அமைச்சனது இலக்கணத்தையும், அவர்தம் ஆட்சித் திறன்களையும் விளக்கும் பகுதி அமைச்சு. அமைச்சு என்ற சொல் ஒருமையைக் குறிக்காமல் பன்மையாய் அமைச்சர் குழுவை (Council of Ministers)ச் சுட்டுவதாகலாம். அமைச்சு என்றால் ஆலோசனை சொல்லும் அமைச்சர்கள் பலர் சேர்ந்தது என்பதாகத் தோன்றுகிறது.
அமைச்சராவார் ஆட்சித்தலைவனுக்குப் பக்கத்தில் இருந்து அரசுச் செயல்களை நிறைவேற்றவும், அவனுக்கு ஆலோசனை கூறவும் அவனைச் சூழ நிற்பவர் ஆவார். ஆட்சிக்கு அமைச்சரவை இன்றியமையாததாய் உள்ளது. ஏன்? தனிமனிதனாக நாட்டுத்தலைவன், எவ்வளவுதான் நுண்ணறிவுடையவனாகவும் செயல்திறன் மிக்கவனாகவும் இருந்தாலும் ஆட்சியின் பல்வேறு துறைகளை அணுகி ஆராய்ந்தறிய, பல்வேறு பொறுப்புகளை கடமைகளை நிறைவேற்ற, ஆட்சியை எதிர்நோக்கிவரும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண துணைவர்கள் தேவை, ஒரே நேரத்தில் பலதுறைச் சிந்தனையும் பன்முகப் பணியும் நடைபெற அமைச்சரவை ஆட்சியாளருக்கு உதவுகிறது.
என்ன செய்யவேண்டும் என்பதை அமைச்சுடன் கலந்து எண்ணி தலைவன் துணிகிறான். அதை எப்படிச் செய்வது என்ற பொறுப்பு அமைச்சருடையது.
அமைச்சர் என்பவர் நாட்டை ஆளும் அரசருக்கு ஆலோசனை கூறி, நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் அவருடைய எண்ணங்களையும் திட்டங்களையும் ஆட்சியின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளவர். அவ்வாறு அவர் செயலாற்றும் பொழுது அவர்களது செயல்கள் சிறப்பாக அமைந்திடவும், ஆட்சியின் நோக்கங்கள் எளிதில் நிறைவேறிடவும் பல்வேறு உத்திகளையும் நுட்பங்களையும் கடைபிடிக்க வேண்டியவராய் இருக்கிறார். அமைச்சு அதிகாரத்தில் அமைச்சர்க்கு உரிய இலக்கணமாக காலம் மற்றும் செயலை அறிவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் எனச் சொல்லப்படுகிறது. வன்கண், குடிகாத்தல், கற்றறிதல், முயற்சி உடையனாதல், பன்னாட்டு அரசியலில் அவர் தாம் விரும்புகின்றவற்றைக் கூட்டுகிறவாரகவும் பிரிக்கிறவராகவும் இருத்தல், ஆராய்ந்து எதனையும் இயற்றுதல், செய்யப்படுவனவற்றை அறிந்து செய்தல், சொல்வனவற்றை உறுதியாகச் சொல்லுதல், அரசியல் அறங்களை அறிந்து நிறைவான அறிவுடன் அடங்கிய சொல்லையுடையவராக இருத்தல், செயற்கை அறிவுடன் உள்ளுணர்வு சார்ந்த அறிவியல் நுணுக்கம் கொண்டு செயல்படுதல், உலக இயற்கை அறிந்து செய்தல், ஆட்சியாள்ன் அறியானாயினும் நன்மையைச் சொல்லுதல், அடுத்துக் கெடுக்காமை, அரசியல் திறம் காட்டி எதனையும் தீர எண்ணி முடிவு போகச் செய்தல் ஆகியவை இங்கு கூறப்படுகின்றன. இவை பின் வரும் பத்து அதிகாரங்களிலும் விரித்தும் சொல்லப்படும்.