இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:676)

பொழிப்பு (மு வரதராசன்): செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.

பரிமேலழகர் உரை: முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க.
(முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: தொழிலை முடிக்கும் வகையும் அதற்கிடையே வரும் இடையூறும் முடிந்தால் கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஒருவன் ஆராய்ந்து செயல்புரிவானாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முடிவும், இடையூறும், முற்றியாங்கு எய்தும் படுபயனும், பார்த்துச் செயல்.

பதவுரை:
முடிவும்-முற்றுப் பெறுதலும்; இடையூறும்-தடையும்; முற்றியாங்கு-முடிந்த பொழுது; எய்தும்-அடையும்; படு-பெரும்; பயனும்-விளைவும்; பார்த்து-சீர்தூக்கி; செயல்-செய்க.


முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும்;
பரிப்பெருமாள்: வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்த இடத்து உண்டாகும் பெரும் பயனும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: முடிவு-மேல் கூறியவற்றால் செய்யுங்கால், முடியும் முடியாது என்று அறிதல். இடையூறு-பகைவர்க்கு வரும் படைத்துணை. முற்றியாங்கு எய்தும் படுபயன் -நேரும் இடையூறு சிறிதாய்ப் பெறும் பொருள் பெரிதாயினும் அதன் பின்பு விளையும் விளைவு.
பரிதி: ஒரு காரியம் முடிகிறதும், அதற்கு இடையூறும் காரியம் முடிந்தால் வரும் பயனும்.
காலிங்கர்: மற்று இவ்வாறும் அன்றி யாதானும் ஒரு கருமம் செய்யும் இடத்து கடைபோகச் சென்று முடிவது ஓர் முடிவும், அது செய்யுங்காலத்து நடுவு வரும் இடையூறும், அது செய்து முற்றுப்பெற்ற இடத்து அதனால் எய்தும் பெரும்பயனும்;
பரிமேலழகர்: வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும் அதற்கு வரும் இடையூறும் அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்;
பரிமேலழகர் குறிப்புரை: முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.

'வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முடிவும் இடையூறுகளும் முடிந்த பின்னர் வரும் பயனும்', '(மற்ற எல்லா வசதிகளும் இருந்தாலும் மேற்கொள்ளும் காரியம்) முடிவுறுமா அல்லது எதிர்பார்க்கிற இடையூறுகளால் கெட்டுப் போகுமா, கெடாமல் முடிந்தாலும் அதனால் உடனே வரக்கூடிய பலன்கள் பட்ட கஷ்டங்களுக்குத் தகுந்தனவாக இருக்குமா என்பனவற்றையும் ஆராய்ந்து கொண்டு', 'ஒரு காரியம் முற்றுப்பெறுதற்குரிய வழியும் அதற்கு இடையூறும், முற்றுப் பெற்றால் உண்டாகக்கூடிய சிறந்த பயனும்', 'ஒரு செயல் முடியும் தன்மை பற்றியும், செய்யுங்கால் உண்டாகும் துன்பங்கள் பற்றியும், செய்து முடிந்த பின்னர் அடையும் பயன் பற்றியும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயல் முடிவும், செய்யும்போது ஏற்படும் துன்பங்களும், முடிந்த பின்னர் அடையும் பயன்களும் ஆகியவற்றை என்பது இப்பகுதியின் பொருள்.

பார்த்துச் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பே கண்டு பின்பு வினைசெய்க.
பரிப்பெருமாள்: முன்பே அறிந்து வினைசெய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வெற்றிப் படை தோற்றுதல். பரிதி: எண்ணிச் செய்வன் என்றவாறு.
காலிங்கர்: முன்னுறச் சீர் தூக்கிக் கொண்டு பின்பு செய்க அக்கருமத்தை என்றவாறு.
பரிமேலழகர்: சீர்தூக்கிச் செய்க.

'முன்பே கண்டு/அறிந்து/எண்ணி/சீர் தூக்கி செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்த்துச் செய்க', 'பின் செய்ய வேண்டும்', 'தெரிந்து அதனைச் செய்ய வேண்டும்', 'ஆராய்ந்து செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சீர்தூக்கிச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயல் முடிவும், செய்யும்போது ஏற்படும் துன்பங்களும், முடிந்த பின்னர் அடையும் பயன்களும் ஆகியவற்றைச் சீர்தூக்கிச் செய்க என்பது பாடலின் பொருள்.
'முடிவும்' என்ற சொல்லின் பொருள் என்ன?

