இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0680உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:680)

பொழிப்பு (மு வரதராசன்): வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.

மணக்குடவர் உரை: உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர்.
இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.
(இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: ஆளும் இடம் சிறியராய் உள்ள அரசர், தம்மினும் பெரியார் தம்மீது போர்க்கு எழுந்துழி தம் நாட்டில் உள்ளார் துன்பத்தால் நடுங்கலுக்கு அஞ்சி, சமாதானம் ஏற்பட வழி பெற்றால் அவரைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வர்.

பதவுரை:
உறை-வாழுமிடம்; சிறியார்-சிறிதாகவுடையவர், மெலியர்; உள்-பகுதி; நடுங்கல்-அஞ்சுதல்; அஞ்சி-நடுங்கி; குறை-குறை; பெறின்-(தீரப்)பெற்றால்; கொள்வர்-ஏற்றுக்கொள்வர்; பெரியார்-பெரியநாட்டார், வலியவர்; பணிந்து-வணங்கி.


உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சி;
பரிப்பெருமாள்: உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சி;
பரிதி: பெலயீனனான ராசா தன்னை வந்து அடைந்தால்;
காலிங்கர்: உலகத்துப் பொருள் வலி முதலிய அனைத்தானும் தம் பகைவரின் சிறியர் யாவர் சிலர் மற்று அவர் பகைவரால் தமக்கு உள் நடுக்கம் வருதலை அஞ்சி;
பரிமேலழகர்: ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர் தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி;
பரிமேலழகர் குறிப்புரை: இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது.

'தம் பகைவரின் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு', 'சிறிய இடத்தில் வாழ்வோர் தம்மவர் பெரும்பகைக்கு உள்ளம் நடுங்குதல் கண்டு அஞ்சி', 'இடம் பொருள் ஏவல்களில் குறைந்தவர்கள், தம்மைச் சேர்ந்தவர்கள் நடுங்குவதற்காகப் பயந்து', 'சிறிய நாட்டினை ஆள்வோர், தம்மினும் பெரிய அரசர் படை எடுத்த இடத்துத் தம் குடியும் படையுங் கலங்கும் என்று பயந்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிறிய இடத்தில் உள்ளோர் (குடி) உள்ளம் நடுங்குவரே என்று அஞ்சி என்பது இப்பகுதியின் பொருள்.

குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர்.
மணக்குடவர் குறிப்புரை: இது சிறையானால்* இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது. [*சிறியனாயின் உரைப்பிரதிபேதம்]
பரிப்பெருமாள்: தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சிறியனாயின் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது. இவை எல்லாம் அரசற்கும் ஒக்கச்செய்ய வேண்டுமாயினும் அமைச்சுத் தொழிலாதலான் ஈண்டுக் கூறப்பட்டன.
பரிதி: அவன் காரியத்தைப் பார்ப்பது மந்திரி தத்துவம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரினும் பெரிய வேந்தர்மாட்டுத் தமது குறைகூறி அவர்களை வணங்கி வழிபட்டுப் படைத்துணையாகக் கொள்வர்.
பரிமேலழகர்: அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.

'தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர்' என மணகுடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'பெரிய வேந்தர்மாட்டுத் தமது குறைகூறி அவர்களை வணங்கி வழிபட்டுப் படைத்துணையாகக் கொள்வர்' எனப் பொருள் உரைத்தார். பரிமேலழகர் 'அந்நிலைக்கு வேண்டுவதாய சமாதானம் கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்' என மொழிந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூதுவரின் பேரரசரைப் பணிந்து கொள்வர்', 'குறை தீரப் பெறுவதாயின், தம்மைவிட வலிமைமிக்க பெரியவர்களைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர்', 'தம்மினும் இடம் பொருள் ஏவல் முதலியவற்றில் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பணிந்து (சமாதானம் செய்து கொண்டு) அதற்காகப் பிறர் குறை சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள்', 'எதிரிகள் இணக்கத்திற்கு இசைந்தால், அதனைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வலியர் இணக்கத்திற்கு இசைந்தால், அவரைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறிய இடத்தில் உள்ளோர், தமது குடி உள்ளம் நடுங்குவரே என்று அஞ்சி, வலியர் தம் இணக்கத்திற்கு இசைந்தால், அவரைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர் என்பது பாடலின் பொருள்.
'குறைபெறின்' என்ற தொடரின் பொருள் என்ன?

மெலியார் தம் வலி அறிந்து, அமைதி உண்டாகுமானால், பணிந்து ஏற்க.

