இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0679



நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:679)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.

மணக்குடவர் உரை: தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும்.
இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல்.
(அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.)

தமிழண்ணல் உரை: தன் நண்பர்களுக்கு நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். ஆயினும் அதனிலும் விரைந்து செய்ய வேண்டியது யாதெனில், தம்மோடு ஒட்டாது விலகி நிற்பாரைத் தமக்கு நட்பாக்கிக் கொள்ளுதலாகும். அரசியல் தந்திரங்களில் ஒன்று இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

பதவுரை:
நட்டார்க்கு-நண்பர்க்கு; நல்ல-நன்மையானவை; செயலின்-செய்வதைவிட; விரைந்ததே-விரைந்து செய்யப்படுவதே; ஒட்டாரை-விலகி இருப்பவரை; ஒட்டி-நட்பாக்கி;; கொளல்-கொள்ளுதல்.


நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் விரைந்து செய்யவேண்டும்;
பரிப்பெருமாள்: தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் விரைந்து செய்யவேண்டும்;
பரிதி: நல்லோர்க்கு நல்லது செய்வதினும்;
காலிங்கர்: தம்மொடு நட்டார்க்கு நல்லனவற்றைச் செய்தல் மிகவும் வேண்டுவது அன்றே! மற்று அவை செய்தலினும் சால விரைந்ததே; .
பரிமேலழகர்: வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்;

'தஞ் சுற்றத்திற்கு/நல்லோர்க்கு/நட்டார்க்கு நல்லவை செய்தலினும் விரைந்து செய்யவேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைவாக', 'தன் நண்பர்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்ய வேண்டும்', 'பகைவர்களை வெல்லுவதற்கு நண்பர்களுக்கு (அவர்களுடைய உதவியை நாடி அவர்கள்) மகிழும்படியாகச் செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும்', 'நண்பர்க்கு நல்லன செய்தலைவிட விரைந்து செய்யப்படல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைந்து செய்யவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒட்டாரை ஒட்டிக் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது. [ஒக்கக் கொள்ள - பொருந்துமாறு கொள்ளுதல்]
பரிப்பெருமாள்: பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும், வேண்டுவன விரைந்து செய்ய வேண்டும் அன்றே, அதனினும் பகை கொள்ளாமை விரைந்து செய்தல் வேண்டும்; அவரும் தம்மோடு ஒத்த வலியுடையர் ஆயின் என்றவாறு.
பரிதி: சத்துருக்களை நல்லது சொல்லி உறவுகட்டிக் கொள்வது நல்லது என்றவாறு.
காலிங்கர்: யாது எனின் பகைவரானோரை ஒருவாற்றால் பகை தீர்ந்து இங்ஙனம் பொருத்திக் கொள்வாராயின் பகை எச்சம் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல்.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.

'பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூற, பரிமேலழகர் 'தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல்' என மாறுபாடான உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரை அணைத்தல் வேண்டும்', 'பகைவரை நண்பராகத் தம் பக்கம் சேர்த்துக் கொள்ளுதலை', 'பகைவர்களையே நண்பர்களாக்கிக் கொள்ளுவது சிறந்தது', 'தம்மோடு பொருந்தாதவரைப் பொருத்திக் கொள்ளுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மோடு ஒட்டாது விலகி இருப்பாரை நட்பாக்கிக் கொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைந்து செய்யவேண்டும் தம்மோடு ஒட்டாரை ஒட்டிக் கொளல் என்பது பாடலின் பொருள்.
'ஒட்டாரை ஒட்டிக் கொளல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

விலகி இருப்போரிடம் உறவைப் பலப்படுத்திக் கொள்ளல் நலம் பயக்கும்.

