இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0640முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:640)

பொழிப்பு (மு வரதராசன்): (செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்.

மணக்குடவர் உரை: அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார்.
இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார்.
(அக்கூறுபாடாவன: வந்த வந்த இடையூறுகட்கு ஏற்ற ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அமைச்சியலை நடத்தும் திறமை இல்லாதவர், செய்யப்படும் வினைகளை முன்னர் ஒழுங்குபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் முடிவு இல்லாமல் செய்து கொண்டிருப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅதவர்.

பதவுரை:
முறை-அடைவு அதாவது வரிசை அல்லது நெறி; பட-உண்டாக; சூழ்ந்தும்-ஆராய்ந்தும்; முடிவு-முற்றுப் பெறுதல்; இலவே-இல்லாதவகையிலேயே; செய்வர்-செய்யா நிற்பர்; திறப்பாடு-கூறுபாடு; இலாஅதவர்-இல்லாதவர்.


முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; [அடைவுபட-நெறிபட]
பரிப்பெருமாள்: அடைவுபட எண்ணியும் தம்மால் முடிதல் இல்லாதவற்றைச் செய்யா நிற்பர்;
பரிதி: ஒரு காரியத்தை முடிப்போம் என்று எடுத்து முடியாமல் கைவிடுவார் என்றவாறு.
காலிங்கர்: நெறிபடவே எண்ணியும், தாம் எண்ணிய வண்ணமே முடியச் செய்யமாட்டார்;
பரிமேலழகர்: செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்;

'நெறிபடவே எண்ணியும், தம்மால் முடிதல் இல்லாதவற்றை/எடுத்து முடியாமல் கைவிடுவார்/ தாம் எண்ணிய வண்ணமே முடிய/ செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யமாட்டார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முறையாக எண்ணினும் முடியாதபடி செய்வர்', 'செய்யப் போகும் வினையை முறைப்படி எண்ணினாலும் செய்யும்போது அவ்வினை நிறைவேறாதபடி செய்வர்', '(ஒரு காரியத்துக்கு வேண்டிய ஆலோசனைகளையெல்லாம்) சரியான முறையில் செய்யத் தீர்மானித்திருந்தும் காரியம் அது முடியாதபடியே கெடுத்து விடுவார்கள்', 'அவற்றைச் செய்யும் முறைகளை நன்கு தெரிந்து முன்னர் அமைத்துக் கொண்டாலும், அவை முற்றுப் பெறாவண்ணமே அவற்றைச் செய்தொழிவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயலை முறைப்படி எண்ணினாலும், முடிவு இல்லாமல் செய்து கொண்டிருப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

திறப்பாடு இலாஅ தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்யுந் திறன் இல்லாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: வினை செய்யுந் திறன் இல்லாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாதாருமுளர் என்று கூறிற்று.
பரிதி: விசாரம் இல்லாதார்.
காலிங்கர்: மற்று யார் எனின் அரசியல் திறப்பாடு அமைவுற அறியும் அறிவிலாத அமைச்சர்.
பரிமேலழகர்: முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: அக்கூறுபாடாவன: வந்த வந்த இடையூறுகட்கு ஏற்ற ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது. வந்த வந்த-நேரிட்ட நேரிட்ட; பரிகாரம் - மாற்று].

செய்யுந் திறன் இல்லாதார்/விசாரம் இல்லாதார்/அரசியல் திறப்பாடு அமைவுற அறியும் அறிவிலாத அமைச்சர்/முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யும் திறமை இல்லாதவர்', 'தொழில் திறமையில்லாதவர்', 'செய்யும் திறமையில்லாத மந்திரிகள்', 'எடுத்துக்கொண்ட காரியங்களை முடித்தற்குரிய திறமையில்லாதவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசியல் திறப்பாடு இல்லாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலை முறைப்படி எண்ணினாலும் முடிவு இல்லாமல் செய்து கொண்டிருப்பர் அரசியல் திறப்பாடு இல்லாதவர் என்பது பாடலின் பொருள்.
'திறப்பாடு இலாஅதவர்' என்ற தொடர் குறிப்பது என்ன?

அமைச்சர்க்குச் செயலைத் திட்டமிடும் அறிவோடு அதை நிறைவேற்றும் ஆற்றலும் இருத்தல் வேண்டும். அத்தகைய திறப்பாடு இல்லாதவர் அரைகுறையாகவே செயல் ஆற்றுவர்.

ஓர் அமைச்சனுக்கு ஒரு செயலை ஒழுங்குபட எண்ணும் திறன் இருந்தாலும் அதை நல்ல, பயன்தரும் வகையில் நிறைவேற்றவும் தெரிந்திருக்க வேண்டும். செயல்களை முடிக்கும் திறன் இல்லாதவர் முன்னதாகவே, முறையாக ஆராய்ந்து செயலைத் தொடங்கினாலும், செய்யும் போது குறையானவற்றையே செய்வார்கள்; அச்செயலை நிறைவாக முடிக்க முடியாமல் திணறுவர்; முடிவில்லாமல் அதைச் செய்துகொண்டே இருப்பர். இக்குறளில் திறனில்லாத அமைச்சர் தான் மேற்கொள்ளும் திட்டங்களைச் சூழ்ந்தாங்கு முடிக்க மாட்டார்கள் என்பது உறுதிபடக் கூறப்படுகிறது. அவரால் அறிவிக்கப்படும் பல திட்டங்கள் செய்து முடிக்கப்படாமலேயே பாதியிலேயே நின்றுவிடும். அறிவுக் கூர்மை உடையவராய்த் திட்டமிட்டுச் செயலைத் தொடங்குவதுடன் அவற்றை வெற்றிகரமாக எண்ணியபடி நிறைவேற்றித் தருவதில்தான் திறமை இருக்கிறது. அரசியல் திறம் கொண்டவர்களாலேயே அவற்றைச் செய்து முடிக்க முடியும்.

