இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0637



செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:637)

பொழிப்பு (மு வரதராசன்): நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்..



மணக்குடவர் உரை: செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க.
உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.

பரிமேலழகர் உரை: செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க.
(கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)

தமிழண்ணல் உரை: ஆட்சி செய்யுங் காலத்தில், அன்றையதல்லாததும் முன்பே எழுதி வைக்கப்பட்டதுமான நூற்கல்வி முதலியவற்றால் ஆட்சி செய்யும் சட்ட திட்டங்களை அறிந்திருந்தாலும், அன்றைய உலக நடையினை அறிந்து அவ்வக் காலத்திற்குரிய உலக இயற்கைக்கு ஏற்பவே செயற்படுதல் வேண்டும். காலத்துக் காலம், நாட்டுக்கு நாடு பற்பல நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மாறுவதால், 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பது போன்ற நிலை ஏற்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.

பதவுரை:
செயற்கை-செய்யுந்திறம்; அறிந்தக்கடைத்தும்-அறிந்தபோதும்; உலகத்து-உலகத்தினது; இயற்கை-தன்மை; அறிந்து-தெரிந்து; செயல்-செய்க


செயற்கை யறிந்தக் கடைத்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செயத்தகுவன அறிந்த விடத்தும்;
பரிப்பெருமாள்: செயத்தகுவன அறிந்த விடத்தும்;
பரிதி: செய்யும் முறைமை அறிந்தாலும்;
காலிங்கர்: இவ்வாறு நூல்வழிச் செய்கைப் பொருள் அனைத்தும் தெளிய அறிந்தபின்;
பரிமேலழகர்: நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்;
பரிமேலழகர் குறிப்புரை: கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி.

'செயத்தகுவன அறிந்த விடத்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். செயற்கை என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'செயத்தகுவன' என்றும் பரிதி 'செய்யும் முறைமை' என்றும் காலிங்கர் 'நூல்வழிச் செய்கைப் பொருள்' என்றும் பரிமேலழகர் நூல்வழிப் பெற்ற செய்திறன் என்றும் பொருள் கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நூல் சொல்லும் முறைகளை அறிந்திருந்தாலும்', 'நூலறிவால் வினை செய்யும் திறங்களை அறிந்தவிடத்தும்', 'காரியஞ் செய்யும் முறைகளை நூல் வழியாக அறிந்திருந்தாலும்', 'நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்துவிடத்தும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்யும் திறன் பெற்றிருந்தபோதிலும் என்பது இப்பகுதியின் பொருள்.

உலகத்து இயற்கை அறிந்து செயல் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க.
மணக்குடவர் குறிப்புரை: உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு. [பரிவாரத்திலுள்ளார்- ஐம்பெருஞ் சுற்றம் ஆவார்]
பரிப்பெருமாள்: அது செய்யுங்கால் உலகத்து நடை அறிந்து செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: உலகநடை அறிதலாவது அரசன் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவையிற்றை யறியாது செய்யிற் குற்றமென்றவாறு ஆயிற்று.
பரிதி: உலகம் பொருந்தின காரியம் செய்வது நன்று என்றவாறு.
காலிங்கர்: உலகத்தோடு ஒத்தநடை ஆகிய இயற்கைப் பொருளினையும் எய்த அறிந்து யாதானும் ஒரு கருமம் செய்க என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.

'உலக நடை/உலகத்து நடை/உலகம் பொருந்தின/உலகத்தோடு ஒத்தநடை/அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலக நடைமுறைகளை அறிந்து செய்க', 'அப்பொழுதுள்ள உலக இயல்பு அறிந்து அதற்கேற்ப வினை செய்க', 'அதனைச் செய்யுங் காலத்திலுள்ள உலக நிலையை அறிந்து அதற்கேற்றபடி செய்ய வேண்டும்', 'அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலக நடை அறிந்து செய்க என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
செயற்கை யறிந்திருந்தபோதிலும் உலக நடை அறிந்து செய்க என்பது பாடலின் பொருள்.
'செயற்கை யறிதல்' என்றால் என்ன?

ஏட்டுக்கல்வியறிவுடன், நாட்டு நடப்பு அறிந்து செயலாற்றுவார் அமைச்சர்.

அமைச்சர் அப்பொழுதைய கால உலகின் அலையையும் புரிந்துகொண்டவராய் இருப்பவராக வேண்டும்.
செய்யும் திறன் இது என்று அறிந்திருந்தாலும் அமைச்சனானவன் உலகின் அன்றைய நிலைக்கு ஏற்றனவாக, அமைதலாக உள்ள செயல்களையே செய்யவேண்டும். செயற்கையறிவோடு உலகத்தியற்கையை இணைத்துச் செய்யும் முறைகள் இவை என்று எண்ணி முடிவு காண்பார் அமைச்சர்.
ஒருகாலத்து நடைமுறைகள்தாம் எழுதிவைக்கப்பட்டு வழிகாட்டிகள் ஆகின்றன; நேற்றைய நூல்கள் இன்றைக்கு ஏற்றனவாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. பிறிதோரிடத்து, பிறிதொரு காலத்துப் பெற்ற திறன் இன்று இவ்விடத்தில் பொருந்தாமல் போகலாம். இப்பொழுதுள்ள உலக நெறிகளுக்குத் தக்கவாறே அமைச்சர் செயல்களை மேற்கொள்ள வேண்டும். மக்களை எப்பொழுதும் முன்னிறுத்தும் வள்ளுவர் உலகத்தோடு ஒட்ட ஒழுகலை அறிவுறுத்தியதோடு உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என்றும் மற்றும் பிற இடங்களிலும் உலக நெறிகளைச் சார்ந்தமையைச் சொல்லியுள்ளார். இங்கு அமைச்சருக்கு, படிப்பறிவுடன் உலக நடைக்கு ஏற்றவாறு செயல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சொல்லியுள்ளார். உலக நெறியோடு பொருந்தாதன செய்து பழி ஏற்பட வழி உண்டாக்கக்கூடாது என்பதையும் 'ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்’ என்பதனையும் மனதில் நிறுத்தி அமைச்சர் வினை செய்யவேண்டும். இதுவே உலகத்து இயற்கை அறிந்து செய்வது.

