இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0841அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:841)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

மணக்குடவர் உரை: நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்.
அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.

பரிமேலழகர் உரை: இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார்.
(அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை. வேறு இல்லாமைகளை இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்மையுள் இன்மை அறிவின்மை; பிறிதின்மை இன்மையா வையாது உலகு.

பதவுரை: அறிவின்மை-அறிவு குறைவு, அறிவு இல்லாதிருத்தல்; இன்மையுள்-இல்லாமைகளுள்; இன்மை-இல்லாதிருத்தல்; பிறிது இன்மை-வேறு குறைவு; இன்மையா-இன்மையாக, இல்லாததாக; வையாது-கொள்ளாது; உலகு-உலகத்தார்.


அறிவின்மை இன்மையுள் இன்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை:
பரிப்பெருமாள்: நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை:
பரிதி: மிடிக்குள் மிடியாவது அறிவின்மை;
காலிங்கர்: கற்கப்படு நூல்கள் பலவற்றையும் கசடறக் கற்று மனத்திருள் நீங்கி நுணுகிப் பரந்த அறிவு ஒருவர்க்கு இல்லாமையே இல்லாமையாவது;
பரிமேலழகர்: ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை;
பரிமேலழகர் குறிப்புரை: அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது.

'இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவு வறுமையே வறுமை', 'வறுமைகள் பலவற்றுள்ளும் மிக்க வறுமையாவது அறிவில்லாமையே', 'தரித்திரத்திலும் தரித்திரம் அறிவில்லாத தரித்திரம்', 'வறுமையுள் வறுமை அறிவில்லாமை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்மைகள் பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமையே என்பது இப்பகுதியின் பொருள்.

பிறிதின்மை இன்மையா வையாது உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார். அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.
பரிப்பெருமாள்: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார். அது புண்ணியம் செய்தார்மாட்டே சேருமாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவு புண்ணியம் செய்தாற்கு உளதாமோ எனின், அது முயற்சியானும் வரும் ஆதலின் வேறு பகுத்துக் கூறினார். இனி அறிவின்மையான் வரும் குற்றமும் கூறுவர் முற்பட இதனின் மிக்க நல்குரவு இல்லை என்றார்.
பரிதி: பொருள் மிடி ஒரு தறுவாயில் வரும்; ஒரு தறுவாயில் போம் என்றவாறு. [ஒரு தறுவாயில்-ஒரு காலத்து]
காலிங்கர்: அதனால் அவ்வறிவின் வேறுபட்டுள்ள இல்லாமை ஒன்றையும் இல்லாமையாக வைத்து எண்ணார் உயர்ந்தோர் என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார்.
பரிமேலழகர் குறிப்புரை: புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.

'பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறவற்றை வறுமையாக உலகம் கருதாது', 'மற்றைப் பொருளில்லாமையை அத்தகைய வறுமையாக உலகம் கொள்ளாது', 'மற்றவை இல்லாத தரித்திரத்தை உலகம் குற்றமாக இகழ்வதில்லை', 'பிற வறுமைகளை உயர்ந்தோர் எளிமையாகக் கருதமாட்டார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறஇன்மையை இல்லாமையாக உலகம் எண்ணாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்மைகள் பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமையே; பிறிதின்மை இல்லாமையாக உலகம் எண்ணாது என்பது பாடலின் பொருள்.
'பிறிதின்மை' குறிப்பதென்ன?

கொடிய அறிவு-வறுமையாளன் சிற்றறிவினன்.

ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாத தன்மையே. மற்ற இல்லாமைகளை உலகம் இல்லாமையாகக் கொள்ளாது.
அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (அறிவுடைமை 430 பொருள்: அறிவுடையார் எல்லாம் உடையராவர்; அறிவில்லாதவர் எல்லாம் உடையவராயினும் ஒன்றும் இலர்) என்று முன்பு குறள் சொன்னது.
ஒரு பொருளை ஆளுபவன் அதனை உடையான் ஆகிறான்; அவ்விதம் ஆளமாட்டாதவன் அப்பொருள் இல்லாதவன் ஆகிறான். தம் அறிவை ஆட்சிப்படுத்தினார் அறிவுடையார்;, அதனை ஆளாதார் அறிவிலார். அறிவின்மை என்பது தம் அறிவை ஆள அறியாமை என்பதாகிறது. அதிகாரம் நோக்கி இங்கு அறிவின்மை என்பது புல்லறிவாண்மை எனப் பொருள்படும். புல்லறிவாளனுக்கு தன் அறிவை ஆளத் தெரியாது. தன் அறிவை ஆளத் தெரியாமையே இல்லாதவற்றுள் எல்லாம் இல்லாதது ஆகும் என்கிறது பாடல்.
தனக்கு எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மை கொண்டவனாய் இருக்கும் சிற்றறிவினன் கல்வி, கேள்வி மூலமோ பெரியோர் அறிவுரை கேட்டோ அதை மேலும் பெருக்கிக் கொள்ள என்று எண்ணமாட்டான். எனவே அறிவுவறுமை நிலையிலே எப்பொழுதும் இருக்கிறான். முற்ற அறியாமையை விட புல்லறிவு பெருந்தீங்கு செய்யக்கூடியது. எனவே அது இன்மையுள் இன்மை ஆயிற்று அதாவது ஒருவனுக்கு அறிவை ஆளத் தெரியாத குறையே வறுமையிலும் பெரிய வறுமையாகும். செல்வம் போன்றன இல்லாததைப் பெரிய குறையாக உலகத்தார் கருத மாட்டார்கள்.
வையாது என்பது வைக்காது என்று பொருள்படும். வைக்கப்படும் என்றதற்கு எதிர்ச் சொல்லாக வையாது என்றது ஆளப்பட்டது. கெடுவாக வையாது... (117) எனப் பிறிதோர் இடத்திலும் இச்சொல் குறளகத்தே காணப்படுகிறது.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (பொறையுடைமை 153 பொருள்: இல்லாமையிலும் இல்லாமை வந்த விருந்தினை ஓம்பாது கைவிடுதல்; வலிமையுள் வலிமையாவது அறிவிலிகள் செய்யும் மிகையைப் பொறுத்தல்) என்று விருந்தினரைப் பேணாது இருப்பதை 'இன்மையுள் இன்மை' என்று முன்பும் கூறப்பட்டது. இங்கும் அதே தொடர் வந்துள்ளதே. பாடலின் அடுத்த பகுதி 'உலகோர், மற்ற இன்மைகளையெல்லாம் இல்லாமைகளாக ஏற்றுக் கொள்வதில்லை' என்று சொல்வதாலும் விருந்தொரால் என்ற இன்மை அதனுள் அடக்கப்படுமாதலாலும் அது முரணாகாது.

'பிறிதின்மை' குறிப்பதென்ன?

பிறிதின்மையை ஏன் இன்மையாக வையாது என்பதற்கு உரையாளர்கள் புண்ணியஞ் செய்தார் மாட்டே சேருமாதலான், ஒரு தறுவாயில் வரும் ஒரு தறுவாயில் போம் ஆதலான், வறுமையெய்திய வழியும் இம்மைமறுமைப்பயன் இழவாமையின், புண்ணியஞ் செய்தாற்கு உளதாமோ எனின் அது முயற்சியாலும் வருமாதலின், பொருளில்லையானாலும் அதனால் பயனை எய்தல் உறுதியாதலின், வறுமையுறினும் பிறர்க்குப் பயன்பட வாழ்வாராகையால், வறியவராயிருந்த விடத்தும் இருமைப் பேறுகளையும் பெறுதலால் என விளக்கம் கூறினர்.

உலகில் பல இன்மைகள் உள. காட்டாகச் செல்வம் இல்லாமை, நட்பு இல்லாமை, புகழ் இல்லாமை, செல்வாக்கு இல்லாமை, மதிப்பு இல்லாமை, ஆற்றல் இல்லாமை, இன்பம் இல்லாமை, உடல் நலமில்லாமை, உரிமையில்லாமை முதலியன. இன்மை என்பது மரபாக வறுமையைக் குறிக்கும். ஒருவனிடம் பொருள் இல்லாவிட்டாலும் அதை அறிவு கொண்டு தேடிக்கொள்ளலாம். அதுபோல மற்ற இல்லாமைகளையும் அறிவின் துணை கொண்டு இருப்பவைகளாக ஆக்கிக் கொள்ளலாம். எனவே அவற்றை உலகம் இல்லாமைகளாகக் கருதாது. அறிவின்மை தவிர்த்த மற்ற இல்லாமைகளைப் பிறிதின்மை என்ற சொல் குறித்தது.

இன்மைகள் பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமையே; பிறிதின்மை இல்லாமையாக உலகம் எண்ணாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புல்லறிவாண்மை பெரிதான நல்குரவாம்.

பொழிப்பு

இல்லாமைகள் பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமையே; பிறஇன்மையை வறுமையாக உலகம் கருதாது.