இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0762உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது

(அதிகாரம்:படை மாட்சி குறள் எண்:762)

பொழிப்பு (மு வரதராசன்): போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.மணக்குடவர் உரை: அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை.
வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.

பரிமேலழகர் உரை: தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் - தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை; தொல்படைக் கல்லால் அரிது - அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)

சி இலக்குவனார் உரை: அழிவு வந்த இடத்தில் துன்பத்திற்கு அஞ்சாத உறுதிப்பாடு தொன்று தொட்டு வருகின்ற மரபினையுடைய பழைமையான படைக்கு அல்லாமல் வேறு படைக்கு முடியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொல்படைக் கல்லால் அரிது.

பதவுரை: உலைவிடத்து-அழிவு நேரும் சமயம்; ஊறு-துன்பம், இன்னல், ஆபத்து; அஞ்சா-நடுங்காத; வன்கண்-தறுகண்மை (அஞ்சாமை), வீரம்; தொலைவிடத்து-சிறிதாதல், படைசிதைந்து ஒடுங்கி சிறுத்த நிலை; தொல்படைக்கு-தொன்றுதொட்டு வருகிற படைக்கு, பழமையான படைக்கு; அல்லால்-அன்றி; அரிது-அருமையானது, இல்லை.


உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசர் கெடுமிடத்து போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை;
பரிப்பெருமாள்: அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை;
பரிதி: அரசன் படை சாய்ந்தவிடத்துத் தன் சீவனைப் பாராத வீரர்; [படை சாய்ந்தவிடத்து - படை அழிந்த விடத்து]
காலிங்கர்: தன் படை கெடுமிடத்தும் தன்மேல் வந்துற்ற கருவி வடுப்பட்டாற்கும் சிறுதும் கண்ணஞ்சாத தறுகண்மையானது பண்டு படைத்தலை வீரரைக் கண்ணுற்றுப் புறத்து எறியாதுமுன் எறிந்து முன் ஏற்றுக்கொண்டு வினோதித்து அழிபடை தாங்குதல். [வினோதித்து-விளையாட்டாக]
பரிமேலழகர்: தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை;

'தன் அரசர்க்கு அல்லது தன் படைக்கு அழிவு வந்த நேரத்தும் உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கெடுதலான இடத்து அஞ்சாத உறுதி தூரத்தில்', 'படைசிதைந்து அழிவு வந்த இடத்தும் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம்', 'யுத்தம் மூண்டுவிட்டபோது துன்பங்களுக்கு அஞ்சாமல் போர் புரியக்கூடிய தைரியம்', 'தான் சிறிதாய்ப்போன இடத்தும் வரும் கேட்டிற்கு அஞ்சாது அரசனைப் பாதுகாக்கும் உறுதி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

படைசிதைந்து அழிவு வந்த இடத்தும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம் என்பது இப்பகுதியின் பொருள்.

தொல்படைக்கு அல்லால் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்கு இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.
பரிப்பெருமாள்: வழிவந்த படைக்கு அல்லது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: தொலைவிடம் என்பதனை முன்னே கூட்டுக. மேல் வழிவந்த படை வேண்டும் என்றார். அதனால்பயன் என்னை என்றார்க்கு, அவர் தமக்கு முன்புள்ளார் செயலை நினப்பார்; ஆதலான் அவர்க்கல்லது படைகெட்டால் நிற்றல் அரிது என்றவாறாயிற்று.
பரிதி: தான் சேவகனான அரசற்கல்லது மற்றையோர்க்கு இல்லை என்றவாறு.
காலிங்கர்: பழம்படைக்கு அல்லால் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.

'வழிவந்த/பழம்/முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கு அல்லது பிற படைக்கு இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழம்படைக்கே உண்டு', 'வழிவழியாகப் போர்த்தொழில் புரியும் படைவீரர்க்கு அல்லால் பிறர்க்கு உண்டாகாது', 'யுத்தம் இல்லாத (சமாதான) காலங்களிலும் யுத்தப் பயிற்சி செய்து கொண்டேயிருக்கிற சேனைக்கல்லாமல் மற்றவர்களுக்கு வராது', 'பரம்பரையாகப் படைக்கலப் பயிற்சி செய்துவரும், மூலப்படைக்கு அல்லாது மற்றப் படைகட்கு இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தொல்படைக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு அரிது என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
படைசிதைந்து அழிவு வந்த இடத்தும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம் தொல்படைக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு அரிது என்பது பாடலின் பொருள்.
'தொல்படை' குறிப்பது என்ன?

