இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0845கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:845)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.

மணக்குடவர் உரை: தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும்.
இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.

பரிமேலழகர் உரை: கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.
(வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.)

இரா சாரங்கபாணி உரை: புல்லறிவாளர் கல்லாத நூல்களைத் தாம் கற்றதுபோலக் காட்டிக் கொள்ளுதல், அவர் குற்றமறக் கற்ற நூலிடத்தும் இதுவும் அப்படித்தானோ எனப் பிறர் எண்ணுமாறு ஐயத்தைத் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.

பதவுரை: கல்லாத-பயிற்சியில்லாதவற்றை, கல்லாதவற்றை, ஓதியறியாதவற்றை; மேற்கொண்டு-மேற்கொண்டு; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; கசடற-ஐயம் திரிபுகள் நீங்க; வல்லதூஉம்-திறம் பெற்றதும், கற்ற நூலும்; ஐயம்-ஐயம்; தரும்-உண்டாக்கும்.


கல்லாத மேற்கொண்டு ஒழுகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல்;
பரிப்பெருமாள்: தான் முடியக் கல்லாதவற்றைக் கற்றானாக ஏறிட்டுக்கொள்ளுதல்;
பரிதி: தனக்குக் கைவராத வித்தையைக் கைவரும் என்று பரீட்சை பார்த்தால் வாராது;
காலிங்கர்: தான் கல்லாதவற்றையும் கற்றானாகத் தன்மேல் ஏறிட்டுக்கொண்டு நடத்தல் யாது;
பரிமேலழகர்: புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்;

'தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'படியாதவற்றை மேற்கொண்டு நடப்பின்', 'புல்லறிவாளன் தனக்குப் பழக்கமில்லாத வேலைகளையும் பழக்கமுள்ளவன் போல் மேற்கொண்டு கெடுத்து விடுவான்', 'புல்லறிவாளர் படியாத நூல்களைப் படித்ததாகக் கைஆள்வது', 'அறிவில்லாதார் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகக் கொண்டு நடத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனக்குப் பயிற்சியில்லாதவற்றைத் தெரிந்ததுபோல் ஏற்றுக் கொண்டு நடப்பதனால் என்பது இப்பகுதியின் பொருள்.

கசடற வல்லதூஉம் ஐயம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.
பரிப்பெருமாள்: குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.
பரிதி: அதனாலே தனக்குக் கைவந்த நூலும் கைவராது என்று சந்தேகப்படுவர்; ஆதலால் கைவந்த வித்தையைச் சொல்வது என்றவாறு.
காலிங்கர்: அது மற்றுந் தான் கசடறக் கற்று வல்லதூஉம் ஐயப்படுதலைச் செய்யுமாறு என்றவாறு. [கசடு அற - குற்றமற]
பரிமேலழகர்: கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.

'குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்கு படித்ததிலும் உலகம் ஐயம் கொள்ளும்', 'அதனால் அவன் நன்றாகப் பழகி திறமையோடு செய்யத் தெரிந்துள்ள வேலையிலும் அவனைப் பிறர் சந்தேக்கிக்க இடமுண்டாகும்', 'அவர்கள் நன்றாகக் கற்ற நூலையும் அவர்கள் நன்கு கற்றிலர்போலும் என்று பிறர் ஐயப்பட இடங்கொடுக்கும்', 'பிறர்க்குக் குற்றமறக் கற்ற நூலின்கண்ணும் ஐயத்தை உண்டு பண்ணும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவன் நன்கு பழகிய தொழில் திறம் மீதும் உலகம் ஐயம் கொள்ளும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனக்குப் பயிற்சியில்லாத செயலைத் தெரிந்தது என ஏற்றுக் கொண்டு நடப்பதனால் கசடற வல்லதூஉம் உலகம் ஐயம் கொள்ளும் என்பது பாடலின் பொருள்.
'கசடற வல்லதூஉம்' குறிப்பது என்ன?

இவன் உண்மையிலேயே ஏதும் கற்றவன்தானா என்ற ஐயத்தை உண்டாக்குவான் புல்லறிவாளன்.

தாம் பயிலாத துறையிலும் தெரிந்தது போலக் காட்டிக்கொண்டு நடத்தல், அவர் குற்றமற ஏதும் கற்றிருந்தாலும் அதுவும் ஐயங் கொள்ள வைக்கும்.
கற்றறியாதவனவற்றையும் கற்றிருப்பதாகக் காட்டிக் கொள்ளுவதும் புல்லறிவாகும். நல்லறிவாளர் கற்றவற்றைத் தெளிவாக உணர்ந்து, உணர்ந்து கொண்டவைகளை மனத்தில் நிறுத்தி அவர் எத்துறையில் மிகுதியான பயிற்சி பெற்றிருந்தாரோ அத்துறையில் ஈடுபடுவார். ஆனால் அறிவியல் நூல்களில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஒருவன், இலக்கிய அறிவு சிறிதும் இல்லாமல் இலக்கிய ஆராய்ச்சியில் வல்லவன் என்று கூறிக்கொண்டு உலவி வந்தால் அது போலித்தனம். அவன் புல்லறிவு உடையவன்.
ஒருவர் பல்துறை கற்றவராக (multidisciplinary person) இருக்க முடியும். ஆனால் அரைகுறை அறிவுடன் அத்துறையில் வல்லவன் போல் காட்டிக்கொண்டால் அவன் உண்மையாகக் கற்றதன் தெளிவிலும் மற்றவர்களுக்கு ஐயம் எழும்.

சிற்றறிவினன் தனக்குத் தெரியாதவற்றையும் தெரிந்ததுபோல் காட்டி நடித்துக்கொண்டு திரிவான். அவனது வறட்டுப் பெருமையைக் காணும்போது, அவன் உண்மையிலே கற்றுத் தேர்ந்தவற்றிலும் திறம்கொண்டவன்தானா அல்லது அதிலும் வீண்பெருமைதான் பேசுகிறானா என்று ஐயப்பட வைக்கும். போலித்தனம், நடிப்பு, இவையெல்லாம் புல்லறிவுடன் தொடர்புடையவை.

இப்பாடல் கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (கல்லாமை 405 பொருள்: கல்லாத ஒருவனது பெருமை கற்றவரோடு உரையாடும்பொழுது கெட்டுவிடும்) என்று முன்பு சொல்லப்பட்டதை நினைவிற்குக் கொண்டுவரும்.

'கசடற வல்லதூஉம்' குறிப்பது என்ன?

'கசடற வல்லதூஉம்' என்ற தொடர்க்குக் குற்றந்தீரக் கற்றதனையும், தனக்குக் கைவந்த நூலும், தான் கசடறக் கற்று வல்லதூஉம், கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும், குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும், உண்மையில் அவர் சிலவற்றைக் கசடறக் கற்றிருந்தாராயினும் அதன்கண்ணும், நன்கு படித்ததிலும், குற்றமறக் கற்ற நூலிடத்தும், நன்றாகப் பழகி திறமையோடு செய்யத் தெரிந்துள்ள வேலையிலும், குற்றமறப் படித்துத் தெளிந்ததும், நன்றாகக் கற்ற நூலையும், குற்றமறக் கற்ற நூலின்கண்ணும், குற்றமறக் கற்றதாகிய ஒரு நூல் இருப்பின் அந்த நூலையும், உண்மையாகப் படித்தவை மீதும், பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும், குற்றமறத் தான் கற்ற நூல்களைச் சொல்லும் போதும் என்றவாறு பொருள் உரைத்தனர்.

கசடற என்ற சொல் குற்றமற என்று பொருள்படும். 'வல்லதூஉம்' என்பதன் இறுதியில் 'கண்' என்னும் வேற்றுமை உருபு தொக்கி நிற்பதால் 'வல்லதூஉம்' என்பது 'வல்லதன்கண்' என அமையும். எனவே 'கசடற வல்லதூஉம்' என்றது குற்றமற கற்றுத் தேர்ந்ததன் கண்ணும் என்ற பொருள் தரும்.
தெரியாததை தெரிந்ததாக நடித்து அது வெளிப்பட்டுவிட்டால் அறிந்த ஒன்றும் அறியாததாகிவிடுகிறது. அதனால் அவனை ஒன்றும் அறியாதவன் என்று எண்ணி அவனுடைய உண்மையான அறிவையும் ஐயப்படுவர். இதனால் புல்லறிவாளன் ஒருவன் தனக்குத் தெரியாத துறைப் பொருள் பற்றி முற்றத் தெரிந்தவர்போலப் பேசி விடுதல் இகழ்ச்சிக்குள்ளாகும். அதாவது புல்லறிவாளர் தனது செருக்கினால் தனக்குக் கைவராத பொருள் பற்றித் தான் எல்லாம் தெரிந்தவர் போலப்பேசிவிடுவார். அரசியல் பயின்றார் மேகத்தின் மேல் செல்லும் வானூர்தியை ரேடார் கருவியால் அடையாளம் காணமுடியாது எனச் சொன்னால் அவரது அரசியல் அறிவின் மீதும் ஐயம் கொள்ளச்செய்யும். இதைப் பரிதி 'தனக்குக் கைவராத வித்தையைக் கைவரும் என்று பரீட்சை பார்த்தால் வாராது' என்பார். சிற்றறிவினன் தான் கல்லாத நூல்களையும் கற்றவன் போல் காட்டி நடித்தால் அவன் ஏற்கனவே குற்றமறக் கற்றுள்ள பொருள் பற்றியும் பிறருக்கு ஐயம் உண்டாகும்.

'கசடற வல்லதூஉம்' என்றதற்கு அனைவரும் குற்றமறக் கற்றதனையும் என்ற பொருளிலேயே உரை செய்தனர். ஒரு பொருளில் ஒருவன் கசடறக் கற்றுத் திறம் பெற்றிருக்கும்போது அவனைப் புல்லறிவாளான் எனக் கூற முடியுமா? என்ற வினா எழுகிறது. அவனது போலித்தனமும் இல்லாத பெருமை கொண்டு நடப்பதுமே அவனைச் சிற்றறிவினன் ஆக்கியது.

தனக்குப் பயிற்சியில்லாத செயலைத் தெரிந்தது என ஏற்றுக் கொண்டு நடப்பதனால் அவன் நன்கு பழகிய தொழில் திறம் மீதும் உலகம் ஐயம் கொள்ளும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அறிவுடையோர் போல் நடிப்பது புல்லறிவாண்மை.

பொழிப்பு

தனக்குப் பழக்கமில்லாத செயலைத் தெரிந்தது எனக் காட்டிக் கொள்ளுதல் நன்கு பழகிய தொழில்கண்ணும் ஐயம் கொள்ளவைக்கும்.