இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0850உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.மணக்குடவர் உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.

பரிமேலழகர் உரை: உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
(கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் காணும் பேயாகக் கருதப் படுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும்.

பதவுரை: உலகத்தார்-உலகோர்; உண்டு-உளது; என்பது-என்று சொல்லப்படுவது; இல்-இல்லை; என்பான்-என்று சொல்லுபவன்; வையத்து -உலகத்தில்; அலகையா-பேயாய்; வைக்கப்படும்-கருதப்படுவான்.


உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்;
பரிப்பெருமாள்: உலகத்து அறிவுடையார் பலரும் உண்டு என்பதொரு பொருளை இல்லை என்று சொல்லுமவன்;
பரிதி: பெரியோர் உள்ளதென்று சொல்லுமதை இல்லை என்று சொல்பவன்;
காலிங்கர்: திருந்திய கேள்வியின் உயர்ந்தோர் தெரிந்து உண்டு என்னும் மெய்ப்பொருளை அஃது இல்லை என்று கழறுவான் யாவன் ஒரு புல்லறிவாளன்; [திருந்திய கேள்வி-நன்றாகத் தெரிந்து அறிந்த நூலறிவினை யுடையார்; கழறுவான் - இடித்துரைப்பான்]
பரிமேலழகர்: உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்;

'உலகத்தார்/பெரியோர்/உயர்ந்தோர் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுபவன்', '(புல்லறிவாளன்) உலகத்தார் உண்டு என்று சொல்லுவதை இல்லையென்று மறுப்பான்', 'உயர்ந்தோர் உண்டென்று அறிந்து கூறுவதை இல்லை என்று கூறுகின்றவன்', 'உலகத்தார் உண்டு என்று கூறும் உண்மைகளை அறியாமையால் இல்லையென்பான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

வையத்து அலகையா வைக்கப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.
பரிப்பெருமாள்: இவ்வுலகின் கண்னே ஒரு பேய் என்று எண்ணப்படும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.
பரிதி: பூமியில் பிசாசாய்த் திரிவன் என்றவாறு.
காலிங்கர்: அவனை ஈண்டு ஒரு மகன் என்று கருத அடாது; பின்னை என் எனின் பேய்களுடன் இவனும் ஒரு பேயாக வைத்து எண்ண அடுக்கும் என்றவாறு. [அடாது - பொருந்தாது; அடுக்கும்-பொருந்தும்]
பரிமேலழகர்: மகன் என்று கருதப்படான், வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது. [உறுதிச்சொல் - நன்மை பயக்கும் சொல்]

'உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பிசாசாகவே திரிவான்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் அஞ்சத்தக்க பேயாகக் கருதப்படுவான்', 'அவன் உலகத்தை மருட்டும் ஒரு பேயாகக் கருதப்படத்தக்கவன்', 'உலகத்தாரால் பேயனாகக் கருதப்படுவான்', 'உலகத்தில் பேயாக (அஞ்சத் தக்கதாக)க் கருதப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலகத்துக் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் உலகத்துக் காணப்படும் ஒரு அலகையா கருதப்படும் என்பது பாடலின் பொருள்.
'அலகை' என்பது என்ன?

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பான் புல்லறிவாளன்.

உலகோர் 'உண்டு' என்று கூறும் ஒன்றை 'இல்லை' என்று சொல்லும் ஒருவன் வையத்துக் காணப்படுவதோர் பேயாகக் கருதப்படுவான்.
'நமக்குச் சிறந்த அறிவு உள்ளது' என்று தன்னைத் தானே பெரிதாக மதிக்கும் செருக்கு உள்ளது புல்லறிவாகும். அதனால் புல்லறிவாளன் யார் எத்துணை எடுத்துரைத்தாலும் சரியானதை ஏற்கமாட்டான், அவன் தானாகவும் அறியமாட்டான்; பிறர் சொன்னாலும் கேட்கமாட்டான்; ஆயினும் எல்லாம் அறிந்தான் போலக் காட்டிக் கொள்வான்; உலகியல் எண்ணான்; மற்றவர்களிடம் பழகிடும் முறை பற்றி அறியான். இத்தகைய சிற்றறிவுடைய ஒருவன் உலகத்தில் ஒரு பேயாகக் கருதப்படுவான்.

