இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்

(அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:880)

பொழிப்பு (மு வரதராசன்): பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சுவிடும் அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

மணக்குடவர் உரை: பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார்.
இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.

பரிமேலழகர் உரை: செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக.
(அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பகை காட்டுவாரது அகந்தையை அடக்க முடியாத அரசர் மூச்சு விடுதளவிலேதான் உலகத்திருப்பவராவர்; உறுதியாக நிலைபெற்றவராகார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் உயிர்ப்ப உளரல்லர் மன்ற.

பதவுரை: உயிர்ப்ப-மூச்சுவிட; உளர்-இருக்கின்றவர்; அல்லர்-ஆகமாட்டார்; மன்ற-திண்ணமாக, ஒருதலையாக; செயிர்ப்பவர்-பகைப்பவர்; செம்மல்-செருக்கு, தருக்கு, தலைமை; சிதைக்கலாதார்-கெடுக்காதவர்.


உயிர்ப்ப உளரல்லர் மன்ற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார்;
பரிப்பெருமாள்: அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார்;
பரிதி: மாற்றார் சுவாசம் விட அழிஞ்சு போவார்; நாகமும் எலியும் போல் என்றவாறு;
காலிங்கர்: தம்மை வருத்தம் செய்பவராகிய பகைவர் தம் எதிர்வந்து சினத்து ஒரு மூச்சு எறிய அத்தனைக்கு உளரல்லர் மன்ற;
பரிமேலழகர்: பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக;

'உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார்/உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் மூச்சுவிட்டாற் போதும், அழிவர்', 'அப்பகைவர் பெருமூச்சு விட்ட அளவிலே, உறுதியாக உயிருடன் இருக்க மாட்டார். (செத்தொழிவர்)', 'நிம்மதியாக வாழ முடியாது', 'பகைவர் மூச்சு விட்ட அளவிலே அழிந்து விடுவர். (பகைவரால் எளிதில் வெல்லப்படுவர்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மூச்சு விடுகிறார்; வாழ்கிறாரல்லர் என்பது திண்ணம் என்பது இப்பகுதியின் பொருள்.

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.
பரிப்பெருமாள்: பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.
பரிதி: மாற்றாரை வெல்ல வகை அறியாதார்.
காலிங்கர்: யார் எனின் மற்று அவரது பெருமையைத் தலையழிக்க மாட்டாதார் என்றவாறு.
பரிமேலழகர்: தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்.
பரிமேலழகர் குறிப்புரை: அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

'பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார்/மாற்றாரை வெல்ல வகை அறியாதார்/பெருமையைத் தலையழிக்க மாட்டாதார்/பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைப்பவரின் இறுமாப்பை அழிக்காதவர்', 'பகைப்பவருடைய தலைமையினைக் கெடுக்க இயலாதவர்', 'பகைவர்களுடைய கொட்டத்தை அடக்கி விடாதவர்கள்', 'தம்மோடு பகைப்பவரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைப்பவரின் தருக்கினைக் கெடுக்காதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைப்பவரின் தருக்கினைக் கெடுக்காதவர் உயிர்ப்ப உளரல்லர் என்பது திண்ணம் என்பது பாடலின் பொருள்.
'உயிர்ப்ப உளரல்லர்' என்ற தொடர் குறிப்பதென்ன?

பகைவரின் களிப்பை இகழ்ச்சி செய்பவன் மூச்சுவிட்டு உலவும் பிணமே.

தம்மைப் பகைப்பவரது தருக்கினை அழிக்க முடியாதவர் மூச்சுவிடுகிறார் என்ற அளவில்தான் உள்ளார் என்பது உறுதி.
பகைவர் செருக்கை அடக்க முடியாதவர் வெறுமனே மூச்சுவிடுவதாலேயே உலகில் வாழ்கிறாரல்லர். அவர் நடைப் பிணமே. நம்மோடு சினந்து பகைப்பவர் இறுமாப்பைச் சிதைப்பது அவரை வெல்வதற்குச் சமம். அவ்விதம் சிதைக்க இயலாதார் உயிர்த்துக்கொண்டு உலவுவதால் அவர் உயிருடனிப்பவரல்லர் என்பது உறுதி எனச் சொல்லப்படுகிறது. அவர் பகைவரை வெல்லும் அளவு வல்லவராய் இருக்கமுடியாது.
ஏன் பகைப்பவரது செருக்கைக் கெடுக்கமுடியவில்லை என்பதற்கு இகழ்ச்சியான் அதாவது அலட்சியம் செய்வதால் என விளக்கினர். சிலர் முற்குறளான 'இளைதாக முள்மரம் கொல்க' என்றதில் கண்டபடி எளியனாய் இருக்கும்போதே பகையை நீக்காததனால் மாற்றான் தன்னினும் வலியனாகிவிட்டான்; அதனால் அவனது பெருமையைச் சிதைக்க முடியவில்லை என விளக்கம் செய்தனர்.

'செம்மல்' என்ற சொல்லுக்கு தலைமை, வெல்லுதல், தருக்கு, பெருமை, பலம், ஆற்றல், இறுமாப்பு, (வலிமையின்) தருக்கு, வலிமை, அகந்தை எனப் பொருள் கூறினர். பகைவர் தானே வலியவன் எனப் பெருமிதம் கொண்டிருக்கிறான். அவனது இக்களிப்பை அகற்றினால்தான் அவனை வெல்ல முடியும் என்பதைக் கூறவந்ததே இப்பாடல். எனவே இறுமாப்பு என்ற பொருள் பொருந்தும்.
உறுதிப் பொருள் தரும் ‘மன்ற’ என்னும் இடைச் சொல் முற்றுச் சொல்லை அடுத்து வந்து முன் வரும் தொடரின் கருத்தை வலியுறுத்துவதே வழக்கு என்பர். இங்கு 'உளரல்லர் மன்ற' என்றதால் உயிரோடு வாழ்பவர் அல்லர் என்பது உறுதி எனப் பொருள் கொள்வர்.

'உயிர்ப்ப உளரல்லர்' என்ற தொடர் குறிப்பதென்ன?

இத்தொடர்க்கு 'உயிர்வாழ்கின்றார் ஆயினும் இறந்தாரோடு ஒப்பர்' என்றும் 'உயிர்த்த அளவிலேயே இறந்து விடுவர்' என்றும் இருதிறமாக உரை செய்தனர். முன்னதற்குத் 'தம் பகைவருடைய ஆணவம் அழிக்க முடியாதவர், தம் மூச்சு இருந்தும், உயிருள்ளவர் ஆகமாட்டார்' என்பது விளக்கம். 'பகைவர் மூச்சுவிடும் கால அளவிற்குள் சாவர்' எனப் பின்னதுக்கு விளக்கம் கூறுவர். .... எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் (படைமாட்சி 763 பொருள்: எலியாகிய பகை நாகப்பாம்பு மூச்சுவிட்ட அளவிலே கெட்டொழியும்) என்ற குறளில் சொல்லப்பட்டதுபோல் பகைவர் மூச்சுவிட்ட அளவிலே அழிவர் என்பர் இவர்கள்.
இவற்றுள் முன்னதே பொருத்தம்.

தம்மைப் பகைப்பவரது தருக்கினை அழிக்க முடியாதவர் மூச்சு விடுகிறார்; வாழ்கிறாரல்லர் என்பது திண்ணம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தம்மினும் வலியாரோடு பகைகொள்ளல் ஆகாது என்னும் பகைத்திறம்தெரிதல்.

பொழிப்பு

பகைப்பவருடைய இறுமாப்பினைக் கெடுக்க இயலாதவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.