தொடங்கும் செயலை எப்பொழுது முடிவுக்கு கொண்டுவருவது, எப்படி முடிப்பது என்பனவற்றை முன்பே அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதை முடிப்பதற்கான வகை, இடையில் வரக்கூடிய இடையூறு, அச்செயல் முடியும்போது அடையக்கூடிய பெரும்பயன் ஆகியவற்றை முன்பே அறிந்து செய்க.
செயல் தொடங்குவதற்கு முன்பு திட்டமிடுதல் என்பது இன்றியமையாதது ஆகும். இவ்வினை இவ்வாறு தொடங்கப்பட்டு, இவ்வாறு முடியும் என்று முதலிலேயே வரைபடம் மூலம் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும். செயல் தொடர்பான அனைத்தையும் முன்னரே தெரிந்துகொண்டு செய்தால் அதன் தொடர்ச்சியும் செம்மையாக இருக்கும். ஒரு செயலைச் செய்யும்போது அதை முடிப்பதற்கு எந்த அளவு முயற்சி மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை அறிவது முக்கியம். அதுபோல் செயல் சரிவர அமையவில்லையானால் எந்த நிலையில் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் முதலிலேயே தீர்மானித்தல் நல்லது.
எந்தச் செயலுக்கும் தடைகள் உண்டாவது இயல்பு. எந்தவிதமான இடையூறுகள் எப்பொழுது ஏற்படும் எனபனவற்றையும் ஊகித்து அறிந்து அவற்றை எதிர்கொள்ள ஆயத்தாமாக இருக்க வேண்டும்.
வருத்தப்பட்டு செயல் நிறைவேற்றியபின் அதனால் வரும் ஊதியம் பெரிதா அல்லவா என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துச் செய்ய வேண்டும்.
இச்செயல் இவ்விதம் தொடங்கப்பட்டு, இவ்விதம் முடியும் என்று அறிந்து, வரும் இடையூறுகளையெல்லாம் விலக்கி, முடிவில் எய்துகின்ற பயன் இது என்பதை அறிந்து செய்க எனக் கூறுகிறது இக்குறள்.

'படுபயன்' என்ற தொடர் பெரும்பயன் அல்லது மிகையான பயன் என்ற பொருள் தரும். நாம் உட்செலுத்தும் முயற்சிக்கு ஏற்றவாறு பயன் விளையவேண்டும். செயல் செய்வதால் கிடைக்கும் ஊதியத்தின் (ஆதாயத்தின்) அளவு பெரிதாக இருக்க வேண்டும். படுபயன் எனச் சொல்லப்பட்டதால் சிறுபயன் விளைக்கும் செயல் விலக்கப்படலாம் என்பது குறிப்பு. படு என்னும் சொல் மிகுதிப் பொருள் தருவதைப் படுகொலை, படுமோசம், படுகுழி, படுபொய், படுபிஞ்சு முதலிய வழக்கு நோக்கி அறியலாம்.

'முடிவும்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'முடிவும்' என்ற சொல்லுக்கு முடியும் வண்ணமும், முடிகிறதும், கடைபோகச் சென்று முடிவது ஓர் முடிவும், முடிவதற்குளதாம் முயற்சியும்; முடிக்கும் வகையும், எவ்வாறு செய்து முடிக்கப்படும் எனக் காரியம் முடியுமாற்றையும், முற்றாக முடியும் நிலையும், முடிவுறுமா என்பது, நிறைவேற்றும் வகை, முற்றுப்பெறுதற்குரிய வழியும், முடியும் தன்மை பற்றியும் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஒரு செயலைத் தொடங்கும்போது அது வெற்றி பெறுமா, அல்லது இடையூறுகளால் தடைபடுமா என்றெல்லாம் எண்ணிச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த வந்த குறள் இது.
இப்பாடலில் சொல்லப்பட்ட 'முடிவு' என்ற சொல் செயலுக்கான முயற்சியை உணர்த்துவது என்கிறார் பரிமேலழகர். ஏனையோர் முடிக்கும் வண்ணம், முடிக்கும் வகை, செயல் முடியும் ஆறு, முற்றுப்பெறுதற்குரிய வழி, முடியும் தன்மை எனச் சொல்கின்றனர்.
தொடங்கப்பட்ட செயல்கள் எல்லாமே எளிதாக நிறைவேறிவிடுவதில்லை. இடையூறுகளைத் தாண்டி பல செயல்கள் வெற்றியுடன் முற்ற முடிக்கப்பட்டுவிடும். சிலவற்றிற்குத் தடைகள் உண்டாவதால் இடையிலேயே நின்றுவிடும்; அல்லது பயன் பெரிதாக இராது என உணரப்பட்டால் நிறுத்தப்படும்.
திட்டம் செயலில் இருக்கும்போது கடினமான அல்லது விரும்பத்தகாத, இழப்பு உண்டாக்கும் நிலைமை தோன்றுமானால் அதிலிருந்து எப்பொழுது, எப்படி மீள்வது என்பதை அதாவது தங்களைத்தாமே செயலிலிருந்து வெளியேற்றிக் கொள்வதை ஒரு உத்தியாக, திட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே தீர்மானித்து விடுவர். இதைத் திட்ட மேலாண்மையில் 'வெளியேறுவதற்கான வினைமுறைத் திறம்' (exit strategy) என்று கூறுவர். இக்குறளில் சொல்லப்பட்ட 'முடிவு' இதையும் குறிக்கலாம்.

'முடிவும்' என்ற சொல்லுக்கு 'முடிக்கும் வகையும்' என்பது பொருத்தமான பொருள்.

செயல் முடிவும், செய்யும்போது ஏற்படும் துன்பங்களும், முடிந்த பின்னர் அடையும் பயன்களும் ஆகியவற்றைச் சீர்தூக்கிச் செய்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

முடிவைக் குறிக்கொண்டு செயலாற்றுவது சீரிய வினைசெயல்வகையாம்.

பொழிப்பு

செயல் முடிவும், இடையூறுகளும், முடிந்த பின்னர் வரும் பயனும் அறிந்து செய்க.