நட்பாக உள்ளவர்கட்கு நல்லனவற்றைச் செய்வதைவிட, எவரோடும் சேராமல் இருப்போரை சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கது.
தம்மைச் சூழ்ந்தவர்களுக்கு நன்மை செய்தல் மிகவும் வேண்டுவதுதான்; அது அவர்களுடனான நட்பை மேம்படுத்தவும் அவர்கள் எப்பொழுதும் உள்ளன்புடன் தமக்கே துணையாக இருக்கவும் உதவும். ஆயினும் அதைவிட விரைந்து செய்யக்கூடியது தம்மிடம் ஒட்டாமல் விலகி இருப்போரைத் தம் நட்பு வளையத்தில் கொண்டுவருவது; நண்பர்கள் வட்டம் பெரிதாவதால் ஒருவர்க்கு உள்ள வலிமை கூடும். ஒட்டாரை ஒட்டிக் கொளலை விரைந்து செய்ய வேண்டும் என ஏன் சொல்லப்பட்டது? விலகி இருப்பவர் நடுநிலை எடுத்திருக்கலாம் அல்லது இந்தப்பக்கம் போகலாமா அல்லது அந்தப்பக்கம் போகலாமா என்று மதில்மேல் பூனையாக, ஊசலாட்டத்தில், இருக்கலாம். அவர்கள் தம்மோடு ஒத்த வலியுடையர்வகளாக இருக்கலாம். இத்தகையோர் பகைவர் முகாமுக்கு எந்தநேரமும் மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதற்கு முன்னர் நாம் செயல் புரிந்து அவர்களைத் தம் வயப்படுத்த வேண்டுமென்பதால் அது விரைந்து செய்யவேண்டிய செயலாகிறது. இது ஒரு சிறந்த அரசியல் சூழ்ச்சியாகும்.
நட்டாரை விலகாதிருக்கச் செய்வது மட்டுமன்றி ஒட்டாதிருப்போரைத் தன் தம்முடன் ஒட்டுறவாயிருக்கச் செய்வதையும் சிறந்த வினைசெயல்வகையாக வள்ளுவர் வற்புறுத்துகிறார்.

'ஒட்டாரை ஒட்டிக் கொளல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

'ஒட்டாரை ஒட்டிக் கொளல்' என்றதற்குப் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதல், சத்துருக்களை நல்லது சொல்லி உறவுகட்டிக் கொள்வது, பகைவரானோரை ஒருவாற்றால் பகை தீர்ந்து இங்ஙனம் பொருத்திக் கொள்ளல், தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல், பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், தம்மோடு ஒட்டாது விலகி நிற்பாரைத் தமக்கு நட்பாக்கிக் கொள்ளுதல், பகைவரிடமிருந்து பிரித்து எடுத்தவரிடம் ஒட்டிக் கொள்ளல், பகைவரை அணைத்தல் வேண்டும், பகைவரை நண்பராகத் தம் பக்கம் சேர்த்துக் கொள்ளுதல், பகைவர்களையே நண்பர்களாக்கிக் கொள்ளுவது, பகையாய் இருப்பாரைத் தன்பாலாக்கிச் சேர்த்துக் கொள்வது, பகைவரோடு ஒட்டாதவர்களைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுதல், தம்மோடு பொருந்தாதவரைப் பொருத்திக் கொள்ளுதல், பகைவரோடு சேராமல் தனியே இருப்போரை நட்பாக்கிக் கொள்ளுதல், பகைவரை அவர் விரும்பும் செயலை அவரினும் முன்னே செய்து, அவரை உனக்குப் பின்னிடும்படியாகச் செய்துவிடுக என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒட்டார் என்ற சொல்லுக்கு பகைவர் என்றே பலரும் பொருள் கொண்டனர். 'பகைவரைத் தமக்கு நட்பாக்கிக் கொள்ளுதல்' என்று ஒரு சாராரும் 'பகைவர்க்குப் பகையாயினாரை தாம் சேர்த்துக் கொள்க அதாவது பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்பதை ஒட்டியதாக' இன்னொரு சாராரும் இப்பகுதியை விளக்கினர். தம்நட்டார், தம்ஒட்டார் என இரு இடங்களிலிலும் கொள்வதே தகும். பகைவர்ஒட்டார் என்பதைவிட தம்ஒட்டார் என்பதே பொருத்தமாகப்படுகிறது.
ஒட்டார் என்பதற்குச் சிலர் ஒட்டாது விலகி நிற்பர், தனியே இருப்போர் என விளக்கம் தந்தனர். பகைவர் என்பதினும் இப்பொருள் ஏற்கத்தக்கதா உள்ளது. தம் ஒட்டார் பிறருடன் கூடாமல் மாற்றி தமதாக்கிக் கொள்ளுதல் தம் துணையைப் பெருக்க உதவுவதோடு அவர்கள் பகைவர் அணிக்குச் செல்லாமல் தடுக்கவும் இயலும்.

நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைந்து செய்யவேண்டும் தம்மோடு ஒட்டாது விலகி இருப்பாரை நட்பாக்கிக் கொள்ளுதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விலகி இருப்போரை இணைத்துக்கொள்வது விரைந்து செய்யத்தக்க வினைசெயல்வகை.

பொழிப்பு

தம் நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைவாக விலகி இருப்பாரை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்