இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0636மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:636)

பொழிப்பு (மு வரதராசன்): இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?

மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?
இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?
('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் உளவோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் முன்னிற்பவை யாவுள?

பதவுரை:
மதி-அறிவு; நுட்பம்-நுண்மை; நூலோடு-நூல்அறிவோடு; உடையார்க்கு-உடையவர்க்கு; அதி-மிகுதியான; நுட்பம்-நுட்பமுடைய (சூழ்ச்சிகள்); யா-எவை? உள-இருக்கின்றன; முன்-எதிரில்; நிற்பவை-நிற்கக்கூடியவை.


மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு;
பரிப்பெருமாள்: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு;
பரிதி: மதிக்கூர்மையும், கல்வியின் கூர்மையும் உள்ள பேருக்கு;
காலிங்கர்: தம் பிறவிக்கண்ணே இயற்கையாக விதி வழி வாய்ந்த மதியின் கூர்மையைப் பின்னும் தெளியக்கற்று உணர்ந்த செயற்கைத் தன்மை நூலோடு கூட இடையவராகிய நுண்ணறிவாளர்க்கு; br /> பரிமேலழகர்: இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம்,

'நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு ஒருங்கு பெற்றுள்ள அமைச்சர்க்கு', '(முன்னோர்கள் எழுதி வைத்துள்ள) நூல்களுக்கு ஒத்ததாகத் தம்முடைய சொந்த யோசனைகளையும் சேர்த்துள்ளவர்களை', 'இயற்கையாய் உள்ள நுட்ப அறிவும் அதனோடு செயற்கையாகிய நூலறிவும் உடையவர்க்கு முன்', 'இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு உடையார்க்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அதிநுட்பம் யாவுள முன்னிற் பவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ['அதினுட்பம்' பாடம்] : அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள் ['அதினுட்பம்' பாடம்]: அதனினும் நுண்ணிய மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.
பரிதி: யாது நுட்பம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவை இரண்டுடன் சிறந்த கூர்மையிற் கூரியன யாவை உளவோ; யாவும் இல்லை என்றே முன்னிய நெஞ்சிற்கு வேறுமுன் நிற்பவை என்றவாறு. [முன்னிய நெஞ்சிற்கு-கருதிய உள்ளத்திற்கு]
பரிமேலழகர்: மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?
பரிமேலழகர் குறிப்புரை: 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.

'அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?' என்ற பொருளில் மணக்குவர், பரிப்பெருமாள் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இவர்கள் 'அதினுட்பம்' எனப் பாடங்கொண்டனர். 'யாது நுட்பம்' எனப் பரிதியும் 'அவற்றுடன் சிறந்த கூர்மையானவை யாவை?' எனக் காலிங்கரும் 'மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த நுட்பமுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பவை எவை உள்ளன?', 'எதிர்த்து வெல்லக்கூடிய சூழ்ச்சிகள் என்ன இருக்கின்றன?', 'அதிக நுட்பமான எவ் உபாயந்தான் எதிர் நிற்க வல்லது', 'மிக்க நுட்பத்தை உடையனவாய் முன் நிற்ப யாவை யுள? ஒன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? என்பது பாடலின் பொருள்.
'மதிநுட்பம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

இயற்கை அறிவுடன் கல்வியறிவும் உடையவரால் தீர்க்க முடியாதது என்று ஏதும் உண்டா?

ஓர் அமைச்சன் இயற்கையாக அமைந்த நுண்ணறிவுடையவனாக இருப்பான். அவன் சிறந்த கல்வி அறிவும் பெற்றவனாகவும் இருப்பான். இயற்கை, செயற்கை என்ற இருவகை அறிவும் பெற்ற இவனுக்கு மிக அரிதானது என்று முன்னிற்கும் செயல் ஒன்றும் இல்லை; அவனுக்கு எச்செயலையும் முடிக்கும் திறமை எளிதில் கைகூடும்.

