இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0847அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:847)

பொழிப்பு (மு வரதராசன்): அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.

மணக்குடவர் உரை: அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன்.
சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

பரிமேலழகர் உரை: அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும்.
('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.)

வ சுப மாணிக்கம் உரை: மறைவான செய்தியைச் சொல்லிவிடும் அறிவிலி தனக்குத் தானே கேடாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருமறை சோரும் அறிவிலான் தானே தனக்குப் பெருமிறை செய்யும்.

பதவுரை: அருமறை-அரிதான மறைப்பொருள், இரகசியம், பிறருக்குத் தெரியக்கூடாதவைகள், உபதேசப் பொருள்; சோரும்-கை நழுவவிடல், வெளியிடல், உட்கொள்ளாது போக்கும்; அறிவிலான்-புல்லறிவாளன், சிற்றறிவினன், அறிவு இல்லாதவன்; செய்யும்-செய்து கொள்ளும்; பெரும்-மிக்க; மிறை-துன்பம், வருத்தம்; தானே-தானே; தனக்கு-தனக்கு, தன் பொருட்டு.


அருமறை சோரும் அறிவிலான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்;
மணக்குடவர் குறிப்புரை: சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல்.
பரிப்பெருமாள்: அறிவில்லாதான் தான் அரிதாக எண்ணின மறைப் பொருள் சோரவிடும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல்.
பரிதி: இரகசியத்தை அடக்க மாட்டாமல் பரரகசியமாக்குவான்; [பரரகசியமாக்குவான் - பிறருக்கு அறிந்த ரகசியம் ஆக்குவான்]
காலிங்கர்: 'இவர் எமக்கு இனியர்' என்று கருதிப் பிறர்க்கு உரைத்தற்கு அரியதோர் மறையினை ஒருவர் சொன்னால், அதனை அடக்குவதோர் அமைவு இன்றிப் பின்பு அவ்விடத்திலே சோரவிடும் புல்லறிவாளன்; [மறையினை - இரகசியத்தை]
பரிமேலழகர்: பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்;
பரிமேலழகர் குறிப்புரை: 'சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது.

'அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் மாறுபாடாகப் 'பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்' என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரிதாக எண்ணின மறைப்பொருளைப் புலப்படுத்தும் புல்லறிவாளன்', 'புல்லறிவாளன் நூல்களில் சொல்லப்படும் அருமையான மெய்யறிவு போதனைகளை விட்டுவிடுவான்', 'அருமையாகிய அறிவுரைப் பொருளைக் கடைப்பிடியாது, (அல்லது அருமையான மறையைப் போற்றாது) கைவிடும் புல்லறிவாளன்', 'சொல்லுதற்குக் கூடாத இரகசியத்தைச் சொல்லும் அறிவில்லாதான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருமையான மறைச் செய்திகளை வெளிப்படுத்தும் புல்லறிவாளன் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யும் பெருமிறை தானே தனக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.
பரிப்பெருமாள்: அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.
பரிதி: தனக்குத் தானே மிடி தேடிக்கொள்ளுவானாம் என்றவாறு. [மிடி- வறுமை]
காலிங்கர்: மற்று அவன் தானே தனக்குப் பிறிதென்றாலும் தீராத பெரிய துக்கத்தைச் செய்து அனுபவிக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும்.
பரிமேலழகர் குறிப்புரை: மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.

'தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தானே தனக்குப் பெருந்துன்பத்தைச் செய்து கொள்வான்', '(தன்னறிவே சிறந்ததாகத்) தானே தனக்குப் பெருமை செய்து கொள்வான்', 'தனக்குத்தானே மிக்க வருத்தத்தை வருவித்துக் கொள்ளுவான்', 'தானே தனக்கு மிகுந்த துன்பத்தைச் செய்து கொள்வான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனக்குத்தானே பெருந்துன்பத்தைச் செய்து கொள்வான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருமையான மறைச் செய்திகளை வெளிப்படுத்தும் புல்லறிவாளன் தனக்குத்தானே பெருந்துன்பத்தைச் செய்து கொள்வான் என்பது பாடலின் பொருள்.
'அருமறை சோரும்' என்ற தொடரின் பொருள் என்ன?

மறைத்துப் பேசவேண்டிய செய்தியையும் அனைவர் முன்னிலையில் போட்டுடைத்துவிடுவான் சிற்றறிவினன்.

