இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0632



வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:632)

பொழிப்பு (மு வரதராசன்): அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.

மணக்குடவர் உரை: அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.
இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல் - குடிகளைக காத்தலும்; கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு - முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.
(எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது,. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.)

வ சுப மாணிக்கம் உரை: துணிவு குடிபேணல் கல்வி அறிவு முயற்சி இவ்வைந்திலும் சிறந்தவனே அமைச்சன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.

பதவுரை:
வன்கண்-செயலில் உறுதியுடைமை; குடிகாத்தல்-குடிமக்களைப் பாதுகாத்தல்; கற்று-கல்விபெற்று; அறிதல்-அறிவுடைமையாதல்; ஆள்வினையோடு-முயற்சியோடு; ஐந்துடன்-ஐந்தோடு; மாண்டது-திருந்தவுடையது; அமைச்சு-அமைச்சு.


வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும்;
பரிப்பெருமாள்: அஞ்சாமையும், அவர்க்கு நட்பாகிய இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும்;
பரிதி: தறுகணாண்மை, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, உத்தியோகம் என்னும்; [தறுகணாண்மை-அஞ்சாமையைக் கைக்கொள்ளுதல்]
காலிங்கர்: வண்கணதாகிய தறுகண்மையும். தன் அரசன் கோற்கீழ்வரும் குடிகளது வன்மை மென்மை வழக்கு அறிதலும், காத்தலாகிய நாடுகாவலும் காடுகாவலும் நாடிச்சொல்லுதலும் கற்றறிதல் ஆகிய பெரும்பொருள் நூல்கற்று உணர்ந்து அறிதலும், ஆள்வினை என்னும் அரசியல் முயற்சியும் அமைச்சியல் முயற்சியும் இவை;
பரிமேலழகர்: வினை செய்தற்கண் அசைவின்மையும், குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும்;

'அஞ்சாமை/தறுகணாண்மை/வினை செய்தற்கண் அசைவின்மை, குடிகாத்தல்/வன்மை மென்மை வழக்கு அறிதல்; இந்திரியங்களைக் காத்தல்/கல்வி/காத்தலாகிய நாடுகாவலும் காடுகாவலும் நாடிச்சொல்லுதலும்/நீதி நூல்களைக் கற்றல்; நூல்முகத்தானறிதல்/அறிவுடைமை/கற்றறிதல்/செய்வன தவிர்வன அறிதல்; முயற்சி/உத்தியோகம்/ஆள்வினை என்னும் அரசியல் முயற்சியும் அமைச்சியல் முயற்சியும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சாமை, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, முயற்சி என்னும்', 'தைரியம், குடிப்பிறப்பின் மானம், கல்வியறிவு, விடாமுயற்சி, ஆகிய இவற்றோடு பஞ்ச தந்திரங்களின் அறிவும் சேர்ந்த பெருமையுள்ளதே', 'செய்யுங் காரியத்தில் திடமும் குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்றுச் செய்யத்தக்கதை அறிதலும், விடா முயற்சியும் மேற்கூறிய செயல்வன்மையும் ஆகிய', 'வினை செய்தற்கண் அஞ்சாமை, நல்லொழுக்கமுடைமை, குடிகளைக் காப்பாற்றுதல், அரசியல் நூல்களைக் கற்றறிதல், முயற்சி ஆய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயலுறுதி, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, முயற்சியோடு என்பது இப்பகுதியின் பொருள்.

ஐந்துடன் மாண்டது அமைச்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.
பரிதி: அஞ்சு குணமுள்ளவன் மந்திரி என்றவாறு.
காலிங்கர்: ஐந்தும் ஒருதலைப்பட ஆராய்ந்தவன் அமைச்சன் ஆவன் என்றவாறு.
பரிமேலழகர்: மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.

'ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் அசைவின்மை, குடிகாத்தல், நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதல், முயற்சி என்ற நான்கோடு முந்தைய குறளில் சொல்லப்பட்டவற்றையும் சேர்த்து ஐந்து என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐந்தும் சிறப்பாக உடையவனே அமைச்சனாவான்', 'சிறப்பான மந்திரிகளின் தகுதிகள்', 'ஐந்தும் திருத்தமாக உடையவனே அமைச்சன் ஆவான்', 'ஐந்தும் பொருந்தப் பெற்றிருப்பவனே அமைச்சன். (ஐந்துடன் -மேற்குறட்பாவில் கூறிய ஐந்துடன் என்பர்; அதில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன நான்குமாம். செய்கையை, தொடங்கும் உபாயம், முடிக்கும் ஆறு என இரண்டாக்குவர். இக்குறட்பாவிலேயே 'கற்று அறிதல்' என்பதனைக் கற்றல் என்றும் அறிதல் என்றும் இரண்டாகவும் பிரிப்பர்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஐந்தும் பொருந்தப் பெற்றிருப்பவனே அமைச்சனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலுறுதி, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, முயற்சியோடு ஐந்தும் பொருந்தப் பெற்றிருப்பவனே அமைச்சனாவான் என்பது பாடலின் பொருள்.
இக்குறளில் கூறப்படும் 'ஐந்து' இவைதாமா?

செயலுறுதி, குடிமக்களைக் காக்கும் தன்மை, கல்வி, அறிவுடைமை, ஆழ்ந்தமுயற்சி ஆகிய இந்த ஐந்தினையும் சிறப்புறப் பெற்றவனே அமைச்சனாவான்.

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினை ஆகிய ஐந்துடன் மாண்டது அமைச்சு என்கிறது குறள்.
வன்கண் என்பது செயல் உறுதியைக் காட்டும். நெஞ்சில் உறுதியில்லையானால் அச்சமும் சோர்வும் குடிகொண்டு, எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற முடியாத நிலை உண்டாகும். இச்சொல்லுக்கு வினைசெய்தற்கண் அஞ்சாமை எனக் கூறி வினையைப் பற்றி ஆயுங்காலத்து அரசனும் ஏனையோரும் ஆகிய குழுவின் கருத்து மாறுபடினும் அஞ்சாது உரைப்பது வன்கண் என்றும் வினை மேற்கொண்ட அமைச்சரைப்பற்றிப் பழிசொல்லும் இழிசொல்லும் மிகப் பிறக்குமாதலின் இவற்றையெல்லாம் கேட்டு அஞ்சாமை வேண்டும் என்றும் பொருளுரைப்பர்.
குடிகாத்தல் என்பதற்கு தன் குடிப்பெருமையைக் காத்தல் அதாவது குடிப்பெருமைக்கு இழுக்கு வராமல் பதவியிலிருந்து நடத்தல் என்று ஒரு சாரார் கூறினர். குடிமக்களைக் காப்பது அரசனுடைய வேலை என்பதால் குடிகாத்தல் என்பது குடிப்பெருமையைக் காத்தலைக் குறிக்கும் என்பர். மற்றொரு சாரார் குடிமக்களைக் காத்தல் எனப்பொருள் கூறினர். அமைச்சர் திட்டங்களை நிறைவேற்றுபவராதலால் அது சமயம் மக்களின் சமூக நலன் பேணப்பட வேண்டும் எனக் கொண்டு குடிகளைக் காத்தல் எனக் கொள்வது பொருத்தம்.
கற்றறிதல் என்பதை ஒரு சொல்லாகவும், கற்றல் + அறிதல் எனப் பிரித்தும் பொருள் கண்டனர். கற்றறிதல் என்றவர்கள் பொருள் நூல் கற்றுணர்ந்தறிதல் என்றும் செய்யத்தக்கன, செய்யத்தகாதன குறித்த கல்வியறிவை உணர்த்துவது என்றும் உரை செய்தனர். இரண்டாக்கியவர்கள் 'இக்குறளில் சொல்லப்பட்ட 'ஐந்து' என்னும் தொகையைச் சரிப்படுத்த இவ்விதம் கூறினர். இவர்கள் கல்வியும் அறிவுடைமையும் அதாவது நூலறிவோடு நுண்ணறிவு பெற்றிருத்தல் சொல்லப்பட்டன என்றனர். பிரித்துக் கூறிய உரை பொருத்தமாகப்படுகிறது. கற்றறிந்தார் கல்வி விளங்கும்... (அவை அறிதல் 717) என்ற பாடலிலும் இங்ஙனம் பிரித்துப் பொருள் கொள்வர் ஆதலால் இங்ஙனம் தொகை வேண்டிப் பிரித்தல் குற்றமாகாது என்பர்.
ஆள்வினை என்பதற்கு ஆள்வினை என்னும் அரசியல் முயற்சியும் அமைச்சியல் முயற்சியும் என விளக்கம் தருவார் காலிங்கர்.
எனவே வன்கண், குடிகாத்தல், கற்றல், அறிதல், ஆள்வினை என்றிவை ஐந்துடன் திருத்தமாக உடையவனே அமைச்சன் என்பது பொருள்.

