அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
(அதிகாரம்:புல்லறிவாண்மை
குறள் எண்:843)
பொழிப்பு (மு வரதராசன்): அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.
|
மணக்குடவர் உரை:
அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகைவர்க்கும் செய்தல் அரிது.
இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.
பரிமேலழகர் உரை:
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது.
(பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்து செய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும் எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல் அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
புல்லறிவாளர் தமக்குத் தாமே செய்து கொள்ளுந் துன்பத்தை அவர்கள் பகைவரும் அவர்கட்குச் செய்யமுடியாது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
பதவுரை: அறிவிலார்-அறிவில்லாதவர், (இங்கு)புல்லறிவுடையார்; தாம்-தாங்கள்; தம்மை-தங்களை; பீழிக்கும்-வருத்தும், துன்புறுத்தும்; பீழை-வருத்தம், துன்பம்; செறுவார்க்கும்-பகைவர்க்கும்; செய்தல்-செய்தல்; அரிது-அருமை.
|
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு;
பரிப்பெருமாள்: அறிவிலாதார் தாமே தம்மை இடர்ப்படுத்துமது;
பரிதி: அறிவில்லார் தங்களைத் தாங்கள் கெடுத்துக் கொள்வது;
காலிங்கர்: புல்லறிவாளர் ஆகிய அறிவு கேடர் தாமே தம்மைத் துயருறுக்கும் துயரம் சொன்ன வறுமையேயன்றி;
பரிமேலழகர்: புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்;
'அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு/வருத்தும் வருத்தம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவிலி தானே தேடிக்கொள்ளும் துயரை', 'புல்லறிவாளர் தாமே தம்மை வருத்திக் கொள்ளும் வருத்தத்தை', 'அறிவில்லாதவர்கள் தாமே தமக்குச் செய்து கொள்ளுகிற துன்பத்தைப் போல்', 'அறிவில்லாதவர் தாமே தம்மை வருத்தும் வருத்தம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
புல்லறிவாளர் தாமே தம்மை வருத்திக் கொள்ளும் துயரை என்பது இப்பகுதியின் பொருள்.
செறுவார்க்கும் செய்தல் அரிது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர்க்கும் செய்தல் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.
பரிப்பெருமாள்: பகைவர்க்கும் செய்தல் அரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேலே கூறியதனை வலியுறுத்திற்று. இதனானே பிழை கூறுகின்ற துன்பத்தை உண்டாக்குமவற்றுக்குக் காரணம் ஆம் என்பதூஉம் கண்டுகொள்க.
பரிதி: தன்னிடம் மாற்றார்க்கும் முடியாது என்றவாறு. [மாற்றார்க்கும் - பகைவர்க்கும்]
காலிங்கர்: தம்மைப் பெரிதும் செறுக்கும் பகைவர்க்கும் செய்தலரிது என்றவாறு.
பரிமேலழகர்: அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல் அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.
'பகைவர்க்கும் செய்தல் அரிது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரும் அவனுக்குச் செய்ய இயலாது', 'கொடுமை செய்வதற்குரிய பகைவராலும் செய்ய முடியாது', 'தாம் தம்முடைய பகையாளிக்கும் கூடச் செய்ய முடியாது', 'பகைவராலும் செய்ய முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பகைவராலும் செய்ய இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
புல்லறிவாளர் தாமே தம்மை பீழிக்கும் பீழை பகைவராலும் செய்ய இயலாது என்பது பாடலின் பொருள்.
'பீழிக்கும் பீழை' என்பது என்ன?
|
வருத்தம் தரும் துன்பத்தைத் தாமே தேடிக்கொள்வர் சிற்றறிவினர்.
புல்லறிவாளர் தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்களை அவர் தம் பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாது.
