இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0761



உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:761)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

மணக்குடவர் உரை: யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்.
ஆதலால் படைவேண்டும்.

பரிமேலழகர் உரை: உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.
(ஈண்டுப் படை என்றது, அந்நான்கன் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.)

சி இலக்குவனார் உரை: படைகட்கு உரிய பலவகை உறுப்புகளும் பொருந்தி போரில் ஏற்படும் துன்பத்திற்கு அஞ்சாத, பகைவரை வெல்லக்கூடிய படை, அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.

பதவுரை: உறுப்பு-அங்கம்; அமைந்து-நிறைந்து; ஊறு-துன்பம், இடையூறு; அஞ்சா-நடுங்காத; வெல்-வெற்றி கொள்கின்ற; படை-படை; வேந்தன்-ஆட்சித் தலைவன்; வெறுக்கையுள்-செல்வங்கள் எல்லாவற்றுள்ளும்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.


உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை;
பரிப்பெருமாள்: யானை, குதிரை, கருவிகளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை;
பரிதி: சதுரங்கபலம் உண்டாகிய அரசர்க்கு அழிவு வந்தால் கலங்கா மனம்; [சதுரங்கபலம் - நால்வகைப் படைப்பலம்]
காலிங்கர்: பாதாதிகேசமாக ஓர் ஆள் என்றதற்குத் தக உறுப்பினால் முற்றுப் பெற்றுக் கணை கருவி முதலாயவற்றான் வந்துற்ற வடுப்பாட்டிற்கும் சிறிதும் கண்ணாஞ்சாத வீரப்படையானது; [பாதாதிகேசமாக - உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை; கணை கருவி முதலாயவற்றான் - அம்பு, வாள் முதலியன; வடுப்பாட்டிற்கும் - ஆறிய புண்ணிற்கும்]
பரிமேலழகர்: யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; [ஊறு -படைகள் உறுவதால் ஏற்படும் புண் முதலியன]

'உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உறுப்பு என்றதற்குக் காலிங்கர் தவிர்த்த ஏனைய உரையாசிரியர்கள் 'யானை முதலிய நான்கு உறுப்பு' எனக் கொண்டனர். காலிங்கர் காலாட்படையிலுள்ள வீரரை மட்டுமே குறிக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'போருடல் பெற்றுப் புண்ணுக்கு அஞ்சாத வெற்றிப்படை', 'உடலுறுப்புகள் நன்கு அமைந்து போரில் வரும் இடையூறுகளுக்கு அஞ்சாமல் வெல்லும் படை', '(ஒரு சேனைக்கு வேண்டிய) எல்லாப் பிரிவுகளும் அமைந்ததாக, இடையூறுகளுக்கு அஞ்சாமல் முன்னேறி வெல்லக்கூடிய ஒரு சேனை', 'யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகை உறுப்புகளும் பொருந்திச் சண்டையில் காயப்படுதற்கு அஞ்சாத படையானது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

படைக்குரிய எல்லா உறுப்புகளும் பொருந்தி, போர்த் துன்பங்களுக்கு அஞ்சாத வெற்றிப் படை என்பது இப்பகுதியின் பொருள்.

வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்.
மணக்குடவர் குறிப்புரை: ஆதலால் படைவேண்டும்.
பரிப்பெருமாள்: அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆதலால் படைவேண்டும்.
பரிதி: செல்வத்துளெல்லாம் தலையான செல்வம் என்றவாறு.
காலிங்கர்: அரசன் படைத்த செல்வத்துள் எல்லாம் பெரிதும் தலைமைப் பாடுடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுப் படை என்றது, அந்நான்கன் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார். [வேறல் கூடாமையின் - வெல்லுதல் முடியாமையின்; ஒழிந்த அங்கங்கள் - குடி கூழ் அமைச்சு நட்பு அரண் முதலியன]

'அரசன் படைத்த செல்வத்துள் எல்லாம் பெரிதும் தலைமைப் பாடுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேந்தன் செல்வத்திற் சிறந்தது', 'அரசனுக்குரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் மேம்பட்டதாம்', 'அரசனுக்குள்ள எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வம்', 'அரசனது செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான செல்வமாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசின் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையானதாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுப்பமைந்து, போர்த் துன்பங்களுக்கு அஞ்சாத வெற்றிப் படை, அரசின் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையானதாம் என்பது பாடலின் பொருள்.
'உறுப்பமைந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

வீரத்துடன் சண்டையிட்டு வெற்றி கொணரும் படை ஓர் அரசுக்குப் பெருஞ்செல்வமாம்.

