இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0675



பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:675)

பொழிப்பு (மு வரதராசன்): வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக.
இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.

பரிமேலழகர் உரை: பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க.
(எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவன் தொழில் மேற்கொள்ளும்போது பொருள், கருவி, காலம், செயல், இடம் என்று கூறப்பட்ட இவ்வைந்தினையும் மயக்கந் தீர ஆராய்ந்து செயல்புரிவானாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.

பதவுரை:
பொருள்-ஆதாரம்; கருவி-சாதனம்; காலம்-பருவம்; வினை-செயல்; இடனொடு-இடமும்; ஐந்தும்-ஐந்தும்; இருள்-மயக்கம்; தீர-அற; எண்ணி-நாடி; செயல்-செய்க.


பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும்;
மணக்குடவர் குறிப்புரை: இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.
பரிப்பெருமாள்: பொருளும், கருவியும், காலமும், செய்யும் வினையும் பகைவரைப் பொருதற்குரிய இடமுமென்னும் ஐந்தினையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒவ்வொன்றும் இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் பிறர்க்காம் காலமும், 4. வினையாவது தான் செய் வினையும் பகைவர் செய் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பிறர்க்காம் இடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டும் என்று முற்கூறப்பட்டன.
பரிதி: பொருள்செய்வகை, கருவி, காலம் அறிதல், வினை செயல்வகை, இடம் அறிதல் இந்த ஐந்து காரியமும்;
காலிங்கர்: எடுத்துக்கொண்ட கருமம் முடிவுகாறும் நடத்த வேண்டும் பொருளும், அஃது இயற்றுதற்கு உரிய கருவிகளும், அது வாய்த்தற்கு அடுத்த காலங்களும், அது செய்தற்கு அமைந்த இடன் ஆகிய நிலன் என்னும் இவை ஐந்தும் இயையுமாறு;
பரிமேலழகர்: வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்;
பரிமேலழகர் குறிப்புரை: எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும்.

'பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் கருவி காலம் செயல் இடம் என்ற ஐந்தினையும்', 'செய்ய நினைக்கும் காரியத்தின் நோக்கம், அதற்கு வேண்டிய சாதனங்கள், செய்யத் தகுந்த பருவ காலம், செய்ய வேண்டிய காரிய நுணுக்கம், தகுந்த இடம் ஆகிய ஐந்து விஷயங்களையும்', 'ஒரு காரியத்தைச் செய்யும் இடத்து அதற்கு வேண்டும் பொருளும், துணைக்கருவியும், செய்தற்கு உரிய காலமும், செய்கையின் தன்மையும், செய்யும் இடமும் ஆகிய ஐந்தினையும்', 'வினை செய்யுங்கால் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ் ஐந்தினையும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயல் மேற்கொள்ளும்போது பொருள், கருவி, காலம், செயல், இடம் என்ற ஐந்தினையும் என்பது இப்பகுதியின் பொருள்.

இருள்தீர எண்ணிச் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக.
பரிப்பெருமாள்: மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக.
பரிதி: எண்ணிச் செய்க என்றவாறு.
காலிங்கர்: மயக்கம் அற ஆராய்ந்து செய்தலே கடனாவது என்று அரசர்க்கு அமைச்சன் வினை செயல்வகை கூறியது இதன் கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: மயக்கம் அற எண்ணிச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.

'மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மயக்கமற ஆராய்ந்து தெளிக', 'சந்தேகத்துக்கு இடமில்லாதபடி ஆராய்ந்து அறிந்து கொண்ட பிறகுதான் செய்ய வேண்டும்', 'குற்றமற ஆராய்ந்து அதனைச் செய்ய வேண்டும்', 'மயக்கம் நீங்க எண்ணிச் செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குற்றமற ஆராய்ந்து செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயல் மேற்கொள்ளும்போது பொருள், கருவி, காலம், செயல், இடம் என்ற ஐந்தினையும் குற்றமற ஆராய்ந்து செய்க என்பது பாடலின் பொருள்.
'இருள்தீர' என்பதன் பொருள் என்ன?

