இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0671 குறள் திறன்-0672 குறள் திறன்-0673 குறள் திறன்-0674 குறள் திறன்-0675
குறள் திறன்-0676 குறள் திறன்-0677 குறள் திறன்-0678 குறள் திறன்-0679 குறள் திறன்-0680

கொள்கையைச் செயல்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன.....வழிமுறைகளும் விளைவுகளும் சமாதானத்தாலும் வெற்றியாலுமே கணிக்கப்படும்.
- தெ பொ மீனாட்சிசுந்தரம்

வினை செயல்வகை என்பது செயல் ஆற்றும் திறம் கூறுவது . ஆதாரங்கள், வழிமுறைகள், பொருத்தமான காலம், ஏற்றஇடம், செயல்தன்மை இவற்றைப் பார்த்துசெயல் புரிக என அறிவுறுத்தப்படுகிறது. எல்லாவகையான செயல்களுக்கும் பொருந்தும்வகையில் பாக்கள் அமைந்திருந்தாலும், போர், பகைநீக்கல் தொடர்பான செயல்கள் பற்றியன இவ்வதிகாரத்தில் மேலோங்கித் தெரிகின்றன.

வினை செயல்வகை

வினைத்திட்பம் உடையவர், ஆராய்ந்து ஓர்ந்து தெளிந்து, செயலை முடிக்கும் வழி கூறுவது இத்தொகுப்பு. செயலின் நோக்கத்தை அறிந்து திறம்படச் செய்யும் 'வினை செயல்வகை' எல்லாருக்கும் பொது. திண்ணியராகிய யாவரும் - குடிகள், அரசு, அமைச்சர் வினைகளைச் செய்யும் திறம் கூறுவது.
விரைந்து செய்யத்தக்கவை, காலம் தாழ்த்திச் செய்யலாம் எனப் பிரித்து அதன்படி செய்க; ஆராய்ந்து முடிவு எடுத்தபின் காலத்தாழ்ச்சியின்றி செய்யாவிட்டால் திட்டத்திற்கு தீங்கு நேரலாம்; எப்படி நெருப்பை முழுமையாக அணைக்காவிட்டால் தீமை விளைவிக்குமோ அவ்விதம் முற்றாக முடிக்காத செயல்களும் இழப்புகளை உண்டாக்கும். நோக்கம், தடைகள், பயன்கள் கருதி செய். தொழிலின் நுட்பம் யாருக்குத் தெரியுமோ அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதனைச் செய்யத் தொடங்கு. யானையை வைத்து யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயலைக் கொண்டு வேறு செயலையும் முடிப்பது செயல்திறனை மிகுவிக்கும். நண்பர்களுக்கு நன்மை செய்வதுடன், ஒதுங்கி இருப்போருடன் கூட்டு வைத்துக் கொண்டு உன் வலிமையைக் கூட்டிக்கொள். வலியாருடன் அமைதி வழியில் போவது வரவேற்கத்தக்கது. இவை இவ்வதிகாரப் பாடல்கள் கூறும் ஆலோசனைகள்.

வினை செயல்வகை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 671ஆம் குறள் கலந்து ஆலோசனை செய்தலின் முடிவு துணிவுபெறுதல்; துணிந்த அச்செயல் கால நீட்டிப்பின்கண் நிற்றல் கேட்டினைத் தரும் என்கிறது.
  • 672ஆம் குறள் தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க; விரைந்து செய்யவேண்டிய வேலைகளை விரைவோடு செய்து முடிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
  • 673ஆம் குறள் இயலக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்தல் நல்லது; இயலாதபோது முடிக்கும் வழிகளை ஆராய்ந்து செய்க என்பதைச் சொல்கிறது.
  • 674ஆம் குறள் மேற்கொண்ட செயல், நீக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டினது ஒழிவுபாடுகள், எண்ணிப்பார்த்தால் தீயினது ஒழிவு போல அழிக்கும் என்கிறது.
  • 675ஆம் குறள் செயல் மேற்கொள்ளும்போது பொருள், கருவி, காலம், செயல், இடம் என்ற ஐந்தினையும் குற்றமற ஆராய்ந்து செய்க என்பதைத் தெரிவிக்கிறது.
  • 676ஆம் குறள் செயல் முடிவும், செய்யும்போது ஏற்படும் துன்பங்களும், முடிந்த பின்னர் அடையும் பயன்களும் ஆகியவற்றைச் சீர்தூக்கிச் செய்க என்கிறது.
  • 677ஆம் குறள் செய்யப்படும்செயலை மேற்கொண்டவன் செய்யும்முறை அச்செயலை நன்கறிந்தவனது கருத்தினைத் தாம் அறிந்து கொள்ளுதல் எனச் சொல்கிறது.
  • 678ஆம் குறள் ஒரு செயலால் பிறிதொரு செயலும் ஆகும்படி செய்துகொள்ளுதல் நனைந்த கன்னத்தையுடைய யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடித்தது போலாம் என்கிறது.
  • 679ஆம் குறள் நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைந்து செய்யவேண்டும் தம்மோடு ஒட்டாது விலகி இருப்பாரை நட்பாக்கிக் கொள்ளுதல் எனக் கூறுகிறது.
  • 680ஆவது குறள் சிறிய இடத்தில் உள்ளோர், தமது குடி உள்ளம் நடுங்குவரே என்று அஞ்சி, வலியர் தம் இணக்கத்திற்கு இசைந்தால், அவரைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர் என்கிறது.

வினை செயல்வகை அதிகாரச் சிறப்பியல்புகள்

அணையாமல் விட்டுசென்ற சிறுதீ பெரும் அழிவை உண்டாக்கவல்லது. இதை உவமையாகக் கொண்ட பாடல் அரைகுறையாக முடிக்கப்பட்ட செயலும் குறைவைத்த பகை நீக்கலும் தீங்கு பயப்பன எனச் சொல்கிறது. அப்பாடல்: வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் (674)

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (676) என்ற குறள் ஒரு செயலை எப்பொழுது எப்படி முடிவுக்கு கொண்டுவருவது, தடைகள் என்னென்ன நேரலாம், செயல் முடிவில் அடையக்கூடிய பயன் பெரிதா என்பனவற்றைச் சீர்தூக்கிச் செய்ய வேண்டும் என்ற மேலான மேலாண்மைக் கருத்து ஒன்றைத் தருகிறது.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் (679), உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து (680) ஆகிய குறட்பாக்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குதலையும் வலியாரிடம் அமைதி உடன்பாடு கொள்வதையும் வலியுறுத்துகின்றன. இவை பகை நீக்கலுக்கு உதவும் அரிய அறிவுரைகள்.
குறள் திறன்-0671 குறள் திறன்-0672 குறள் திறன்-0673 குறள் திறன்-0674 குறள் திறன்-0675
குறள் திறன்-0676 குறள் திறன்-0677 குறள் திறன்-0678 குறள் திறன்-0679 குறள் திறன்-0680