இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0766



மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:766)

பொழிப்பு (மு வரதராசன்): வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.

மணக்குடவர் உரை: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம்.
நல்லவழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.

பரிமேலழகர் உரை: மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது.
(இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: வீரமும், மானமும், மாட்சிமைப்பட்ட நடைப்போக்கும், தெளிவும் என்று சொல்லப்பட்ட நான்கே படைக்குக் காவல் ஆகும். (படை அழியாமல் காக்கக் கூடியன.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
மற மானம் மாண்டவழிச்செலவு தேற்றம் என நான்கே படைக்கு ஏமம்.

பதவுரை: மறம்-வீரம்; மானம்-தாழ்வின்மை; மாண்ட-மாட்சிமைப்பட்ட; வழி-நன்னெறி; செலவு-செல்லுதல்; தேற்றம்-தெளியப்படுதல், தெளிவு, நம்பிக்கை; என-என்பது பற்றி; நான்கே-நான்குதாம்; ஏமம்-அரண்; படைக்கு-படைக்கு.


மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே;
மணக்குடவர் குறிப்புரை: நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.
பரிப்பெருமாள்: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையும் என்னும் நான்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்து அறத்தின் வழிச் செய்யும் தெளிவு கலக்கமின்மை.
பரிதி: வீரதத்துவ முனையில் இன்னான் மகன் இன்னான் என்பது நம்பிக்கை; இந்த நாலுவகையாம்; [வீர தத்துவ முனையில் - வீரத்தை வெளிப்படுத்தும் போர்க்கள முன்னணியில்]
காலிங்கர்: தன் நெஞ்சிற்கு இயல்பாயது ஓர் மறமும், சேவகத் தாழ்ச்சிக்கு மானிப்பது ஓர் வாசிப்பாடும், மாட்சிமைப் பட்ட வழிச்செலவு என்னும் அரசர்க்கு ஏவல் வழி பிழையாது செல்லலும், எதிர்கண்டவிடத்துத் தடுத்து ஏறிநிற்கும் திறமையும் என்னும் இந்நான்குமே; [சேவகத் தாழ்ச்சி -வீரத்தின் இழிவு; மானிப்பது ஓர் வாசிப்பாடு - மானத்தோடு விளங்குவதாகிய ஒரு பெருமையும்]
பரிமேலழகர்: தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே;
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன.

'மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மாண்டவழிச் செலவு என்பதற்கு நல்வழிச் சேறல், அரசர்க்கு ஏவல் வழி பிழையாது செல்லல், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறல் என்றபடி வேறுபட்டுப் பொருள் கூறினர். தேற்றம் என்பதற்கும் தெளிவுடைமை, எதிர்கண்டவிடத்துத் தடுத்து ஏறிநிற்கும் திறமை, அரசனால் தேறப்படுதலும் என்று மாறுபாடான உரைகள் தரப்பட்டன.

இன்றைய ஆசிரியர்கள் 'வீரம் மானம் சிறந்தநடை தெளிவு என்ற நான்கும்', 'வீரம், மானம், முன்வீரர் சென்ற நெறியில் நடக்கும் நடப்பு, வெற்றி உறுதி என்னும் தெளிவு என்னும் இந்நான்கும்', 'அச்சமற்ற தன்மை, வீரத்துக்கு தகாத பழி பாவங்களைச் செய்துவிடக் கூடாதென்று மானமுடைமை, பார்த்தவர்கள் மதிக்கும்படியாக அணிவகுப்புடன் கம்பீரமான வழி நடை, மேற்கொண்ட போரை நடத்த வேண்டிய திட்டத்திலும் முறையிலும் தெளிவான அறிவு ஆகிய இந்த நான்குமே', 'வீரமும், மானமும், புகழ்பெற்ற முன்னோர் நெறியில் நடப்பதும், அரசனால் நம்பப்படுந் தன்மையும் ஆகிய நான்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வீரம், மானம், சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் என்பது இப்பகுதியின் பொருள்.

ஏமம் படைக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: படைக்கு அரணாம்.
பரிப்பெருமாள்: படைக்கு அரணாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கெடாமை வேண்டும் என்றார்; இது கெடாமைக்குக்காரணம் கூறிற்று.
பரிதி: படைஞர் குணம் என்றவாறு.
காலிங்கர்: படைக்குச் சேம உறுதிப்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: படைக்கு அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம். [நணுகாராகலின் - அணுகாராகலின்]

'படைக்கு அரணாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'படைப்புக்கு வேண்டியவை', 'படைக்குக் காவலாகும்', 'ஒரு சேனையின் பெருமைக்குக் காவலாக உள்ளவை', 'ஒரு படைக்குப் பாதுகாப்பாய குணங்களாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

படைக்குக் காவல் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீரம், மானம், மாண்ட வழிச்செலவு, போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவல் ஆகும் என்பது பாடலின் பொருள்.
'மாண்ட வழிச்செலவு' என்பதன் பொருள் என்ன?

படையானது பகையை எதிர்நிற்பதற்குண்டான குணங்கள்.

வீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு - ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்நிற்க உதவுவன.
முன்குறளில் தடுத்து நிறுத்தும் ஆற்றல் படைக்கு வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இங்கு அதற்குண்டான குணங்கள் கூறப்படுகிறது. புகழான வெற்றிஎய்த வேண்டுமானால் வீரம், மான உணர்ச்சி, சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு முதலிய நான்குமே வேண்டும்.

மறம்:
மறம் என்பது வீரம் குறித்தது. போர்க்களத்தில் அஞ்சாமை என்பது முதன்மையாகத் தேவைப்படும் குணம். தாக்கவரும் பகைவர் படையைப் பார்த்து அஞ்சாது முன்னேறிச் செல்லவேண்டும். உயிரை வாங்கவும் கொடுக்கவும் அஞ்சாத தறுகண்மையே மறம்.
மானம்:
மானம் என்பது தம் பெருமையையும் மதிப்பையும் தாழாது நிலைநிறுத்துவதைச் சொல்வது, இங்கு படைக்கு இழிவு நேராது காத்துக்கொள்வதைக் குறிக்கும். அப்படி இழிவு நேர்ந்தபோது உயிர் வாழ எண்ணாத தன்மையும் அது. வீரத்திற்கு ஏற்புடைய மானம் அதாவது வீரம் வழுவாத மானம் சொல்லப்பட்டது. மானம் என்பது உணர்வு தொடர்பானது; இங்கு சொல்லப்படுவது நாட்டின் மானம். நாட்டின் மானமே தன் மானமாகக் கொண்டு போர்க்களத்துள் செல்லவேண்டும். நாட்டிற்கு உண்டாகும் சிறுமை தன் சிறுமை என்றும், அதன் பெருமை தன் பெருமை என்றும் எண்ணி அரசுக்குள்ள மானமான இறையாண்மை காக்கப்படுமாறு போர் புரிய வேண்டும்.
தேற்றம்:
போர் முனையில் எவற்றைச் செய்தால் பகைவரை எளிதில் வெல்லலாம் என்பதை பலமுறை ஆராய்ந்து போர்த்திட்டம் வகுத்து அதற்குத்தக அணுகுமுறை அமைத்து அதில் தெளிவு உண்டாக வேண்டும். சண்டை தொடங்கிய பின்னர் செயல் திட்டத்தில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது. போர்க்களத்துள் குலையாத நெஞ்சுரத்துடன் புக வேண்டும். செயல்திட்டம் தெளிவானால் வெற்றி உறுதி. அதற்கு முன்சொன்ன மறம், மானம், மாண்டவழிசெலவு ஆகியனவும் துணை செய்யும்.
தேற்றம் என்றதற்கு அரசுடைய நம்பிக்கைக்கு உரியதாயிருத்தல் எனவும் பொருள் கூறுவர்,

ஏமம் என்ற சொல்லுக்குப் பாதுகாப்பு என்பது பொருள். 'ஏமம் படைக்கு' என்றது அந்நான்கு குணங்களும் பகையைத் தடுத்துநிறுத்திப் படைக்கு அழிவு வராமலும் இழிவு அடையாமலும் காத்து அதை வெல்லும் நிலையில் வைக்கும் என்பதாம்.

'மாண்ட வழிச்செலவு' என்பதன் பொருள் என்ன?

'மாண்ட வழிச்செலவு' என்றதற்கு நல்வழிச்சேறல், அரசர்க்கு ஏவல் வழி பிழையாது செல்லல், முன்வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறல், உயர்ந்த வீரர் ஒழுகிய நல்வழியிற் ஒழுகுதல், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, மாட்சிமைப்பட்ட வழிச்செலவு, நல்ல வழியில் நடத்தல், நல்ல மறக்குடியில் பிறந்திருத்தல், மாட்சிமைப்பட்ட பாரம்பரியமாக வரும் குணம். இன்னான் மகன் இன்னான், நன்னெறியைப் பற்றிச் செல்லுதல், கண்டவுடன் மாற்றாரும் அஞ்சும் கம்பீரமான வழிநடை, முன்னோர்வழிவந்த சிறந்த படைத்திற வழிகள், முன்னோர் வகுத்துத் தந்த படையைச் செலுத்தும் நல்வழிமுறைகள், மாட்சிமையான வழியில் செல்வது, பகைவீரரை அன்றி மற்றவர்க்கு இடையூறு செய்யாத பெருமையான செல்லுகை எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

போர்ச்செயல்களுக்கும் ஒருவாறான ஒழுங்குமுறை, பண்பாடுகள் உருவாகி வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றியே பெரும்பான்மையும் போர்கள் நடைபெற்றுவருகின்றன. காட்டாக, புறமுதுகுகாட்டி ஓடுவோர், தோல்வியை ஒப்புக்கொண்டோர், வீரமற்றவர் போன்றோரிடம் படை தன் வீரத்தைக் காட்டாது. இவை போன்ற நெறியைப் பின்பற்றுவதையே மாண்ட வழிச்செலவு என இக்குறள் கூறுகிறது.
‘மாண்ட வழிச் செலவு’ என்பது படையொழுங்கின்படி அணிவகுத்துப் பெருமிதம் தோன்றக் கண்டார் அஞ்சச் செல்லுதல், வீரர் பண்பாட்டுக்கேற்ப ஒழுகுதல் ஆம் என்பார் சி இலக்குவனார்.

'மாண்ட வழிச்செலவு' என்ற தொடர்க்குப் பண்பாடான போர்நெறியைப் பின்பற்றிச் செல்லுதல் என்பது பொருள்.

வீரம், மானம், சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவல் ஆகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எதிர்கண்டவிடத்துத் தடுத்து ஏறிநிற்கும் திறன்கொண்ட படைமாட்சி கூறுவது.

பொழிப்பு

வீரம் மானம் சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவலாகும்.