இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0846அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:846)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

மணக்குடவர் உரை: தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று.
இது குற்றமறையாமை புல்லறிவென்றது.

பரிமேலழகர் உரை: தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம்.
(குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: தம்மிடத்து உண்டாகிய குற்றத்தை உணர்ந்து அதனை நீக்காத (மறையாத) விடத்துத் தம் மறைவு உறுப்புகளை உடையால் மறைத்தல் மட்டும் நல்லறிவாகி விடுமோ? அது புல்லறிவேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்வயின் குற்றம் மறையா வழி அற்றம் மறைத்தலோ புல்லறிவு.

பதவுரை: அற்றம்-மறைக்கத்தக்கது, மானம்; மறைத்தலோ-மூடுதல்மட்டும்; புல்லறிவு-கீழ்மையாகிய அறிவு, சிற்றறிவு; தம் வயின் - தம்மிடம்; குற்றம்-குற்றம்; மறையா-கடியா, இலவாக்குதல், இல்லாமல் செய்தல்; வழி-பொழுது; வேளையில்.


அற்றம் மறைத்தலோ புல்லறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு;
பரிப்பெருமாள்: பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை உடையான் மறைத்தல் புல்லறிவு;
பரிதி: அற்றம் மறைத்தல் அறிவில்லாத தன்னிடத்தில்;
காலிங்கர்: தமக்குப் பொருள் அற்றம் தீர்த்தல் சாலப் புல்லறிவு என்றது, தமக்கு வறுமையை நீக்குவதாகக் குற்றம் செய்தலே புல்லறிவு என்று ஆயிற்று; [தீர்த்தல் - நீக்கல். சாலப் புல்லறிவு - மிகமிக இழிந்தறிவு]
பரிமேலழகர்: ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம்.

'மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு'. 'அற்றம் மறைத்தல் அறிவில்லாத தன்னிடத்தில்', 'தமக்கு வறுமையை நீக்குவதாகக் குற்றம் செய்தலே புல்லறிவு', 'ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம்' என்றவாறு பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆடைகட்டுதல் அறிவாமோ?', 'ஆடையால் மறைக்கும் உறுப்புக்களை மட்டும் மறைத்தல் புல்லறிவேயாம். (ஆடை அணிபவன் தன் குற்றம் நீக்கி வாழ வேண்டும் என்பது கருத்து)', 'புல்லறிவாளர்கள் (தமக்குத் தெரியாத வேலையைத் தெரிந்ததாக மேற்கொண்டு விட்டுப்பின் அந்தப்) பொய்யை மறைக்க முயலும் விதமோ', 'ஆடையால் தமது உறுப்பைமாத்திரம் மறைத்துக் கொள்ளுதல், இழிந்த அறிவுடைமைக்கு அடையாளம் ஆகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆடையால் தமது உறுப்பை மறைத்துக் கொள்ளுதலோ புல்லறிவாகத்தானே இருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

தம்வயின் குற்றம் மறையா வழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்து.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.
பரிப்பெருமாள்: தம்மாட்டுள்ள குற்றத்தைப் பிறர் அறியாமை தாம் மறைத்த காலத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை உடையான் மறைத்தல் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.
பரிதி: குற்றம் மறைத்தற்கு அரிது என்றவாறு.
காலிங்கர்: எனவே ஒருவர் விரைந்து மறைத்தற்கு முயல்வது இவ்வற்றம் அல்லது, பொருள் அற்றம் மறைத்தலன்று என்பது பொருள் ஆயிற்று.
பரிமேலழகர்: புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின். [கடியாராயின் -விலக்காராயின்]
பரிமேலழகர் குறிப்புரை: குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது. [தம்மை வியத்தல் -தற்புகழ்ச்சி]

'தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத/கடியாத காலத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'இவ்வற்றம் அல்லது, பொருள் அற்றம் மறைத்தலன்று' என்றார் காலிங்கர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உன்பால் குற்றத்தை ஒழிக்காத போது', 'தம்மிடம் வரும் குற்றங்களை அறிந்து விலக்காதபோது', 'அவர்களிடத்திலுள்ள மற்ற எல்லாக் குற்றங்களும் வெளிப்பட்டு விடுவதற்கே மார்க்கமாகும்', 'தம்மிடத்துள்ள குற்றத்தைக் கடிந்து ஒதுக்காது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மிடத்துள்ள குற்றத்தை ஒழிக்காத போது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மிடத்துள்ள குற்றத்தை ஒழிக்காத போது ஆடையால் தமது உறுப்பை மறைத்துக் கொள்ளுதலோ புல்லறிவாகத்தானே இருக்கும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது புல்லறிவு.

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை உணர்ந்து நீக்காமல் தமது உறுப்பு மறைத்து வைக்கப்பட்டுதானே இருக்கிறது என்று எண்ணுவது புல்லறிவு ஆகும்.
கடும் குற்றங்கள் செய்யும் ஒருவன் அவற்றை அறிந்து களைய முயலவில்லை. மாறாக 'ஏன் இவ்விதம் தவறுகள் செய்கிறாய்?' என்று கேட்டால் 'நான் என்ன வெற்றுடம்புடனா நிற்கிறேன்? என் உறுப்பை மறைத்துத்தானே வைத்திருக்கிறேன்?' என்று பதிலிறுக்கிறான். இங்ஙனம் இடக்குமடக்காகப் பேசுபவன் அறிவுக்குறையுடையவன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சிறியன சிந்திக்கிறவன் புல்லறிவாளன். அவனைப் பொறுத்தவரை வெற்றரையுடன் அதாவது உடை அணியாத (மூடப்படாத) இடுப்புடன் அலைவது மற்றுமே குற்றம். அவன் ஆடை அணிந்து இருக்கிறான் எனவே அவனிடம் குற்றம் ஒன்றும் இல்லை எனச் சாதிக்கிறான். ஆடையால் மான உறுப்பை அவன் மறைத்து வாழ்வதால் அவன் குற்றம் செய்யாதவன் ஆகிவிடமாட்டான் என்பதை அறியாதிருக்கிறான்.

