அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
(அதிகாரம்:அமைச்சு
குறள் எண்:638)
பொழிப்பு (மு வரதராசன்): அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.
|
மணக்குடவர் உரை:
அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும் அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன்.
இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகாதென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.
('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
அரசன் நல்லது சொல்வாரது அறிவுரைகளைப் புறக்கணித்தாலும் அறியாதவன் என்றாலும் உறுதி பயக்கும் சொற்களை எடுத்துரைத்தல் பக்கத்துள்ள அமைச்சன் கடமை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி கூறல் உழையிருந்தான் கடன்.
பதவுரை:
அறிகொன்று-அறிதலை அழித்து; அறியான்-தெரியாதவன்; எனினும்-என்றாலும்; உறுதி-நன்மை; உழை-அருகிடம்; இருந்தான்-இருந்தவனுக்கு; கூறல்-சொல்லுதல்; கடன்-முறைமை.
|
அறிகொன்று அறியான் எனினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும்;
பரிப்பெருமாள்: அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும்;
பரிதி ['அறிகோன் அறியான் எனினும்' பாடமாகலாம்]: எல்லாம் அறிவுள்ள ராசா அறிகிற தறுவாயில் அறியாதபோது;
காலிங்கர் ['அறிந்தொன்றறியான்' பாடம்]: அரசரானவர் ஒன்றோ காரியா காரியங்களைத் தாமே அறியினும், மற்று அதன் உறுதிப்பாட்டினை அரசர் அருகிருத்தற்கு உரியனாகிய அமைச்சன் பெயர்த்தும் ஐயம் அற ஆராய்வது முறைமை; இனி ஒன்றோ அரசன் இவை அறியானாயின்;
காலிங்கர் குறிப்புரை: அறிந்து ஒன்றறியான் என்பது ஒன்றோ அறியினும் அறியான் ஆயினும் என்றது. ..
பரிமேலழகர்: அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல்.
'அரசன், அமைச்சன் கூறிய ஒன்றறியானாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'அறிகொன்று' என்பதற்கு உரையாசிரியர்கள் வேறுபட்ட பாடங்கள் கொண்டதால் அவர்கள் கூறிய பொருள்களும் மாறுபட்டன.
இன்றைய ஆசிரியர்கள் 'சொன்னாலும் தன்னாலும் அறியான் எனினும்', 'அறிய வேண்டிய எதையும் அறியாதவனாக அரசன் இருந்தாலும்', 'அரசன் மற்றவர்கள் அறிவையும் பயன்படுத்தாது தொலைத்துத் தானும் அறிவில்லாதவனாய் இருந்தாலும்', 'அறிந்து சொல்லியவரின் அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே என்றாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அறிந்து சொன்னதை ஏற்காமல் தானும் அறியான் என்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
உறுதி உழையிருந்தான் கூறல் கடன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகாதென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அரசன் கேளான், என்று சொல்லாதொழிதலாகாது. இத்துணையும் அமைச்சர் இலக்கணம் கூறப்பட்டது.
பரிதி: உறுதியாக மந்திரி சொல்லக் கடவன் என்றவாறு.
காலிங்கர்: இவன்தானே அதன் உறுதிப்பாட்டினை அமைவுற ஆராய்வது முறைமை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: உழையிருந்தான் என்பது அரசர் அருகு இருந்தான் என்றது..
பரிமேலழகர்: அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.
பரிமேலழகர் குறிப்புரை: 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.
'அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்கு உறுதிகூறல் அமைச்சன் கடன்', 'உறுதியான யோசனைகளைச் சொல்ல வேண்டியது பக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் மந்திரியின் கடமை', 'உறுதியானவற்றை அவனுக்கு எடுத்துக் கூறுதல், அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சனின் கடமையாகும்', 'நன்மை பயப்பனவற்றைக் கூறல் நெருங்கியிருக்கும் அமைச்சனின் கடமையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உறுதியானவற்றை அரசனுக்கு எடுத்துக் கூறுதல், அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சனின் கடமை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அறிந்து சொன்னதை ஏற்காமல் தானும் அறியான் என்றாலும் உறுதியானவற்றை அரசனுக்கு எடுத்துக் கூறுதல், அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சனின் கடமை என்பது பாடலின் பொருள்.
