இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0677செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:677)

பொழிப்பு (மு வரதராசன்): செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.

மணக்குடவர் உரை: செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.

பரிமேலழகர் உரை: செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அதனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல்.
('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: செயலைச் செய்பவன் செய்ய வேண்டிய முறையாவது அந்தச் செயலின் உண்மை இயல்பினை முன்னரே அறிந்தவனுடைய எண்ணத்தைத் தான் அறிந்து கொண்டு அதனைத் தன் உள்ளத்தே ஏற்றுக் கொள்ளுதலே ஆகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.

பதவுரை:
செய்வினை-செய்யத்தகும் செயல்; செய்வான்-செய்பவன்; செயல்முறை-செய்தல்ஒழுங்கு; அவ்வினை-அந்தச் செயல்; உள்-உளப்பாடு; அறிவான்-தெரிபவன்; உள்ளம்-உள்ளம்; கொளல்-அறிதல்.


செய்வினை செய்வான் செயல்முறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது;
பரிப்பெருமாள்: செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது;
பரிதி: ஒருவன் ஒரு காரியத்துக்கு வல்லவனாகில் அந்தக் காரியத்தையும் அவன் காரியம் செய்யும் முறைமையையும்;
காலிங்கர்: யாதானும் ஒரு கருமம் செய்யும் இடத்துச் செய்கருமம் தானும் அக்கருமம் தலைக்கொண்டு செய்யும் அவனும், மற்று அது முடியக் கற்று அதனை நாள்தோறும் செய்து ஒழுகும் முறைமைப்பாடும் என்று சொல்லப்பட்ட இவை மூன்றும்;
பரிமேலழகர்: அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது;
பரிமேலழகர் குறிப்புரை: 'அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும்.

'செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருசெயலைச் செய்பவன் செய்யும்முறை', 'செய்யும் தொழிலைத் தொடங்குபவன் செய்யும் தொழில் முறையாவது', 'ஒரு காரியத்தைச் செய்ய மேற்கொண்டவன் செய்ய வேண்டிய (முதற் கரியம்) என்னவென்றால்', 'செய்வதொன்றைச் செய்ய முயல்பவன் அதனைச் செய்யும் முறை யாதெனில்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்யப்படும்செயலை மேற்கொண்டவன் செய்யும்முறை என்பது இப்பகுதியின் பொருள்.

அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.
பரிப்பெருமாள்: அவ்வினையினது உளப்பாடு அறிவான் உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உள்ளம் கொளல் என்றது உண்மை (யறிந்தவர் முன்னரேயு)ளர் என்றற்கு, இது வினை செய்யுங்கால் அவ்வினையை முன்பு அறியுமவர்களைக் கொள்ள வேண்டும் என்றது.
பரிதி: தான் கவரப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றவாறு.
காலிங்கர்: இனி, இவற்றின் உள்பாடு அறிந்து நடாத்தும் உபாயம் உடையோனும் என்னும் இவை இத்தனையும் நெஞ்சு கைக்கொண்டு1 செய்கை வினைசெயல்வகை (யாவ)து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: உள்ளறிவான் என்றது என்னை எனின், கடல் ஓடிப் பொருள் வினை செய்யும் வணிகனும் அவனுக்கு அவ்வினை செய்வாருமே அன்றிக் கடல் ஓட்டத்து உள்ளறிவான் ஆகிய மீகாமனும்3 (வேண்டியாங்கு) வினை செய்வாரை அன்றி அவ்வினை உள்ளறிந்து ஓட்டும் உபாயம் உடையோரும் வேண்டும் என அறிக. [மீகாமன் - தோணி இயக்குவான்]
பரிமேலழகர்: அதனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல்.
பரிமேலழகர் குறிப்புரை: உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.

'அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனை நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல்', 'அத்தொழிலின் நுட்பமெல்லாம் உள்ளபடி முன்னரே அறிந்தவரின் கருத்தினைத் தாம் அறிந்து கொள்ளுதலாம்', 'அந்தக் காரியத்தில் (பழக்கமுள்ளவனாக) அதன் அந்தரங்கங்களை அறிந்த ஒருவனுடைய நட்பை அடைந்து (அவனுடைய ஒத்தாசையுடன்) காரியம் செய்வது', 'அதனைச் செய்து, கைதேர்ந்து அதன் உண்மைத் தன்மை, யுணர்ந்தானது கருத்தினை அறிந்து அக்கருத்திற்கு ஏற்ப அதனைச் செய்வதே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அச்செயலை நன்கறிந்தவனது கருத்தினைத் தாம் அறிந்து கொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்யப்படும்செயலை மேற்கொண்டவன் செய்யும்முறை அச்செயலை உள்ளறிவான் உள்ளம் கொளல் என்பது பாடலின் பொருள்.
'உள்ளறிவான் உள்ளம் கொளல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

தொழில் வல்லுநர் கருத்துக்களைக் கேட்டுச் செயலாற்றுக.

செய்ய வேண்டிய செயலைச் செய்கின்றவன் செய்முறையாவது, அச்செயலின் நுட்பங்களை முன்அறிந்தவன் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுதலாம்.
பொருள், கருவி, காலம், வினை, இடம் இவற்றை மயக்கமற எண்ணீயாகிவிட்டது; முடிவு, இடையூறு, படுபயன் இவற்றை ஆராய்ந்தாயிற்று. பின்னும் தொழில்நுடபம் அறிந்தவர்களது கருத்துக்களையும் கேட்டுத் தெளிக என்று சொல்கிறது இப்பாடல்.
ஒரு செயலில் ஏற்கனவே திறம் பெற்றவர்களின் கருத்தை பெற்றுச் செயல் புரிவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். புதிய முயற்சியாயின் அதில் பழக்கமில்லாததால் வல்லுநர் அறிவுரை பெறுவது பேருதவியாக இருக்கும்; ஏற்கனவே தொடங்கி இயங்கிக்கொண்டிருக்கும் தொழிலானால், எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும்போது, அவற்றை நேர்படுத்த, அத்தொழிலின் நுட்பங்கள் தெரிந்த திறமையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்பெறலாம். இதுவே ஒரு செயலை ஆற்றலுடன் செய்யும் முறையாம்.

பட்டறிவு கொண்டவர் அறிவைக் கேட்டறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கான காட்டு ஒன்றைப் பார்க்கலாம். ஏற்றுமதி/இறக்குமதி தொழிலில் உள்ள ஒருவர்க்குப் பொதுஅறிவின் அடிப்படையில் அமைந்த வணிகத் திறன் மட்டும் போதாது. அத்தொழில்புரிவோர், வங்கிகள் வழங்கும் சிறப்புக் கருவிகள் (Letter of Credit, Shipping Guarantee etc), அன்னியச் செலவாணி (Foreign Exchange) மேலாண்மை ஆகியவற்றில் முன்னறிவு பெற்றவரிடம் ஆலோசனை கேட்டல் நன்மையாம். அந்தந்தத் துறையில் வல்லவரைக் கலந்தாலோசித்து அப் பெரியாரின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுதல் மிகுந்த நலம் பயக்கும்.
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (தெரிந்து செயல்வகை 462 பொருள்: செயலைத் தெரிந்து செய்யும் திறமையாளர்களிடம் கலந்து பின் தாமேயும் ஆராய்ந்து செய்பவர்களுக்கு எய்துதற்கு அருமையுடையது என்றொரு செயல் இல்லை) என்ற குறட்கருத்தும் அறியத்தகும்.

ஒருவினை செய்வான் அத்தகையதொரு செயலை ஏற்கனவே செய்து பயிற்சியறிவுபெற்றவனது முறையை அறிந்து கொள்வது நல்லது என்பது கருத்து.

'உள்ளறிவான் உள்ளம் கொளல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

'உள்ளறிவான் உள்ளம் கொளல்' என்ற பகுதிக்கு உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல், கவரப் பண்ணிக்கொள்ள வேண்டும், உள்பாடு அறிந்து நடாத்தும் உபாயம் நெஞ்சு கைக்கொண்டு செய்கை, உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல், உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வது, உள்ளார்ந்த திறன்களை அவனிடமிருந்து தான் பெற்றுக் கொள்ளுதல், முன் அனுபவம் உடையாருடைய உள்ளத்தைத் துணையாகக் கொண்டு செய்தல், நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல், அத்தொழிலின் நுட்பமெல்லாம் உள்ளபடி முன்னரே அறிந்தவரின் கருத்தினைத் தாம் அறிந்து கொள்ளுதல், (பழக்கமுள்ளவனாக) அதன் அந்தரங்கங்களை அறிந்த ஒருவனுடைய நட்பை அடைந்து (அவனுடைய ஒத்தாசையுடன்) காரியம் செய்வது, உட்கூறுகளையெல்லாம் அறிந்த ஒருவன் கருத்தை முதற்கண் அறிந்து கொள்ளல், அதனைச் செய்து, கைதேர்ந்து அதன் உண்மைத் தன்மை, யுணர்ந்தானது கருத்தினை அறிந்து அக்கருத்திற்கு ஏற்ப அதனைச் செய்வது, வினையின் நுட்பக் கூறுபாடுகளை அறிந்தவன் உள்ளக் கருத்தினை அறிந்து கொள்ளுதலாம், அதன் உள்மருமங்களை அறிந்தவனது கருத்தையறிந்து அதன்படி செய்தல் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

'உள்ளறிவு' ஒருதுறையில் சிறப்பறிவுத் திறம் கொண்டமையைக் குறிக்கும். உள்ளறிவான் என்பது அத் தனித்திறமை பெற்ற வல்லுநர் எனப் பொருள்படும். செயலின் உள்ளே பொதிந்துள்ள நுட்பங்களையெல்லாம் முன்னரே செய்து போந்தமையால் செயல் பற்றி நன்கு அறிந்திருப்பவன் உள்ளறிவான் ஆவான்.
'உளங்கொளல்' என்றதற்கு நன்கு கேட்டு மனத்தில் பதியவைத்துக் கொள்க என்பது பொருள். வல்லுநரது பட்டறிவைத் தாம் அனுபவப்பட்டதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
'உள்ளறிவான் உள்ளம் கொளல்' என்று தானே அறிந்திருந்தாலும் அச்செயலைப் பலகாற் பழகியவர்களின் பயிற்சியையும் உளங்கொண்டு அப்பட்டறிவை நமக்குப் பயன்படுத்திக்கொண்டு செய்யவேண்டும் என வள்ளுவர் சொல்கிறார். வல்லுநர் கருத்தை மனதில் படும்படி தெரிந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து. இத்திறமையை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைத் தான் 'உள்ளறிவான் உள்ளம் கொளல்' என்னும் தொடரால் அவர் குறிக்கிறார்.
'உள்ளறிவான் உள்ளங்கொலாவது இராமன், இராவணன் படைத்திறம் படையமைதி முதலியவற்றை வீடணனைக்கொண்டு அறிந்தது போல, அந்தரங்கங்களை அறிந்தவனுடைய அறிவைத் தாம் கேட்டுக் கொள்ளுதல் என்றுமாம்' எனவும் உரை செய்தனர். இவ்வுரை சொல்வது இரகசியச் செய்தி (insider information) பற்றியது. இக்குறளில் வள்ளுவர் கூறவந்தது அதுவாக இருக்க முடியாது. அவர் எண்ணியது வல்லுநர் கருத்து (Expert Opinion) என்பதே. பிறரை வினையாளுந் தன்மை பற்றிக் கூறுவதாகவும் இக்குறளுக்கு உரை செய்தனர்; இதுவும் ஏற்கத்தக்கதல்ல.

செய்யப்படும்செயலை மேற்கொண்டவன் செய்யும்முறை அச்செயலை நன்கறிந்தவனது கருத்தினைத் தாம் அறிந்து கொள்ளுதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பட்டறிவு கொண்டவன் ஆலோசனையை நாடுதல் ஒரு நல்ல வினைசெயல்வகை.

பொழிப்பு

செய்யும் செயலைச் செய்பவன் செய்யும்முறையாவது, அச்செயலின் நுட்பமெல்லாம் உள்ளபடி அறிந்தவரின் கருத்தினைத் தாம் அறிந்து கொள்ளுதல்.