான்; அவனைக் கைவிடுக என்றவாறு.
காலிங்கர்: ஒருவர் இடரின்கண் பெரிதும் தேறும் பண்பிலனுமாகித் தம்மைவிட நீங்காதானும் ஆயின், மற்று அவன் திறம் தெரிந்து அவனைக் கைவிடுக;
காலிங்கர் குறிப்புரை: எனவே இவனும் ஒருவர்க்கு உள்ளுறுபகை என்பது பொருளாயிற்று என்றவாறு.
அழிவின்கண் தேறான் என்பது தமக்கு ஓர் அழிவுவந்த இடத்துப் பெரிதும் தேறத் தகானாகி என்றது; பகான் என்பது நீங்கான் என்றது; விடல் என்பது விடுக என்றது.
பரிமேலழகர்: தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க.
பரிமேலழகர் குறிப்புரை: முன் 'தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது. [உள்ளாய் நின்று - உள்ளிருந்து ( (உட்பகையாய்) இருந்து)]

'அழிவுவந்த விடத்துத் தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பநிலையில் நம்பி விடாதே; பகைத்து விடாதே', 'தனக்கு அழிவு நேர்ந்த பொழுதில் அவனை நம்பிச் சேர்த்துக் கொள்ளாமலும், நம்பாது விலக்கி வைக்காமலும் இடைப்பட்ட நிலையில் விட்டு வைக்க', 'போர் மூண்டு) சேதமுண்டாகும் சமயத்தில் பகைவனுடன் கூடுவதா போரிடுவதா என்பதை எண்ணித் தயங்கக் கூடாது', 'கேடு வருங்கால், தெளிந்து கூடிவிடாமலும், பிரித்து விடாமலும் இடையே விட்டு வைக்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெருக்கடி காலத்தில் அவனை நம்பாதும் பகைத்துக்கொள்ளாதும் இடைப்பட்ட நிலையில் விடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவனை முன்னரே நம்பித் தெளிந்தாலும் நம்பாமலிருந்தாலும் நெருக்கடி காலத்தில் தேறான் பகாஅன் விடல் என்பது பாடலின் பொருள்.
'தேறான் பகாஅன் விடல்' என்பதன் பொருள் என்ன?

பகையா அல்லவா என்று அறியமுடியாவிட்டால் நொதுமலர் என எண்ணிப் பழகுக.

ஒருவனைக் குறித்து தாம் முன்பு ஆராய்ந்து தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் தனக்கு நெருக்கடி உண்டானபோது அவனை நீக்காமலும் நெருங்கிக்கூடாமலும் அவனை விட்டு வைக்க வேண்டும்.
ஒருவனின் திறத்தை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் இடர் வந்தகாலத்தில் அவனை நெருங்கிக்கூடாமலும் ஒதுங்கிப் பகையாமலும், ஊடுநிலையில் வைத்திருக்கச் சொல்கிறது இப்பாடல். மிகவும் நெருங்கவிட்டால் உடனிருந்து நமது பலமின்மையை அறிந்து கெடுப்பான். விலகிப்போனால் வெளிப்படைப் பகையால் மேலும் தனக்கு ஊறு விளைவிப்பான். ஆகையால் தாம் இழிவுற்ற நேரத்தில் சேர்த்தலும் பிரித்தலும் கூடாது.
இதற்கு முன்னே ஒருவனை ஆராய்ந்து இராமல் இருந்து அழிவு நேரும்போது அவனைத் தேறுவதா, தேறாதிருப்பதா என்னும் ஆராய்ச்சியையும் விட்டுவிட வேண்டும் எனவும் இக்குறட்பொருளாகக் கொள்வர்.

'தேறான் பகாஅன் விடல்' என்பதன் பொருள் என்ன?

‘தேறான் பகான் விடல்’ என்பதற்குத் தெளியமாட்டான் - நீங்கமாட்டான் ஆகி விடுக என்பது நேர் பொருள். தெளிதலோ பிரிதலோ செய்யாது விடுக என்பது கருத்து.
ஒருவனது திறத்தை முன்பு அறிந்திருந்தாலும் அல்லது அறியாமலிருந்தாலும், தமக்கு கேடு வந்தபோது, வலிந்து சென்று அவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது அவனின்று நீங்குதலும் கூடாது; பட்டும் படாமல் கொள்ளுகின்ற நிலையிலேயே உறவை விட்டுவிட வேண்டும் என்கிறது குறள். தனக்குக் கேடு வரும்போது நெருங்கி நட்பு பாராட்டுவோனை, தன்னுடைய இழிவின் காரணமாகவே அந்நட்பு என்று அவன் உணர்ந்தால், அவனால் அழிவே உண்டாகும். அதுபோல், அவனை நீங்கி நின்றாலும், தாம் துணையின்றி இருப்பதை உணர்ந்து, மேலும் துன்பத்தையே தருவான்.
இக்குறளிலுள்ள 'விடல்' என்ற சொல்லுக்கு விடுக எனக் காலிங்கரும் விடற்க அதாவது விட்டுவைக்க எனப் பரிமேலழகரும் பொருள் கூறினர். தேறல் பிரிதல் இவ்விரண்டையும் ஆலோசிப்பதை விட்டுவிடுக என உரைத்தார் நாமக்கல் இராமலிங்கம்.
ஜி வரதராஜன் அழிவு நேருங்காலத்து, ஒருவனை இன்றியமையாது சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளாமலும், அழிவுக்குக் காரணமாயுள்ளவனைப் பிரிக்க வேண்டியிருந்தால் பிரித்துவிடாமலும் இருப்பானாக என இப்பகுதிக்குப் பொருள் கூறினார்.

அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவனை முன்னரே நம்பித் தெளிந்தாலும் நம்பாமலிருந்தாலும் நெருக்கடி காலத்தில் அவனை நம்பாதும் பகைத்துக்கொள்ளாதும் இடைப்பட்ட நிலையில் விடுக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கேடுற்ற வேளையில் பகைத்திறம்தெரிதல் வேண்டாம்.

பொழிப்பு

முன்னர் தெளியினும் தெளியாவிடினும் தனக்கு தாழ்வு வந்தபோது ஒருவனை நம்பாதும் பகைத்துக்கொள்ளாதும் இடைப்பட்ட நிலையில் விடுக