சிறிய நாட்டினர் தம்மினும் வலியாரால் தம் குடி கலங்கக் கூடும் என்று அஞ்சி, தாம் வேண்டியது கிடைக்குமானால் அவரைப் பணிந்து அவர் தம் நட்பை ஏற்றுக் கொள்வர்.
உறைசிறியார் என்ற தொடர் வாழுமிடம் அதாவது நாடு சிறியதாக உள்ளதை ஆள்வோர் எனப் பொருள்படும். மெலியார் எனவும் கொள்ளலாம். உள்நடுங்கல் அஞ்சி என்ற தொடர் மனதுள் நடுங்குவரே என்பதை எண்ணி அஞ்சி என்ற பொருள் தரும். குறைபெறின் என்பது தமது குறைகளைக் கேட்டு இணக்கம் பெற்றால் எனக் கொள்வர். பெரியார் என்ற சொல் பெரிய நாட்டார் அதாவது வலியார் எனப்படும்.
சிறிய நாட்டை ஆள்பவர், தம் குடிகள் பகையின் வலிமையை எண்ணி உள்ளம் நடுங்குவதை உணர்ந்து, பெரியநாட்டாரோடு இணக்கமாகப் போக விழைகின்றனர்; அதன்பொருட்டுச் சில வேண்டுகோள்களை வைக்கின்றறார். அவை பெறப் பெற்றால் பெரியாரைப் பணிந்து அவரை நட்பாகக் கொள்வர் என்பது இக்குறட்பொருள்.

நாட்டுப் பொதுநலம் நோக்கி ஆட்சியாளர் தன்மானத்தை ஒதுக்கிவைப்பர் என்பது இக்குறளின் கருத்து, குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் (குடி செயல்வகை 1028 பொருள்: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரியகாலம் என்று ஒன்று இல்லை; சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடி மேம்பாட்டிற்கான செயல் கெடும்) என்று தனிமனிதர் தன்மானம் பார்த்தால் குடி கெடும் எனவும் குறள் கூறும்.

'குறைபெறின்' என்ற தொடரின் பொருள் என்ன?

'குறைபெறின்' என்ற தொடர்க்குக் குறைதீரப் பெறின், தன்னை வந்து அடைந்தால், குறைகூறி, அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், வேண்டியது கிடைக்குமானால், தமது குறை நீங்கப் பெறுமாயின், தூதுவரின், குறை தீரப் பெறுவதாயின், அதற்காகப் பிறர் குறை சொன்னாலும், அக்குறை நீங்குவதற்காக, எதிரிகள் இணக்கத்திற்கு இசைந்தால், சமாதானம் ஏற்பட வழி பெற்றால், அக்குறை தீரக் கூடிய சந்து வாய்க்கப்பெறின், தாம் எண்ணியபடி உடன்பாடு செய்துகொள்ள இசைவாரானால், பகைவருடன் ஏதேனுமொரு வகையில் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்க்குமாயின், தன்னுடைய குற்றத்திற்காக வருத்தம் தெரிவித்து விடுவாரானால் என்றபடி பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'தம் குறையை தாமே எண்ணி இணக்கத்திற்கு இசைதல் என்ற பொருளே ஏற்புடையது' என்பது தண்டபாணி தேசிகரின் கருத்து. காணப்பெறும் உரைகளுள் 'குறைபெறின்' என்றதற்கு மணக்குடவர் தரும் 'குறைதீரப் பெறின்' என்ற உரை ஏற்கத்தக்கதாக உள்ளது. இவ்வாறு கொண்டால் தமது உதவிஎதிர்பார்ப்பு வலியரால் நிறைவேற்றப் பெறும் என்றால், அவர்களைப் பணிந்து நட்பை ஏற்றுக்கொள்ளலாம் என்பது குறட்கருத்தாகிறது.

'குறைபெறின்' என்ற தொடர் 'குறைதீரப் பெறின்' என்ற பொருள் தரும்.

சிறிய இடத்தில் உள்ளோர், தமது குடி உள்ளம் நடுங்குவரே என்று அஞ்சி, வலியர் தம் இணக்கத்திற்கு இசைந்தால், அவரைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அமைதி நாடி குடிகாத்தலும் நல்லதொரு வினைசெயல்வகையே.

பொழிப்பு

சிறிய இடத்தில் உள்ளோர் தம் பகைத்துன்பத்தால் நடுங்கலுக்கு அஞ்சுவதை எண்ணி, வலியர் இணக்கத்திற்கு இசைந்தால், அவரைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர்.