அரசின் உறுப்புக்கள் ஆறனுள் (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்) முதற்கண் கூறப்படுவது படை. ஓர் நாட்டின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஆற்றல் மிகு உறுப்புப் படையேயாகும். படையும் அரணும் நாட்டை மாற்றாரிடமிருந்து காக்க வல்லன. ஏனைய நான்கு உறுப்புக்களும் படைக்கும் அரணுக்கும் இடையே நின்று பாதுகாப்பு பெறும் தன்மையன.
நமது பழம் இலக்கியங்கள் மாந்தர் வாழ்க்கையை அகம்-புறம் என்று இரண்டாகப் பகுத்து, 'புறத்'தில் வீரத்தின் உயர்வைப் புகழ்கின்றன.
ஒரு நாடு செல்வத்தில் திளைத்தாலும், கல்வியில் சிறந்ததாக விளங்கினாலும், அதன் மக்களையும் வளங்களையும் காக்க வீரம் தேவை. வீரத்தைப் போற்ற குறளின் பொருட்பாலில் படைமாட்சி, படைச்செருக்கு என்ற இரு அதிகாரங்களை எழுதி இருக்கிறார் வள்ளுவர். இவற்றுள் படையின் சிறப்புக் கூறுவது 'படைமாட்சி'.
படை என்ற சொல்லுக்குக் கருவி என்று ஓர் பொருள் உண்டு. படைக்கலமாகிய ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி காணும் வீரர்களைக் கொண்டது படையாம். படுத்தல்-கொல்லுதல்; கொல்லுதலையுடையது படை. ஐ வினைமுதற் பொருளில் வந்த விகுதி. ஆதலால் கொல்லும் வீரர்களையும் கருவியையும் உணர்த்தும் பொதுப்பெயர் எனவும் விளக்குவர்.
முன்பு யானை, தேர், குதிரை, காலாட்படை என நான்காகப் படைப்பிரிவுகள் இருந்தன. இப்பொழுது படைவகைகளை, தரைப்படை, கடற்படை, வான்படை (army, navy, airforce) என்னும் பிரிவுகளில் அடக்கலாம். ஒவ்வொன்றும் பல உட்பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. படைகள் எத்துணைப் பிரிவுடையதாய் இருப்பினும் அவற்றையியக்கும் வீரர்களைப் பொறுத்ததே படையின் சிறப்பு.
'படைகளில் யானையுங் குதிரையும் மாட்சியைப் பகுத்தறிவோடு விரும்பி மேற்கொள்வன அல்ல. ஏவ இயங்குவன. தேர் இயக்கப்படுவன; ஆகவே ஊறு அஞ்சா மாட்சியை இயல்பாக உடையதும், அதனை இடுக்கட்படினும் விட்டுக் கொடுக்காததும் காலாட்படை ஒன்றே. ஆதலால் இவ்வதிகாரம் காலாட்படையின் மாட்சியைக் கூறவந்ததேயாம்' என்பார் தண்டபாணி தேசிகர். இவரது விளக்கத்தில் உள்ள காலாட்படை என்ற சொல்லுக்குப் பதில் படைவீரர்ஆற்றல் எனக் கொண்டால் இன்றைய படையில் உள்ள நவீன கருவிகளையும் இயக்கவல்ல படைவீரர் மாட்சியையும் சேர்த்துக் குறித்துப் பொருந்த அமையும்.
உயிர்கள் கொல்லப்படாமல் எந்தப் போரும் இல்லை. அறவாணரான வள்ளுவர் உயிர்நீக்கும் போரை ஏற்கிறாரா? குறளின் கொல்லாமை அதிகாரம் தனிமனித அறத்தைச் சொல்கிறது. இது தன்னுயிரை விட நேரிட்டாலும் தான் வேறு ஒன்றின் இனிய உயிரைப் போக்குவதைச் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவது. அரசியலில், சமுதாய அறம் காக்க கொலைத்தண்டனையில் கொல்லப்படலாம் எனக் கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (செங்கோன்மை, 550) என்ற குறளில் கூறப்பட்டது. படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்கள் படைத்துப் படையையும் படைவீரர்களையும் புகழ்ந்தமையால் பகைவரிடமிருந்து நாட்டைக் காக்க உயிர்கள் கொல்லப்படலாம் என்பது வள்ளுவர்க்கு உடன்பாடுதான் எனத் தெரிகிறது.
படை என்பது தாக்குவது தாங்குவது என்ற இரண்டு போர்ச்செயல்களைச் செய்யவல்லதாயிருப்பது. தாக்குவது என்பது பொதுவாக பகைவர் நாட்டிற்குப் படையுடன் சென்று தாக்குதல் நடத்துவது. படைமாட்சி அதிகாரக் குறள்கள் தாங்கும் ஆற்றல் அதாவது படையெடுத்துவரும் பகையை எதிர்நிற்றல் பற்றியே பெரிதும் பேசுகின்றன. எனவே பிறர் நாட்டின்மேல் படையெடுத்துச் செல்வதைக் குறள் ஒப்பவில்லை எனலாம்.