செருக்குடன் திரியும் புல்லறிவாளன் கடுமையான மொழியில் இங்கு இகழ்ந்துரைக்கப்படுகின்றான். உலகத்து மக்கள் சொல்கின்ற உண்மையை அவன் இல்லை என்று திரும்பத் திரும்ப மறுத்துச் சொல்வான். பால் வெண்மை நிறம் என்றால் புல்லறிவாளன் இல்லை என்று மறுத்துக்கொண்டே இருப்பான். அவனை அலகையாக வை என்று மிக வெறுப்புடன் வள்ளுவர் கூறுகிறார். உலகம் கூறும் உண்மையை மறுக்கும் புல்லறிவாளனின் சிறுமையை உணர்த்தும் நோக்கில் அவன் காட்சிதரும் பேயாகக் கருதப்படுவான் என்று சொல்வது இக்குறள்.
உலகத்தார் உண்டென்று கூறும் பொருள்கள் கடவுள் அல்லது சமயம் சார்ந்த நம்பிக்கைகளான மறுபிறப்பு, பிறவிச்சுழற்சி, வினைப்பயன்கள், வீடு, தீயுழி (நரகம்) போன்றன எனச் சிலர் கூறினர். ஆனால் இவை புல்லறிவாண்மையில் சொல்லப்படவேண்டிய பொருள்கள் அல்ல. உலகப் பொருள்களைப் பொதுவகையால் கூறுவதே பொருத்தம்.
புல்லறிவாளவனைக் கண்டால் பேயைப் பார்த்ததுபோல் அஞ்சி விலகிச்செல்வர் என்று பலர் உரை செய்தனர். பேய் பற்றிய பயம் மாந்தர்க்கு உண்டு; ஆனால் சிற்றறிவு உடையவனைப் பார்த்து யாரும் அஞ்சுவதில்லை. எனவே அஞ்சுவர் என்று கூறுவதினும் 'பேய்பிடித்தவன்போல பிதற்றுகிறான் பார்' என்று இழிவாகக் கூறப்படுவதாகக் கொள்வது பொருத்தமாகும்.
'அலகை உலகத்தோடு ஒத்துப் பேசாமையேயன்றித் தன்வாழ்விற்காகப் பிறரைப் பிடித்து நலிவிக்கும் பிடிவாதம் உடையது. அதுபோல இவனும் பிறரை நலிவிக்கும் பிடிவாதகுணம் உடையவனாவன் என்பதாம்' என்பார் ச தண்டபாணி தேசிகர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (இல்வாழ்க்கை 50 பொருள்: உலகத்தில் வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வநிலையில் வைத்து மதிக்கப்படுவான்.) என்ற பாடல் எப்படி நெறிப்பட வாழ்பவனைப் புகழ்கிறதோ அதுபோல, இக்குறள் உலகம் உண்டு என்பதனை இல்லை என்று சொல்லும் செருக்குள்ள அறிவுக்குறையுடையவனை இகழ்வதாகக் கொள்வர்.

'அலகை' என்பது என்ன?

பேய், பிசாசு என நாம் அறிந்து கொண்டுள்ளது அலகையாகும். பேய் என்பது அச்ச உருவெளித் தோற்றத்தின் உருவகம் அதாவது அச்சமூட்டும் உருவமில்லாத பொருளைக் குறிக்கும். பேயாவது தனக்கு விதித்த வாழ்நாள் முடியும் முன்னர் துயரச் சாவு எய்தியவர்கள் வாழாத மிச்ச நாட்களை உருவமின்றி, அலமந்து, பயனின்றித் திரிந்து கழிக்கும் என்பது மக்களின் பொதுவான நம்பிக்கை. பேய் என்ற சொல்லைக் கேட்டதுமே அச்சமும் அருவருப்பும் உண்டாகும். அது உலகத்தை மருட்டும் தன்மை கொண்டது. பேய்களை யாரும் பார்த்ததில்லை. ஆனால் மக்கள் பேய்களை வெறுக்கின்றனர்.
உலகமுழுதும் ஒருமுகமாக உண்டு என்று சாதிப்பின், அதனை இல்லை என்று பேசுபவன் உலகத்தில் ஒரு மனிதன் அல்லன்; அவன் அலகையாக வைக்கப்படும் என்கிறது பாடல். அலகையா வைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதால் அலகை போன்றது என்பது பொருளாகிறது. பேய் போல்வான் என்பது இகழ்ச்சிக் குறிப்பாகும்; உலக வழக்கில் வசைமொழியாகவும் பழித்துரைப்பதற்கும் (சாபம் கொடுப்பதற்கும்) பயன்படுத்தப்படும் இழி சொல்லாக 'அலகை' உள்ளது.

உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் உலகத்துக் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புல்லறிவாண்மை இகழப்பட வேண்டியது.

பொழிப்பு

உலகத்தார் கண்ட உண்மைகளை இல்லை என்பவன் பேயாகக் கருதப்படுவான்.