'அறிகொன்று அறியான் எனினும்' என்றதன் பொருள் என்ன?
|
ஆட்சித் தலைவன் அறிந்தானோ இல்லையோ தான் சொல்வதைக் கேட்கிறானோ இல்லையோ நாட்டின் நலன் கருதி தான் சொல்லவேண்டியதை அருகிருக்கும் அமைச்சன் வாளா இராமல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
ஒரு செய்தியை எப்படிக் கையாள வேண்டும் என்று தானும் அறியாமல் யார் கூறினாலும் ஏற்காமல் இருக்கும் ஆட்சித் தலைவனிடம் அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சன் செய்தியையும் உண்மைப் பொருளையும் அதன் தாக்கத்தையும் தலைவனிடம் சொல்வது கடமை.
தானாகவும் உணரமுடியாமல், மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் புறக்கணிக்கும் ஆட்சியாளன், தனக்கு ஆலோசனை கூறும் அமைச்சனை அதற்காக இகழவும் செய்யலாம். ஆனாலும் அமைச்சன் தன் கடமையான நாட்டுக்கு நல்லனவற்றை ஆட்சியாளரிடம் எடுத்துக் கூறுதலை விட்டுவிடக்கூடாது.
தான் சொல்வதைக் கேட்பவர் பொருட்படுத்தாமல் இருக்கும்பொழுது, அறிவுரை கூறும் அமைச்சர் சலிப்படைந்து போகலாம். ஆனாலும் தவறு எனத் தெரிந்தும் அதை நாட்டுத்தலைவனிடம் சுட்டிக் காட்டாவிட்டால் அது நாட்டின் நலனைப் பாதிக்கும் ஆதலால் ஆட்சியாளன் அவன் வழியிலேயே சென்று எக்கேடோ கெட்டுப் போகட்டும் என விட்டு விடமாட்டார். ஆட்சியாளன் அறிவாற்றல் இல்லாதவனாகவும், குடிநலம் பேணாதவனாயும் இருக்கக் கூடும். அவனது மனப்போக்கிற்கு ஏற்றவாறு அமைச்சனும் செல்வானாயின் அவன் தன் கடமையில் தவறியவனாவான். சொன்ன அறிவையும் கொள்ளாமல் ஆட்சியாளன் செயலைக் கெடுக்கவும் செய்யலாம். ஆகவே, அமைச்சன் கைவிடாது, பக்கத்திலிருந்து உரிய ஆலோசனை சொல்லவேண்டியது கடமையாகும். இவையெல்லாம் நல்ல விளவு ஏற்படும் என்னும் நம்பிக்கையால் மட்டும் அல்ல, அதை அமைச்சர் தனது கடமை என்பதால் செய்தே ஆகவேண்டும் என்கிறது பாடல். அமைச்சன் நன்மை பயக்கும் சொற்களை அரசனிடம் கூறாதபோது, அவனது முடிவெய்தலாகிய குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பதால் 'கூறல் கடன்' என்றார் என்று கடன் என்பதற்கு விளக்கம் தருவர்.
ஆட்சியாளன் தவறு செய்யத் தலைப்படும்போது அமைச்சர் தடுத்தால் சிலசமயம் அவன் சீற்றம் கொள்ளலாம். ஆனால் அமைச்சர் அவனுடைய சினத்திற்கு அஞ்சி, வாய் அடங்கி, வாளாஇருக்காமல் அவனுக்கு நல்லுரை சொல்லத் தயங்குவதில்லை.
இத்தன்மை வாய்ந்த அமைச்சர்கள் தசரதனுடைய அவையிலே இருந்தார்கள் என்று இவ்விதம் கூறுகிறார் கம்பர்:
தம் உயிர்க்கு உறுதி எண்ணார், தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர்;
செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார், தெயும் காலம்
மும்மையும் உணர வல்லார், ஒருமையே மொழியும் நீரார் (கம்ப ராமாயணம் அயோத்யா காண்டம் மந்திரப்படலம் 9 பொருள்:அரசன் சீற்றங்கொண்ட காலத்திலும் இதனைச் சொன்னால் தம் உயிர்க்கு அழிவு விளையும்என்றுகூட நினையாதவராய்; அவனது சீற்றத்தின் கொடுமையை ஏற்றுக்கொண்டு தம் கடமையை விட்டுவிடாமல்உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச்சொல்லும் துணிவு மிக்கவர்கள்; நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாததெளிவுடையவர்கள்; அறியத்தக்க முக்காலநிகழ்வுகளையும்; உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள்; சொன்ன சொற்களை மாற்ற மாட்டார்கள்)
|
'அறிகொன்று அறியான் எனினும்' என்றதன் பொருள் என்ன?
