இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0635அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:635)

பொழிப்பு (மு வரதராசன்): அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

மணக்குடவர் உரை: அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.

பரிமேலழகர் உரை: அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம்.
(தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அறமும் அமைந்த சொல்லும் திறமும் உடையவனே தெளிவுக்குத் துணையாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

பதவுரை:
அறன் -நல்வினை; அறிந்து-தெரிந்து; ஆன்று-அறிவு நிரம்பி; அமைந்த-பொறுமையோடு கூடிய; சொல்லான்-சொல்லையுடையவன் அல்லது சொல்லோடு; எஞ்ஞான்றும்-எப்போதும்; திறன் -விளையத்தக்க நன்மை தீமைகள்; அறிந்தான்-தெரிந்தவன்; தேர்ச்சி துணை-கலந்து ஆலோசித்தற்குத் தகுந்த துணைவன்.


அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன்;
பரிப்பெருமாள்: அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எஞ்ஞான்றும் என்றது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும். பரிதி: தன்மநெறி யறிந்தும், ஒழுக்கம் பொருந்திய சொல்லும் உள்ளவன்;
காலிங்கர்: இராச தன்மத்து இயல்பு அறிந்த அறிவினை உடையனுமாய், அதற்கு ஏற்ற சமைவு என்கிற நிறைவினை உடையனுமாய், மற்ற அரசன் விருப்புற்று கேட்குமாறு அரிய சொல்லாலானுமாய், நாட்டகத்தும் புறவிடத்தும் வாழ்வோர் வினைத்திறம் அனைத்தும் நெறிபட அறிந்து அறிவு நிறைவு ஓர்ப்புக் கடைப்பிடி என்னும் நாற்பெருங்குணனும்; [சமைவு-பொருத்தம்; அறிவு - நன்மை, தீமை பயப்பன அறிதல்; நிறைவு - அமைதி; ஓர்ப்பு-ஆராய்ந்துணர்தல்; கடைப்பிடி-உறுதி]
பரிமேலழகர்: அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய், எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்;
பரிமேலழகர் குறிப்புரை: தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார் 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். [சுருங்கிய காலம்-பொருள், படை முதலியவற்றால் சுருங்கிய காலத்தும்; பெருகிய காலம்-பொருள், படை முதலியவற்றால் நிறைந்த காலத்திலும்; இடைநிகராய காலம்-பொருள், படை முதலியவற்றால் மிகாமலும் நிறையாமலும் உள்ள நடுத்தரமான காலம்]

'அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் செய்யும் அறங்களை அறிந்து கல்வியில் நிறைந்தமைந்த சொல்லை உடையனாய் எப்பொழுதும் வினை செய்யும் திறங்களையும் அறிந்தவன்', 'தர்மாதர்மஙகளைச் சீர்தூக்கி, நிறைந்த அறிவுடன் பொருத்தமான யோசனை சொல்லுகிறவனாகவும் (தன்னுடைய அரசனுடைய) சக்திகளை எந்த நேரத்திலும் கணக்கறிந்தவனாகவும் உள்ளவனே', 'நீதியைத் தெரிந்து பொருள் நிறைந்த அடக்கமான சொல்லை உடையவனாய், எக்காலத்துங் காரியஞ் செய்யும் வழிகளை நன்குணர்ந்தவனாய் இருப்பவனே', 'அரசியல் அறனை நன்கு அறிந்து கல்வியால் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய் எப்பொழுதும் வினை செய்யும் திறங்களை அறிந்தவனே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரசியல் அறனை நன்கு அறிந்து, அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய், எப்பொழுதும் செயல் ஆற்றும் திறங்களைத் தெரிந்து வைத்திருப்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

தேர்ச்சித் துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.
பரிப்பெருமாள்: அறியவல்லவன் அமைச்சனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தேர்ச்சிக்குத் துணையாதலின் தேர்ச்சித்துணை என்று பெயர் இட்டார்.
பரிதி: எப்போதும் உத்தியோகம் உள்ள மந்திரியாம்.
காலிங்கர்: நன்குற அமைந்த அமைச்சனே அரசனது கருமத்திற்கு அமைந்த துணை ஆவான் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்குச் சூழ்ச்சித் துணையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.

'சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசர்க்கு ஆராய்ந்து கூறும் துணைவனாவான்', 'சரியான மந்திரியாவான்', 'அரசனுக்குச் சிறந்த சூழ்ச்சித் துணையாதற்கு உரியவன்', 'அரசாள்வோர்க்கு ஆராயும் துணையாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசாள்வோர்க்கு கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரசியல் அறனை நன்கு அறிந்து, ஆன்றமைந்த சொல்லான், எப்பொழுதும் செயல் ஆற்றும் திறங்களைத் தெரிந்து வைத்திருப்பவன் அரசாள்வோர்க்கு கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான் என்பது பாடலின் பொருள்.
'ஆன்றமைந்த சொல்லான்' என்ற தொடரின் பொருள் என்ன?

