இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:767)

பொழிப்பு (மு வரதராசன்): தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

மணக்குடவர் உரை: உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து, தாரைப் பொறுத்து மேற்செல்லவல்லது படையாவது.
இது முந்திச் செல்லவேண்டுமென்பதூஉம் செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது.
(படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: வந்துள்ள போரைத் தடுக்கும் தன்மையறிந்து பகைவருடைய முன்படைத் தன்மேல் வருவதற்கு முன்னர், தான் அதன் மேல் சென்று பொருவதே படையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து தார்தாங்கிச் செல்வது தானை.

பதவுரை: தார்-முன்படை, முன்னணிப்படை, முன்னே கொடி ஏந்திச் செல்லும் படை அதாவது தூசிப் படை; தாங்கி-மேல்வராமல் தடுத்து; செல்வது-போவது; தானை-படை; தலைவந்த-முன்வந்த, முற்பட்டு வந்த; போர்-சண்டை; தாங்கும்-விலக்கும்; தன்மை அறிந்து-(இயல்பு அறிந்து) இங்கு: வகுப்பு தெரிந்து.


தார்தாங்கிச் செல்வது தானை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாரைப் பொறுத்து மேற்செல்லவல்லது படையாவது;
பரிப்பெருமாள்: முன் வந்த படையைப் பொறுத்து மேற்செல்ல வல்லது படையாவது;
பரிதி: வெட்சி முதலான எட்டுவகை மாலை சூடிப் போர் செய்வது;
காலிங்கர்: மற்று அதனைப் பொறுத்து அடர்த்துச் சென்று நெருக்கவல்லது யாது; மற்று அதுவே தூசி எனப்படுவது என்றவாறு. [அடர்த்துச் சென்று- நெருங்கிச் சென்று; தூசி - முன்படை (தார்)]
பரிமேலழகர்: அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது.

'முன் வந்த படையைப் பொறுத்து மேற்செல்ல வல்லது படையாவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முற்படையைச் செலுத்துவதே சேனையாம்', 'பகையின் முன்னணிப் படையைத் தடுத்து மேற்செல்வது படை', 'பகைவர் மேற் செல்லத் தெரிந்துள்ளதே சேனை', 'எதிர்ப்படையின் தூசிப்படையினைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன் மேல் செல்லவல்லது சிறந்த படையாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவரின் முன்னணிப் படையை விலக்கி மேற்செல்வது படையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது முந்திச் செல்லவேண்டுமென்பதூஉம் செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிப்பெருமாள்: அவ்விடத்துற்ற போரினைத் தடுக்கும் இயல்பு அறிந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முந்திச் செல்லவேண்டுமென்பதூஉம், செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிதி: மாற்றானைக் கண்ட படை என்றவாறு.
காலிங்கர்: எதிர்ப்படை வந்து தலைப்பட்ட காலத்து இவ்வாறு பொருவேம் என்று எண்ணிக் கலங்காது.
பரிமேலழகர்: மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.

'உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்த போரைத் தடுக்கும் முறையறிந்து', 'தன்மேல் பகை கொண்டு வந்த படையின் போரைத் தடுத்து விலக்கும் அணிவகுப்பின் இயல்பறிந்து', 'போர் மூண்டுவிட்ட காலத்தில்) அப்போதைக்கப்போது ஏற்படுகிற நிலைமைக்குத் தக்கபடி (மாற்றி மாற்றி) வியூகம் வகுத்துக் கொண்டு', 'தன்னை எதிர்த்துப் புரியுஞ் சண்டையினை வெல்லும் முறை அறிந்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன்மேல் வந்த போரைத் தடுத்துநிறுத்தும் முறையறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்மேல் வந்த போரைத் தடுத்துநிறுத்தும் முறையறிந்து பகைவரின் முன்னணிப் படையை விலக்கி மேற்செல்வது படையாம் என்பது பாடலின் பொருள்.
'போர்தாங்கும் தன்மை' என்றால் என்ன?

தடுப்பதற்கும் தாக்குவதற்குமான வகுப்பு அமைக்கும் திறன் கொண்டது படை.

