இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0671சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

(அதிகாரம்:வினை செயல்வகை குறள் எண்:671)

பொழிப்பு (மு வரதராசன்): ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

மணக்குடவர் உரை: சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடக்குமாயின் அது தீதாம்.
இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து.
('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: ஆராய்வதன் முடிவு தெளிவு பெறுதல். ஒருவன் தெளிவு பெற்ற பின் உடனே செயலை முடிக்காமல் அதனைக் கால நீட்டிப்பில் தள்ளி வைத்தல் தீமை தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

பதவுரை:
சூழ்ச்சி-கலந்தாலோசித்தல்; முடிவு-இறுதி; துணிவு எய்தல்-தெளிவு பெறுதல்; அத்துணிவு-அத்தெளிவு பெற்ற செயல்; தாழ்ச்சியுள்-கால நீட்டிப்பில்; தங்குதல்-நிலை பெறுதல்; தீது-தீமை.


சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்;
பரிப்பெருமாள்: சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்;
பரிதி: சூழ்ச்சி முடிவு எடுத்துக்கொண்ட காரியம்;
காலிங்கர்: இவ்வாறு இவ்வனைத்துக் குறையும் தீரத் தேர்ந்து கொண்ட தேர்ச்சியினது சமைவின்கண் தாம் கருதிய வினை செய்யத் துணியும் துணிவு செய்துதல்; [சமைவின்கண்- அமைதியின் கண்]
பரிமேலழகர்: விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம்.

'சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராய்ந்து ஒரு துணிவுக்கு வரவேண்டும்', 'ஆலோசனை செய்வதன் நோக்கம் (ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்காகத்தான்', 'ஆலோசனைக்கு எல்லையாவது ஒன்றைச் செய்யலாம் செய்யலாகாது என்ற முடிவுக்கு வருதல்', 'தமக்கு, உற்றாருடன் கலந்து, ஒரு செயலைப்பற்றி ஆராய்தலின் முடிவு, அச்செயலைப்பற்றி ஒரு துணிவினைப் பெறுதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கலந்து ஆலோசனை செய்தலின் முடிவு துணிவுபெறுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடக்குமாயின் அது தீதாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அவ்வாறு துணிந்தவினை தாழ்ச்சியின் கண்ணே கிடக்குமாயின் அது தீதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.
பரிதி: ,முடியுமட்டும் ஒரு தன்மையாகக் காரியம் எடுத்து முடிப்பானாக என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் துணிந்த இடத்து மற்று அத்துணிவு பின்பு காலத்தாழ்வின்கண் படுதல் குற்றம் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார். [காலக்கழிவாகலானும்-காலத்தின் போக்கானும்]

'அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்துணிவைச் செய்யாது தாழ்த்தல் தீதாகும்', 'செய்யத் தீர்மானித்த பிறகு அந்தக் காரியத்தை தாமதிக்க விடக்கூடாது', 'அம் முடிவு செயலுக்கு வராமல் காலத்தாழ்ச்சியில் நின்று விடுதல் குற்றமாகும்', 'அங்ஙனம் துணிந்த பின்னர், செயலில் இறங்காமல் காலத்தாழ்வு செய்யின் அது கேட்டினைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துணிந்த அச்செயல் கால நீட்டிப்பின்கண் நிற்றல் கேட்டினைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கலந்து ஆலோசனை செய்தலின் முடிவு துணிவுபெறுதல்; துணிந்த அச்செயல் கால நீட்டிப்பின்கண் நிற்றல் கேட்டினைத் தரும் என்பது பாடலின் பொருள்.
காலம் தாழ்த்தல் எங்ஙனம் கேடு உண்டாக்கும்?

ஆராய்ந்து முடிவெடுத்தபின் செய்யவேண்டியதைக் காலத்தாழ்ச்சியின்றிச் செய்க.