அற்றம் என்ற சொல் குற்றம், கேடு, முடிவு நேரம் என்ற பொருளில் குறளிலேயே மற்ற இடங்களில் வந்துள்ளது. இங்கு மறைத்தற்கு உரிய அல்லது மறைக்க வேண்டிய பகுதி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. அற்றம் மறைத்தல் என்பது தன் உறுப்பைப் பிறர் பார்வையிலிருந்து காத்தல் எனப் பொருள்படும்.
குற்றம் மறைத்தலாவது தாம்செய்த குற்றத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்தல் அல்ல; குற்றம் தன்கண் நிகழவொட்டாது தடுத்தலைக் குறிப்பது அது. குற்றங்களைச் செய்துவிட்டு அவை தவறானதென்று அறியாததால் அவற்றிற்குத் தாங்கள் பொறுப்புள்ளவர்கள் என்று உணரமாட்டார்கள் புல்லறிவாளர். குற்றங்களால் உண்டாகும் ஏற்படும் இழிவுகளையும், பழி பாவங்களையும் எண்ணிப் பார்க்கும் திறனுமற்றவர்களாவர்; தம் குற்றங்களை அறிந்து, திருத்தி, மேலும் நிகழாதவாறு செய்ய இயலாதவர்கள்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறளுக்கு உரையாளர்கள் பலவேறு வகையில் பொருள் கூறினர் அவற்றிலிருந்து சில:

 • தம் குற்றத்தை மறையாதபோது, அற்றத்தை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு அதாவது பிறர் வெறுக்கத்தக்க குற்றங்களை மறைக்கமுடியாதவன் ஆடைகட்டிக்கொள்ளுதல் அறிவுக்குறை.
 • புல்லறிவாளன் ஆடை முதலிய அணிந்து அற்றத்தை மறைப்பதால் குற்றத்தை மறைக்க முடியாது.
 • மறைக்க வேண்டிய உறுப்பையும் மறையாமையின் (புல்லறிவாளரிடம்) குற்றம் நாடுவார் யாரும் இலர்.
 • வறுமையை நீக்கக் குற்றஞ்செய்தலும் அதனை மறைக்க அக்குற்றத்தை மறைத்தலும் புல்லறிவு.
 • மறைக்க வேண்டியவற்றுள் மிக உயர்ந்தது குற்றம்; அதனை மறையாது, ஆடைகட்டி அற்றத்தை மறைப்பது புல்லறிவு.
 • வெட்கத்திற்காக ஆடையுடுத்துவதும் குற்றம் செய்யா வழியே சிறக்கும்.
 • புல்லறிவாளர் தம்மிடத்தில் இல்லாமையை மறைத்தலோ மறைப்பாகாது தன்னிடத்தில் அறிவில்லை என்னுங் குற்றத்தை மறையாவிடத்து.
 • மறைத்தற்குரிய உறுப்பை மறைப்பதுபோலக் குற்றங்களையும் நாணி மறைத்து நீக்குதல் வேண்டும். இன்றேல், தன் மானத்தைக் காத்ததாக ஆகாது.
 • வெட்கப்படத்தக்க தன் குற்றங்களைத் திருத்திக் கொள்ளமுடியாதவன் மானத்தை மறைக்க ஆடை அணிவது வீணே.
 • புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம்.
 • நம் குற்றங்களை உணர்ந்து திருந்துவதே, சிறந்தது; நம் குற்றங்களை, அப்படியே தக்க வைத்துக்கொண்டு, உடலை மட்டும் மறைக்க, ஆடை அணிந்து கொள்வது மடமை.
 • குற்றத்தை நீக்காமல், மானத்தை மறைக்க உடுத்தல், இழிஅறிவு.
 • புல்லறிவாளன் வெகு தடபுடலாக உடலை அலங்காரஞ் செய்து கொள்வான்; தனது குற்றத்தை அறிந்து, திருத்தி, மறையச் செய்ய மாட்டான்.

இவற்றுள் சிலர் இக்குறளைக் குற்றங்கடிதல் அதிகாரத்திற்குண்டானதான பொருள் கூறியுள்ளனர். குற்றம் நீக்குதலைச் சொல்வதைவிட அறிவுக்குறையுடையவன் என்பதில் பொருளை நிலைப்படுத்திய உரைகளே பொருந்துவன.

புல்லறிவாளன் தன்னைக் குற்றங்கள் இல்லனவாயிருப்பதாகச் செய்யாமல் தன் உறுப்பை மறைத்ததையே பெரிதாக எண்ணுவான் என்பது இக்குறள் கூறும் செய்தி.

தம்மிடத்துள்ள குற்றத்தை ஒழிக்காத போது ஆடையால் தமது உறுப்பை மறைத்துக் கொள்ளுதலோ புல்லறிவாகத்தானே இருக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தான் செய்த குற்றத்தை உணராதிருப்பது புல்லறிவாண்மை.

பொழிப்பு

தம்மிடத்துள்ள குற்றத்தை ஒழிக்காத போது மறைக்கப்படவேண்டிய உறுப்புக்களை மட்டும் மறைத்தல் புல்லறிவு.