அறிவை ஆளத்தெரியாதவர் பற்றி பேதைமை, புல்லறிவாண்மை ஆகிய அதிகாரங்கள் பேசுகின்றன.
பேதைமை என்பதற்கு வெள்ளந்தியாய் இருத்தல் அல்லது உள்ளிருப்பு இல்லா வெறுமை எனக் கொண்டால் புல்லறிவாண்மை அரைவேக்காட்டுத்தனத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
வள்ளுவர் மிகவும் மனம் நொந்து இயற்றிய அதிகாரங்கள் பேதைமை, புல்லறிவாண்மை, கயமை ஆகியன என்பர். இவற்றுள் முதல் இரண்டு அதிகாரங்கள் கூறும் பேதையர், புல்லறிவாளர் ஆகியோர் பொதுவான இடையூறுகளை எதிர்க்கத் திறனற்றவர்களாவர். புல்லறிவாளர் இரக்கத்திற்குரியவர் ஆனாலும் அவர் இறுமாப்புடன் உலவிவருவதால் வள்ளுவர் அவர்களை வெறுப்பு கலந்த எள்ளலுடனே காட்டுகிறார்.
பிறப்பில் அறிவுடையார், பிறப்பில் அறிவிலார் என எதுவும் இல்லை. புல்லறிவாண்மை அதிகாரத்தில் சில இடங்களில் வள்ளுவர் 'அறிவிலார்' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும் அது முற்றிலும் அறிவு அற்றவரைக் குறியாது. பிறப்பில் அறிவிலாரை வள்ளுவர் இகழமாட்டார். தம்மறிவை ஆட்சிப்படுத்தினாரை, அறிவுடையார் என்றும், அதனை ஆளாதாரை அறிவிலார் என்றுமே அவர் கூறுவார்.
இவ்வதிகாரத்து பாடல்கள் எதிலும் புல்லறிவாண்மை என்ற சொல் இல்லை. புல்லறிவு என்ற சொல் குறள் 846-இல் ஆளப்பட்டது, நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (நிலையாமை 331 பொருள்: நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் சிற்றறிவு கீழானது) என்ற பாடலில்தான் இச்சொல் குறளகத்தே காணப்படுகிறது.
'புல்லறிவு' என்றதற்குப் புல்லிய அறிவுடைமை, புல்லறிவு, அறியாமை, புல்லிய அறிவு, கீழ்ப்பட்ட அறிவு, தாழ்ந்த அறிவு, அற்ப புத்தி, சிற்றறிவு, இழிந்த அறிவு, எனப் பொருள் கூறுவர். இவ்வதிகாரத்திலேயே அதை வெண்மை என்று வள்ளுவர் குறிக்கிறார். இச்சொல்லுக்கு அறிவு முதிராமை என்பது பொருள்.
இவ்வதிகாரத்தில் சிற்றறிவின் இயல்பும் அதனால் வரும் குற்றமும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.
சிற்றறிவுடைமை இல்லாமையுள் பெரிய வறுமை;
புல்லறிவாளன் மனம் உவந்து ஈய மாட்டான்;
அவன் தன்னைத்தானே கொடூரமாக வருத்திக் கொள்பவன்;
கல்லாதிருந்தாலும் அல்லது சிறிதளவே கற்றிருந்தாலும் தன்னைப் பேரறிவாளன் போலக் காட்டிச் செருக்குடன் திரிவான்;
தான் பயின்றிராத தொழிலையும் செய்ய முனைவதால் அவன் கற்ற தொழில்மீதும் ஐயம் கொள்ளச் செய்வான்;
சிற்றறிவுடையவன் தன்னிடமுள்ள குற்றங்களை நீக்காமல் அதற்குக் கோக்குமாக்காக வேறு தொடர்பில்லாத அமைதி கூறுவான்;
தன்னிடம் சொல்லப்பட்ட மிகவும் காக்கப்படவேண்டிய மறைச்செய்திகளையும் தனக்குத் தெரியும் எனக் காட்டிக்கொள்ள அனைவர்முன் அதை வெளிப்படுத்தி உலகமறிந்த மறைச்செய்தி ஆக்கிவிடுவான்;
சொன்னாலும் அறியான் தன்னாலும் அறியான் என்னும் அறிவிரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவன் அவன்;
தனக்கு அறிவிக்க வருபவர்களையே அறியாதவனாக உணரச் செய்துவிடுவான்;
அறிவுடையான் போலத் தன்னைக் காட்டிக் கொள்வதால் அறிந்தவர்கள் சொல்வதை மறுப்பான், மற்றவர்கள் உண்டு என்பதை இல்லை எனப் பிடிவாதமாகச் சாதிப்பான்.
இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.