பிறருக்குத் தெரிவிக்கக்கூடாத அரிய மறைப்பொருளையும் வெளிப்படுத்திவிடும் புல்லறிவாளன் தனக்குத் தானே பெரிய துன்பத்தினைத் தேடிக் கொள்வான்.
இப்பாடலிலுள்ள அறிவிலான் என்ற சொல் அதிகாரம் நோக்கிப் புல்லறிவாளனைக் குறிப்பதாகக் கொள்வர். மிறை என்ற சொல் துன்பம் எனப் பொருள்படும். புல்லறிவு உடையவனிடம் மறைப்பொருளைச் சொன்னால் அதனுடைய முக்கியத்துவத்தை அறியமாட்டான். அது யாருக்குத் தெரிவிக்கப்படாதோ அவனிடம், எல்லார் முன்னிலையிலும் சொல்லிவிடுவான். அது அவனது அறியாமையாலோ அல்லது தனக்கு அம்மறை தெரியும் எனப் பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது செருக்கால் வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம். எத்தகைய பின்விளைவுகளை யார் யாருக்கு எப்பொழுது உண்டாக்குமோ என்று எண்ணிப்பார்க்காமல் அவன் இவ்வாறு செய்வான். அது அவனுக்கே கேடு விளைப்பதாக வந்து முடியும் என்கிறார் வள்ளுவர். அது தனக்குத் தானே பெருமிறை செய்யும் அதாவது பெருந்தீங்கு விழைத்து துன்பப்பட வைக்கும் எனச் சொல்கிறார். புல்லறிவாண்மையை இன்மையுள் இன்மை (841) என்று முன்பு கூறப்பட்டது.
இக்குறட்கருத்தை அரசு சார்ந்த மறைச் செய்திகளிலோ, வணிகத் தொடர்பான நடவடிக்கைகளிலோ, சுற்றம் நிறைந்த குடும்பச் சூழலிலோ, பணிபுரியும் இடங்களிலான செயற்பாடுகளிலோ எங்கும் பொருத்திப்பார்க்கலாம்.

'அருமறை சோரும்' என்ற தொடரின் பொருள் என்ன?

'அருமறை சோரும்' என்றதற்கு அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன், அரிதாக எண்ணின மறைப் பொருள் சோரவிடும், இரகசியத்தை அடக்க மாட்டாமல் பரரகசியமாக்குவான், பிறர்க்கு உரைத்தற்கு அரியதோர் மறையினை ஒருவர் சொன்னால் அதனை அடக்குவதோர் அமைவு இன்றிப் பின்பு அவ்விடத்திலே சோரவிடும், பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும், பெறுதற்கரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் அதனை மனத்திலே வையாமல் மறந்து போகும், அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும், மறைக்க வேண்டிய அரிய இரகசியங்களைத் தன்னையறியாமல் வெளிப்படுத்திவிடும், பெறுதற்கரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் சோர்வின் காரணமாக இழக்கும், மறைவான செய்தியைச் சொல்லிவிடும், அரிதாக எண்ணின மறைப்பொருளைப் புலப்படுத்தும், நூல்களில் சொல்லப்படும் அருமையான மெய்யறிவு போதனைகளை விட்டுவிடும், கமுக்கமாக வைக்கத் தக்க அரிய செய்திகளையும் எளிதாகச் சொல்லி விடும், அருமையாகிய அறிவுரைப் பொருளைக் கடைப்பிடியாது, (அல்லது அருமையான மறையைப் போற்றாது) கைவிடும், சொல்லுதற்குக் கூடாத இரகசியத்தைச் சொல்லும், மறைவாக வைக்கவேண்டிய உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கும், பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான மருமச் செய்திகளைத் தன் வாய்காவாது வெளிவிட்டுவிடும், அருமையான இரகசியப் பொருள்களை இகழ்ந்து வெளியிடும், அவனுக்குச் சொன்ன வேத உபதேசங்களைச் சோர விடுவான் என்றவாறு பொருள் கூறினர்.

(புல்லறிவாண்மை) மறைவுச் செய்திகளை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்திவிடும் என்று ஒரு திறத்தாரும் பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் என்று இன்னொரு திறத்தாரும் இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.
'அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக' என்று மணக்குடவர் போன்றோர் உரைகளைப் பரிமேலழகர் மறுத்தார்.
பரிமேலழகரது மறுப்புரையை 'அருமறையை உபதேசப் பொருள் எனின் அது அறத்துப்பாலுக்கன்றி ஆட்சி முறை கூறும் அங்க இயலுக்குப் பொருந்தாது; உபதேசப் பொருளை ‘யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்’ என இராமாநுசர் போலப் பரப்புதல் சிறந்த செயலே; அன்றியும் பேதைமை, அறியாமையை யடிப்படையாகக் கொண்டு மயக்க அறிவால் விளைவது. ஆதலால் மன்னிக்கத்தக்கது. புல்லறிவாண்மை செருக்கால் வேண்டுமென்றே செய்யும் மன்னிக்கமுடியாத குற்றம். இவற்றாலும் மறைவெளிப்படுத்தலே புல்லறிவாண்மையாமாறு துணியலாம்' என்று தேவநேயப்பாவாணர், தண்டபாணி தேசிகர், இரா சாரங்கபாணி ஆகியோர் இக்குறளில் அருமறை எனச் சொல்லப்பட்டது மறைவுச் செய்திகளையே என்று விளக்கினர்.

‘அருமறை சோரும்' என்பதற்கு அரியதோர் மறைப்பொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் என்பது பொருள்.

அருமையான மறைச் செய்திகளை வெளிப்படுத்தும் புல்லறிவாளன் தனக்குத்தானே பெருந்துன்பத்தைச் செய்து கொள்வான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தனக்குத் தெரிந்த மறைப்பொருளைத் தவறவிடுதல் புல்லறிவாண்மை.

பொழிப்பு

அரிதான மறைச்செய்திகளை வெளிப்படுத்திவிடும் புல்லறிவாளன் தானே தனக்குப் பெருந்துன்பத்தைச் செய்து கொள்வான்