தன் மேல்வரும் படையை எதிர்நிறுத்தும் தன்மையை அறிந்து, பகையினது முன்படையை எதிர்த்துச் செல்வதே படையாகும்.
பகையின் முன்னணிப்படை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதன் படை வகுப்பை (வியூகத்தை) அறிந்து அதை எதிர்கொள்ளும் வகையில் தன் படையின் அணிவகுப்பை மாற்றி அமைத்து பகையின் முன்னேற்றத்தைத் தாங்கி அதாவது தடுத்து நிறுத்தி, அதே வேளை தன் படையை பகையின் மேல் செலுத்தித் தாக்குதல் நடத்தவேண்டும். போரைத் தடுக்கும் இயல்பு அறிந்து இருக்க வேண்டும்; பகைவரின் முன்படையின் வகுப்புமுறையைப் பிளந்து முன்னேறிச் செல்லவும் வேண்டும்' எனப் போர்முனையில் படை செய்யவேண்டியன சொல்லப்பட்டது.
'தார்' என்ற சொல் முன்னே கொடி தாங்கிச் செல்லும் படை அதாவது தூசிப் படையைக் குறிக்கும். தூசிப்படை. எல்லாப் படைகளுக்கும் முன்சென்று வழியை ஒழுங்கு செய்துகொண்டு செல்லும் படை. அப்படையைத் தடுத்து நிறுத்தி வென்ற பின்னர்தான் அணிவகுப்பிலுள்ள பிற படைகளுடன் போர் செய்தல் இயலும்.
'தலை வந்த' என்ற தொடர் முன் வந்த அல்லது முற்பட்டுவந்த எனப்பொருள் தரும்.

பரிதி தார் என்பதற்கு மாலை எனப் பொருள் கொண்டார். போருக்குச் செல்லும் போது ஒவ்வொரு வகையான அடையாளப் பூவினை அணிந்து செல்வது பண்டைய மரபு. அதனைத் தொல்காப்பியம் புறத்திணை ஏழு என்று சொல்லும். புறப்பொருள் வெண்பாமாலை எட்டாகக் கூறும். பரிதி தார்தாங்கி என்பதற்கு எட்டுவகையான மாலை சூடிப்போர் செய்வது எனக் குறிப்பிடுகிறார். (வெட்சி முதலாக வாகை ஈறாகச் சொல்லப்பட்ட மாலை ஏழும் அவரவர்க்குரிய அடையாள மாலை ஒன்றும் ஆக எட்டுவகை மாலை.) 'தார்பூண்டு, அணிந்து, என வினை வாராது. குறளில் 'தார்தாங்கிச் செல்வது' என வந்துள்ளதால் அவ்வுரை சாலாது' என இரா சாரங்கபாணி கருத்துரைத்து '‘செல்வது’ என்பது வஞ்சித் திணைக்குரிய மேற்சேறல் என்னும் ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். அங்ஙனம் மேற்செல்லுங்கால், மேற்கொள்வார் தூசிப்படையை (தார்) எதிர்த்து மேற்செல்வர். இதுவே புறத்திணை இலக்கணம். ஆதலின் பகைவர் தூசிப் படையைத் தன்மேல் வாராமல் தடுத்துத் தான் அதன்மேற் செல்வது' என விளக்குவார்.

'போர்தாங்கும் தன்மை' என்றால் என்ன?

'போர்தாங்கும் தன்மை' என்றதற்குப் போரினைத் தடுக்கும் இயல்பு, இவ்வாறு பொருவேம் என்று எண்ணிக் கலங்காத தன்மை, படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு, பகைவரின் போரைத் தாங்கி, போரினைத் தடுக்கும் திறத்தை அறிந்து, பகையினை விலக்கி மேற்செல்லும் தன்மை, போரைத் தடுக்கும் முறை, போரைத் தடுத்து விலக்கும் அணிவகுப்பின் இயல்பு, போரை நடத்த வேண்டிய விதம், பகைப்படையின் போரைத் தடுக்கும் வகை, சண்டையினை வெல்லும் முறை, போரைத் தடுக்கும் தன்மை, எதிர்த்து வெல்லும் தன்மை, போரை விலக்கும் வகை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

போர் தாங்கும் தன்மை என்பது இன்ன வகைப் படைவகுப்போடு தன்னை எதிர்த்து வரும் படையை இன்ன வகையால் தடுத்து நிறுத்த வேண்டும் என்னும் முறையைச் சொல்வது. இது போர்முனையில் அவ்வப்போது நடக்கும் சண்டைக்கு ஏற்ப அணிவகுப்பது அதாவது சமயத்துக்கேற்றபடி வியூகம் வகுத்துக் கொள்வதைக் குறிக்கும். காட்டாக தம் படைக்குப் பின்புறத்திலே அச்சம்கண்டபோது பாம்பு வட்டமிட்டாற்போல வளைவாக அமைக்கப்பெறுவது சக்கரவியூகமாகும்.

'போர்தாங்கும் தன்மை' என்ற தொடர் போரைத் தடுத்து நிறுத்தும் முறை என்ற பொருள் தரும்.

தன்மேல் வந்த போரைத் தடுத்துநிறுத்தும் முறையறிந்து பகைவரின் முன்னணிப் படையை விலக்கி மேற்செல்வது படையாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வகுப்புமுறையை ஆளும் திறனும் படைமாட்சியாம்.

பொழிப்பு

தன்மேல் வந்த போரைத் தடுக்கும் முறையறிந்து முன்னணிப் படையைத் செலுத்துவதே படையாம்.