'அறிகொன்று அறியான்' என்பதற்கு மூன்றுவகையான பாடங்கள் தொல்லாசிரியர் உரைகளிலிருந்து காணக்கிடக்கின்றன.
மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய மூவரும் 'அறிகொன்று அறியான்' எனப் பாடம் கொண்டனர்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'ஒன்று அறிக-அரசன் அமைச்சன் கூறிய பொருளை அறிக; ஒன்று அறியான் எனினும்- -(அவன்) ஒன்று அறியானாயினும்' எனச் சில சொற்களை இடைப்பெய்து இத்தொடர்க்குப் பொருள் கூறினார்கள்.
பரிமேலழகர், அறி+கொன்று எனச் சிதைத்து, அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து எனப்பொருள்கண்டார். கொன்று என்றதற்கு கோறல் எனச் சொல்லி அதை 'தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல்' என விரித்தும் கூறினார்; கொல்லுதல் இங்கு அமைச்சன் கூறும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமையோடு அரசன் அவனை இகழ்ந்து கூறுதல் என்பதாம். இது அரசன் அமைச்சன் சொல்லைக்கேளாமை மட்டும் அன்றி இழிவுபடுத்தினானாயினும் அமைச்சன் கடமை உறுதி சொல்லுதல் என்று குறளுக்குப் பொருள் தந்தது.
பரிதி 'எல்லாம் அறிவுள்ளராசா' என உரைப்பதால் இவர் பாடம் 'அறிகோன் அறியான் எனினும்' என்பதாக இருக்கலாம். இதன்படி இத்தொடர் 'எல்லாம் அறிவுள்ள ராசா அறிகிற தறுவாயில் அறியாத போது எனப் பொருள்படும். இது ஏற்கத்தக்கதாகவே உள்ளது.
காலிங்கர் கொண்ட பாடம் 'அறிந்தொன்றறியான்' எனத் தோன்றுகிறது. 'அறிந்தொன்றறியான்' என்ற இத்தொடர்க்கு, 'ஒன்றோ அறியினும் அறியான் ஆயினும்' என்பது அவரது உரை. இக்குறளுக்கான காலிங்கர் உரையைத் தண்டபாணி தேசிகர் இவ்விதம் விளக்குகிறார். 'ஒன்று அறியினும்-அரசரானவர் ஒன்றோ காரிய காரியங்களைத் தாமே யறியினும், உறுதி உழையிருந்தான் கூறல் கடன் மற்று அதன் உறுதிப்பாட்டினை அருகிருத்தற்கு உரியவனாகிய அமைச்சன் பெயர்த்தும் ஐயமற ஆராய்வது முறைமை. ஒன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் -இனி ஒன்றோ அரசன் இவை அறியானாயின் இவன் தானே உறுதிப்பாட்டினை அமைவுற ஆராய்வது முறைமை'.
இவ்வுரையாற் பெற்ற பொருள் அரசன் அறிவானாயினும் உறுதிப்பாட்டினை அறிய அமைச்சனும் ஆய்தல் கடமை; அறியானாயின் தானே ஆய்ந்து முடிவு செய்தல் கடன் என்ற இருபயனாம்.
இவற்றுள் காலிங்கர் உரையே சிறப்பானது.
|
அறிந்து சொன்னதை ஏற்காமல் தானும் அறியான் என்றாலும் உறுதியானவற்றை அரசனுக்கு எடுத்துக் கூறுதல், அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சனின் கடமை என்பது இக்குறட்கருத்து.
அமைச்சு நாட்டின் நன்மைக்கானவற்றை விடாது சொல்லவேண்டும்.
அறிந்து சொன்னதை ஏற்காமல் தானும் அறியான் என்றாலும் உறுதியானவற்றை அரசனுக்கு எடுத்துக் கூறுதல், அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சன் கடமை.
|