இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0842



அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:842)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

மணக்குடவர் உரை: அறிவில்லாதான் மனம் குளிர்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; அது பொருளைப் பெறுகின்றவனது நல்வினைப்பயன்.
இது, கொடுத்தானாயினும் வரிசை அறியாது கொடுக்குமாதலின், அது புல்லறிவு என்றது. இத்துணையும் புல்லறிவின் இயல்பு கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை.
(ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: புல்லறிவுடையவன் மனம்வந்து ஒருவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை. கொள்பவன் செய்த முன்னை நல்வினையேயாம். (நெஞ்சு உவந்து எனவும் பிரிப்பர்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பெறுவான் தவம் பிறிதுயாதும் இல்லை.

பதவுரை: அறிவுஇலான்- அறிவில்லாதவன், (இங்கு)புல்லறிவுடையான்; நெஞ்சு-உள்ளம்; உவந்து-மகிழ்ந்து; ஈதல்-கொடுத்தல்; பிறிது-மற்றது; யாதும்-ஒன்றும்; இல்லை-இல்லை; பெறுவான்-அடைகின்றவன்; தவம்-நல்வினை.


அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவில்லாதான் மனம் குளிர்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை;
பரிப்பெருமாள்: அறிவில்லாதான் மகிழ்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை;
பரிதி: அறிவில்லான் ஒருவனுக்குக் கொடுக்கும் கொடை வேறொன்றும் அல்ல;
காலிங்கர்: புல்லறிவாளனாகிய அறிவுகேடன் தன் மனம் மகிழ்ந்து ஒருவர்க்குப் பொருள் கொடுத்தல் என்கின்ற இது பிறிது யாதானும் ஒன்றுமில்லை; [அறிவுகேடன் - அறிவுகெட்டவன்]
பரிமேலழகர்: புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின் அதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை;

'அறிவில்லாதான் மனம் குளிர்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவிலான் மனம்உவந்து ஈவானாயின்', 'அறிவில்லாதவன் மனமார ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டால் வேறொன்றுமல்ல', 'புல்லறிவாளன் மனமுவந்து ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தற்குக் காரணம் வேறொன்றுமில்லை', 'அறிவில்லாதவன், மனம் மகிழ்ந்து கொடுத்தற்குக் காரணம் வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புல்லறிவாளன் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈவதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

பெறுவான் தவம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது பொருளைப் பெறுகின்றவனது நல்வினைப்பயன்.
மணக்குடவர் குறிப்புரை: இது, கொடுத்தானாயினும் வரிசை அறியாது கொடுக்குமாதலின், அது புல்லறிவு என்றது. இத்துணையும் புல்லறிவின் இயல்பு கூறப்பட்டது. [வரிசையறியாது- தகுதியுணராமல்]
பரிப்பெருமாள்: அது அப்பொருளைப் பெறுகின்றவன் நல்வினைப்பயன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, கொடுத்தானாயினும் வரிசை அறியாது கொடுக்குமாதலின், அது புல்லறிவு ஆயிற்று. இத்துணையும் புல்லறிவின் இயல்பு கூறப்பட்டது.
பரிதி: பெற்றவன் செய்யும் புண்ணியமே என்றவாறு.
காலிங்கர்: இஃதன்றி அஃது யாதோ எனில் அவன் வயின் பெறுகின்ற வளம், முன்முன் செய்த நல்வினைப் பயனேயன்றி வேறு யாதொன்றும் இல்லை காரணம் என்றவாறு.
பரிமேலழகர்: பெறுகின்றவன் நல்வினையே.
பரிமேலழகர் குறிப்புரை: ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது. [வீழ்பொருள் - விழுந்து கிடக்கின்ற பொருள்]

அது பொருளைப் பெறுகின்றவனது நல்வினைப்பயன்/புண்ணியம் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொள்பவன் நல்வினையே காரணம்', 'அது வாங்கிக் கொண்டவன் செய்த புண்ணியமேயன்றி', 'பெறுவானது தவமேயன்றி', 'அடைகின்றவனின் நல்வினையே யல்லாமல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெறுவானது நற்பேறு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புல்லறிவாளன் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈவதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; பெறுவான் தவம்தான் என்பது பாடலின் பொருள்.
'பெறுவான் தவம்' குறிப்பது என்ன?

புல்லறிவாளனுக்கு மனதும் சிறிதுதான்.