இக்குறளில் கூறப்படும் 'ஐந்து' எவை?

இக்குறளில் முதலடியில் கூறப்படுவன வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினை என்ற நான்கு பண்புகள்தாம் என்பதுபோல் தோன்றம் தருகிறது. ஆனாலும் ஐந்து என்னும் தொகைச்சொல் ஈற்றடியில் இடம்பெற்றிருப்பதால் இக்குறளுக்குப் பொருள் காண்பதில் இடர் உண்டாகிறது.
பரிமேலழகர் வன்கண்-குடிகாத்தல்-கற்றறிதல்-ஆள்வினை என்ற நான்கோடு முன்குறளிற் கூறிய கருவி முதலிய ஐந்தையும் ஒன்றாக எண்ணி ஐந்தெனக் கொள்கிறார். குறள் 631-இல் வரும் ஐந்துடன் எனப் பொருள் கொண்டது தவறு; குறள் நூல் முழுவதிலும் ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு தனிக்கருத்தைத் தெரிவிக்கும் தனித்தனி அலகாகவே அமைந்திருக்கிறது; ஒரு குறளின் பொருள் அடுத்த குறளில் தொகை பெறுதலென்பது புதுமை என்று பரிமேலழகரை மறுப்பார் குழந்தை.
மணக்குடவர் ‘குடிகாத்தல்’ என்பதனை ‘குடியைக்காத்தல்’ ‘ஐம்பொறிகளைக் காத்தல்’ என இரண்டாக்கி மொத்தம் ஐந்து என உரைக்கின்றார். 'வன்கண்மையும் (தளரா முயற்சியும்) குடிகாத்தலும், கற்றறிதலும் ஆள்வினையும் ஆகிய நான்கும் பொறிகள் ஐந்துடனே செம்மையாக உடையவனே அமைச்சனாவான்' என்பது குழந்தையின் உரை. நாமக்கல் இராமலிங்கம் ஐந்துக்கு குறளில் சொல்லப்பட்ட நான்கோடு பஞ்ச தந்திரங்களும் சேர்ந்தது என்பார்.
கற்றல் வேறு அறிவுடையராய் இருப்பது வேறு ஆதலால் ‘கற்றறிதலைக்’ கற்றலும் அறிதலும் என இரண்டாகப் பிரித்து ஐந்தாக முடிக்கும் பரிதி உரை பொருத்தம். இப்பிரிப்புக்குக் குறளகத்தே வரும் கல்வி அறிவுடைமை என்ற தனிவேறதிகாரங்களும் சான்றாகும் என்பார் இரா சாரங்கபாணி.
‘ஐந்து’ என்பது இக்குறளகத்து எண்ணப்பட்டவற்றின் தொகையாகும் அதாவது அது வன்கண், குடிகாத்தல், கற்றல், அறிதல், ஆள்வினை என்பவற்றைக் குறிக்கும்.

இக்குறளில் கூறப்படும் ஐந்து பண்புகள் வன்கண், குடிகாத்தல், கற்றல், அறிதல், ஆள்வினை ஆகியவை.

செயலுறுதி, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, முயற்சியோடு ஐந்தும் பொருந்தப் பெற்றிருப்பவனே அமைச்சனாவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயல் நடைமுறைப்படுத்தத் தேவையான அமைச்சுவின் குணங்கள்.

பொழிப்பு

செயலுறுதி குடிபேணல் கல்வி அறிவு முயற்சி இவ்வைந்தும் பொருந்தப் பெற்றிருப்பவனே அமைச்சன்.