அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்
(அதிகாரம்:படைமாட்சி
குறள் எண்:768)
பொழிப்பு (மு வரதராசன்): போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.
|
மணக்குடவர் உரை:
பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.
படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
தானை - தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் - பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும்.
('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
போர் புரிவதற்கு வேண்டிய மன உறுதியும் மற்றத் திறமைகளும் (சேனையில் உள்ளவர்களுக்கு) இல்லாவிட்டாலும்கூட, ஒரு சேனையானது அதிலுள்ளவர்களுடைய கட்டுப்பாடான படைக்குணத்தால் மட்டுமே வலிமை பெறும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.
பதவுரை: அடல்தகையும்-பகைமேற் சென்று தாக்குந்தறுகண்மையும், பகைப்படையைக் கொல்லும் அஞ்சாமையும்; ஆற்றலும்-வன்மையும், வலிமையும்; இல்-இல்லை; எனினும்-என்றாலும்; தானை-படை; படைத்தகையால்- படை ஒழுங்கு முறையால், கட்டுப்பாட்டால், தோற்றப் பொலிவால்; பாடு-பெருமை; பெறும்-அடையும்.
|
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது;
பரிப்பெருமாள்: பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது;
பரிதி: வெற்றிப்பாடும் சத்துவமும் இல்லாத போதும்; [சத்துவம் - வலிமை]
காலிங்கர்: எதிர்ந்தோரை எறிந்துகொள்ளும் தகைமையும் அதற்குரிய ஆண்மைத் திறப்பாடும் இல்லை ஆயினும் சேனையானது [எறிந்துகொள்ளும் தகைமை - வெட்டிக்கொள்ளும் தகுதி; ஆண்மைத் திறப்பாடு - ஆண்மையின் திறமை]
பரிமேலழகர்: தானை பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது.
'தானை பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அழித்தலும் பொறுத்தலும் இல்லை எனினும்', 'பகைமேற் சென்று தாக்கும் வீரமும் பகைதாக்கித் தடுத்து நின்று தாங்கும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும்', 'மேற்சென்று தாக்கும் வன்மையும் எதிர்த்த படையை ஓட்டுந் திறமையும் இல்லாவிட்டாலும்', 'பகைவரைக் கொன்று வெல்லும் பெருமையும் வலிமையும் இல்லையென்றாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தாக்கும் வீரமும் வேகமும் தானைக்கு இல்லை என்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
படைத்தகையால் பாடு பெறும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: படையழகினால் பெருமைபெறும்.
மணக்குடவர் குறிப்புரை: படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: படையழகினால் பெருமைபெறும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: படையழகென்றது அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல். இதுவும் அரசன் அமைக்கவேண்டும் என்றது.
பரிதி: அரசன் போற்றுதலாலே சிறப்புப் பெறும் என்றவாறு.
காலிங்கர்: கைக்கொண்டு நிற்குமிடத்து விட்டுவிளங்கிப் பயின்றுள்ளதாகிய விறல் கருவிகளால் பொலிவுடன் நிற்றல் சாலப் பெருமை பெறும் என்றவாறு. [விட்டு விளங்கி - வெளிப்படுத்தி விளங்கி; விறல் கருவிகளால்- வலிமை, படை முதலியவற்றால்]
பரிமேலழகர்: தன்தோற்றப் பொலிவானே பெருமை எய்தும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை. [பதாகை - பெருங்கொடி; பல்லியம் - பலவகை வாத்தியங்கள்; காகளம் - எக்களம் என்னும் ஊதுகுழல்]
'படையழகினால்/அரசன் போற்றுதலாலே/விறல் கருவிகளால் பொலிவுடன் நிற்றலால்/தன்தோற்றப் பொலிவானே பெருமைபெறும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சேனை தோற்றத்தால் சிறப்பு அடையும்', 'அது அணிவகுத்து நிற்கும் தோற்றப் பொலிவினாலே பெருமை பெறும்', 'அணிவகுப்பு முதலியவற்றால் தோற்றப் பொலிவு உடைய படை மேன்மை அடையும்', 'படையானது தனது தோற்றப் பொலிவால் பெருமை அடையும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
படை ஒழுக்கக்கட்டுப்பாட்டால் வெற்றி அடையும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தாக்கும் வீரமும் வேகமும் தானைக்கு இல்லை என்றாலும் படைத்தகையால் வெற்றி அடையும் என்பது பாடலின் பொருள்.
