நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
(அதிகாரம்:படைமாட்சி
குறள் எண்:770)
பொழிப்பு (மு வரதராசன்): நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.
|
மணக்குடவர் உரை:
படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம்.
இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது.
(படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை:
போரின்கண் நின்று போராடக் கூடிய வீரர் மிகப் பலரைப் பெற்றிருந்தாலும் போரினை வழிநடத்தும் தலைவன் இல்லாதபோது பயனில்லை. போர்க்குணம் வேறு, வழிநடத்தும் திறன் வேறு என்றவாறு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தலைமக்கள் இல்வழி தானை இல்.
பதவுரை: நிலைமக்கள்-(போரின்கண்) உறுதிபட நிற்கும் மாந்தர் (இங்கு படை வீரர்கள்); சால-மிகுதியாக; உடைத்து-உடையது; எனினும்-என்றாலும்; தானை-படை; தலைமக்கள்- (படைத்) தலைவர்கள்; இல்வழி-இல்லாத போது; இல்-இல்லை.
|
நிலைமக்கள் சால உடைத்தெனினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும்;
பரிப்பெருமாள்: படையானது நிலையுடைய வீரரைப் பெரிதும் உடைத்தாயினும்;
பரிதி: நிலையுடைய வீரர் உண்டாகிலும்;
காலிங்கர்: எதிர்ப்படை கண்டால் பிறர் காதலிக்க நினையாது தெளிந்து நிற்கும் நிலைப்பாட்டினை உடைய வீரரைச் சால உடைத்தேனும்; [நிலைப்பாட்டினை - உறுதியுடைய]
பரிமேலழகர்: போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்;
'படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'படையில் வீரர் பலர் இருந்தாலும்', 'போர் செய்யுமிடத்து நிலையுடைய வீரரைப் படை மிகுதியாகப் பெற்றிருந்தாலும்', 'போர் வீரர்கள் எண்ணிக்கையில் மிகுந்ததாக உள்ளதானாலும்', 'போரில் பின்வாங்காது நிற்கும் நிலையுடைய வீரர் மிகுதியாக இருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
படையில் நிலையுடைய வீரர் மிகுதியாக இருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
தானை தலைமக்கள் இல்வழி இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தனக்குத் தலைவனை இல்லாத விடத்து வெற்றியில்லையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது படையமைந்தாலும் படைத்தலைவன் அமைக்க வேண்டுமென்றது. இவை இரண்டும் படை ஆளும் திறன் கூறின.
பரிதி: தளவாய் நன்மை இல்லாதபோது சேவகம் இல்லை. [தளவாய் - தளபதி; சேவகம் - வீரன்]
காலிங்கர்: சேனையானது சேனைத் தலைவராகிய தலைமக்கள் இல்லாத இடத்துச் செய்வது ஓர் சேவகம் இல்லை.
பரிமேலழகர்: தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது.
பரிமேலழகர் குறிப்புரை: படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.
'தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல தலைவர் இல்லையெனின் பயனில்லை', 'படைத்தலைவர் இல்லாமல் படை நில்லாது', 'சரியான தளகர்த்தர்கள் இல்லாத சேனை பயனற்றதாகும்', 'தக்க தலைவர்களில்லையானால் படை நிலைபெறாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தலைவர்கள் இல்லாதபோது இல்லையாய் விடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
படையில் நிலைமக்கள் மிகுதியாக இருந்தாலும் தலைவர்கள் இல்லாதபோது இல்லையாய் விடும் என்பது பாடலின் பொருள்.
'நிலைமக்கள்' யார்?
|
வழிநடத்துவோரிடம் உறுதி இல்லையென்றால் படை வெற்றி தேடித் தர இயலாது.
நிலையான வீரர்களை மிகுதியாக உடையதானாலும், படைத் தலைவர்கள் உறுதிப்பாடுடையவர்களாக இல்லாமல் இருந்தால், படை இல்லாதது போன்றதுதான்.
படையில் நிலையுடைய வீரரும் வேண்டும். அது ஆற்றலோடு நிற்கத் தக்க தலைமக்களும் வேண்டும் என்கிறது பாடல்.
தலைமக்கள் என்பது படைத்தலைவர்கள் அதாவது தளபதிகளைக் குறிக்கும் சொல். படைத்தலைவன் வீரர்களுக்கு போர்ப்பயிற்சி கொடுத்து போர்க்களத்தில் வகுப்பமைத்து அவர்களை ஏவிப் போர் செய்விப்பான்.
