தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
(அதிகாரம்:வினைசெயல்வகை
குறள் எண்:672)
பொழிப்பு (மு வரதராசன்): காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.
|
மணக்குடவர் உரை:
தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க: தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.
பரிமேலழகர் உரை:
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும்
வினைகளுள் நீட்டியாது ஒழிக.
(இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின்,
அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும்
பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை:
காலம் நீட்டித்துச் செய்யக்கூடிய செயல்களைக் காலம் நீட்டித்தே செய்க. காலந்தாழ்த்தாது செய்யக்கூடிய செயல்களைக் காலந்தாழ்த்தாது விரைந்து
செய்க. கருத்து மாற்றங்களை எதிர்பார்த்தல் ஆகாது என்று ஒரு சிலரை ஒதுக்குதல் ஆகியவற்றில் காலம் நீட்டிப்பது பயன் தரலாம். "காலம் மருந்து"
என்பது அனுபவ வாக்கு. ஆக்கத்தின் பாற்பட்ட பணிகள், பிறர் துன்பம் துடைக்கும் பணிகள் ஆகியவற்றில் காலம் தாழ்த்துதல் கூடாது. இந்த வகைப்
பணிகளில் காலந்தாழ்த்தினால் இல்லையென்று கூறியதாகவே கருதப் பெறும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தூங்கிச் செயற்பால தூங்குக; தூங்காது செய்யும் வினை தூங்கற்க.
பதவுரை:
தூங்குக-காலம் நீட்டிக்க, நிதானமாகச் செய்க; தூங்கி-நீட்டித்து; செயல்-செய்தல்; பால-பகுதி; தூங்காது-நீட்டியாமல்; செய்யும்-செய்யும்; வினை-செயல்; தூங்கற்க-நீட்டியாதொழிக.
|
தூங்குக தூங்கிச் செயற்பால :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க;
பரிப்பெருமாள்: தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க;
பரிதி: மெத்தென்ற காரியம்மெத்தெனவும்;
காலிங்கர்: இப்படி ஆகலான் தொடங்கிய கருமமாணது காலந்தாழ்வு படாது அதனை விரைவோடு செய்து முடிக்க வேண்டும்;
பரிமேலழகர்: நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க;
'தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தாழ்த்துச் செய்யும் வினையைத் தாழ்த்துச் செய்க', 'கால நீட்டிப்புக் கொடுத்துச் செய்யும் செயல்களை நீட்டித்துச் செய்க', 'நிதானமாகச் செய்ய வேண்டிய காரியத்தை நிதானமாகச் செய்ய வேண்டும்', 'விரையாது செய்யக்கூடிய வேலைகளைச் சுணக்கமாகச் செய்ய வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தாழ்த்துச் செய்ய வேண்டும் பகுதிகளைத் தாழ்த்துச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.
தூங்கற்க தூங்காது செய்யும் வினை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.
பரிப்பெருமாள்: தாழாமற் செய்யும் வினையைத் தாழாமற் செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது எய்தியது விலக்கித் துணிந்தாலும் காலம் பார்த்துச் செய்யவேண்டுவன தாழாது செய்க என்றது.
பரிதி: விரையும் காரியம் தூங்காமையும் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்று அக்காலத் தாழ்வு படவேண்டும் கருமப் பகுதி உளதேல் அவற்றிற்கு ஏற்ற காலம் வருகாறும் தாழ்க்க நின்று செய்க;
காலிங்கர் குறிப்புரை: எனவே இங்ஙனம் கடிதிற் செய்து முடித்த கருமம் எச்சக் குற்றம் இல்லை; மற்றைக் காலம் பார்த்து நின்ற கருமமும் எச்சக் குற்றம் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.
பரிமேலழகர்: இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின்,
அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.
'நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உடனே செய்யவேண்டியதைக் கடத்தாதே', 'நீட்டியாது விரைந்து செய்யும் வினைகளை நீட்டற்க', 'உடனே செய்ய வேண்டிய காரியத்தில் தாமதம் கூடாது', 'விரைந்து செய்யவேண்டிய வேலைகளைச் சுணக்கமாக்கக் கூடாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உடனே செய்யவேண்டிய செயல்களை நீட்டற்க என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தாழ்த்துச் செய்ய வேண்டும் பகுதிகளைத் தூங்குக; உடனே செய்யவேண்டிய செயல்களை நீட்டற்க என்பது பாடலின் பொருள்.
'தூங்குக' என்பதன் பொருள் என்ன?
|
செயலின் விரைவுத்தன்மை அறிந்து செயல்பட வேண்டும்.
சில செயல்களை நன்றாக எண்ணி நிதானமாகவே செய்ய வேண்டும். அத்தகையவற்றை தாழ்த்தியே செய்யலாம். உடனே செய்ய வேண்டியவை என்றும் செயல்கள் உண்டு. அவற்றைச் செய்வதில் சிறுதும் நீட்டித்தல் கூடாது.
ஒரு செயலை முடிக்கப் பல்வேறு வழி முறைகள் உள்ளன. ஒரு வினையின் இயல்பையும் அதன் தேவையையும் பொறுத்து விரைந்து செய்வதும் காலம் நீட்டித்து செய்வதும் அமையும். சில திட்டங்கள் குறுகிய காலத்துக்குரியதாகவும் மற்றவை நீண்ட காலத்திட்டங்களாக இருக்கலாம்.
இவற்றில் எதை, எப்பொழுது தொடங்க வேண்டும், எத்திட்டத்தை விரைவாகவும், தாமதமாகவும் செய்யவேண்டும் என்பதைத் திட்டமிடுபவர் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயலைப் பலவகையாகப் பகுக்க இயலும். வழமையானவை, நுண்ணாய்க்குரியன என்று பகுக்கலாம். 'காலம் தாழ்த்தினால் பழுதில்லை', 'காலம் தாழ்த்த முடியாதவை' என வினைகளைப் பகுக்கலாம்; முன்னதைக் காலம் பார்த்துத் தாழ்த்திச் செய்யலாம்; பின்னதை விரைந்து முடிக்க வேண்டும். மாறிச் செய்தால். அஃதாவது மெல்லச் செய்ய வேண்டியதை விரைந்தும், விரைந்து செய்ய வேண்டியதை மெல்லவும் செய்தால், அச்செயல்கள் முடிக்கப்படா; அவ்விதம் செய்வதன் காரணமாக, தீமையும் உண்டாகலாம். கால நிர்வாக மேலாண்மைக்குப் பயன்படுவதாக அமைந்த குறள் இது.
இக்குறளுக்குத் தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு (இறைமாட்சி 383 பொருள்: காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை) என்ற பாடல் மாறுபாடு உடையது போல் தோற்றம் காணும். நீட்டித்துச் செய்யும் பகுதி உண்டென்றால் நீட்டித்து செய்யலாம் என இங்குப் பிரித்து சொல்லப்பட்டுள்ளதால் முரண் இல்லை.
|
'தூங்குக' என்பதன் பொருள் என்ன?
'தூங்குக' என்ற சொல்லுக்குத் தாழ்த்துச் செய்க, மெத்தென, தாழ்க்க நின்று செய்க, நீட்டிக்க, காலந்தாழ்த்தே செய்யவேண்டும், நீட்டித்துச் செய்க, காலம் நீட்டித்துச் செய்யலாம், காலம் நீட்டித்தே செய்க, தாழ்த்துச் செய்க, நிதானமாகச் செய்ய வேண்டும், காலந்தாழ்த்திச் செய்தல் வேண்டும், சுணக்கமாகச் செய்ய வேண்டும், காலம் தாழ்த்துச் செய்யலாம், நிதானமாகவே செய்தல் வேண்டும், மெள்ளச் செய்க என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இங்கு தூங்குக என்பது 'மெதுவாக' என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளது. காலத் தாழ்வு படவேண்டும் என்ற பகுதி உண்டானால் அவற்றிற்கு ஏற்ற காலம் வரும்வரை நீட்டித்து நின்று செய்யலாம், மெதுவாக ஆற அமர பண்ண வேண்டிய வினைகளைப் பொறுமையாக எல்லாக் கோணங்களிலும் ஆய்ந்து தேவைப்பட்டால் காலம் தாழ்த்தியும் செய்யலாம் என்கிறது இப்பாடல்.
எல்லாச் செயல்களையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விரைவிலேயே செய்யவேண்டும் என்பது இக்குறள் கூறும் கருத்து. பதட்டமின்றி செய்யவேண்டியவற்றை மெதுவாக ஆற்றலாம் என்பது உணர்த்தப்படுகின்றது.
'காலம் பார்த்துச் செய்பவை', 'தன்னுடைய நிலைமையானும் காலத்தாலும் அறியப்படுபவை' 'நீண்டகாலத்திட்டத்தில் பகுக்கப்படுவன' 'வலியும் காலமும் ஒவ்வாசெ செயல்கள்' இவை போன்றவை நீட்டிச் செய்யும் வினைகளாம்.
சில நேரங்களில் எல்லாக் கோணங்களிலும் பதட்டமின்றிச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டியதிருக்கும். சில செயல்களைச் சிறுது பொறுத்துச் செய்வதில் குற்றமுண்டாகாது. அவற்றில் விரைவுபடக் கூடாது. இங்கேதான் வினைசெய்யும் ஆற்றல் வெளிப்படும். காட்டாக ஒரு நெருக்கடியான சூழலை நோக்கலாம்: பெருமழை பெய்துகொண்டே இருக்கிறது; ஏரிகள் நிரம்பி வழிகின்றன; மாநகரத்துக்குள் ஏற்கனவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது; இந்த நேரத்தில் ஏரிகளின் மதகுகளைத் திறந்துவிடலாமா வேண்டாமா என்ற முடிவை நன்கு சிந்தித்து சாதக பாதகங்களை எண்ணிக் காலத்தாழ்ச்சியுடன் செய்யலாம். விரைந்து செயல்படுகிறோம் என்ற பெயரில் அடைப்புகளை நீக்கிவிட்டால் சொல்லொண்ணா உயிர் இழப்புகளும் உடைமை அழிவுகளும் தாம் உண்டாகும்.
வலி, காலம், செயலின்தேவை போன்றவை தூங்கிச் செய்தலுக்குக் காரணங்களாக அமையும்.
'தூங்குக' என்ற சொல்லுக்குத் தாழ்த்துச் செய்க என்பது இங்கு பொருள்.
|
தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க; விரைந்து செய்யவேண்டிய வேலைகளை விரைவோடு செய்து முடிக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.
செயலுக்கு ஏற்ற விரைவில் செய்யவேண்டும் என்னும் வினைசெயல்வகை ஒன்று சொல்லப்படுகிறது. .
காலம் நீட்டித்துச் செய்ய வேண்டிய வினைகளைத் தாழ்த்துச் செய்யலாம். உடனடியாக செய்ய வேண்டிய செயல்களை விரைந்து செய்க.
|