'படைத்தகை' குறிப்பது என்ன?
|
போர் செய்யும் திறத்தில் குறைபாடு உண்டாயினும் படைக்குத் தோற்றப்பொலிவு இன்றியமையாதது.
தாக்கும் வீரமும் விரைவும் படைக்கு இல்லை என்றாலும், ஒரு படை தனது ஒழுங்குமுறை ஒன்றினாலேயே பகைவரை வென்றுவிடும்.
பகையை எதிர்த்துத் தாக்கும் வன்மையும் வந்த படையை எதிர்த்து நின்று முறியடிக்கும் திறனும் இல்லையாயினும், படை தன் அணிவகுப்பு ஒழுங்குமுறையால் வெற்றி கொள்ளும். ஒழுக்கமுறைப்படி நடந்துகொள்ளும் படைக்கு அழகூட்டி அதன் வெற்றிக்கு வழிகோலும். படையின் எல்லா உறுப்புகளும் மிடுக்குடன் நின்றால் அது பகைவரை மிரளச்செய்யும். ஒரு நாட்டின் படைக்கு ஒழுங்குமுறை இன்றியமையாதது. வல்லமையற்ற படைகூடத் தனது கட்டுப்பாட்டால், பகைவரை வெல்லுதல் முடியும். மற்ற வன்மையும் திறனும் பெற்றிருந்தாலும் ஒழுங்கற்ற படையினராக இருந்தால் அது வெற்றி பெற இயலாது. ஒழுங்கமைப்பு அதாவது கட்டுப்பாடு ஒன்றிருந்தாலே படையானது போரில் வெற்றிபெற முடியும்.
‘ஆற்றல்’ என்ற சொல்லுக்கு வலிமை, பொறுத்தல், திறமை எனப் பல பொருள் உள. காலிங்கர் ஆண்மைத் திறப்பாடு எனப் பொருளுரைப்பார். இங்கு திறம் என்னும் பொருளே பொருந்தும்.
பாடு பெறும் என்ற தொடர்க்குப் பெருமை அடையும் என்பது பொருள். அதிகாரம் படைமாட்சி ஆதலால் அப்பெருமை வெற்றியில்தான் ஒளிரும். எனவே பாடுபெறும் என்பது வெற்றி எய்தும் என்ற பொருளது.
|
'படைத்தகை' குறிப்பது என்ன?
'படைத்தகை' என்றதற்கு படையழகு, அரசன் போற்றுதல், கைக்கொண்டு நிற்குமிடத்து விட்டுவிளங்கிப் பயின்றுள்ளதாகிய விறல் கருவிகளால் பொலிவுடன் நிற்றல், தன்தோற்றப்பொலிவு, தன்னுடைய அணி வகுப்பு, தோற்றப் பொலிவுடன் எழுச்சிமிக்குக் காணப்படும் தகுதி, தோற்றம், அணிவகுத்து நிற்கும் தோற்றப் பொலிவு, அதிலுள்ளவர்களுடைய கட்டுப்பாடான படைக்குணம், தோற்றம் நடைப் பெருமைகள், அணிவகுப்பு முதலியவற்றால் தோற்றப் பொலிவு, தனது தோற்றப் பொலிவு, படைத் தலைவரின் திறமை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
படைத்தகை என்பதற்கு ஒருபொருள் படையழகு. வீரமும் போர்த்திறமும் முழுமையாக இல்லாமல் இருந்தாலும் படையழகு போதும் எனச் சொல்வதாக குறள் உள்ளது. அந்தப் படையழகு என்ன? மணக்குடவரும் பரிப்பெருமாளும் தமது சிறப்புரையில் 'படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்' எனச் சொல்கின்றனர். பரிமேலழகர் படைத்தகையால் என்றதற்குத் தன்தோற்றப்பொலிவானே எனப் பொருள் கூறித் தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பெருங்கொடி, குடை, பலவகை இசைக்கருவிகள், எக்களம் என்னும் ஊதுகுழல் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு என விளக்கினார். இதைக் கண்ட அளவிலே பகைவர் அஞ்சுவர் எனவும் இவர் கூறினார். காலிங்கர் 'விட்டுவிளங்கிப் பயின்றுள்ள விறல் கருவிகளால் பொலிவுடன் நின்றால் போதும்' என்று வாளேந்தி நிமிர்ந்து நிற்கும் மிடுக்கைக் குறிப்பிடுகிறார்.