அரசியல் நெறி அறிந்து, அறிவோடு கூடி அதிராமல் பேசக்கூடிய, எந்தநேரமாயினும் செயல்திறம் நிறைந்தவனுமாய் உள்ளவன் நல்ல ஆலோசனைத் துணை.

அரசியல் தொடர்பாக நாட்டில் சிக்கல் நேரும்போது அதைத் தீர்ப்பதில் உள்ள நன்மை தீமைகளை நன்கு உணர்ந்து, அறிவோடும், அமைதி வாய்ந்த தன்மையோடு அதனைத் தெரிவிக்கக்கூடிய சொல்லையுடையவனாயும், எப்பொழுதும் செயல் ஆற்றும் நிலையில் இருப்பவனாக உள்ளவனே ஒன்றைக் குறித்து கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாய் நிற்பான். அவனே அமைச்சன்.

ஆட்சித் தலைவனைச் சூழ நிற்பவர்களில் முதன்மையானவர் அமைச்சர். தலைவனுக்குத் தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அமைச்சன் வேண்டும். அவன் அறம் தெரிந்து, பல்துறையறிவு நிரம்பி அமைந்த சொல் உடையவனாய், எந்த நேரத்திலும் செயல் ஆற்றும் திறம் கொண்டவனாய் இருப்பான்.
இப்பாடலிலுள்ள 'அறன் அறிந்து' என்ற தொடர்க்கு அரசியல் நெறி அறிந்து என்பது பொருளாகும்.
'எஞ்ஞான்றும் திறனறிந்தான்' என்பதற்கு எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன், நிகழ்காலத்தும் எதிர்காலத்தும், நாட்டகத்தும் புறவிடத்தும் வாழ்வோர் வினைத்திறம் அனைத்தும் நெறிபட அறிந்து, சுருக்க-பெருக்கக் காலங்களிலும் இடைநிலைகாலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான், இன்ப துன்ப மிகுதிகளில் அறிவு கலங்குமன்றே, அங்ஙனமன்றி, எப்போதும் அரசுக்கும் அரசனுக்கும் ஏற்ற நலம் பயக்கும் உபாயங்களை உணர்ந்து உரைக்க வல்லவன், எப்போதும் தன்னுடைய அரசனுடைய வல்லமைகளின் கணக்குகளை அறிந்தவனாக இருப்பவன் என்று பொருள் கூறினர். 'எஞ்ஞான்றும் திறனறிந்தான்' என்பதற்கு எந்த நேரத்திலும் நாட்டுக்கு நன்மை தரும் ஆலோசனை வழங்கும் திறம் கொண்டவன் என்னும் பொருள் பொருத்தம்.

'ஆன்றமைந்த சொல்லான்' என்ற தொடரின் பொருள் என்ன?

'ஆன்றமைந்த சொல்லான்' என்ற தொடர்க்கு நிரம்பியமைந்த சொல்லினை உடையனாய், ஒழுக்கம் பொருந்திய சொல் உள்ளவன், சமைவு என்கிற நிறைவினை உடையன், நிறைந்து அமைந்த சொல்லை உடையன், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவன், அமைந்த சொல்வன்மையுடையவன், அனுபவத்தால் முதிர்ச்சிச் சொற்களைக் கூறுபவன், அமைந்த சொல் உடையவன், கல்வியில் நிறைந்தமைந்த சொல்லை உடையன், அறிவு நிறைந்து பொருத்தமான யோசனை சொல்லக்கூடியவன், பொருள் நிறைந்த அடக்கமான சொல்லை உடையவன், நிறைந்தமைந்த சொல்லொடுடையவன், கல்வியால் நிறைந்து அமைந்த சொல்லை உடையன், அமைதி வாய்ந்த தன்மையோடும் அதனைத் தெரிவிக்கக்கூடிய சொல்லையுடையவன், கல்விநிறைந்து அடங்கிய சொல்லையுடையவன், அறிவு நிறைந்து அமைதியோடு உண்மைகளை எடுத்துச் சொல்லக் கூடியவன், எத்துணையறிந்திருந்தாயினும் அரசற்கு அடங்கியே பேசுபவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

'ஆன்றமைந்த சொல்லான்' என்றதற்கு அறிவோடும், பதற்றமின்றி அமைதி வாய்ந்த தன்மையோடும் கூடிய சொல்லையுடையவன் என்பது பொருள்.

அரசியல் அறனை நன்கு அறிந்து, அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய், எப்பொழுதும் செயல் ஆற்றும் திறங்களைத் தெரிந்து வைத்திருப்பவன் அரசாள்வோர்க்கு கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எந்தநேரமும் கலந்து ஆலோசனை பெற அமைச்சு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும்.

பொழிப்பு

அறமும் நிறைந்தமைந்த சொல்லும் செயல் ஆற்றும் திறங்கள் உடையவன் கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான்.