நாடு காக்கக் கடைசி நேரம் வரை தளராது வீரத்துடன் போர்புரிவர் மண்ணின் மக்கள்.

படை சிறிதாகி அழிவு நெருங்கும் நேரத்தும் அஞ்சாது பகைவர் மேற் செல்லும் வீரம், தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் மற்ற படைகளுக்கு முடியாது.
தொலைவிடத்து என்றதற்கு அழிவு வந்தவிடத்து, படை சிதைந்து சிறிதாகிய வழியும், தூரத்தில், போரில்லாத காலத்தில், பலகால் போர் செய்து அநுபவம் நிறைந்த, தம் நாட்டுக்குத் தொலைவான இடத்தில் எனப் பொருள் கூறினர். இதற்குச் சிதைந்து சிறிதாகிய வழியும் என்னும் உரையே பொருத்தம்.
உலைவிடத்து என்பதற்கு அழிவு நேரும் சமயம் அல்லது தோல்வியுறும் நேரம் எனப் பொருள் கொள்வர்.

போரின்போது படையின் பலம் குறைந்து காணப்படுகிறது. பகைவர் கை ஓங்கியதைத் தெளிவாக அறிய முடிகிறது; மின்னலைப்போல வாள்வீசி அவர்கள் முன்னேறி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் தம்படை அழியப்போவதுபோன்ற மிகப் பெரிய நெருக்கடியான நிலை உருவாகிறது. அந்த நேரத்திலும் பின்வாங்காமல், முழுமூச்சுடன் எத்தகைய ஊறுகளையும் எதிர்கொள்ளும் நோக்கில் முன்னேறிச் சென்று பகைவரை நெருக்குபவரே சிறந்த வீரர் ஆவர். அத்தகைய தறுகண்மை தொடர்ந்து போர்த் தொழில் பயிற்சி பெற்ற தொல்படைக்கே உண்டு.

போர்க்களத்தில் குலைந்து வரும் தம்படை கண்டு அஞ்சாது நின்று உயிர்க்கு இறுதிவரினும் போரிடும் உரம், தொடர்ந்து போர்த் தொழில் செய்து பழகிய படைக்குத்தான் இருக்கும். அவ்வப்போது சேர்த்துக் கொள்ளப்படும் கூலிப் படை போன்ற மற்ற படைகளுக்கு இராது.
இக்குறட் கருத்தைக் காலிங்கர் 'தன் படை அழியுமிடத்தும் தன்மேல் வந்துற்ற அம்பு, வேல் முதலியவற்றின் புண்களுக்கும் சிறுதும் கண்ணஞ்சாத வீரம் முன்பே பல வீரர்களைப் பார்த்து அவர்கள் கருவிகளைப் புறத்தில் எறியாது முன் எறிந்தவற்றைத் தாமே சென்று ஏற்றுக்கொண்டு, அதனையும் வேடிக்கையாக எண்ணி, சிதறியோடுகின்ற தன்படையையும் தடுத்து நிறுத்துதல், பழம் படைக்குத்தான் இயலுவதொரு செயலாம்' என்று தொல்படை வீரர் போரிடும் காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து விளக்குகிறார்.

'தொல்படை' குறிப்பது என்ன?

