இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0764அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:764)

பொழிப்பு (மு வரதராசன்): (போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

மணக்குடவர் உரை: கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது.
வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.

பரிமேலழகர் உரை: அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது.
(அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)

சி இலக்குவனார் உரை: போரின்கண் பகைவரைக் கண்டு உள்ளம் கெடுதலில்லாமல், பகைவரால் கீழறுக்கப்படாததாய் தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே உண்மையான படையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழிவின்றி அறை போகாதாகி வழிவந்த வன்கணதுவே படை.

பதவுரை: அழிவு-கெடுதல்; இன்றி-இல்லாமல்; அறை-கீழறுத்தல்; போகாது-படாதது; ஆகி-ஆய்; வழி-பழையது; வந்த-நேர்ந்த; வன்கணதுவே-வீரமுடையதுவே; படை-படை.


அழிவின்றி அறைபோகா தாகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகி;
பரிப்பெருமாள்: கெடுதலின்றிக் கீழ்போகாததாகி;
பரிதி: அழிவற்றதாய் அரசர்க்கும் மாற்றார்க்கும் இடம் கொடாமல்;
காலிங்கர்: எதிர்ப்பட்டமுகத்து நெஞ்சழிவு இன்றித் தன் கோமானை வஞ்சித்துக் கீழ்போகாததாகி; [நெஞ்சழிவு - மனமுடைதல்]
பரிமேலழகர்: போரின்கண் கெடுதல் இன்றி பகைவரால் கீழறுக்கப்படாததாய்:
பரிமேலழகர் குறிப்புரை: அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. [மறம்-வீரம்; மானம் - நிலையில் தாழாமையும் தாழ்வுவரின் உயிர்வாழாமையும்]

'கெடுதல் இன்றி பகைவரால் கீழறுக்கப்படாததாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழியாதும் வஞ்சனைக்கு ஆளாகாதும்', 'நெஞ்சம் அழியாமல் பகைவர் செய்யும் வஞ்சச் சூழ்ச்சிக்கு ஆட்படாமல்', 'அணிவகுப்புக் கலையாமலும் பகைவருடைய வஞ்சகத்துக்கு உட்பட்டுப் பணிந்துவிடாமலும்', 'போரில் எளிதாக வென்றழிக்க முடியாததாய், பகைவரால் கீழறுத்தும் பிரிக்கப் படாததாய்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போரின்கண் மனம் உடையாது பகைவரின் வஞ்சகச் சூழ்ச்சிக்கு ஆளாகாதும் என்பது இப்பகுதியின் பொருள்.

வழிவந்த வன்க ணதுவே படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது.
மணக்குடவர் குறிப்புரை: வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.
பரிப்பெருமாள்: குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையது படையாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: வழிவருதல்- வீரன்மகன் வீரன் ஆதல். இது படையினது தன்மை கூறிற்று.
பரிதி: தலைமுறையான் இன்னான் மகன் என்று பேர்பெற வெட்டுமது படை என்றவாறு. [பேர்பெற- புகழ்பெற]
காலிங்கர்: வழிவருகின்ற தறுகண்மையை உடையது யாது; மற்று அதுவே படையாவது என்றவாறு.
பரிமேலழகர்: தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது.
பரிமேலழகர் குறிப்புரை: வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.

'வழிவருகின்ற தறுகண்மையை உடையது படை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வழிவழி வீரமுடையதுவே படை', 'தொன்றுதொட்டுப் பரம்பரையாக வரும் வீரம் கொண்டதே படை', 'பழக்கப்படுகிற மன உறுதி உடையதே சேனை எனப்படும்', 'பரம்பரையாய் வருகின்ற ஆண்மை மிக்கதே தக்க படையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் வீரம் கொண்டதே படை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போரின்கண் மனம் உடையாது பகைவரின் வஞ்சகச் சூழ்ச்சிக்கு ஆளாகாதும் வழி வந்த வன்கண் கொண்டதே படை என்பது பாடலின் பொருள்.
'வழிவந்த வன்கண்' என்றால் என்ன?

போருக்குச் செல்லும் படையின் இயல்புகள்.

மனவலிமையிலே அழிவற்றதாய், பகைவரது சூழ்ச்சிக்கு ஆளாகததாய், வீரப் பின்னணி கொண்டதாய் அமைந்ததே படை.
அழிவின்றி, அறைபோகாதாகி, வழிவந்தவன்கண் என்னும் மூன்று பண்புகள் உடையதே போருக்குச் செல்லும் படை என்கிறது இப்பாட.ல். இவை போரில் பின்வாங்கா உறுதியுடைமை, பகைவர் வலைக்குள் விழாமை, இயல்பாய் வீரவுணர்வு உள்ளமை என்பன.
அழிவுஇன்றி:
இத்தொடர்க்குப் போரில் அழிதல் இல்லாமல் என்றும் அழிவற்றதாய் என்றும் தோல்வியின்றி என்றும் பொருள் கூறினர். போரில் 'தோல்வியின்றி' என்பதை முற்படுதேவையாக எப்படிக் கூற முடியும்? காலிங்கர் நெஞ்சழிவின்றி எனப் பொருள் கூறினார். வெல்ல முடியாத வலிமை என்பதினும் இது பொருத்தமாகப் படுகிறது. போரில் எதிர்ப்புக்கு அஞ்சி சிதைந்து போகாமல் மேற்செல்லும் குணத்தை இது குறிக்கிறது. ஊக்கமுடைமை பொருந்திய வீரரைத் தெளிந்து போர் முனைக்கு அனுப்புக என்பது பொருள்.
அறைபோகாது:
அறைபோவது என்பது கீழறுத்தல் எனவும் சொல்லப்படுவது. பகைவர்க்கு தன் நாட்டைக் 'காட்டிக் கொடுப்பது' என்பது பொருள். படையில் உள்ளோரைத் தம் வயப்படுத்தப் பகைவர்கள் முயல்வர். பொன், பொருள், பெண், பதவி இவற்றிற்காகப் பகைவர்க்கு உளவு சொல்லுதல் இல்லாதவராகவும் பகைவரின் வஞ்சனைக்கு வீழ்ந்துவிடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் நாட்டுப்பற்றுக் கொண்ட வீரரையே தெரிந்து தெளியவேண்டும் என்பது இத்தொடர் தரும் பொருள்.