மேற்கொண்ட செயலுக்கு இயைபுடன் நடத்திச் செல்லத் தேவையானவை பொருள், கருவி, காலம், செயல், இடம் என்ற ஐந்தும் ஆகும்.

எடுத்துக்கொண்ட செயலைத் தொடங்கும்போது அதற்கு வேண்டிய பொருள் வளமை, கருவி, காலம், செயல்முறை, இடம் ஆகிய ஐந்தனையும் குற்றமற ஆராய்ந்த பின்பு அதைச் செய்ய வேண்டும்.
செயலுக்குத் தேவையான ஆதாரங்கள், ஏற்ற கருவி (வழிமுறைகள்), தகுந்த காலம், தொடங்கி முடிக்கத்தக்க இடம், வினையின் இயல்பு ஆகியவற்றை ஐயமறத் தெளிந்தபின் செயலைத் தொடங்குக என அறுவுறுத்துகிறது இப்பாடல். ஒருவர் செயல் செய்வதற்குத் தேவையானவற்றை வகுத்துக் கூறும் குறள் இது. பொருள், கருவி, காலம், வினை, இடம் ஆகிய ஐந்தும் செயல் தொடங்கும் முன் ஆய்தற்குரியன. இவற்றை மயக்கமற ஆய்ந்தறிய வேண்டும் என்கிறது.
1. பொருள் என்பது ஆதாரங்களைக் (resources) குறிக்கும். 2. கருவி என்பது சாதனம், செயல்முறைகள் இவற்றைச் சொல்வது. 3. காலமானது காலம் அறிதல் பற்றியது. உரிய காலத்தில் அல்லது பருவத்தில் செய்வதைச் சொல்வது. கால மேலாண்மையையும் குறிப்பதாகக் கொள்ளலாம், 4. வினை என்பது செய்கையின் இயல்பு அல்லது தன்மை குறித்தது. வலியறிதல் தொடர்பானது. 5. இடம் என்பது இடமறிதல் பற்றியது. வினை செய்தற்கு உகந்த இடத்தைக் கூறுவது.

'இருள்தீர' என்பதன் பொருள் என்ன?

'இருள்தீர' என்ற தொடர்க்கு மயக்கந்தீர, மயக்கம் அற, மயக்கம் இல்லாமல், சந்தேகத்துக்கு இடமில்லாதபடி, மயக்கம் நீங்க, குற்றமற, ஐயந் தீர, சந்தேகமற என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இருள் என்ற சொல்லுக்குப் பகை என்றும் மயக்கம் என்றும் பொருள் கூறினர். .................... இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று (பொருள் செயல் வகை 753 பொருள்: ...நினைத்த தேசத்திற்குச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்) என்ற குறளில் வரும் இருள் என்றதற்கு உரையாசிரியர்கள் பகை என்று பொருள் கொண்டனர். ஆனால் இங்கு அவர்கள் மயக்கம் எனப் பொருள் கொள்கின்றனர். அங்கு பகையெனக் கூறப்பட்டது இங்கு 'மயக்கம்' என்றது 'இருள் தீர எண்ணிச்செயல்' என எண்ணுதற்கு அடைமொழியாக வருதலானும் எண்ணுதல் மனத்தின் செயலாதலானும் அதற்கேற்ப 'மயக்கம்' எனப்பட்டது. இதனால் ஏற்புடைய பொருள் மயக்கமே யாதல் காண்க என விளக்குவார் இரா சாரங்கபாணி.

'இருள்தீர' என்ற தொடர் தெளிந்த கருத்துடன் எனப்பொருள்படும்.

செயல் மேற்கொள்ளும்போது பொருள், கருவி, காலம், செயல், இடம் என்ற ஐந்தினையும் குற்றமற ஆராய்ந்து செய்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைசெயல்வகைக்குத் தேவையான ஐந்து பொருள்கள்.

பொழிப்பு

பொருள் கருவி காலம் செயல் இடம் என்ற ஐந்தினையும் மயக்கம் தீர ஆராய்ந்து தெளிக.