இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு

(அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:878)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாகவே அழியும்,

மணக்குடவர் உரை: வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும்.
இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும்.
(வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: பகையை வெல்லும் வழிவகைகளை நன்கு ஆராய்ந்தறிந்து அதனை வெல்லுவதற்கேற்றவாறு தன்னைப் பலவிதத்திலும் வளர்த்துக்கொண்டு, சோர்வுபடாமல் தன்னைக் காத்துக்கொண்டால், தன் பகைவர்களிடம் ஏற்பட்ட இறுமாப்பு தானாகவே கெட்டு முற்றிலும் ஒழியும். தற்காப்பு வளர வளரப் பகைவர்தம் இறுமாப்புத் தானாகவே தேய்ந்தொழியுமாம்.
தற்செய்தல்- தன்னை வளர்த்துக்கொள்ளுதல்; தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல். நீ உன்னை வளர்த்துக்கொள்ள வளர்த்துக்கொள்ள, உன் பகை தானே செருக்கழியும் என்கிறார் திருவள்ளுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப பகைவர்கண் பட்ட செருக்கு மாயும்.

பதவுரை: வகை-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தன்-தன்னை; செய்து-இயற்றி; தற்காப்ப-தன்னைக் காப்பாற்றிக் கொள்ள; மாயும்-கெடும்; பகைவர்கண்-பகைவர் மாட்டு; பட்ட-உளதாய; செருக்கு-பெருமிதம், களிப்பு, ஆணவம்.


வகையறிந்து தற்செய்து தற்காப்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்க;
பரிப்பெருமாள்: வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்க;
பரிதி: பகை வெல்லும் வகையறிந்து தனக்குப் பகையாகிய பகைவற்குப் பகைவனாகிய பெரியோனிடத்திற் சேரில்;
காலிங்கர்: தன்னோடு எதிர்வதன் கூறுபாட்டை அறிந்து மற்று அதற்குத் தக்காங்கு அதனின் மிகத் தன்னைச் சமைத்துக் கொண்டு இங்ஙனம் தன்னைப் பேணிக்கொள்ளவே;
காலிங்கர் குறிப்புரை: வகையறிந்து தற்செய்து என்பது தன்னொடு மலைந்து எழும் பகைக்குத் தகாது எனின் மிகைப்பட்ட தன்னைச் சமைத்துக் கொண்டு என்றது.
பரிமேலழகர்: தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே;
பரிமேலழகர் குறிப்புரை: வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல்.

'வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வகையாகத் தன்வலி பெருக்கிக் கொண்டால்', 'தான் செய்யும் தொழிலின் வகையை அறிந்து தன் ஆற்றலை வளர்த்துத் தன்னைக் காத்துக் கொள்ளவே', 'இதுவரை சொல்லப்பட்ட பகைத்திறம் தெரிந்து ஒருவன் தன்னை பலப்படுத்தித் தற்காப்பு செய்து கொண்டால்', 'ஒருவன் தான் வெல்லும் வகையை அறிந்து தனக்கு வேண்டும் பொருளைத் தேடித் தன்னைக் காத்துக் கொள்வானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வெல்லும் வகையை அறிந்து தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்ள என்பது இப்பகுதியின் பொருள்.

மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகையை வெல்லும் திறங் கூறிற்று.
பரிதி: அந்தப் பகையும் மாயும்.
காலிங்கர்: கெடும்; யாதோ எனின் பகைவர் மாட்டு உளதாகிய மனச் செருக்கு என்றவாறு.
பரிமேலழகர்: தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.

'பகைவர்மாட்டு உண்டான பெருமிதம்/மனச் செருக்கு/களிப்பு கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாற்றாரின் ஆணவம் தானே மறையும்', 'பகைவனிடம் தோன்றும் ஆணவம் தானே மறையும்', 'அவனுடைய பகைவர்களிடம் உள்ள துணிச்சல் ஒழிந்துவிடும்', 'அவனது பகைவர்பால் உள்ள களிப்புக் கெடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவரிடம் உள்ள ஆணவம் தானே மறையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வெல்லும் வகையை அறிந்து தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்ள, பகைவரிடம் உள்ள ஆணவம் தானே மறையும் என்பது பாடலின் பொருள்.
'தற்செய்து' குறிப்பது என்ன?

பின்வரக்கூடிய எந்த ஒரு சூழலையும் எதிர் கொள்ளத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டால் பகைவர் ஒடுங்குவர்.

வெல்லும் வகையை அறிந்து, அதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிக் கொண்டு தன்னையும் காத்துக் கொள்வானானால் பகைவரிடம் உள்ள இறுமாப்பு அழிந்து போகும்.
பகைவரின் செருக்கை ஒழிப்பதற்குரிய மூன்று வழிகளாக வகையறிதல், தற்செய்தல், தற்காத்தல் ஆகியன கூறப்படுகின்றன: வகையறிதல்: வகை என்றதற்கு வினை செய்யும் வகை, வெல்லும் வகை, தன்னோடு எதிர்வதன் கூறுபாடு, தான் வினை செய்யும் வகை அதாவது வலியனாய்த் தான் எதிரே பொருமாறு, தான்செய்கிற காரியத்தின் வகை, போர்நூல் கூறும் வழி என்றவாறு பொருள் கூறினர். இவற்றுள் வெல்லும் வகை என்பது பொருத்தம். பகையை வெல்லும் வழிவகைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். பகைவரைவிட வலிகூடுதலாக இருந்தால் சண்டை தொடங்கலாம்; வலி குறைந்த நிலையில் போரைத் தவிர்ப்பது; இவை வழிவகைகளுக்குக் காட்டுகள்.
தற்செய்தல்: இது தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளுதலைக் குறிப்பது.
தற்காத்தல்: தற்காப்ப என்பது மேற்சொல்லப்பட்ட வகைசெய்தல், தற்செய்தல் ஆகியவற்றின் பயன். இதற்குப் பகைத்திறனறிந்து பொருதல், மறப்பு வாராமல் தன்னைக் காத்துக்கொள்ளல், பகை புகாமல் தன்னைக்காத்தல் எனப் பொருள் கூறினர். தன்னை யாரும் எதுவும் செய்ய இயலாதவாறு 'தற்காப்பை'ப் பெருக்கிக் கொள்ளுதல் இது. தன்னை பலப்படுத்தித் தற்காப்பு செய்து கொள்வதைத் 'தற்காப்ப' என்ற தொடர் குறிக்கும்.

நாட்டின் படைப் பெருக்கத்தை வலியுறுத்த வந்த பாடல் இது. பெருக்கம் இருப்பின் பகைவர் அஞ்சிப் போர் செய்யாது ஒடுங்குவர் என்பது நாடுகள் பின்பற்றும் உத்திகளுள் ஒன்று. ஒரு நாட்டின் படைத் தொகையைக் கண்டு பகைவர் அதன்மீது போர்தொடங்கும் தன் ஆரவாரத்தைக் குறைத்துக் கொள்வர். தாம் வலிமை மிக்கவர்கள் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தால்தான், பகைவர் அத்துமீற அஞ்சுவர். வகையறிந்து தற்செய்து தற்காக்கும் அழுத்தத்தைக் கேள்விப்பட்டே, பகைவரிடம் தோன்றிய தானே வல்லவன் என்ற ஆணவம் மறையும் என்கிறார் வள்ளுவர்.

'தற்செய்து' குறிப்பது என்ன?

'தற்செய்து' என்ற தொடர்க்கு தன்னைப் பெருக்கி, தன் பகைவனுக்குப் பகையாகிய பெரியோரிடத்தில் சேர்ந்து, தக்காங்குத் தன்னைச் சமைத்துக்கொண்டு, வினை முடித்தற்கேற்பத் தன்னைப் பெருக்கி, அரண் முதலியன அமைத்துக்கொண்டு, தன்னை வலுப்படுத்திக் கொண்டு, பொருள் படைதுணைகளைப் பெருக்கி எனப் பொருள்கூறி விளக்கினர்.

தன்னை எவ்வாறு செய்ய முடியும்? தன்னை ஆயத்தப்படுத்தி, தகுதிப்படுத்தி, வலுப்படுத்தி உருவாக்கிக் கொள்வது தன்னைச் செய்தலாம். எந்த ஒரு சூழலையும் எதிர் கொள்ளத் தன்ஆற்றலை மேன்மேலும் பெருக்கிக் கொள்வது இது. பகைவருடன் மோதுவதற்கு முன் தன்னைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.
நாட்டளவில் மட்டுமன்றி, ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்விலும் இக்குறட்கருத்தைப் பொருத்திக் கொள்ளமுடியும். தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டால்தான் போட்டியாளர்களை வென்று முன்னேறமுடியும். தன்னம்பிக்கையுடையவன் தன்னை மிகவும் வளர்த்து, தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வான். இதைக் கேள்விப்படும் போட்டியாளனது செருக்கு சிதைந்து போய் தோல்வியை ஒப்புக்கொள்வான்.

'தற்செய்து' என்பது தன் ஆற்றலைப் பெருக்கி தன்னை வளர்த்துக் கொள்ளுதலைக் குறிக்கும்.

வெல்லும் வகையை அறிந்து தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்ள பகைவரிடம் உள்ள ஆணவம் தானே மறையும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பகைவரின் ஆணவத்தை அடக்கி வைக்க ஆரவாரம் காட்டுதலும் பகைத்திறம்தெரிதலுக்கான ஓரு வழி.

பொழிப்பு

வெல்லும்வகையை அறிந்து தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்ள பகைவரிடம் உள்ள ஆணவம் தானே மறையும்.