அறிவிலார் என்ற சொல் அதிகாரம் கருதி புல்லறிவாளன் எனப் பொருள்படும். முந்தைய பாடலில் புல்லறிவாளன் பிறர்க்கு உதவியாக ஈய மாட்டான் எனச் சொல்லப்பட்டது. இங்கு, தனக்குமே நன்மையான வாழ்க்கையை அவன் நடத்துவது இல்லை; அவன் தனக்குத் தானே செய்துகொள்ளும் துன்பத்தை அவனுடைய பகைவராலும் செய்ய முடியாது எனக் கூறப்படுகிறது. புல்லறிவாளனைக் கெடுக்கப் பகைவர் யாரும் வரவேண்டியதில்லை. தனக்குத் தானே துன்பம் செய்து கொள்வான். அத்துன்பமும் பகைவராலும் செய்ய முடியாத அளவு மிகப் பெரிதாக இருக்கும்.
செறுவார் என்ற சொல் பகைவரைக் குறிக்கும். 'செறுவார்க்கும் செய்தலரிது' என்பதற்கு 'பகைவர்களிடத்தும் செய்யமுடியாது' என்றும் 'பகைவர்களாலும் செய்ய முடியாது' என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம் என்பர்.
பகைவர்கள் வறுமை, பழி, பாவங்களை புல்லறிவுடையானிடம் உண்டாக்கிவிட முடியாது. அவர்கள் தீங்கு செய்ய வேண்டும் என்றால் அதற்குக் காத்திருந்து உரிய காலம் வந்தபோதுதான் செய்வார்கள். ஆனால் புல்லறிவுடைய ஒருவன் தனக்கு எக்காலமும் எல்லாவிதமான துன்பங்களையும் வரவழைத்துக் கொள்வான். ஆகையால் பகைவர்களாலும் செய்யமுடியாத பீழையினைத் தானே வரவழைத்துக் கொள்கின்றான் என்று கூறப்பட்டது.
|
'பீழிக்கும் பீழை' என்பது என்ன?
'பீழிக்கும் பீழை' என்ற தொடர் வருத்திக் கொள்ளும் வருத்தம் என்ற பொருள் தரும். இதற்கு இடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, துயருறுக்கும் துயரம், துன்புறுத்திக் கொள்ளும் துன்பம், செய்து கொள்ளும் கேடுகள், செய்து கொள்ளுகிற துன்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
புல்லறிவாளன் துயருறுக்கும் துயரத்தை வரவழைத்துக் கொள்வான் என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாம்ல் அத்துன்பத்தின் அளவு குறித்தும் விளக்குகிறது பாடல்.
'எதிரிக்கும் கூட இத்தகைய துன்பம் நேரக்கூடாது' என்பது வழக்கில் சொல்லப்படுவது; இது துன்பம் தர நினைப்பர் பகைவர் என்றால் மிகமிக வருந்தத்தக்க துன்பம் எய்தவேண்டும் என்று மாந்தர் எண்ணுவர் என்பதாகவும் பொருள்படும். அத்துன்பத்தினும் கடுமையானதை புல்லறிவன் தனக்குத் தானே உண்டாக்கிக் கொள்வான் என்கிறார் வள்ளுவர்.
அறிவுக்குறைவான பேச்சாலும் செயல்களாலும் தனக்குத் தானே துன்பங்களை ஏற்படுத்திக் கொள்வான் புல்லறிவுடையான்.
அவை எவ்வகையான துன்பங்கள் என்பதற்கு வறுமை, பழி, பாவம் தருவன என்றிவற்றுடன் அவமான மடைதல், காவலில் இருத்தல், அடிபடல், தண்டம் தருதல், பிறர்க்கு அடிமையாதல் போன்றவை என உரைகாரர்கள் குறித்தனர்.
|
புல்லறிவாளர் தாமே தம்மை வருத்திக் கொள்ளும் துயரை பகைவராலும் செய்ய இயலாது என்பது இக்குறட்கருத்து.
புல்லறிவாண்மையாளன் தனக்குத் தானே பகைவன்.
புல்லறிவாளர் தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் வருத்தத்தைப் பகைவராலும் செய்ய இயலாது.
|