சிற்றறிவினன் உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஒரு பொருளைக் தருகிறான் என்றால் அது அதைப் பெறுகிறவனுடைய நற்பேற்றால்தானன்றி வேறொன்றுமில்லை.
அதிகாரம் நோக்கி அறிவிலான் என்பது புல்லறிவாளனைக் குறிப்பதாகக் கொள்வர். புல்லறிவாளன் ஈத்துவக்கும் இன்பம் அறியமாட்டான். அத்தகைய ஒருவன் மகிழ்வோடு ஒரு பொருளைக் கொடுப்பதைக் காண்பவர்கள் 'இவனா கொடுக்கிறான்' என்று வியக்கின்றனர். அப்பொழுது வள்ளுவர் சிரித்துக்கொண்டே 'அது வேறொன்றுமில்லை யப்பா! அப்பொருளைப் பெற்றானே அவனது முயற்சிப்பயன் இவன் முலம் கொடையாகப் பெறுவதாக அமைந்தது. அவ்வளவுதான்!' என எள்ளலுடன் கூறுகிறார்.

இங்கு சொல்லப்பட்ட அறிவிலான் என்பான் தனது அறிவை ஆளத்தெரியாதவன். அவனுக்கு இயல்பாகவே அறநெறிக் குணங்கள் இருப்பதில்லை. தனக்குத் தானே நல்லது செய்தல் அறியாதவன். அறிவின் ஆற்றல் இல்லாத நிலையில் அவனுக்குக் கொடுத்து மகிழும் இன்பம் தெரியாது. அவன் நெஞ்சம் மகிழ்ந்து கொடுக்கிறான் என்றால் அது அறநெறிச் சிந்தனையால் அன்று. அதற்கு வேறு பெரிய காரணமும் ஒன்றுமில்லை அது கொடையை ஏற்பவனுடைய நல்வினைப் பயன் என்றுதான் கூறுதல் வேண்டும். செல்வமிருந்தும் கொடாமை, புல்லிய அறிவின் இயல்பாகும்.

'பெறுவான் தவம்' குறிப்பது என்ன?

செல்வம் படைத்திருந்தும், ஈத்துவக்கக் கல்மனம் படைத்த புல்லறிவாளர்க்கு மனம் வராது. அபப்டியே அக்கல்லிலே ஈரம் உண்டாகி அவன் மகிழ்வுடன் கொடுத்தாலும் அது அப்பொருளைப் பெறுவானது தவத்தால் எய்தியதாகத் தான் இருக்கும் என்று பாடல் சொல்கிறது.

‘தவம்’ என்ற சொல் நோன்பு, முயற்சி, பொறுத்தல், பேறு என இடத்திற்குத் தக்கவாறு பல பொருள்களை வழங்கும் சொல் ஆகும். பெருமுயற்சி செய்து அரிதான பொருளைப் பெறுவதையும் தவம் என்பர். 'தவமாய்த் தவம் இருந்து கிடைத்த பிள்ளை'' என்னும் வழக்கை எண்ணலாம்.
புல்லறிவாளன் கொடுப்பது அரிது; அவன் மனமுவந்து கொடுப்பது என்பது இன்னும் அரிது. எனவே அத்தகையவனிடமிருந்து பொருள் பெறுவது மிகவும் அரிதானது என்பதை விளக்க அப்படிப் பெறுவன்தான் தவம் செய்திருக்க வேண்டும் என்று நகைச்சுவை கலந்த உணர்வோடு வள்ளுவர் கூறுகிறார்.
புல்லறிவு செல்வத்தின் பயனை அறியாது. 'கொடுத்தானாயினும் வரிசை அறியாது (தகுதி அறியாது) கொடுக்குமாதலின், அது புல்லறிவு என்றது' என்பார் மணக்குடவர். அவன் செய்வது கொடையல்ல. அதைப் பெறுவதும் பரிமேலழகர் கூறுவதுபோல 'விழுந்து கிடக்கின்ற பொருளை' அடைந்தது போல அதாவது கண்டெடுத்த பொருள் போலாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் அது பெறுவானது நல்லூழால் பெற்ற பொருள். இதையே பெறுவான் தவம் என்கிறார் வள்ளுவர்.

புல்லறிவாளன் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈவதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; பெறுவானது நற்பேறு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புல்லறிவாண்மையாளனிடம் ஈகைக்குணம் இராது.

பொழிப்பு

புல்லறிவுடையவன் மனம் மகிழ்ந்து கொடுத்தால் வேறொன்றும் இல்லை; பெறுவானது நற்பேறு.