செய்யும் திறன் நூல்வழி பெறப்பட்டது என்றால் தேவைக்கேற்ப அந்நூற்கருத்துக்களை மாற்றி வாசிக்கவேண்டும். அரசியல் சட்டம் (நூல்) முரணினால் உலக நடைக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புலவர் குழந்தை கூறுவார்.
காலிங்கர் 'இவ்வாறு நூல்வழிச் செய்கைப் பொருள் அனைத்தும் தெளிய அறிந்தபின், உலகத்தோடு ஒத்தநடை ஆகிய இயற்கைப் பொருளினையும் எய்த அறிந்து யாதானும் ஒரு கருமம் செய்க' என்று இக்குறளுக்கு உரை செய்தார். ஒரு பணியைச் செய்யும்போது அதற்கான நூல்வழி அறிவைத் தெரிந்து கொண்டபின்னர், உலகத்தோடு ஒத்த நடை எய்தும்படி செய்து முடிக்க என்பது இதன் பொருள் காலிங்கரது இவ்வுரை இக்குறட்கருத்தை நன்கு விளக்குகிறது.

'செயற்கை யறிதல்' என்றால் என்ன?

'செயற்கை யறிதல்' என்றதற்குச் செயத்தகுவன அறிதல், செய்யும் முறைமை அறிதல், நூல்வழிச் செய்கைப் பொருள் அனைத்தும் தெளிய அறிதல், நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிதல், செய்திறன் வகைகளை அறிதல், அன்றையதல்லாததும் முன்பே எழுதி வைக்கப்பட்டதுமான நூற்கல்வி முதலியவற்றால் ஆட்சி செய்யும் சட்ட திட்டங்களை அறிந்திருத்தல், நூலறிவின் வழி செயல் செய்யும் திறன் அறிந்திருத்தல், நூல் சொல்லும் முறைகளை அறிதல், நூலறிவால் வினை செய்யும் திறங்களை அறிதல், யோசனை சுருதிக்குப் பொருத்தமாக இருப்பதை அறிதல், காரியஞ் செய்யும் முறைகளை நூல் வழியாக அறிந்திருத்தல், நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

செயற்கை என்பது இப்படி இருந்தால் இது நல்லது அல்லது தீது என்று சிந்தித்து அமைக்கப்பட்டது ஆகும். இது நூல்வழிச் சொல்லப்பட்ட, அல்லது செவிவழி தலைமுறை தாண்டி வந்த, செய்முறைகளைக் குறிக்கும். செயற்கை என்பதற்கு ஏன் நூல்வழிப்பட்ட செய்முறைகளை மட்டும் உரையாசிரியர்கள் கூறினர் என்றதற்கு 'நுண்ணறிவு என்பது செயற்கையறிவோடு உலகத்தியற்கையை இணைத்து செய்யத்தகுவன இவை: தக்கவற்றைச் செய்யும் முறை இவை என்று எண்ணுதல் ஆகவே உலகத்தியற்கையையும் ஒட்டி உணர்ந்து முடிவு காண்டலே நுண்ணறிவாதலின் உரையாளர்கள் நூலறிவையே செயற்கை என்றனர்' என தண்பாணி தேசிகர் விளக்கம் தருவார். மேலும் அவர் 'இயற்கை உலக நடையில் இயல்பாகவே அவ்வப்போது அமைவது. செயற்கை இயற்கையால் விளையும் நலத்தீங்குகளைக் கண்டு, இஃது இங்ஙனம் ஆயின் நல்லது'; நலம் பயப்பது' என்று அறிவுடையோரால் வாய் வழியானும் நூல்வழியானும் அறிவிக்கப்பட்டது. ஆதலால் செயற்கையைச் செயற்படுத்தும்போது உலக இயற்கையறிந்து ஏலும்-ஏலாது என்பதையறிந்து செய்க என்றதாம். கல்வியாலும் சிந்தனையாலும் ஆவது செயற்கை உலகம்; அவ்வப்போது இயங்குமுறை இயற்கை என்பதை 'உலகத்தோடொட்ட ஒழுகல்' (140) என்ற குறளானும் அறிக'' என செயற்கை-இயற்கை என்பனவற்றை விளக்குவார்.
செயற்கை முன்னிகழ்ந்த செயல்கள். இயற்கை அவ்வவ் காலத்துக்கு ஏற்றன என்று சொல்வர். செயற்கை என்பது நூல் வழக்கு எனவும் இயற்கை என்பது உலக வழக்கு எனவும் கூறுவர்.

செய்யும் திறன் பெற்றிருந்தபோதிலும் உலக நடை அறிந்து செய்க என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

செயற்கையறிவுடன், நாட்டு நடப்பையும் அறிந்து அமைச்சு செயல்படும்.

பொழிப்பு

எப்படியான செயல் திறன்கள் பெற்றிருந்தாலும் வினை ஆற்றும்போது அன்றைய நடைமுறை உணர்வோடு பொருந்தச் செய்யவேண்டும்.