'வழிவந்த வன்கண்' என்றால் என்ன?

'வழிவந்த வன்கண்' என்றதற்குக் குலத்தின் வழிவந்த அஞ்சாமை, இன்னான் மகன் இன்னான் என வழிவந்த வன்கண்மை, வழிவருகின்ற தறுகண்மை, தொன்று தொட்டு வந்த தறுகண்மை, பாட்டன் தந்தை மகன் என இவ்வாறு வழிவழியாக வந்த வீரம், பழக்கப்படுத்துவதால் வருகிற மன உறுதி. தொன்று தொட்டுவந்த அஞ்சாமை, தொன்று தொட்டு வரும் வீரம்,தொன்று தொட்டு வந்த மறம், தொன்றுதொட்டு வருகின்ற போர்க்குணம், தூய வழிவந்த பேராண்மை, வழிவழி வீரம், தொன்றுதொட்டுப் பரம்பரையாக வரும் வீரம், பழைமை தொட்டு வந்த வல்லாண்மை, பரம்பரையாய் வருகின்ற ஆண்மை, வழிவழிவந்த அஞ்சாமை, வழி வழி வந்த வீர மரபு, தொன்று தொட்டுத் தலைமுறையாக வளர்ந்து வந்த வன்மறம், வீரப்பரம்பரையில் வந்த திறமை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சங்க இலக்கியங்களால் வழி வழிப்படை இருந்தது எனச் சொல்லி 'ஆதலின் ‘வழிவந்த வன்கண்’ என்பதற்குத் 'தொன்று தொட்டு வந்த தறுகண்மை என்பது இயைந்த பொருள்' எனவும் கூறுவார் இரா சாரங்கபாணி.
பரிமேலழகர் உரையில் காணப்படும் பாடல்:
கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் -பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தானென் னேறு
(புறப்பொருள் வெண்பாமாலை, வாகை, 22 பொருள்: என் தந்தை போர்க்களத்தில் போரிட்டு மடிந்து இன்று நடுகல்லில் வழிபடப்படுகின்றான். என் கணவன் போர்க்களத்தில் பகைவரை வெல்லும்போதே வீழ்ந்தான். என் தமையன்மாரும் அப்படியே மடிந்தனர். என் மகனும் அம்புகள் எய்தான்’ பகைவர்கள் எய்த அம்புகள் அவன் உடலெல்லாம் தைத்து முள்ளம்பன்றிபோல் ஆனான். ஆயினும், போர்புரிவதில் சோர்வடையவில்லை. அம்புகளை விட்டுக்கொண்டே ஆவியை விட்டான்.) இங்ஙனம் வழிவழியாகப் போர்வன்மை மிகுந்தவர் படைக்குச் சிறப்புச் சேர்ப்பர்.
போர் வீரர்களாக நிறைந்த குடும்பங்கள் இன்றும் உண்டு.
வழிவந்த வன்கண்மை என்றதால் வீரம் பரம்பரைக் குணம் என்பது விளக்கப்பெற்றது.

ஆனால் நாமக்கல் இராமலிங்கம் வழிவந்த தறுகண்மை என்பதை வேறுவகையாக விளக்குகிறார். அவர் 'வழிவந்த என்பதற்கு தொன்றுதொட்டு வந்த என்று பிறப்பின் பரம்பரையைக் குறிப்பதும் சரியல்ல. பரம்பரைப் பிறப்பில் சிறப்புண்டு என்பது உண்மையானாலும் சேனை கட்டுக்கலையாமல் இருப்பதும், பகைவருக்கு இடங்கொடுக்காமலிருப்பதும் பழக்கத்தாலும் பயிற்சியினாலும் வருவனவேயல்லாமல் பரம்பரையாலல்ல. ஒரு சேனை அதன் சேனைத் தன்மையில் குறையாதிருப்பதற்கு வேண்டிய பயிற்சிதான் இங்கே சொல்லப்படுவது' என்பார்.

'வழிவந்த வன்கண்' என்பது தொன்று தொட்டு வந்த வீரம் எனப் பொருள்படும்.

போரின்கண் மனம் உடையாது பகைவரின் வஞ்சகச் சூழ்ச்சிக்கு ஆளாகாதும் தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் வீரம் கொண்டதே படை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நாட்டுப்பற்றாலும் வீரத்தாலும் படைமாட்சி பெறும்.

பொழிப்பு

போரின்கண் மனம் உடையாமல் பகைவரது வஞ்சனைக்கு ஆளாகாதும் தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் வீரம் கொண்டதே படை.