'திறப்பாடு இலாஅதவர்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'திறப்பாடு இலாஅதவர்' என்ற தொடர்க்கு வினை செய்யுந் திறன் இல்லாதார், விசாரம் இல்லாதார், அரசியல் திறப்பாடு அமைவுற அறியும் அறிவிலாத அமைச்சர், முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார், (செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், திறமையில்லாதவர், முடித்தற்கேற்ற திறமை சிறுதும் இல்லாதவர், செயல்திறன் இல்லாதவர்கள், தொழில் திறமையில்லாதவர், திறமையில்லாத மந்திரிகள், எடுத்துக்கொண்ட காரியங்களை முடித்தற்குரிய திறமையில்லாதவர்கள், அமைச்சியலை நடத்தும் திறமை இல்லாதவர், செய்யும் திறமை இல்லாதவர், வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர், செயல் செய்யும் திறமை இல்லாதவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

செயல் முடிக்கும் திறமை இல்லாதவர் அல்லது செயல் திறன் இல்லாதவர் என்று பலர் பொருள் கூறினர். காலிங்கர் அரசியல் திறப்பாடு அமைவுற அறியமாட்டாத அமைச்சர் என்றும் சி இலக்குவனார் அமைச்சியலை நடத்தும் திறமை இல்லாதவர் எனவும் பொருள் உரைத்தனர். அமைச்சர் அரசியல் செயல்களைத் திட்டமிடுவதற்கும் அதை முடிவுற நிறைவேற்றுவதற்கும் உரியவர். அமைச்சுவைப் பொறுத்தவரை அமைச்சியலும் அரசியலும் ஒன்றுதான். இப்பாடல் அரசியல் திறமை இல்லாத அமைச்சர் பற்றிப் பேசுகிறது.
செயல் முடிக்கும் திறமைக்குரியனவாகப் பரிமேலழகர் அவ்வப்போது நேரிடும் இடையூறுகட்குத் தகுந்த மற்று அறிந்து செய்தல், செயலை முடித்துவிடவேண்டும் என்ற உறுதி கொண்டவராய் இருப்பது. தவறாமல் சூழ்ந்தெண்ணும் திறம் படைத்திருப்பது என்பனவற்றைச் சொல்கிறார்.
பல பணிகளை ஒரே சமயத்தில் செய்யக்கூடாது, வரக்கூடிய இடையூறுகளை முன்னரே சிந்தித்து அதற்கான மாற்றுகள் கைவசம் வைத்திருப்பது, தொடர்ந்து பணிமுன்னேற்றம் பற்றி மதிப்பீடு செய்வது, பணிப்பொறுப்புக்கள் வகுத்து அடுத்த நிலை செயலர்களை அப்பணிகளுக்கு உரிமையாளர்கள் ஆக்குவது போன்ற பல செயல் முடிக்கும் உத்திகளை இன்று மேலாண்மை அறிஞர்கள் நிறையவே சொல்கின்றனர்.

திட்டமிட்டபடி செயல்முடிக்க (execution) எல்லாராலும் முடியாது. ஒரு சிலரே அரசியல் திறம் கொண்டு செயலை நிறைவேற்றுவர். மற்றவர்கள் செயலை முடிப்போம் என்று எடுத்து முடியாமல் கைவிடுவார். அரசியல் திறமை என்பது என்ன?
கொள்கை அளவிலும் நடைமுறையிலும், மற்றவர்களை இணங்க வைக்கும் திறனே அரசியல் திறன் என்பது. இது, திட்டத்தில் தொடர்புடைய அனைவரிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்குவது பற்றியது. அரசியல் எனப்படுவது ஒருவரது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்தி அவரது நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது பற்றியும் ஆகும். சுருக்கமாகச் சொல்வதானால், தொடர்புடையார் மீது உண்டாக்கப்படும் ஒரு ஒழுங்கமைந்த கட்டுப்பாடு அரசியல் திறமை எனப்படும். மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளுதல், மக்களை தொடர்புநிலையில் வைத்திருப்பது, மக்கள் கூட்டுறவு, செய்திப் பரிமாற்றம், தெளிவாக முரணின்றிப் பேசுதல், ஆட்சியாளருடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை அமைச்சர்க்கு இன்றியமையா அரசியல் திறன்கள் என அறியப்படுவன.
இத்திறமைகள் இல்லாத அமைச்சனால் எடுத்த செயலை முற்ற முடிக்க இயலாது.

செயலை முறைப்படி எண்ணினாலும் முடிவு இல்லாமல் செய்து கொண்டிருப்பர் அரசியல் திறப்பாடு இல்லாதவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அமைச்சுவிடம் அரசியல் திறன் இல்லாவிடில் ஏற்படும் விளைவுகள்.

பொழிப்பு

முறையாக எண்ணினும் முடிவு இல்லாமல் செய்து கொண்டிருப்பர் அரசியல் திறப்பாடு இல்லாதவர்.