வீரர்கள் தொல்படையைச் சேர்ந்தவர்கள்தாம்; அவர்கள் வழிவழிவந்த மரபினர்; களம்பல கண்டவர்களே. ஆனாலும் அவர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்த உறுதியான தளபதி இல்லையானால் அப்படை போரில் உறுதியிழந்து போகும்.
உறுதிகொண்ட வீரர்கள் பலராக இருப்பினும் அவரை நடத்திச் செல்லும் உறுதியான தலைவர்கள் வேண்டும். அவ்வாறில்லாமல், படைக்குத் தலைமை தாங்குவோர் உறுதியின்றி போரினிடை கைவிட்டுப் போய்விடுவார் என்றால் அப்படை சிதறுண்டு அழிந்து போம்.
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்தமைவு இல்லாத நாடு (படைமாட்சி 740 பொருள்: வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனில்லை நல்லரசு அமையாத நாட்டிற்கு.) என்பது போன்ற நடையினது இக்குறள்
|
'நிலைமக்கள்' யார்?
'நிலைமக்கள்' என்றதற்கு நிலையுடைய வீரர்கள், நிலைப்பாட்டினை உடைய வீரர்கள், நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர்கள், நிலைபெற்ற வீரர்கள், போரில் அஞ்சாது நிற்கும் நிலையுடைய வீரர்கள், போரின்கண் நின்று போராடக் கூடிய வீரர்கள், வீரர்கள், போர் செய்யுமிடத்து நிலையுடைய வீரர்கள், போரில் நிலை பெற நிற்கும் பழமையான வீரர்கள், போரில் பின்வாங்காது நிற்கும் நிலையுடைய வீரர்கள், போரைக் கண்டு அஞ்சி ஓடாத வீரர்கள், நெடுங்காலமாக உள்ள வீரர்கள், நின்று போரிடும் வீரர்கள், போரிற் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவர்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இக்குறளுக்கான காலிங்கர் உரை 'எதிர்ப்படை கண்டால் பிறர் காதலிக்க நினையாது தெளிந்து நிற்கும் நிலைப்பாட்டினை உடைய வீரரைச் சால உடைத்தேனும்..' என்கிறது. இவர் நிலைமக்கள் என்போர் உறுதிப்பாடுடைய வீரர்கள் எனக் கொள்கிறார்.
இவ்வுரைக்குப் 'படை எடுத்து வரும் எதிர்ப்படை கண்டால்,அதன் கண் உள்ள பிறர் இவ்வரணையும் - இப்படைகளையும் நம் கையகப்படுத்தினால் என்ன என்று காதலிக்க நினையா வண்ணம் உறுதியான மூலப்படையை மிகவுடையதேனும், என்று தொல்படையின் இயல்பை விதக்கின்றது' எனத் தண்டபாணி தேசிகர் விளக்கம் தருவார். இவர் விளக்கம் நிலைமக்கள் என்பது தொல்படை வீரர்களைக் குறிப்பதாக உள்ளது. 'நிலைமக்கள் உறுப்பில் பிண்டமாகிய உடல்போல்பவர். தலைமக்கள் அறிவுபோல்வர். உடல் ஒழுங்கான முறையில் தொழிற்பாடுற இயக்கும் அறிவு தேவையாதல் போலச் சேனைக்குத் தலைவன் தேவை என்பதாம்' என்றும் தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார்.
படையில் நிலைமக்கள் பலர் உண்டு என்றாலும் படைநடத்தவல்ல தலைவர்கள் இல்லாதுபோனால் அது நிலைக்காது எனச் சொல்லப்பட்டது.
'நிலைமக்கள்' என்றது உறுதியுடன் அதாவது நிலைத்துநின்று போர்புரியும் வீரர்கள் குறித்தது.
|
படையில் நிலையுடைய வீரர் மிகுதியாக இருந்தாலும் தலைவர் இல்லையெனின் அது உறுதியிழந்து போகும் என்பது இக்குறட்கருத்து.
போர்க்களத்தில் தலைவனோடு சேர்ந்து உறுதியுடன் நிற்கும் படை மாட்சி எய்தும்.
படையில் நிலையுடைய வீரர் மிகுதியாக இருந்தாலும் படைத்தலைவர் இல்லையெனின் நில்லாது.
|