'தொல்படை' என்றதற்கு வழிவந்த படை, பழம்படை, முன்னோரைத் தொடங்கிவரும் படை, தொன்றுதொட்டுப் பெருமை உடைய படை, பழைய படை, பழைமைத் தொடர்புடைய படை, பழைமையான படை, வழிவழியாகப் போர்த்தொழில் புரியும் படை, யுத்தம் இல்லாத (சமாதான) காலங்களிலும் யுத்தப் பயிற்சி செய்து கொண்டேயிருக்கிற சேனை, பழமையான மரபுப் படை, பரம்பரையாகப் படைக்கலப் பயிற்சி செய்துவரும் மூலப்படை, தொன்று தொட்டு வருகின்ற மரபினையுடைய பழைமையான படை, பரம்பரை பரம்பரையாகப் படைக்கலப் பயிற்சி புரிந்து வரும் மூலப் படை, பாரம்பரியமாய்த் தொன்றுதொட்டுப் போர்ப் பணிக்கு அர்ப்பணித்த படை, அரசர்க்கு வழி வழியாகத் தொடர்ந்து வரும் நிலைப்படை, பலகால் போர்செய்து, அனுபவம் நிறைந்த பழைமையான படை, பாரம்பரியப் படை, பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களைக் கொண்ட படை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தொல்படை என்பது மூலப்படை என்றும் மூலபலம் என்றும் அறியப்படும். மூலம், பலம் என்ற இரண்டு சொற்களுக்கும் வேர் என்ற பொருளும் உண்டு. ஆதிதொட்டு வருதல், மூலம் ஆகி வேராகியிருத்தல், முதலான பண்புகளை உடையது மூலப்படை என்பது புலப்படுகிறது. வேரே அழிந்ததென்றால் பின் வாழ்வு இல்லை. இது நாட்டினது முன்னோரைத் தொடங்கிவரும் படை அதாவது பரம்பரை பரம்பரையாக அந்நாட்டில் வாழும் வீரர்களைக் கொண்ட படை என்று பொருள்படும். வீரம் மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து படை அமைத்து அதை நிலையாக வைத்து எல்லைக்காவல் அல்லது போர்க்களத்துக்குத் தேவையானபோது அனுப்புவர். அதனால் அதற்கு நிலைப்படை என்றும் பெயர் உண்டு. தொல்படை வீரர்கள் எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாதும் இறப்பிற்கு அஞ்சாதும் கடமையுணர்வும், நம்முன்னோர் காத்த நாட்டைத் தாமும் காத்தல் வேண்டும் என்ற ஊக்கமும் உடையதாய் இருப்பர். தம் நாட்டைக்காக்க எப்பொழுதும் உயிர் துறக்க முன்நிற்பவர்கள் இவர்கள். எக்காரணத்தை முன்னிட்டும் அறைபோகாததும், போரில் தாக்கித் துரத்தும் போது தளராமல் இருப்பதும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்கள்.

'மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (புறப்பொருள் வெண்பாமாலை, தும்பை2 பொருள்: போர்வெல்லும் அடையாளமும் (விருதும்) பல ஊர்களுடைய சிறுநாடும் சிறந்த பொருளும் மருதநிலமும் பகைவரைக் கொல்லும் யானையும் குதிரையும் கொடுத்துக் காப்பாற்றுக) எனத் தொல்படையைப் பரிமேலழகர் விளக்குவார்.
கூலிப்படையாவது, போர்க்காலத்தில் புதுவதாகக் கூலிக்கு அமர்த்தப்படுவது, நாட்டுப்படை மருதநில மக்கள் சேர்ந்தது. காட்டுப்படை பாலைநிலவாசிகளும் குறிஞ்சிநில மாந்தரும் சேர்ந்தது. துணைப்படை என்பது நட்புரிமை பற்றிக் போர்ர்ச்செயலில் துணை செய்வது. பகைப்படையானது பகைவனால் விலக்கப்பட்டுத் தன்படையுள் புகுந்ததும், பகைவனை வேறுபடுத்தி அவனிடத்தினின்றும், தன்வயமாகச் செய்யப்பட்டதுமாகிய படை. இவை தவிர்த்து நாட்டுப் பற்றால், கூலிக்கன்றித் தொண்டு காரணமாகத் தாமாக வந்துதவும் ஊர்மக்கள்படை குடிப்படை எனப்பட்டது.
போர்க்காலத்து அமைந்த பெரும்படை அமைதிக் காலத்து வேண்டா வாதலின், போர் முடிந்த பின் மூலப்படையொழிந்த பிறவெல்லாம் கலைக்கப்படுவது மரபு. மூலப்படைப் பகுதிகள் தலைநகரி லும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும், புதிதாய் வெல்லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும். கலைக்கப்பட்ட படையினர் தம் வழக்கமான தொழிலைச் மேற்கொள்ளத் திரும்புவர்.

போரில் சேதமுற்று அழிவு வந்தாலும் நெஞ்சுறுதி கொண்டு தமது உரிமை மண்ணைக் காப்பதில் தொல்படையினர் மிகுந்த வீரம் காட்டுவர். அவர்களுக்குள்ள ஆற்றல் மற்ற படையினருக்கு இல்லை.

படைசிதைந்து அழிவு வந்த இடத்தும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம் தொல்படைக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு அரிது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அழிபடை தாங்கும் தொல்படைமாட்சி போற்றும் பாடல்.

பொழிப்பு

போரில் படை வலிமை குன்றி உயிர்க்கு ஊறு வந்தகாலத்தும் அஞ்சாமல் பகைவரை எதிர்த்து நிற்கவல்ல மன உறுதி பெற்றது வழிவழிவந்த மக்களாலான படையைத் தவிர வேறில்லை.