இவர்கள் உரை அனைத்தும் படை எடுப்பும் சிறப்புமாக அதற்குரிய அணிகளுடன் இருந்தாற்போதும் என்கின்றன.
படை உறுப்புகளை ஒழுங்குபட நிறுத்திவைப்பதனாலேயே பகைவர் எப்படி அஞ்சுவர்? அலங்காரம் செய்யப்பட்ட தேர், யானை, குதிரைகளையும் பதாகை, கொடி, குடை, வாத்தியங்கள் முதலியவற்றையும் மட்டும் கண்டு பகைவர்கள் அஞ்சிவிடுவார்களா? அது எங்ஙனம் வெற்றியை ஈட்டித் தரும்? அந்தப் பகைவரும் சேனையுடன் உள்ளவர்களல்லவா? அவர்களிடத்திலும் அணிகள் பூட்டப்பட்ட தேர், யானை, குதிரை, குடை, கொடி முதலியவைகள் உண்டே? ஓசை முழக்கம் கூடிய வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திலிருப்பதால், படைத்தகையாலும் பகைவரை மரூட்டலாம் என்பதும் அது போலி வெற்றியானாலும் பெருமை தரும் என்பதும் குறட்கருத்தாக இருக்க முடியாது.
படைத்தகை என்பது படைக்குணம். அதாவது சேனை என்பதற்குத் தகுதியுள்ள தன்மை எனப் பொருளுரைப்பார் நாமக்கல் இராமலிங்கம் .
‘படைத்தகை’ என்பதற்கு படைப்பயிற்சிகளின் வன்மை அதாவது போரில்லாக் காலத்தும் இடைவிடாத போர்ப்பயிற்சி, கட்டுக் கலையாதிருத்தல், எதிரிக்கு இடங்கொடாமை, கூற்றுடன்று மேல் வரினும் கூடி எதிர்நிற்றல் முதலிய படைதன்மைகள் எனவும் கருத்துரைத்தார்.
படைத்தகை என்பது படையின் அணிவகுப்பின் அழகு என்றனர் சிலர். படைவகுப்பு அமைக்கும் திறன் பற்றி முற்குறளில் சொல்லப்பட்டுள்ளதாகையால் இங்கு மீண்டும் கூறத்தேவையில்லை.
'அரசனுடைய போற்றுதலாலே சிறப்புப் பெறும் படை' என்பது பரிதியின் உரை. 'அரசன் மதில்காக்கும் படைவீரர் அடற்றகையும் ஆற்றலும் இலராயினும் அவர்கட்குச் சிறப்புச் செய்ய அவர்கள் வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும் கொள்ளா மறவன் நிலையைக் கண்டு வந்தோர் மீள்வராதலின் அதுவே பாடுதரும் செயலாம்' எனத் தண்டபாணி தேசிகர் இதற்கு விளக்கம் அளிப்பார். மேலும் அவர் 'அரசன் போற்றுதலாகிய படைத்தகை சிறந்த பொருளாகிறது' என்றும் 'போற்றுதலே படைத்தகை' என்ற விதையிலிருந்து குறள் தோன்றுதலும் பரிதியின் கருத்திற்குத் துணை செய்கிறது' என்றும் கூறுவார்.
பரிதியின் உரைக்கு அரசனின் ஊக்கம் தரும் (motivated) பேச்சு எனப் பொருள் கொள்ளலாம்.
கட்டுப்பாடே படைக்கு அழகு. வீரத்திலும் படைத்திறத்திலும் குறைவுபட்டாலும் படைக்குள்ள ஒழுங்குமுறை காப்பாற்றப்பட்டால்தான் வெற்றி பெற முடியும். அது பெருமைக்குரியதுமாகும். எனவே படைத்தகை என்பதற்கு படைஒழுக்கம் என்பது பொருத்தமான பொருள்.
|
தாக்கும் வீரமும் தாக்குதலைத் தாங்கும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும் ஒழுக்கக்கட்டுப்பாட்டால் பெருமை அடையும் என்பது இக்குறட்கருத்து.
கட்டுப்பாடான தோற்ற அழகு படைமாட்சிபெறச் செய்யும்.
தாக்கும் வீரமும் போர் செய்யும் திறமும் படைக்கு இல்லை என்றாலும் அதன் கட்டுப்பாடான தோற்றத்தால் பெருமை அடையும்.
|