பகையென்னும் பண்பு இலதனை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை;
பரிப்பெருமாள்: பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை;
பரிதி: பண்பிலாத பகையை;
காலிங்கர்: பகைமை என்று சொல்லப்படும் நெறி இல்லதனை;
பரிமேலழகர்: பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை;
'பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைக்கும் தீய குணத்தை', 'பகை என்று சொல்லப்படுகின்ற தீய பண்பினை', 'பகை என்னும் நன்மையற்ற அது', 'பகையென்னும் தீமை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பகை என்று சொல்லப்படுகின்ற குணமற்றதனை என்பது இப்பகுதியின் பொருள்.
ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.
பரிப்பெருமாள்: ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எவ்விடத்தும் பகைஆகாது என்றது; பகை ஆகாது என்றமையால் எண்ணம் ஆயிற்று.
பரிதி: அதனாலே சிலவகை உண்டாகிலும் வேண்டாம் என்றவாறு.
காலிங்கர்: ஒரு மக்கட் பண்புடையோன் தான் ஒருவரோடு நகையாடியும் செய்யவேண்டற்பாலது அன்று;
காலிங்கர் குறிப்புரை: எனவே என்றும் குறிக்கொண்டு இது செய்யற்க என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று.
பரிமேலழகர் குறிப்புரை: மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.
'ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று/விரும்புதல் இயற்கைத்தன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது', 'ஒருவன் சிரித்து விளையாடும் விளையாட்டிடத்தும் விரும்புதல் இயல்பன்று', 'யாரும் விளையாட்டாகக்கூட விரும்பத்தக்கது அல்ல', 'விளையாட்டிலுங்கூட ஒருவன் விரும்பத்தக்க தன்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
விளையாட்டாகவும் யாரும் விரும்பத்தக்கது அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
|