நூல்களைக் கற்பது மட்டும் அறிவிற்கு முழுமையைத் தராது. மனத்தால் நுட்பமாக ஆராய்ந்து தெளிவு கொள்ளும் நுண்ணறிவும் தேவை. ஒரு செய்தியைப் புரிந்துகொள்வதில் இவ்விரு அறிவையும் பயன்படுத்தி அமைச்சன் முடிவுக்கு வருவான். நூலறிவுச் சார்பு இல்லாத நுட்பஅறிவு பயனுடையதன்று. அதுபோலவே மதிநுட்பச் சார்பிலாத நூலறிவால் பயன் இல்லை. கல்வியறிவும் நுண்ணறிவும் இல்லாதவர்கள் நெருக்கடியான சமயங்களில் தடுமாறுவர். இவை இரண்டுடன் சிறந்த கூர்மையிற் கூரியன வேறு இல்லை நல்ல நூல் அறிவும் நுண்ணறிவும் உள்ளவர்க்கு தீர்வு காண முடியாமல் அவர்கள் முன் நிற்கும் நுட்பமான செய்திகள் எவை உள என வினவுகிறது இப்பாடல். ஒன்றும் இல்லை.
இயல்பான நுண்ணறிவும், பரந்த நூலறிவும் ஒருங்கே உடையவர்க்கு எதிராக எந்த நுட்பமான சூழ்நிலைகளும் நிற்கமுடியாமல் போகும். அவர்களால் வெல்ல முடியாத சிக்கல்கள் என ஒன்றும் இல்லை.

'மதிநுட்பம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'மதிநுட்பம்' என்ற சொல்லுக்கு நுண்ணியதாகிய மதி, மதிக்கூர்மை, பிறவிக்கண்ணே இயற்கையாக விதி வழி வாய்ந்த மதியின் கூர்மை, இயற்கையாகிய நுண்ணறிவு, இயற்கையான நுட்ப அறிவு, இயற்கையாய நுண்ணறிவு, இயல்பாயமைந்த நுண்ணிய அறிவு, கூரிய அறிவு, சொந்த யோசனை, நுண்ணிய அறிவு, இயற்கையாய் உள்ள நுட்ப அறிவு, இயற்கையாக அமைந்துள்ள நுண்ணறிவு, இயற்கையான நுண்மதி என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

நுட்பமதி என்பது மதி நுட்பம் என்றாயிற்று. இதில் மதி என்பதே நுட்பத்தின் அடைகொளியாய் நிற்றல் பற்றி இங்ஙனம் கூறப்பட்டது.
''நுட்பமதி' என்றது செய்யுள் நோக்கி. மதி நுட்பமெனப் பின்முன்னால் புணர்ந்து நின்றது. நுட்பமதி என்பதன்கண் மதி என்னும் பின்மொழியில் பொருள் சிறந்திருத்தலால், மதிநுட்பம் என்பது பின் மொழிநிலையல் ஆயிற்று. பின்மொழிநிலையல்-பின்மொழிக்கண் பொருள் சிறந்து நிற்றல்' என்பது இரா சாரங்கபாணியின் விளக்கம்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் (ஊழ் 373 பொருள்: ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.) என்ற குறளை நினைக்கலாம். நூலறிவு-கட்டிக்கொடுத்த சோறுபோல எஞ்ஞான்றும் பயன்படாத செய்றகையறிவு; மதிநுட்பம் எதனையும் துருவித் துருவி ஆராயும் இயற்கை அறிவு என்பார் தண்டபாணி தேசிகர். மதிநுட்பமே நூலறிவினும் துணைசெய்ய வல்லது.

'மதிநுட்பம்' என்ற சொல் இயல்பாயமைந்த நுண்ணிய அறிவு என்ற பொருள் தரும்.

இயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அமைச்சு இயற்கை, செயற்கை அறிவு இரண்டும் நிரம்பியவரயிருப்பார்.

பொழிப்பு

இயற்கையான நுண்ணறிவை நூலறிவோடு ஒருங்கு பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை?