இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0633பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:633)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

மணக்குடவர் உரை: மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர் உரை: பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான்.
(இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.)

சி இலக்குவனார் உரை: பகைவர்க்குத் துணையாய் உள்ளாரைப் பிரித்தலும், தமக்குத் துணையாய் உள்ளாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளலும், தம்மை விட்டுப் பிரிந்துள்ளாரைக் கூட்டிக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு.

பதவுரை:
பிரித்தலும்-தனித்தனியாக்கலும்; பேணி-உவப்பன செய்து; கொளலும்-பெறுதலும்; பிரிந்தார்-விட்டு நீங்கியவர்; பொருத்தலும்-சேர்த்தலும்; வல்லது-(எய்த)வல்லது; அமைச்சு-அமைச்சு.


பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும்;
பரிப்பெருமாள்: மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கோடலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும்;
பரிதி: மாற்றரசனிடத்திலுள்ள மனிதரைப் பிரித்தலும், பிரித்த பேரைத் தான் கூட்டிக்கொள்வதும், அரசர்க்குப் பிரிந்த மன்னவரைக் கூட்டுவதும்;
காலிங்கர்: தம் அரசர்க்குப் பகைவேந்தரானோர் இருவருள் ஒருவரைப் பிரிக்கவல் (லராயின்) மற்று அவர் தம்மைப் பிரித்தலும், தம்மாட்டு விரும்பி அணைத்துப் பாதுகாத்தலும், தம் அரசர்மாட்டு நின்றும் பிரிந்தார் உளர் ஆயின், அவர் தம்மையும் யாதானும் ஒருவழியால் பொருந்தச் செய்தலும்;
பரிமேலழகர்: வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும், தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும், முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; [தம்பாலாரை-தம்மைச் சேர்ந்தவரை].
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.

'பகைவர்க்குத் துணையாயினாரை அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரைப் பிரித்தல் நண்பரை அணைத்தல் பிரிந்தவரைக் கூட்டல்', 'பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தமக்குத் துணையாயினாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தாரை வேண்டுமாயின் சேர்த்துக் கொள்ளுதலும்', 'அரசனுக்கும் அரசாட்சிக்கும் தீங்கு செய்யக் கூடிய சகவாசங்களை நீக்குவதையும் நன்மையான சகவாசங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதையும், அந்த நல்ல சகவாசங்கள் பிரிந்து விட்டால் அவற்றைச் சேர்த்து வைப்பதையும்', 'பகைவர்க்குத் துணையாய் உள்ளவரைப் பிரித்தலும், தமக்க்குத் துணையானவரைப் பிரிந்து போகாவண்ணந் தழுவிக் கொள்ளுதலும், முன்னம் பிரிந்தாரைச் சேர்த்துக் கொள்ளவேண்டிய காலத்தில் தம்மோடு இணக்குவித்தலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தமக்குத் துணையாயினாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தாரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வல்லது அமைச்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வல்லவன் அமைச்சனாவான்.
பரிப்பெருமாள்: வல்லவன் அமைச்சனாவான்.
பரிதி: வல்லது மந்திரி தத்துவம் என்றவாறு.
காலிங்கர்: பின்னும் இவை (எய்த இயற்ற) வல்லது யாது; மற்று அதுவே அமைச்சாவது என்றவாறு.
பரிமேலழகர்: வல்லவனே அமைச்சனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். [கடைப்பிடித்தல்-உறுதியாகக் கொள்ளுதல்]

'வல்லவனே அமைச்சனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வல்லவன் அமைச்சன்', 'வல்லவனே அமைச்சனாவான்', 'செய்யத் திறமையுள்ளவர்களே மந்திரிகளாவார்கள்', 'செய்ய வல்லவனே அமைச்சனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செய்ய வல்லவன் அமைச்சன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தமக்குத் துணையாயினாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தாரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதலும் செய்ய வல்லவன் அமைச்சன் என்பது பாடலின் பொருள்.
'பிரித்தல்' குறிப்பது என்ன?

பகைவர்ப்பிரித்தல், ஆதரவாளரைக் காத்தல், பிரிந்தாரைச் சேர்த்துக் கொள்ளுதல், இவற்றைச் செய்வதில் அமைச்சர் வல்லவராயிருப்பார்.

தம் அரசுடன் ஒன்றியிருப்போரைப் பிரிக்க வேண்டின் பிரித்தல், பகையரசுக்குத் துணையாவாரைப் பிரித்தல். தமக்கு ஆதரவாக இருப்பவர்களை எக்காரணத்தானும் தம்மைவிட்டுப் பிரியாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல். தம் நாட்டுடனும் பகைநாட்டுடனும் வேறுபட்டு விலகி இருப்பவரை, பகைவர் வலியறிதற்கும், அவர் வலிகுறைத்தற்குமாகத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுதல் இவற்றில் அமைச்சன் வல்லவனாக விளங்கவேண்டும் என்கிறது இப்பாடல்.
இன்று இச்செயல்கள் உடன்படிக்கைகள் மூலமாக நேரடியாகவும் செய்யப்படுகின்றன.
இச்செயல்முறைகள் பகையை வலுவிழக்கச் செய்து அதன்மூலம் தம் நாட்டைப் வலுவாக்கிக் கொள்ளும் அரசவுத்திகளாம். பகைவரின் அமைதிநிலையைச் சீர்குலைக்கச் செய்வதும் இவற்றின் நோக்கம்.

'பிரித்தல்' குறிப்பது என்ன?

'பிரித்தல்' என்பதற்கு மாற்றரசரிடத்து உள்ளாரையும் அவர்க்கு நட்பாகிய அரசரையும் அவரிடத்தினின்று பிரித்தல், மாற்றரசனிடத்திலுள்ள மனிதரைப் பிரித்தல், பகைவேந்தர் ஆனோர் இருவரில் ஒருவரைப் பகைவேந்தனிடமிருந்து பிரித்தல், வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தல், பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தல், பகைவரைப் பிரித்தல், தீய நட்புகளை நீக்குவது, ஆட்சியின் நலத்துக்காகப் பிரிக்க வேண்டுவாரைப் பிரித்தல், பகைவர்க்குத் துணையாய் உள்ளவரைப் பிரித்தல், தன் அரசரிடத்திலிருந்தும், தன் அரசனுக்குப் பகைவராக உள்ளோரிடத்திலிருந்தும் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், போர் வந்தவிடத்துப் பகைவரின் துணைவரை அவரினின்று பிரித்தல், அரசனுக்கு வேண்டியவர்களைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப விலக்குதல், பகைவர்க்குத் துணையாயினாரைப் பிரித்தல் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆட்சியின் பகைவருக்கு உறவாக இருப்பவர்களை, பகைவரிடமிருந்து பிரிப்பது இங்கு சொல்லப்படுகிறது. பிரித்தல் என்பது பகைவந்த காலத்துப் பகைநாட்டிடம் உள்ளார், அந்நாட்டிற்கு நட்பாயினார், பகைநாட்டவர்களில் ஒருவர், தம் அரசுக்குக் கேடு சூழ எண்ணும் நட்டோர் உறவினர் முதலியவர்களைக் காலத்திற்கு ஏற்ப விலக்கல் இவற்றைக் குறிக்கும்.

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தமக்குத் துணையாயினாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தாரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதலும் செய்ய வல்லவன் அமைச்சன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்கவகையில் அமைச்சு செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

பொழிப்பு

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தமக்குத் துணையாயினாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தாரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதலும் செய்ய வல்லவன் அமைச்சன்.