ஒரு செயலைக் குறித்து கலந்து ஆலோசனை செய்ததன் முடிவில் அதில் தெளிவு பெறுகின்றனர். அவ்விதம் துணிந்த செயலில் காலந்தாழ்த்துதல் தீதாகும்.
ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் தொடர்புடையார் அனைவருடனும் அது பற்றித் தெளிவு ஏற்படும்வரை நன்கு கலந்து ஆலோசித்து உறுதியான முடிவு எட்டப்படவேண்டும். அம்முடிவு திட்டம் தொடங்குவதாகவும் இருக்கலாம் அல்லது கைவிடுவதாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அந்த முடிவை-துணிந்த செயலைச் செயல்படுத்துவதில் காலம் தாழ்த்தினால் எதிர் நோக்காத விளைவுகள் உண்டாகி தீமைகள் விளைக்கும்.

இக்குறளிலுள்ள 'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்' என்பதை ஒரு தொடராகக் கொண்டு பலர் உரை செய்தனர். சிலர் 'சூழ்ச்சி, முடிவு, துணிவுஎய்தல்' என மூன்றாக்கிப் பொருள் கூறினர். ஒன்றாகக் கூறும் உரைகளே நன்கு.

காலம் தாழ்த்தல் எங்ஙனம் கேடு உண்டாக்கும்?

செய்யவேண்டுமா, வேண்டாமா என்ற முடிவுதான் எட்டப்பட்டுள்ளது. இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின் எப்படி தீது உண்டாகும்?
வினைசெயத் துணிந்த காலம் நீட்டிக்குமாயின் முடிவு எடுத்திருந்த செயலுக்குரிய காலம் மாறுபடும். அதனால் சூழ்நிலை மாறுபட்டுச் செயல் செய்தற்குரிய சூழல் கெடும். காலம் என்பது பல முனைகளிலும் தொடர்புடையதாதலால் காலம் நீட்டிப்பால் ஏற்படும் இழப்பும் பலப்பலவாக இருக்கும். காலம் நீட்டிப்பை யறிந்து மற்றவர்கள் முந்திக் கொள்ளலாம். வாய்ப்பு மீண்டும் கிடைக்காமற் போகலாம். காலப்போக்கில் சூழல் மாறலாம். கிடைத்தாலும் மீண்டும் முதலிருந்து புதிய சூழலுக்கேற்ப தொடங்கவேண்டி வரும்.
பகைவர் அல்லது போட்டியாளர் தம்மைக் காத்துக்கொள்வர்; அல்லது துணிவின் பயன்களை நமக்குக் கிடைக்காமற்செய்து அவர்கள் பயனடைய முயற்சிப்பர்.: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டும். காலத் தாழ்ச்சியுற்றால் அத்துணிவு பெற்ற வினை முடியாமற்போவதாலும் 'தீது' என்று சொல்லப்பட்டது.
மு கோவிந்தசாமி 'கலங்காது காணல் துணிந்த நேரமே செயத்தக்க நேரம்; வேறு பஞ்சாங்கம் பார்க்க வேண்டாம் என்றது. மனத் துணிவே காலமறிதல்' என உரை தருவார். 'துணிவெய்தல் என்பதற்குக் கலங்காது காணல் என்னும் மு கோ வின் பொருள் முரணான தன்று. அவர் துணிந்தபின் தாழ்ச்சியுள் தங்குதல் தீது என்பதன் கருத்தினை மனத்துணிவே (தெளிவே) காலமறிதல் என வேறுவகையாக விளக்குதல் நோக்குக' என இவ்வுரையை ஆதரிப்பார் இரா சாரங்கபாணி.

கலந்து ஆலோசனை செய்தலின் முடிவு துணிவுபெறுதல்; துணிந்த அச்செயல் கால நீட்டிப்பின்கண் நிற்றல் கேட்டினைத் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கலந்தாய்ந்து முடிவெடுத்தல் வினை செயல்வகையின் தொடக்கம்.

பொழிப்பு

ஆராய்வது தெளிவுபெறுதலில் முடியும்; அத்துணிவைச் செய்யாது காலம்தாழ்த்தல் தீமை தரும்.