இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:873)

பொழிப்பு (மு வரதராசன்): தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

மணக்குடவர் உரை: பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்.
இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.

பரிமேலழகர் உரை: தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன்.
(தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: தனியனாக இருந்து பலரைப் பகைப்பவன் பித்தனைக் காட்டிலும் இரங்கத்தக்கவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன் ஏமுற்றவரினும் ஏழை.

பதவுரை: ஏம்-பித்து, பைத்தியம், கிறுக்கு; உற்றவரினும்-எய்தியவரைக் காட்டிலும்; ஏழை-இரங்கத்தக்கவன், அறிவில்லாதவன்; தமியனாய்-தனியாளாக; பல்லார்-பலர்; பகை-பகை; கொள்பவன்-அடைபவன்.


ஏமுற் றவரினும் ஏழை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பித்து உற்றவரினும் அறிவிலன்; [பித்து - பைத்தியம்]
பரிப்பெருமாள்: பித்து உற்றவரினும் அறிவிலன்;
பரிதி: ஏ முற்று ஏழையாய்த் திரிவன்;
காலிங்கர்: பேய்கொண்டவரினும் சாலப் பித்தன் யாவன் எனின்;
காலிங்கர் குறிப்புரை: ஏமுற்றவன் என்பது மதிமயக்கு உற்றவன் என்றவாறு.
பரிமேலழகர்: பித்துற்றாரினும் அறிவிலன்.

'பித்து உற்றவரினும் அறிவிலன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பித்துப் பிடித்தவரினும் அறிவில்லாதவன் ஆவான்', 'பைத்தியக்காரனைவிடப் புத்தி கெட்டுப் போனவன்', 'பித்தரைப் பார்க்கிலும் அறிவு அற்றவன்', 'பித்துற்றாரைவிட அறிவற்றவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பித்துற்றாரைவிட இரங்கத்தக்கவன் என்பது இப்பகுதியின் பொருள்.

தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்.
மணக்குடவர் குறிப்புரை: இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.
பரிப்பெருமாள்: தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இருவரோடு பகை கொள்ளுதல் நீதியன்றாகப் பலரோடு பகை கொண்டவன் பித்தனோடு ஒக்கும் என்றவாறாயிற்று. இது பலரோடு பகை கோடலாகாது என்றது.
பரிதி: எல்லாருடனும் பகை கொள்பவன்.
காலிங்கர்: இங்ஙனம் தான் ஒருவனாய் மற்று இது நமக்கு வாயாது என்று கருதாது பலரொடும் தான் பகை கொள்ளக் கருதுபவன் என்றவாறு.
பரிமேலழகர்: தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்.
பரிமேலழகர் குறிப்புரை: தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது. [வேறுவேறு- தனித்தனியாக]

'தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேறு துணையின்றித் தனியனாய் இருந்து கொண்டே பலரோடு பகை கொள்பவன்', 'தனியாக இருந்துகொண்டு, பல பேரைப் பகைத்துக் கொள்ளுகிறவன்', 'துணைவலி இல்லாமல் தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன்', 'தான் தனியனாய்ப் பலரோடு பகை கொள்வான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் பித்துற்றாரைவிட ஏழை என்பது பாடலின் பொருள்.
'ஏழை' என்பதன் பொருள் என்ன?

பகை கொள்ளுமுன் தனக்குத் துணையாய் நிற்பவர் யார்யார் எனத் தெரிந்துகொள்க.

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருந்து, பலருடன் பகைகொண்டு வாழ்பவன் பித்துப் பிடித்தவரைக் காட்டிலும் இரங்கற்குரியவனாவான்.
ஏமுற்றவர் யார் என்பதற்குப் பித்துற்றவன், பேய் கொண்டவர், மதிமயக்குற்றவன், பயித்தியக்காரன், மதுஅருந்தி மயங்கியவர் எனப் பொருள் கூறினர். இவற்றுள் பித்துப் பிடித்தவன் என்றது பொருத்தம்.
செருக்குக் கொண்டவனுக்கு பகை இருப்பது இயல்பு. சுற்றம் நட்பு என ஏது துணையும் இல்லாமல், தன்னந்தனியாக இருந்தும், பல பகைவர்களைத் தேடி வைத்திருக்கும் ஒருவனை எப்படி அழைப்பது? பல பகைவர்களை எதிர்கொண்டு தான் தனியாளாக வருத்தத்துக்குரியவனாக நிற்பதால் அவன் பித்தனாகத்தான் இருப்பான். ஆனால் வள்ளுவர் அவன் பித்துப் பிடித்தவனினும் இரங்கத்தக்கவன் என்கிறார். ஏனெனில் இவனை எளிதில் எவரும் வென்றுவிடுவர்.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் (பெரியாரைத் துணைக்கோடல் 450 பொருள்: பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல் பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து) என மற்றொரு குறளில் பல்லார் பகை கொள்ளலின் தீது உரைக்கப்பட்டது. தீமையின் மிகுதியைச் சுட்டவே இங்கும் பல்லார் பகை கொள்பவன் என்ற சொற்றொடர் ஆளப்பட்டது.

'ஏழை' என்பதன் பொருள் என்ன?

'ஏழை' என்ற சொல்லுக்கு அறிவிலன், ஏழையாய், சாலப் பித்தன், அறிவில்லாதவன், முட்டாளாவான், அறிவிலியாவான், இரங்கத்தக்கவன், புத்தி கெட்டுப் போனவன், அறிவு அற்றவன், பேதையானவன், மிகவும் வருந்தத்தக்க அறிவிலியாவான் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பித்தன் என்பவன் மனநலம் குன்றியவன். அவன் இரங்கத்தக்கவன். அவனினும் இரங்கத்தக்கவனாவான் தனியனாய்ப் பல்லார் பகை கொள்பவன். தோல்வியுறுவது உறுதி என்று இவனுக்கு அறிவு கொளுத்த யாருமில்லாதலால் பித்தனைவிட வருத்தத்துக்குரியவன் ஆகிறான்.

'ஏழை' என்ற சொல் இரங்கத்தக்கவன் எனப் பொருள்படும்.

தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் பித்துற்றாரைவிட இரங்கத்தக்கவன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பல பகைவர்களைக் கொண்டவன் எளிதில் வெல்லப்படக்கூடியவன் என்னும் பகைத்திறம் தெரிதல் வேண்டும்.

பொழிப்பு

தனியனாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பித்துப் பிடித்தவரினும் இரங்கத்தக்கவன்.