போர்க்குரிய எல்லாப் பகுதிகளும் நிறைந்ததாய்ப் போரின்கண் நேரத்தக்க எத்தகைய இடையூறுகட்கும் அஞ்சாததாய் நின்று பகையை வெல்லத்தக்க படை, அரசினது தலையாய செல்வமாகும்.
உறுப்பு என்பது போர் செய்யும் அங்கத்தைக் குறிப்பது. இவ்வங்கங்கள் காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடியவை. முன்பு இச்சொல் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் பகுதிகளையும் குறித்ததாக இருந்தது. இன்று ஒரு படையின் உறுப்புக்களாக நிலம், நீர், வான் படைகள் (army, navy, airforce) ஆகியன அறியப்படுகின்றன.
போர்க்களத்தில் புண்படுதல், உறுப்பிழத்தல், உயிர்நீப்பு இவற்றிற்கெல்லாம் அஞ்சாது நாட்டிற்காக ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் பகைவருடன் சண்டையிடும் திறம் கொண்ட படையே வெல்படை. அத்தகைய வீரக் குணம் கொண்ட படையை அரசு பெற்றிருக்க வேண்டும்.
இவ்விதம் போர்க்கான உறுப்புக்கள் எல்லாம் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே ஓர் அரசுக்கான செல்வங்களுள் தலைமையானது.

இக்குறள் அரசின் படை பற்றிச் சொல்கிறது. ஆனால் என்னென்ன உறுப்பு என்று, அதிகாரத்தின் எந்தக் குறளிலும் சொல்லப்படவில்லை. 'உறுப்பமைந்து' என்ற தொடர் எக்காலத்துக்கும் ஏற்ற பொருள் தரக்கூடியதாக உள்ளது. பொதுமையிற் கூறப்பட்டுள்ளதால் உறுப்பு என்ற இடத்தில் அந்தந்த காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் படைப்பிரிவுகளை நிரப்பிக் கொள்ளலாம். மாறிக்கொண்டிருக்கும் போர்முறைகளை நன்கு உணர்ந்தே வள்ளுவர் பொதுமையில் சொல்லியுள்ளார்.

'உறுப்பமைந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

உறுப்பமைந்து என்ற தொடர்க்கு நேர் பொருள் 'உறுப்புகளும் பொருந்தி' என்பது. 'உறுப்பமைந்து' என்றதற்கு யானை, குதிரை, தேர், காலாள் முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்த படை என்று காலிங்கர் நீங்கலான மற்றத் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். காலிங்கர் 'பாதாதிகேசமாக ஓர் ஆள் என்றதற்குத் தக உறுப்பினால் முற்றுப் பெற்ற வீரப்படை' என்று பொருள் கூறினார். இவ்வாறு ‘உறுப்பு’ என்பதற்குப் படைவகை எனவும் காலாட்படையின் உடலுறுப்பு எனவும் பொருள் உரைக்கப்பட்டது. இங்கு பேசப்படும் போருக்குரிய அங்கம் எது? போரில் பேருதவி செய்யும் மற்றப் பெரும்பிரிவுகளா? அல்லது போர்வீரர்கள் மட்டும் தானா?
இவ்வதிகாரத்துக் காலாட்படையின் மாட்சியே பேசப்படுதலானும் ஊறஞ்சாமைக்கு உடலுறுப்பும் நன்கு அமைந்திருத்தல் ஒரு காரணம் ஆதலானும் காலிங்கர் உரை அதாவது அங்கமாகப் போர்வீரர் என உரைக்கப்பட்டது சிறப்புடைத்து என்பார் இரா சாரங்கபாணி. இதை ஏற்றுத் தண்டபாணி தேசிகர் 'படைமாட்சி அதிகாரம் படைகளில் யானையுங் குதிரையும் மாட்சியைப் பகுத்தறிவோடு விரும்பி மேற்கொள்வன அல்ல. ஏவ இயங்குவன. தேர் இயக்கப்படுவன; ஆகவே ஊறு அஞ்சா மாட்சியை இயல்பாக உடையதும், அதனை இடுக்கட்படினும் விட்டுக் கொடுக்காததும் காலாட்படை ஒன்றே. ஆதலால் இவ்வதிகாரம் காலாட்படையின் மாட்சியைக் கூறவந்ததேயாம். அதற்கேற்பக் காளிங்கர் 'ஆள் முழுமையாகத் தானிருக்கிறான் உறுப்பறையில்லை. ஆனாலும் போரில் ஊறுவரின் அஞ்சாமையும் வேண்டும். அத்தகைய காலாட்படையே அரசன் தேடிய பொருள்களிற் சிறந்த பொருள்; தலையாய பொருள்' என்கிறார்' என அதை வழி மொழிகிறார். மேலும் 'போருடல் பெற்றுப் புண்ணுக்கு அஞ்சாத வெற்றிப்படை' என்ற வ சுப மாணிக்கம் கருத்தையும் துணைகொள்கிறார் இவர்.

இவ்வதிகாரத்தில் மற்ற படைப்பிரிவுகள் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பது உண்மையென்றாலும் உறுப்பு என்றது போர் வீரர்களின் உடல் மட்டுமன்றி அன்றைய காலத்துக் கப்பற்படை, வான்படை போன்ற படைப்பிரிவுகளையும் உள்ளடக்கியது என எண்ணுவதில் குற்றமில்லை,

படைக்குரிய எல்லா உறுப்புகளும் பொருந்தி, போர்த் துன்பங்களுக்கு அஞ்சாத வெற்றிப் படை, அரசின் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையானதாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

போர்க்களத்து ஊறுகளுக்கு அஞ்சாத படைமாட்சி கூறுவது.

பொழிப்பு

படைக்குரிய எல்லா உறுப்புகளும் அமைந்து, போர்த் துன்பங்களுக்கு அஞ்சாத வெற்றிப் படை, அரசின் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையானதாம்